Tuesday, November 30, 2010

பேராசிரியர் கைலாசபதி ஒரு மானுட ஆவனம் பாரதி தீட்சண்யா

சோஷலிசத்தின் இலக்கு மனிதன் தான். தனிமனிதனின் சுதந்திர வளர்ச்சியானது அனைத்து மனிதர்களின் சுதந்திர வளர்ச்சியோடு பின்னிபிணைந்துள்ளது. இத்தகைய மனித குலத்தின் இலட்சியத்தை தமது எழுத்தாலும், நடைமுறையாலும் செயற்படுத்த முனைந்த கைலாசபதி பற்றி சிந்தித்த போது மேற்குறித்த வரிகள் நினைவில் நிலைத்து நிற்கின்றன.
இருபதாம் நூற்றாண்டு பெற்றுத் தந்த தலை சிறந்த ஆய்வு அறிஞர்களில் கைலாசபதியும் ஒருவர். கால் நூற்றாண்டு தமிழியல் வரலாற்றில் தனித்துவமான ஆளுமைச் சுவடுகளைப் பதித்த அவர் பத்திரிகையாளர், எழுத்தாளர, விமர்சகர், விரிவுரையாளர் – பேராசிரியர், முதலாவது யாழ் வளாகத் தலைவர், கலைப்பீடாதிபதி என பல்துறைச் சார்ந்த ஆளுமைகளை தன்னகத்தே கொண்டிருந்தார். இத்தகைய சமூதாயம் சார்ந்த அவரது ஆளுமைகளே அவரை சிறந்ததொரு முன்மாதிரியாக கொள்கின்ற போக்கு வளர்வதற்கு காரணமாக அமைந்தது.
கைலாசபதியின் எழுத்துக்கள் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்துள்ளன என்பது உண்மையே. ஆயினும் அவரது எழுத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய அடக்க பதிப்பொன்று இதுவரை வெளிவராமை சிந்தனைக்குரியதே. அவ்வாறே கடந்த காலங்களிலும் இன்றைய நாளிலும் கைலாசபதியின் பங்களிப்பு குறித்த ஆக்கபூர்வமான முழு நிறைவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லையாயினும் குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் பிரசுரமாகியுள்ளன என்பதும் மனங்கொள்ளத்தக்கதாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்க கட்டுரைகள், நூல்கள் சிலவற்றை முற்போக்கு மார்க்ஸிய முகாமைச்சார்ந்த அறிஞர்களாலேயே எழுதப்பட்டவை. இவ்வெழுத்து முயற்சிகள் பெரும்பாலும், இலக்கியகதியில் கைலாபதியின் எழுத்துக்கள்; செலுத்தும் முக்கியத்துவத்தையும் அவற்றின் தாக்கங்களையும் இவர்கள் செவ்வனே உணர்ந்து எழுதியுள்ளனர். குறுகிய வரம்புகளை கடந்து தேசிய சர்வதேசிய நோக்கில் அவ்வாய்வுகள் வெளிவந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும்.
இலக்கிய வரலாற்றினை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஒரு உண்மை தலைத் தூக்குவதை காணலாம். அது தான் இலக்கியத்திற்கும் சமூதாயத்திற்கும் இடையிலான உறவுக் குறித்த பிரச்சனையாகும். இலக்கியத்தின் நித்தியத்துவம் குறித்து காலத்திற்கு காலம் வாதப் பிரதிவாதங்கள் தோன்றிய வண்ணமே உள்ளன.
கலை இலக்கியம் என்பது தெய்வீகத் தன்மை வாய்ந்தது எனவும் அது தெய்வ திருவுடைய கலைஞரால் படைக்கப்படுகின்றது எனவும் பிரமைகள் கற்பிக்கப்படுகின்றன. இப்பார்வையானது, ஒரு புறத்தில் பரந்துப்பட்ட வெகுஜனங்களையும் மறுப்புறத்தில் இலக்கிய கர்த்தாவையும் வைத்து நோக்குகின்ற வெகுசஜன விரோத பண்பாடாகும்.
இன்னொரு புறத்தில் தேசிய, பிரதேச, இன, மொழி, சாதி, மத அடையாளங்களைக் கொண்டு மனிதகுல விடுதலைக்கு எதிராக பாவிக்கின்ற கபடத்தனங்கள் இலக்கியத்தில் நிலை நிறுத்தப்படுகின்றன. “கல்தோன்றி மன்தோன்றா காலத்திற்கு முன்னரே வாலோடு தோன்றியது முத்தத் தமிழ்” , “குறித்த இனம், சாதி பற்றிய படைப்புகளை அவர்களால் மட்டுமே உருவாக்க முடியும்” போன்ற வாதங்களை உற்று நோக்குகின்ற போது இவ்விலக்கிய போக்கின் தாக்கங்களைக் காணமுடிகின்றது. பராம்பரிய மரபுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனை தமது வர்க்க நலன்களுக்கு ஏற்றவகையில் விளக்கமளிக்கின்ற பண்டிதர்கள் ஒரு புறத்தில் ஆர்பரித்து நிற்க,மறுப்புறத்தில் பாராம்பரிய மரபுகள் யாவும் ஆதிக்க சக்திகளின் நலனையே பிரதிப்பலிக்கின்றன என அவற்றை மறுத்து தூய பாட்டாளி வர்க்க கலைக்கோட்பாட்டை முன்வைக்கின்ற அதி தீவீரவாதிகள் இன்னொரு புறத்தில் ஆர்பரித்து நிற்பதே யதார்த்தமகிவிட்டதோர் சூழலைக் காணக் கூடியதாக உள்ளது.
கலை இலக்கியம் என்பது சமூதாயத்திலிருந்து தோன்றி அது சமூதாயத்தை மேம்படுத்துகின்றது என்ற இலக்கிய போக்கானது மனிதனையும் அவனது செயற்பாடுகளையும் ஆக்கப்ப+ர்வமான திசையில் இட்டுச் செல்கின்றது. “மனிதர் உணவை மனிதர் பறிக்கும்” வழக்கத்தை மாற்றி புதிய சமூதாயத்தை நிர்மாணிக்கும் எண்ணுக்கனகற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பத்தி ஜீவிகள் இன்னும் இத்தகையோரின் போராட்டகளில் வலிமை மிக்க ஆயுதமாக கலையும் இலக்கியமும் விளங்குகின்றது என்பது மக்கள் இலக்கிய கர்த்தக்களின் நிலைப்பாடாகும்.அநத வகையில் இவ்வணியினர் பராம்பரிய மரபுகளை ஒடுக்கும் வர்க்க மரபுகள் ஒடுக்கப்படும் வர்க்க மரபுகள் என கண்டறிந்து அவற்றினை சமூகமாற்றப் போராட்டத்திற்கு ஏற்றவகையில் ஒழுங்கமைத்துக் கொள்ளும் அணுகு முறையை இவர்கள் முன்மொழிகின்றனர்.
கைலாசபதி இந்த மூன்றாவது அணியினையே சார்ந்து நின்றார். அவர் வாழ்ந்த காலப்பகுதில், நமது கலாசாரம், பண்பாட்டு, பாரம்பரியம், இலக்கியத்தில் மக்கள் சார்பு பண்பு என்பன கடும் சோதனைக்குட்பட்டிருந்த காலமாகும். இத்தகைய காலச் சூழலில் தமது எழுத்தால் செயற்பாட்டால் மக்கள் சார்பு இலக்கிய கோட்பாட்டினை நிலை நாட்டியதில் கைலாசபதியின் பங்களிப்பினை முக்கியமானது. எனவே கைலாசபதியின் இலக்கிய, அரசியல் கொள்கை நடைமுறை, அதன் செல்வாக்கு என்பவற்றினை ஆராய்தல் வேண்டப்படுவதாகும்.
கைலாசபதி 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மலேசியாவின் தலைநகரான கோலாலம்ப+ரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் இளையத்தம்பி கனகசபாபதி. தாயாரின் பெயர் தில்லைநாயகி நாகமுத்து. யாழ்பாண சமூகத்தை சேர்ந்த கைலாசபதியின் பெற்றோர்கள் தமது தொழில் நிர்ப்பந்தம் காரணமாக மலேசியாவில் சில காலம் வாழ்ந்தனர். இவரது தந்தை அங்கு படவரைஞராகப் பணிப்புரிந்தவர்.
கைலாசபதி மலேசியாவில் விக்டோரியா இன்ஸ்டிடிய+ட்டில் தமது ஆரம்ப கல்வியை கற்றார். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் 13வது வயதில் இலங்கைக்கு திரும்பினார். பின், தமது இடைநிலைக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்று, பட்டப் படிப்பினை இலங்கை பல்கலைகழகத்திலும் (பேராதனை வளாகம்) கற்றார்.பேராதனை பல்கலைக்கழகத்திலயே தமது முதுமாணி பட்டத்தினையும் பெறறார். பின்னர் கலாநிதி பட்டத்தினை இங்கிலாந்திலுள்ள பர்மிங்ஹாம் பல்கலைகழகத்தில் முடித்தார்.
ஐகலாசபதிக்கு யாழ். இந்துக் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் மார்க்சியத் தத்துவ அறிமுகம் கிடைத்தது. அத்தத்துவத்தின் ஒளியிலேயே அவர் தமக்கான சமூக நோக்கையும் உலக கண்ணோட்டத்தையும் பெற்றுக் கொள்கின்றார். “வளரும் பயிரை முளையிலேர தெரியும்” என்பதற்கமைய பள்ளி பருவம் முதலே தமக்கான பார்வையை தெளிவாகவும் தீட்சண்யத்துடனும் வளத்துக் கொள்கின்றார். இது குறித்து கைலாசபதிக்கு மார்க்சிய தத்துவார்த்த பார்வையை வளம்படுத்தியவர்களில் ஒருவரான மு. கார்த்திகேசனின்; பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத்தக்கது.
“எனது வகுப்பு மாணவர்களில் பலர் பரலோகம் செல்வதற்காகச் சூளுவான வழியைக் கண்டுப் பிடித்தார்கள். அவர்களிடம் தேவாரம், திருவாசகம், பைபில், குர்ஆன் இருக்கும். அவர்களுள் வித்தியாசமாக ஒரு மாணவன் இருந்தான். அவன் சமூக விஞ்ஞான நூல்களை வைத்துக் கொண்டு ப+லோகத்தை பார்க்கத் தலைப்பட்டான். அவர்களோ வானம் பார்த்த பரலோக வாதியானார்கள். இவனோ பரலோகம் பார்த்த சமூகவிஞ்ஞானியானான். அந்தச் சுட்டி மாணவன் தான் கைலாசபதி.”
