Monday, March 2, 2015

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்- ஒரு மாற்று சமூக முகாம் உருவாக்கப்படுவதை நோக்கி... எம். எஸ். இங்கர்சால்

28-02-2015 அன்று ஹட்டன் நகர சபை மண்டபத்தில் திரு. லெனின் மதிவானம் தலைமையில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்  பிரதமஅதிதியாக கலந்துக் கொண்ட 

பேராசிரியர்  தை. தனராஜ் தமது உரையில்

 ”இருபத்தொராம் நூற்றாண்டானது அறிவியல் துறையில் பாரிய மாற்றங்களை கொண்டிருக்கின்ற காலமாகும். அறிவியல் துறையில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றைய தலைமுறையினர் இந்த யுகத்திற்கு சொந்தகாரர்களாக உள்ளனர். ஆசிரியர்கள் இந்த வளர்ச்சிப் போக்கை மாற்றங்களை எவ்வாறு உள்வாங்கியுள்ளார்கள் என்பது முக்கியமான வினா தான். ஆசிரியர்கள் தொடர்ந்து கற்கின்றவர்களாகவும் தமது வாண்மைத்துவ விருத்தியை அபிவிருத்தி செய்கின்றவர்களகவும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த அறிவியல் வளர்ச்சி துரிதமக வளர்ந்துக் கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் தான் கல்வியை பெற முடியாது வறுமையில் வாடுகின்ற மக்கள் கூட்டமும் காணப்படுகின்றார்கள். இவ்வகையான அமைப்புகள் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் பின் தங்கிய சமூகங்களில் செயற்பட வேண்டியிருன்றது. கல்வியில் சமத்துவம் என்பதும் அந்த உரிமைக்கான போராட்டம் என்பதும் வாழ்க்கைக்கான போராட்டம் மட்டுமல்ல வாழ்க்கை முறையையே மாற்றும் செயன்முறையாகும்.முந்தைய உலகம் தராத ஆனால் நமது தற்போதைய உலகம் தரும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, அந்த உலகத்தை மனிதனுக்காக படைத்து புதிய சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றைய ஆசிரியர்களின் கடமையாகும். இந்தப் பின்னணியில் இத்தகைய சவால்களை எதிர் கொள்ளும் வகையில் தமது தொழில் வாண்மைத்துவ விருத்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.  இதனை இலங்கை கல்வி சமூகச் சம்மேளனம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. மலையகத்தின் தனித்துவத்தை பேணுகின்ற அதே சமயம் இவ்வமைப்பு முழு தேசம் தழுவியதாகவும் அமைந்திருப்பது சிறப்பானது. அந்த வகையில் இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர் கலத்தில் நடத்த இருக்கும்   தொழில் வாண்மைத்தவ செயலமர்வுகளை இலவசமாக செய்ய தயாரக உள்ளேன்எனக் குறிப்பிட்டார்.


திரு. லெனின் மதிவானம் தமதுரையில் 

” இந்த சம்மேளனம் என்பது இன மத மொழி, மற்றும் கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டதொன்றாகும். இவ்வமைப்பில் வெவ்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் அமைப்புசாரதவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். ஓர் உலக மயமாதல் சூழலின் பின்னணியில் நமது வாழ்வு சிதைந்து விடுவதற்கான எல்லா சாத்தியங்களும் மேலோங்கிய நிலையில் நமது வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டம் அசுரகணத்தடன் மட்டுமல்ல அசுர வேகத்துடனும் நடைப்பெறவேண்டியுள்ளது. கல்வித் துறைசார்ந்தவர்கள் இப்பொறுப்பிலிருந்து அந்நியப்பட்டிருக்க முடியாது. எனவே வெவ்வேறு தளங்களில் அமைப்புகளில் இயங்குகி்றவர்களாக நாம் காணப்பட்டபோதும் நமது உணர்வுகள் ஒரு புள்ளியில் சந்திக்க கூடியதாக உள்ளது. உறுப்பினர்களின் வேற்றுமைகளை மதிக்கின்ற அதேவேளையில் அவர்களது பன்முகப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள ஒருங்கினைக்கும் ஒரு ஸ்தாபனமாகவும் சிலிக்கோ அமைப்பு தொழிற்ப்படும். கடந்த காலங்களிலே இவ்வாறாக தோற்றங் கொண்ட அமைப்புகளில் தலமையேற்றவர்கள் அல்லது அவ்வியங்களை ஆதிக்கம் செய்தவர்கள் தமது அறிவை மிகப் பழைய புத்தகங்களிலிருந்தே பெற்றிருந்தனர். புத்தகவாதத்திற்கு அப்பால் நேரடி அனுபவங்களையும் சமூக கூட்டு நடைமுறையின் மூலம் பெறப்பட்ட அறிவையும் குறைவாக மதிப்பிடும் போக்கே அவர்களிடம் காணப்பட்டது. நாம் தொடர்ச்சியாக இந்த தவறை விட முடியாது. இது பற்றிய விவாதமும் சுயவிமர்சனமும் தேவையாகும். இந்த அமைப்புக்கு தலைமை தாங்குகின்றவர்கள் தங்களது முன் கூட்டிய முடிவுகளை உறுப்பினர்களிடையும் பொது மக்களிடமும் முன்னிறுத்துவதை தவிர்த்து அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். கூடி விவாதித்து பரந்துப்பட்ட கலந்துரையாடல்கள் மூலமாக தீர்மாங்களை முன்னெடுக்கப்படல் வேண்டும். இதனையே புரட்சிகர தன்னடக்கம் என நேர்மையுள்ள முற்போக்கு மார்க்சியர்கள் கூறுவர்”. எனக் குறிப்பிட்டார்.
யாப்பு ஒரு கண்ணோட்டம் என்ற பொருளில் கருத்துரை வழங்கி 

சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் தமதுரையில்

”பிராந்தியங்கள் மாவட்டத்தை உருவாக்கும். ஒரு அல்லது பல மாவட்டங்கள் இணைந்து மாகாணத்தை உருவாக்கும். மாகாணங்கள் இணைந்து தேசம் தழுவிய குழுவை உருவாக்கும். தேசம் தழுவிய செயற்குழுவே சம்மேளனத்தை நிருவகிக்க கூடியதாக இருக்கும். ஒரு குழுவாக செயற்படுவது என்பது தனிநபர்களின் தனித்துவங்களையும் வேறுப்பாடுகளையும் அடக்குவது என்பது பொருளல்ல. மாறாக ஒவ்வொருவரின் தனித்தனிப் பண்புகளையும் பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்ப்பது என அர்த்தப்படும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். தனிமனிதர்களின் அபிலாசைகளுக்கோ அவர்களின் விறுப்பு வெறுப்புகளுக்கேற்றவகையில் முடிவுகளை எடுப்பதற்கோ அல்லது உறுப்பினர் ஒருவரை விலக்குவதற்கோ இங்கிடமில்லை. சம்மேளனத்தில் பொதுச் செயலாளருக்கு மாறாக நிர்வாக செயலாளர் பொதுக் கூட்டத்தை கூட்டுவதற்கான உரிமை யாப்பில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பல அமைப்புகளில் அமைப்பின் பாதையை தலைமைப் பொறுப்பிலிருந்தவர்களே தீர்மாணித்தார்கள். அமைப்பை தங்கள் கட்டுப்பாட்டிலே இருக்க வழிவகுக்கம் செயற்பாடுகளை உருவாக்கும் போக்கே காணப்பட்டது. நடைமுறையில் இவ்வம்சம் இளைஞர்கள் தலைமை பொறுப்பிற்கு வருவதை தடுப்பதாக அமைந்திருந்தது. இதற்கு மாறாக இச்சம்மேளனத்தின் உறுப்பினர் தெரிவு என்பது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடைப்பெறும் பொதுக் கூட்டத்திலேயே தெரிவு செய்யப்படும்  ” எனக் குறிப்பிட்டார்.

இச்சகூட்டத்தில்  ஹட்டன்- டிக்கோயா நகர பிதா டாக்டர் ஏ. நந்தகுமார், ஐக்கி தமிழர் ஆசிரிய சங்கத்தின்  பொதுச் செயலாளர் ஜெயசீலன், ஆசிரிய ஆலோசகர் கு. இராஜசேகர் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
சம்மேளனத்தின் உபக்குழுத்தலைவர்களான திருவாளர்கள் எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா, எம். சந்திரன், எம். எஸ். இங்கர்சால், எஸ். சுரேஷ்காந்தன், எஸ். குமார்  தமது குழுக்களின் செயற்றிட்டங்கள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் அறிக்கை சமர்பித்தனர். நிருவாகச்செயலாளர் கே. கிருஸ்ணன் நன்றியுரை வழங்கினார்.


இந்நிகழ்வில் ஆசிரிய தொழிற்சங்க முன்னோடியும் செயற்பாட்டாளாருமான திரு. எம். ஆர். விஜயானந்தன் அவர்கள் நினைவுப் பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இருபத்யோராம் நூற்றாண்டின் சவால்களை எதிர் நோக்கியிருக்கும் இன்றைய சூழலில் சமூகத்தை மாற்றக் கூடிய சமூக மற்றும் பண்பாட்டு சக்திகளை ஒன்றினைப்பதே சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் கலையாகும். மானுட மேம்பாட்டிற்காக இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினர் மேற்கொண்டுள்ள பிரயத்தனங்கள் ஒரு மாறுப்பட்ட உலகை சிருஷ்டிக்க முடியும் என்ற நம்பிக்கையை தருகின்றது.கல்வித் துறை சார்ந்தவர்களின் பிரசன்னமும் பங்கேறபும் நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தது.

1 comment: