Sunday, June 12, 2011

இலங்கையின் சமூக, ஜனநாயக, சீர்த்திருத்த இயக்கங்களில் முன்னோடிகளான சில தமிழ் பெண்கள் சித்திரலேகா மௌனகுரு

"வரலாற்றியலில் காணப்படும் ஆண்நிலைப் நோக்கு என்கிற காரணம் மாத்திரமன்றி பொதுவாகவே சமூகத்தில் பெண்கள் பற்றி நிலவும் அலட்சிய மனோபாவத்தால் அவர்களைப்பற்றிய சான்றுகள் பாதூகக்கப் படாது அழிந்து போனதும் இன்னோர் காரணமாகும் இத்தகைய தடங்கல்களைத் துணிவோடு எதிர்கொண்டு தகவல்களைத் திரட்டி பெண்கள் வரலாற்றை மீளமைக்கும் பணி இன்றைய பெண்ணிலை ஆய்வாளர்களின் பாரிய பணியாக உள்ளது."




இலங்கையின் நவீன சமூக அரசியல் வரலாற்றின் உருவாக்கத்திற்குப் பல பெண்கள் பங்களித்துள்ளனர். 19 நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இவர்கள் சமூக சீர்திருத்தம், தொழிலாளர் நலன் அரசியல் ஜனநாயக உரிமைகள் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பணியாற்றியுள்ளனர் எனினும் இலங்கையின் நவீன வரலாற்றுக் கல்வியில் இவர்களுக்கு போதிய அங்கிகாரம் வழங்கப்படவில்லை. பெண்களது செயற்பாடுகள் தகவல் என்ற அளவிலாயினும் கூடப் பதிவு செய்யப்படவில்லை எந்தவித முக்கியத்துவமும் அற்று பெயரளவிலும் ஆண்களுக்கு அவர்களது செயற்பாடுகளில் உதவியோர் என்ற அளவிலுமே இப்பெண்களைப்பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன வரலாற்றில் காணப்படும் ஆண்நிலை நோக்கமே பெண்கள் பற்றிய இத்தகைய அலட்சிய மனோபாவத்துக்கு அடிப்படைக்காரணமாகும்.



எனினும் சமீபகாலமாக இலங்கையில் மறைக்கப்பட்டுள்ள பெண்கள் வரலாறு பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகிறது பெண்ணிலைவாத எழுச்சியும் பெண்கள் இயக்கங்களின் ஆர்வமும் இலங்கைப் பெண்கள் வரலாற்றை உருவாக்குவதற்கு தூண்டுகோலாக உள்ளன இலங்கையின் சமூக முற்பகுதியிலிருந்து ஈடுபட்டு உழைத்த பெண்மணிகள் சிலர் பற்றிய ஆய்வுகள் தற்போது வெளிவந்துள்ளன. (1)



இத்தொடர்பில் இலங்கையின் தமிழ் பேசும் பிரதேசங்களில் சமூக சீர்திருத்த ஜனநாயக இயக்கங்களில் முன்னின்றுழைத்த சில பெண்கள் பற்றி அறிமுகம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும் .இவர்கள் சமூக சீர்திருத்த வாதிகளாகவும் பணிபுரிந்துள்ளனர் தமது காலத்தில் காணப்பட்ட சமூகப் பழமைவாதத்தையும் பிற்போக்குத்தனத்தையும் கண்டு மனந்தளர்ந்து விடாது பெண்களுடைய உரிமைகளுக்காக இவர்கள் உரத்துத் குரல் கொடுத்தனர்.அத்துடன் பொதுவான சமூக நலன் கருதிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.



மங்களம்மாள் பாடசாலை சென்று முழுமையாக கல்வி கற்றதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை.ஆனால் வீட்டிலிருந்து போதியளவு ஆங்கிலமும் தமிழும் கற்றுத் தமது கல்வி அறிவினை விருத்தி செய்து கொண்டார். (2) இவரது கணவர் மாசிலாமணி கேரளாவில் கல்வி கற்றவர்.ஒரு முற்போக்குவாதி தேசாபிமானி என்ற பத்திரிகையை யாழ்ப்பாணத்திலும், பிபிள்ச மகசின் (Peoples Magazine) என்ற பத்திரிகையைக் கொழும்பிலும் வெளியிட்டவர். இத்தகைய குடும்ப சூழலில் வாழ்ந்த மங்களம்மாள் சமூக உணர்வு உள்ளவராக வளர்ந்ததில் வியப்பில்லை. யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் உலக நாடுகளிலும் நடைபெறும் வாய்ப்பும் மங்களம்மாளுக்கு இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பொதுவாக இலங்கையில் பெண்களைப் பற்றிய பழமைவாதக் கருத்துக்களே காணப்பட்டன. பெண்களுக்கு கல்வி அவசியம் என்ற கருத்தைச் சுதேசிகளும், வெளிநாட்டவரும் அடிக்கடி கூறியபோதும் பெண்கள் பாடசாலை நிறுவப்பட்ட போதும் எத்தகைய கல்வி பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்து கருத்து வேறுபாடு நிலவியது பெண்கள் குடும்ப வாழ்க்கையைத் திறம்பட நடத்துவதற்குரிய கல்வி கற்றாலே போதுமானது என்ற கருத்தினைப் பல ஆண் சமூகச் சீர்திருத்தவாதிகள் தெரிவித்தனர். பெண்கள் சமூகப்பணிகளிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது பெண்களின் இயல்புக்கு உகந்த காரியம் அல்ல என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இத்தகைய ஒரு பின்னணியில் மங்களம்மாள் பெண்களின் நவீன முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்ததுடன் பத்திரிகை ஸ்தாபனங்கள் ஆகியவற்றையும் ஆரம்பித்தார்.



சமூகப் பணிகளின் மூலம் மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற கருத்துக் கொண்டிருந்த மங்களம்மாள் 1902 ஆம் ஆண்டு அளவில் 'பெண்கள் சேவா சங்கம்" எனும் ஒரு நிலையத்தை யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் தொடங்கியதாக அறியமடிகிறது.



நாமறிந்த அளவில் இச்சங்கமே தேசிய உணர்வு பெற்ற இலங்கைப் பெண்களின் முதலாவது சங்கம் எனலாம்1902ஆம் ஆண்டின் முன் இத்தகைய ஒரு சங்கம் இருந்ததாக அறியமுடியவில்லை.இச்சங்கம் மதச்சார்பற்றதாய் தமிழ் மகளீருக்குப் புதிய அறிவையும் தன்னம்பிக்கையையும் ஊட்ட வல்லதாய் அமைக்கப்பட்டதால் பெண்விடுதலையை நோக்கிய முதலாவது சங்கம் எனக் கொள்ளலாம் (இராமலிங்கம்.வ:1985)



மங்களம்மாள் இலங்கையின் முதற்பெண் பத்திரிகையாளர் ஆவார். இவர் நடத்திய பத்திரிகை தமிழ் மகள் என்பதாம்.1923 ஆம் ஆண்டு இப்பத்திரிகையை இவர் ஆரம்பித்தார். யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட இச்சஞ்சிகை மங்களம்மாள் இந்தியாவில் சில வருடங்கள் வாழ்ந்தபோது அங்கிருந்தும் வெளிவந்தது.



இச்சஞ்சிகை பற்றி "தேசபக்தன்" என்ற பத்திரிகையில் வெளிவந்த விளம்பரம் ஒன்றில் பெண்களின் முன்னேற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்ட ஓர் இனிய மாதாந்தப் பத்திரிகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



தமிழ் மகள் சஞ்சிகையில் நாமார்க்கும் குடியல்லோம் என்ற வசனம் இலட்சிய வாசகம் போல குறிப்பிடப்பட்டுள்ளது.பெண்கள் எவருக்கும் கட்டுப்பட்டவர்களோ அடிமைகளோ இல்லை என்பதையும் சுயாதீனமானவர்கள் என்பதையும் இவ்வாசகம் வெளிப்படுத்துகிறது இச்சஞ்சிகை. பெண்விடுதலை, பெண் சமத்துவம், சீதனக் கொடுமை போன்ற பெண்கள் தொடர்பான விடயங்களையும் தீண்டாமை, சுய உற்பத்தியில் ஈடுபடுதல் போன்ற பொதுநல விடயங்களையும் கொண்ட கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்தது.