கைலாசபதி தமது பாடசாலை பருவத்திலே சிறுகதை, கவிதை, நாடகம், இசை என பல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்ததுடன் பல ஆக்கங்ககளையும் எழுதியுள்ளார். அக்காலத்தில் தமிழ்மணி, இந்துசாதனம், சுரபி, யுகம், வீரகேசரி முதலிய இதழ்களிலும் அவரது ஆக்கங்கள்; பிரசுரமாகியுள்ளன. இவர் எழுதிய நாடகங்கள் பல இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இவ்வகையில் கைலாசபதியின் பல பரிசோசனை முயற்சிகளினூடாகவே தமக்கான விமரசனத் துறையை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதை அறிய முடிகின்றது.
கைலாசபதி பல்கலைகழகத்தில் மாணவராக கற்கைநெறியை தொடர்ந்திருந்த காலத்தில் பேராசிரியர்கள் க.கணபதிபிள்ளை,வீ.செல்வநாயகம்,சு.வித்தியாணந்தன் முதலாலோனரிடம் கற்க கூடியதும் அவர்களுடன் சேர்ந்து சமூக செற்யாடுகளை முன்னெடுக்க கூடியதுமான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றார்.
1957 ஆம் ஆண்டு தமிழை சிறப்பு பாடமாக கொண்டு பயின்ற கைலாசபதி முதலாம் வகுப்பில் சித்தியடைந்தார். இந்த தகைமையை பயன்படுத்தி அவர் வெளிநாட்டு புலமைப் பரிசில் பெற்றோ அல்லது வேறு நிருவாக துறைசார்ந்த பதவிகளிலோ பிரகாசித்திருக்க முடியும். கைலாசபதி அவ்வாறு செய்யவில்லை. மறாக தனது துறைக்கான களமாக பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.; தினகரன் பத்திரிகையில் முதலில் உதவி ஆசிரியராகவும் பின்னர், மிக குறுகிய காலத்திலேயே பிரதம ஆசிரியியராகவும் நியமிக்கப்பட்டார்.
1961 இல் கைலாசபதி பத்திரிக்கை துறையிலிருந்து விலகி பேராதனைப் பல்கலைகழகத்தில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இந்த சூழலை கைலாசபதி தமது தமிழியல் ஆய்வுத் துறை விருத்திக்கு சாதகமானதோர் களமாக பயன்படுத்திக்; கொண்டார்.
1963 ஆம் ஆண்டளவில் தமது கலாநிதி பட்டபடிப்பிற்காக புலமைப் பரிசில் பெற்று இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கழகத்திற்கு சென்றார். இக்காலத்தில் அவரது மார்க்சிய பார்வையை வளம்படுத்தியதில் பேராசிரியர் ஜார்ஜ் தொம்சனுக்கு முக்கியமானவர்.இவரது மேற்பார்வையின் கீழ் Tamil Heroic Poetry என்ற ஆய்வேட்டினை சமர்பித்தார். தக்க ஆதாரங்களுடனும் சமூதாய கண்ணோட்டத்துடனும் சங்க செய்யுள்களை கிரேக்க வாய்மொழி இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி, அப்பாடல்களின் பரவுத் தன்மை, மக்களின் எழுத்தறிவு, அவற்றின் உள்ளடக்கம், வடிவம் என்பனவற்றினை ஆதாரமாகக் கொண்டு சங்ககால செய்யுள்களை வாய்மொழி இலக்கியம் என நிறுவினார். இவ்வாய்வு முயற்சி, தமிழில் சங்க இலக்கியம் குறித்து புதிய பார்வைகளும் ஆய்வுகளும் தோன்ற ஆதர்சனமாக அமைந்தது.
இதே காலப்பகுதியில் (1964) தனது மாமன் மகளான சர்வமங்களத்தை திருமணம் செய்துக் கொள்கின்றார். இருவருக்கும் சுபமங்களா (1968), பவித்ரா(1968) ஆகிய இரு புதல்விகள் உள்ளனர். கைலாசபதியின் ஆய்வு சார்ந்த பணிகளுக்கு திருமதி சர்வமங்களத்தின் பங்களிப்பு விலைமதிப்பற்றது. iகாசபதியின் ஆய்வுப்பணிகளுக்கு சர்வமங்களம் எத்தகைய பங்களிப்பினை நல்கியுள்ளார் என்பதை அவரது வார்த்தைகளில் காண்பது பயன்மிக்கது.
“ கைலாசுக்கு சோர்வு என்பதே கிடையாது. புத்தகம் படிப்பார். நண்பர்களுடன் இலக்கிய விவாதம் செய்வார். இரவிரவாக எழுதுவார். ஒரு மணி இரண்டு மணிக்கு முன்னர் அவர் படுத்ததில்லை. நல்ல ஒரு மாணவரைப் போல இடைவிடாது உழைத்தார். அடுத்த நாள் காலை ஒரு பரீட்சை எழுத வேண்டும் என்பதுபோலவே நடந்துக்; கொள்வார். அவர் இரவிரவாக எழுதியதை அது ஆங்கிலமாக இருந்தால் நான் தட்டச்சு செய்து வைப்பேன். அது தமிழ் என்றால் அதை நான் நல்ல எழுத்தில் திருப்பி எழுத வேண்டும். அத்துடன் வேலை முடியாது. திருப்பி படிக்கும் போது புதுபுது எண்ணங்கள் முளைக்கும். என்னிடம் sorry sorry என்று மன்னிப்புக்கேட்டபடி நட்சத்திரகுறி போட்டு வேறு ஒற்றையில் A,B,C என்று எழுதி வைப்பார். நான் அவற்றையெல்லாம் கட்டுரையில் சேர்த்து திரும்பவும் எழுத வேண்டும். ஆரம்பத்தில் ஆறு பக்க கட்டுரையாக இருந்தது முப்பது பக்கமாக மாறிவிடும்.”
கைலாசபதியின் வீட்டில் எப்போதும் எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் கூடுவது வழக்கம். அவர்களுக்கான விருந்துபசாரங்களை செய்வதிலும் சர்வமங்களம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளார் என்பதனையும் பலர் பதிவு செய்துள்ளனர்;. அத்துடன் கைலாசபதி தமது இறுதி காலத்தி;ல் பாரதி பற்றி நூல் எழுதும் முஙயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார். அவ்வாறே அவரது சீன பயணத்தின் பின்னர் நீர்வை பொன்னயன், இ.முருகையன், எம். ஏ நுஃமான் ஆகியோருடன் இணைந்து லுசுன் பற்றி நூதெலழுதும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார் என்பதையும் அறிய முடிகின்றது.

பல்கலைகழக சார்ந்த பணிகளுடன் மட்டும் கைலாசபதி தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. அவர் பல்கலைகழகத்திற்கு அப்பாலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார். யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணைக்குழு (1970), இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழு> இலங்கை பல்கலைகழக மக்கள் தொடர்பு ஆய்வுக் கழகம்(1971-74), இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு(1973) என பல பணிகளை மேற் கொண்டுள்ளார்.
1974 இல் யாழ்.பல்கலைகழக வளாகம் ஸ்தாபிக்கப்பட்ட போது அதன் முதலாவது வளாகத் தலைவராக பேராசிரியராக நியமிக்கப்பட்டவர் கைலாசபதி. யாழ். பல்கழகம் உருவாக்குவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாரோ அவ்வாறே அது உருவாகிய பின்னர் அதன் இலக்கினை அடைவதற்காகவும் தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டார்.
1977 இல் கைலாசபதிக்கு தமது வளாகத் தலைவருக்கான பதவி காலம் முடிந்ததுடன் அவர் அதே பல்கலைகழகத்தில் பேராசிரியராக கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தோல்வியடைந்து ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்திருந்தது. இக்காலத்தில் கைலாசபதி தாங்வென்னா துன்பங்களை அனுபவித்துள்ளதை திருமதி. சர்வமங்களம், செ. கணேசலிங்கன் முதலானோரின்

குறிப்புகளில் காணக் கூடியதாக உள்ளது.
மேலும், கைலாசபதி இந்திய பல்கலைகழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் மற்றும் அயோவாப்> கலிபோரினியப் பல்கலைகழகளிலும் வருகை தரு அதிதி பேராசிரராக கடமையாற்றியுள்ளார். இத்தகைய ஆளுமை உள்ளீடுகளை கொண்டிருந்த கைலாசபதி 1982 இல் டிசம்பர் மாதம் ஆறாம் திகதி தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். இவரது இழப்பு இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வுத்துறையில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
கைலாசபதி பாடசாலை மாணவராக இருக்கும் காலம் முதலே பல வகை நூல்களை வாசிக்க தலைப்பட்டிருந்தார். அக் காலத்தில் பொதுமக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தாரின் வெளியீடுகளான ‘கம்பரசம்’, ‘ஆரிய மாயை’, ‘தீ பரவட்டும்’, ‘நாடும் ஏடும்’, ‘நிலையும் நினைப்பும’;, ‘பரமசிவனுக்கு பகிரங்க கடிதம்’, ‘பரந்தாமனுக்கு பகிர்ந்த கடிதம்’ முதலிய நூல்களை வாசிப்பதில் ஆர்வம் காட்டிருந்தார். அவ்வாறே, பாரதிதாசன் , புதுமைபித்தன், ரகுநாதன், மு.வரதராஜன் சுத்தானந்த பாரதி, ச.து.சு. யோகியார். முதலியோரின் ஆக்கங்களை வாசிப்பதிலும் கூடிய ஆர்வம் காட்டி வந்திருப்பதை கவிஞர் இ.முருகையனின் நினைவுக் குறிப்புகளில் காண முடிகின்றது.
மேலும் கைலாசதிக்கு பாடசாலை மாணவராக இருந்த காலத்தில் தமிழில் எவ்வாறு தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டாரோ அவ்வாறே ஆங்கில மொழியிலும் புலமை மிக்கவறாக காணப்பட்டார். சில ஆங்கில இலக்கிய விமர்கர்களின் நூல்களை வாசிப்பதில் அவர் தீவிர கவனமெடுத்துள்ளார் என்பதை அவரது எழுத்துக்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக எலியற், எஃப்.ஆர்.லீவிஸ், சிசில் டேய் லூயி, ஸ்ற்றீஃபன், ஸ்பென்டர், முதலிய விமர்சகர்களும் டி.எச். லோறன்ஸ், பேணாட் ஷோ, ஜேம்ஸ்ஜோஸ், வேஜினியா வ+ல்ஃப், ஷேக்ஸ்பியர், மாக்ஸிம் கார்க்கி மாயாகோல்ஸ்கி, ஏஸ்ட்ராவ்கி, பெட்டோஃபி, லூசுன், பெர்ட்டோல் பிரெஸ்ட், நெருடா முதலிய படைப்பாளிகளும் கைலாசபதியினால் வாசிக்கப்பட்டவர்கள் என்பதனை அவரது எழுத்துக்களின் ஊடாக அறிய முடிகின்றது. இவ்வாறு வாசிப்பதில் மட்டுமன்று அதனை நண்பர்கள் மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடுவதிலும்; கைலாசபதி ஆர்வம் காட்டியிருந்தார.; நண்பர்களுக்கு எழுதுகின்ற கடிதங்கள், ஒருவகையில் அவை கூட ஒரு சமூதாயம் சார்ந்ததாக இலக்கியம் குறித்த உரையாடலாகவே அமைந்துள்ளது.
1953 இல் பதுளையை சேர்ந்த தனது கல்லூரி நண்பனுக்கு எழுதிய கடிதம் பொறுத்து என். கே.ரகுநாதன் இவ்வாறு சுட்டிக்காட்டுகின்றார்.
“சொந்தவிவகாரங்கள் ஏதுமில்லை. படித்த இலக்கிய புத்தகங்களிலிருந்து குறிப்புகள், விஷேட ரசனைகள், பல புத்தகங்களைப் பற்றி அறிமுகக் குறிப்புகள்- ஆங்கில நூல்கள் உட்பட சிங்காரம் சொல்வார்: நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு, விரைவில் முடித்துக் கொண்டு ஏதாவதொரு குறைப்புத்தகத்தைப் படிக்க ஓடி விடுவாராம். கடிதங்களிலும் அந்தப் புத்தகம் கிடைத்துள்ளது: இந்தப் புத்தகம் வாங்க வேண்டும்: படித்த பின் அதையிட்டு எழுதுகின்றேன்- இப்படியெல்லாம், பிற்கால இலக்கிய ஆதர்சனங்களுக்கு அப்போது அடிகோலினார் போல் தெரிகிறது”
இவ்வாறு பல்வேறு நூல்களை கற்று தேர்ந்த கைலாசபதி வாழ்விலிருந்து அந்நியப்படவிடாமலும் தொலைத்தூர தீவுக்குள் ஒதுங்கி விடாமலும் தன் கரித்திர தூரிகையை நகர்த்தி சென்றுள்ளமைஅவரது சிந்தனைத் தெரிவினை காட்டுகின்றது. தான் பெற்ற அறிவை மாறி வருகின்ற சூலுக்கு ஏற்ப, தமிழ் மரபுக்கு ஏற்ப பொருத்தி பார்த்து எமது சூழலுக்கான விமர்சப் பார்வையொன்றை உருவாக்கி, புத்தகவாத சிந்தனைக்கப்பால் நடைமுறைக்கான செயற்திறனை வலியுறுத்துகின்ற பண்பை அவரது எழுத்துக்களில் காணக் கூடியதாக உள்ளது.
கைலாசபதி பின்னாட்களில் ஆற்றல் வாய்ந்த விமர்சராக ஆய்வளராக பிரபல்யம் அடைந்ததனால் அவரை விமர்சகராக ஆய்வாளராக பார்க்கின்ற நிலையே உள்ளது. அப்பார்வை ஒரு விதத்தில் சரியானதும் கூட. அதே சமயம் அவர் தமது ஆரம்ப காலங்களில் கவிதைகள், சிறுகதைகள், சிலவற்றினையும் எழுதியுள்ளார். சுமார். 40 நாடகங்கள் எழுதியுள்ளதாக அறிய முடிகின்றது. அவரது பெரும்பாலான நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளன. நத்தார் பெருநாளையொட்டி ‘கல்லறைக்கு எதிரில்’ என ஒரு நாடகம் ஆக்கினார். அவ்வாறே புதுமை பித்தனின் ‘கபாடபுரம்’ கைலாசபதியினால் நாடகமாக்கப்பட்டுள்ளன. ‘குரல்கள’; என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார். என கவிஞர் இ.முருகையர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறே அவர் நாவல் எழுதும் முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார். அக்காலத்தில் பொருளாதார நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்தவர் பலர் மலேசியாவிற்கு புலம் பெயர்ந்துள்ளனர். இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் அவர்கள் எதிர் நோக்கிய பிரச்சனைகள் குறித்து நாவல் எழுதும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டிருந்ததாக அறிய முடிகின்றது. அத்துடன் பாரதி பற்றியும் தனிநூல் எழுதும் முயற்சிலும் ஈடுபட்டிருந்ததை கைலாசபதி பற்றி வெளிவந்த குறிப்புகளில் காணமுடிகின்றது.

பேராசிரியரின் வெளிவந்த நூல்கள்;:

(முதற் பதிப்பு வெளிவந்த ஆண்டின் அடிப்படையில்)

தமிழில்

இரு மகாகவிகள் (1962)
பண்டைய தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966)
தமிழ் நாவல் இலக்கியம்(1968)
ஒப்பியல் இலக்கியம்(1969)
அடியும் முடியும் (1970)
கவிதை நயம் (இ.முருகையனுடன் இணைந்து எழுதியது),(1970)
இலக்கியமும் திறனாய்வும் (1972)
பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும் (1973)
மக்கள் சீனம் காட்சியும் கருத்தும்( திருமதி சர்வமங்களம் கைலாசபதியுடன் இணைந்து எழுதியது), (1979)
சமூகவியலும் இலக்கியமும் (1979)
திறனாய்வுப் பிரச்சனைகள் (1980)
நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்(1980)
இலக்கியச் சிந்தனைகள் (1983)
பாரதி ஆய்வுகள்(1984)
ஈழத்து இலக்கிய முன்னோடிகள்(1986)
சர்வதேச அரசியல் நிகழ்வுகள் 1979-1982 (1992)
முன்னுரைகள் (2004)
நாவலர் பற்றி கைலாசபதி (2005)ஆங்கிலத்தில்:

Tamil Heroic Poetry (1968)
The Relation of Tamil and Western Literature ( 1984)
On Art and Literature (1986)
On Bharathi (1987)

உலக வரலாற்றில் மனித சமூகங்களின் வளர்ச்சியோடும் சமூக சிந்தனைகளின் உயர்ந்த பரிமாணமாகவும் மாக்சியம் 19ஆம் நூற்றாண்டுகளிலே ஐரோப்பியாவில் பிறப்பெடுத்தது. இத்தத்துவமானது மனித வாழ்வு, அவற்றுக்கிடையிலான உறவு குறித்து விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டத்தை முன்வைத்து. ~~அது முழுமையானதாகவும் ஒருமையானதாகவும் உள்ளது. மூடநம்பிக்கை, பிற்போக்குவாதம், முதலாளித்துவ அடக்குமுறைகளுக்கான பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இணங்கிச் செல்லாத ஒரு இணைக்கப்பட்ட உலக கண்ணோட்டத்தை மனித சமூகத்திற்கு வழங்குகின்றது
. அந்தவகையில் அத்துவமானது சமூக வளர்ச்சியையும் அதன் பக்க விளைவான சமூக இயக்கங்கள் குறித்தும் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால நோக்கில் ஆய்வுக்குட்படுத்தியதுடன் கருத்து முதல்வாத சிந்தனையை கேள்விக்குள்ளாக்கி விஞ்ஞான பூர்வமான சிந்தனையை மனித குலத்திற்கு வழங்கியது. அதன் பின்னணியில் உழைக்கும் மக்களினதும் அவர் தம் இயக்கங்களினதும் விடுதலை மார்க்கமாக வர்க்கப் போராட்ட திசைவழியை காட்டி நின்றது. அந்த வகையில் மார்க்சிய சித்தாந்தமானது உண்மையானதாகவும் இருப்பதனால் அது மிகுந்த வலிமை கொண்ட கோட்பாடாகவும் அமைந்து காணப்படுகிறது. உலகில் இதுவரை கால தத்துவங்கள் யாவும் உலகை பகுதியாகவோ முழுமையாகவோ விபரித்து நிற்க, மார்சியம் தான் அதனை மாற்றியமைப்பதற்கான உந்து சக்தியை மனித குலத்திற்கு வழங்கியது. கைலாசபதி மார்க்சியத்தையே தமது உலநோக்காக கொண்டு தமது ஆய்வு முயற்சிகளையும் சமூக செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தார். இந்தப் பின்னணியி;ல் அவரது எழுத்துச்துறைச்சார்ந்த பங்களிப்புகளை பின்வருமாறு வகுத்துக் கூறலாம்.
1. இலக்கியத்திற்கும் கமூகத்திறிகும் இடையிலான உறவை மார்க்சிய உலக கணணோட்டத்தின் துணைக்கொண்டு அறிந்ததுடன், தமது இலக்கிய ஆய்விற்கு கமூகவியல் அணுகுமுறையையே ஆதாரமாக கொண்டிருந்தார். ஓவ்வொரு காலத்திலும் நிலவுகின்ற சமூதாய அமைப்பின் தன்னையை பொறுத்தே அச்சமூகத்தில் நிலவுகின்ற கலை இலக்கியம், பண்பாடு, மதம், ஆகியனவும் அமைந்துக் காணப்படும். சமூகமைப்பின் மாற்றத்திற்கு ஏற்ப இவவம்சங்களும் மாறும் என்பதனை தமிழ் இலக்கியம் பொறுத்த ஆய்வில் கோட்பாட்டு அடிப்படையி;;ல் வெளிப்படுத்திய முதல் தமிழ் அறிஞர் கைலாசபதி ஆவார். பழந்தமிழ் இலக்கிய பரிச்சியமும் நவீன இலக்கிய நோக்கும கொண்டிருந்த கைலாசபதி, தமிழாராய்ச்சி என்பது பழைய இலக்கண இலக்கியங்களை கற்று பழமையை பேனுவது, சமூகத்தின் எண்ணற்ற ஒடுக்குமுறைகளை மூடி மறைத்தல் எனும் புன்iமைகளைத் தாண்டி தமிழ் இலக்கியத்தினையும் அதன் மாற்றத்தையும் வரலாற்று அடிப்படையிலும் யாவற்றுக்கும் மேலாக மாற்றத்தின் இயக்கவியலை பொருள் முதல்வாத சிந்தனையின் அடிப்படையிலும் கிரகித்துக் கொண்டமையுமே அது சார்ந் ஆய்வுகளை வெளிக் கொணர்ந்தமையுமே கைலாசபதியின்; முக்கியமான பங்களிப்பாகும்.
2. இலக்கிய வரலாற்றை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மையை அறிந்துக் கொள்ள முடிகின்றது.தூய அழகியல்வாதிகள் இலக்கியத்தில் தூய்மை, அழகியல் என்ற பிரமாஸ்த்திதை;தை உபயோகித்து மக்கள் இலக்கிய படைப்புகளையும் இலக்கிய கர்த்தாக்களையும் தாக்க முனைவது தற்செயல் நிகழ்ச்சியல்ல. இவர்களது கூப்பாடுகளையும் கண்டனங்களையும் சற்று கூர்ந்து நோக்குகின்ற போது சமூகத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்ற மாந்தர்களின் குரலாகவே இவை அமைந்துள்ளதைக் காணலாம். மக்கள் இலக்கியம் என்றுமே அழகியலை நிராகரிக்கவில்லை. கவிதைப் பொறுத்து குறிப்பிடுகின்ற போது உள்ளடக்கம் ஒரு மனிதனின் உயிர் என்றால் உருவகம் அதன் உடல் என்பார் கைலாசபதி. ஒரு தூய அழகியல்வாதியின் கலைப் பற்றிய பார்வையும் மக்கள் இலக்கியகர்த்தாவி;ன் அழகியல் பற்றிய பார்வையும் அடிப்படையில் முரண்படானதாகும் என்பதை எடுத்துக் காட்டிய கைலாசபதி அவை எவ்வகையில் தமது வர்க்க நலன்களை பிரதிப்பலித்து நிற்கின்றது என்பதனையும் கோட்பாட்டு அடிப்படையில் நிறுவினார். காலம் காலமாக நீண்டுள்ள இந்த விவாதத்தில் மக்கள் இலக்கியத்தின் அழகியல் சார்பாக அவர் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவையாகும்.

3. கலை இலக்கியத்தை வெறுமனே தனித்த துறையாக நோக்காது அதனை ஏனைய துறைகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை கைலாசபதி வலியுறுத்தினார்;. இலக்கியத்தின் உலக பொதுமையில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருந்த கைலாசபதி இலக்கியமும் அதன் விளைநிலமாகிய சமூதாயமும் உலக பொதுவான நியதிக்குள் எவ்வாறு இயங்குகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு ஒப்பியல் ஆய்வின் அவசியத்தை விலியுறுத்தினார். பல தல இலக்கியங்களிலிருந்தும் தேசிய இலக்கியங்களிலிருந்தும் உலக இலக்கியம் உருவாகின்றது என்ற மார்க்சின் கோட்பாட்டை ஆதாரமாக கொண்டு தமிழியல் அத்தகைய சாத்தியப்பாடுகள் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதை ஆதாரங்களுடடன் எடுத்துக் காட்டுகின்றார். ஒப்பியல் ஆய்வின் மூலமே குறிப்பிட்ட இலக்கியத்தின் தனித்துவத்தினையும் அதன் பொதுமையையும் எடுத்துக் காட்ட முடியும் என்பதை சிறப்பாகவே கைலாசபதி உணர்ந்திருந்தார். தமிழில் ஒப்பியல் நோக்கு வளர்வதற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பேராசிரியர்கள் சுந்தரம்பிள்ளை, வையாபுரிபிள்ளை என்றால் அதன் பின் இத்துறையில் சாதனை செய்தவர் கைலாசதியாவார் எனக் கூறின் தவறாகாது. பொதுவாகவே கைலாசபதியின்; ஆய்வுகளில் ஒப்பியல் ஆய்வு என்பது முனைப்புற்றுயிருப்பினும் அவரது ‘இரு மகாகவிகள்’ , ‘ஒப்பியல் இலக்கியம்’ “Tamil Heroic Poetry ”ஆகிய நூல்களே அவரது ஒப்பியல் இலக்கிய ஆய்வுக்கு உதாரணங்களாக குறிப்பிடலாம். பொதுவாகவே கைலாசபதியின ஆய்வுகள் தமிழ் சமூதாயத்தின் வாழ்க்கை கூறுகளில் அரசியல், பொருளியல், மெய்யியல், சமூகவியல், அழகியல், அறிவியல் முதலிய துறைகளை தமதாக்கி அதன் ஒளியிலேயே தமிழ் இலக்கியம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கக் காண்கின்றோம். அந்தவகையில் தமிழிலே ஒப்பியல் இலக்கிய ஆய்வினை மார்சிய நோக்கில் ஆய்வு செய்த தமிழ் அறிஞர்களில் சைலாசபதி முன்மையானவர் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.
4. தேசியம் என்ற சிந்தனையானது பல தளங்களில் இயங்கி வந்துள்ளதை அவதானிக்கலாம். தேசியம் மனித குலத்தின் நாகரிகமான பக்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற போது அதனை பிற்போக்கான தேசியம் எனவும் அது வளர்ச்சிகச்காகவும் சமத்துவ சமூகவமைப்பிற்காகவும் செயற்படுகின்ற போது முற்போக்கான தேசியம் எனவும் வறையரை செய்கின்றோம். அந்தவயையில் ஐம்பதுகளில் இலங்கையில் தோன்றிய தேசியமானது நமது நாடு, நமது மக்கள், நமது அரசியல், பொருளாதார, கலாசாரப் பண்பாட்டு பாராம்பரியம் என்ற உணர்வை தோற்றுவித்திருந்தது. இதன் பின்னணியில் இலங்கையில் மண்வாசைன மிக்கப் படைப்புகளும் சமகா பிரச்சனைகளும் இலக்கியத்தின் பாடுப்பொளுளாகின. இந்த சூழலில் தமிழில் பரந்தப்பட்ட மக்கள் இலக்கியத்தை புறக்கணித்து நின்ற மரபுவாதிகளுக்கு எதிராகவும் அதேசமயம் இலங்கையை இந்திய வணிக இலக்கியங்களுக்கான சந்தையாக பாவித்த கபடதனங்களுக்கு எதிராகவும் உறுதியான தத்தவார்த்த போராட்டத்தை நடாத்த வேண்டிய தேவை இருந்தது. இத் தத்துவார்த்த போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் கைலாசபதி முதன்மையானவர். இதன் பின்னணி;யில் கைலாசபதி எழுதிய ‘ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’ ‘நாவலர் பற்றி கைலாசபதி’ ஆகிய நூல்களும் தேசிய இலக்கியம் குறித்து எழுதிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும். அவ்வாறே தேசிய இலக்கியம் தொடர்பில் முக்கிய கவனமெடுத்த கைலாசபதி அதனை சர்வதேச பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்துனே இணைத்துப் பார்த்தார். இதன் காரணமாகவே பாரதியை தேசிய இலக்கியத்தின் முன்னோடியாக அவரால் காணமுடிந்தது. ‘ஓரே உலக’ இலக்கியத்திற்கு தேசிய இலக்கியம் எத்தகைய பங்களிப்புகளை வழங்க முடியும் என்பதனையும் கைலாசபதியால்; எடுத்துக் காட்ட முடிந்தது.
கலை இலக்கியம் அரசியல் வரலாற்றுக் காலக்கட்டங்களில் மனிகுலத்தின் வளர்ச்சிக்கு சாதகமாகவும் பாதகமாகவும் செயற்பட்ட சந்தர்ப்ங்களை ஆய்வு அடிப்படையில் கைலாசபதியின்; எழுத்துக்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. சமூதாய அமைப்பின் மேட்கட்டுமானத்தில் ஒன்றாக அமையும் இலக்கியம் சமூதாயத்தை விபரிப்பதாக மட்டுமன்று அது சமூதாயத்தை மாற்றும் கருவியாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை ஊடாக தமது எழுத்து சார்ந்த பங்களிப்பினை வழங்கியவர் கைலாசபதி. அவரது எழுத்துக்களில் சிலாகித்து பேசப்படுகின்ற ஓர் அம்சம் தான் அவரது எழுத்து நடையாகும். தமது கருத்துக்களை தெளிவாக முன்வைக்கின்ற அதேசமயம் வாசகனை ஈர்த்தெடுக்கும் ஆற்றலும் கைலாசபதியின் எழுத்து நடைக்கு உண்டு. எண்ணுகணக்கற்ற சொற்களை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார். அவ்வாறே அவரது எழுத்துக்களில் காணப்படும் பிறிதொரு சிறப்பு அம்சம், அவர் எடுத்தாள்கின்ற மேற்கோள்களாகும். ஆய்வு நெறி ஒழுங்கு என்பது வரையறுக்கப்பட்ட தகவல்களை வழங்க வேண்டும் என்ற வரைறையை கொண்டிருந்த போதினும் அதற்கு அப்பால் விரிவான தகவல்கள் வழங்குவது கைலாசபதியன் நூல்களில் பொதுவாக காணப்படுகின்ற பண்பாகும். கைலாசபதியின்; நூல்களை வாசிக்கின்ற போது அவை தொடர்பான முழு நிறைவான தேடலை மேற்கொள்வதற்கு ஆதர்சனமாக அமைந்திருக்கும்.
உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் ஒரு பகுதியாகவே கைலாசபதி பற்றிய ஆய்வும் கடந்த சில வருடங்களாகவே பரிணமித்துவந்துள்ளது. கால் நூற்றாண்டு காலமாக தமிழியல் ஆய்வுத் துறையிலும் பிற சமூதாயம் சார்ந்த செயற்பாடுகளிலும் பல்வேறு விதங்களில் கைலாசபதி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். கைலாசபதியின் வரலாற்றினையும் அவரது மரபின் வரலாற்றினையும் ஊன்றிக் கவனிக்கின்ற போது ஓர் உண்மை புலனாகின்றது.

இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல், ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்ட உணர்;வை கட்டியெழுப்புதல், அடித்தள மக்கள் பற்றிய இலக்கியங்களை படைப்பதும் அவர்களின் மேம்பாட்டிற்காக போராடும் உணர்வை கட்டியெழுப்புதல் முதலிய குறிக்கோள்களை மையமாக வைத்தே தமது சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தார். கைலாசபதியின் தாக்கத்தினை அவரை தொடர்ந்து வந்த ஆய்வுகளிலும் ஆக்க இலக்கிய படைப்புகளிலும் காணக் கூடியதாக உள்ளது. ஒருவகையில் புதிய ஆய்வுப் பார்வைகளும் புதுமை இலக்கியங்களும் தோன்றி வளர்வதற்கு வௌ;வேறுவகையில் கைலாசபதி உதவியுள்ளார். இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தின் போக்குகளை அவதானிக்கின்ற போது ஒர் உண்மை புலனாகாமற் போகாது. தனிமனிதவாதம், தனிமனித முனைப்பு என்பன காரணமாக சகல முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் உணர்ச்சி அடிப்படையில் தகர்த்து அதனூடாக தனக்கான மன்றாடி நிற்கின்ற ஆராய்ச்சி மணிகளையும் எந்திரவியலாளர்களும் ஆர்பரித்து நிற்கின்ற இன்றையநாளில் மக்கள் இலக்கியங்களும் அது சார்ந்த இலக்கிய கர்த்தாக்களும் தாக்குதல்களுக்குட்படுவது தற்செயல் நிகழ்ச்சி அல்ல. “பல பதர்கள் இருக்க நெல்லை கொண்டு போனானே” என்ற வ. ஐ. ச. ஜெயபாலனின் வரிகள் எவ்வளவு தீர்க்கதரிசனமாய் இருக்கின்றது.
இதனை மனதில் கொண்டு தொடர்ந்து ஆக்கப்ப+ர்வமான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியது நமது கடமையாகும். கைலாசபதி வெறும் நாமம் மட்டுமல்ல. அவர் ஒரு இயக்க சக்தி. அதனை மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்கள் புரிந்துக் கொள்ளும் விதமும் தமதாக்கி கொள்ளும் விதமும் தனித்தன்னை வாய்ந்ததாக இருக்கும், இருக்கவேண்டும்.

No comments:

Post a Comment