இச்சஞ்சிகை ஆரம்பத்தில் மாதாந்தச் சஞ்சிகையாகச் சில வருடங்களே வெளிவந்தது. பின்னர் நிதி நெருக்கடியினாலும் வேறு தடங்கல்களினாலும் கால ஒழுங்கற்று வெளிவந்து இறுதிப்பகுதியில் பின்னர் வருடாந்த வெளியீடாக மாறியது.1971 முற்றாக நின்று போயிற்று.



மங்களம்மாள் தமது பத்திரகை மூலமாக மாத்திரமன்றி அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஏனைய பத்திரிகைகள் மூலமாகவும் தமது கருத்துக்களைத் தெரிவித்தார். தேசபக்தன், இந்து சாதனம், ஈழகேசரி, Hindu Organ போன்றன இவர் எழுதிய ஏனைய பத்திரிகைகளாகும்.





பெண்களுக்கு அரசியல் உரிமைகள் தேவை என்பதில் மங்களம்மாள் அசையா உறுதியுடையவராயிருந்தார். 1927 இல் இலங்கைக்கு வந்த டொனமூர் கொமிசன் அரசியற் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக இலங்கையரின் ஆலோசனைகளையும் கேட்டது. தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பொதுக்கள் மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கு சுதேசிகள் மட்டத்திலிருந்து எதிர்ப்பும் கிளம்பியது.சொத்து, கல்வி ஆகியவை உடைய ஆண்களே தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என இவர்கள் வாதாடினர்.இக்கருத்தை பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் பெண்கள் சங்கம் (Women Franchise Union) நிறுவப்பட்டது. லேடி டயஸ் பண்டாரநாயக்காவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பில் திருமதி கெராட் வீரக்கோன், அக்னஸ் டீ. சில்வா, டபிள்யூ.ஏ.டி.சில்வா போன்றோருடன் திருமதி ஈ.ஆர் தம்பிமுத்து, திருமதி நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயர் போன்ற தமிழ்ப் பெண்களும் அங்கம் வகித்தனர். இச்சங்கம் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டுமெனக் கோரி டொனமூர் கொமிசன் முன்னர் 1928 ஆம் ஆண்டு ஐனவரி மாதம் 11 ஆம் திகதி சாட்சியமளித்தது. (The Independent 14 Jan 1928)



பெண்களது இத்தகைய நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. சேர். பொன்னம்பலம் இராமநாதன் இத்தகைய எதிர்ப்பாளர்களில் ஒருவராக முன்னின்றார். பொது விடயங்களில் ஈடுபடுவது பெண்களுக்குச் சற்றும் பொருத்தமற்றதாகும் என்று கூறினார். இத்தகைய சமூகப் பழமைவாதக் கருத்துக்களை அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் சிலவும் எதிரொலித்தன. யாழ்ப்பாணத்துப் பத்திரிகையொன்று பின்வருமாறு ஆசிரியத் தலையங்கம் எழுதியது.







"...சென்ற வருடம் இலங்கைக்கு வந்த அரசியல் விசாரணைச் சங்கத்தார் இங்கு செய்யத்தக்க அரசியற் திருத்தங்களுடன் சட்டநிருபணசபை போன்ற சபைக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தனுப்பும் வி்டயத்தில் பெண்களுடைய சம்மதத்தைப் பெற்றலும் ஒன்றெனக் கூறிவிட்டனர். ஆனால் விசாரணைச் சபையார் தாமாக இதனைக் கூறினாரல்லர். கொழும்பிலேயுள்ள ஆண்தன்மை பூண்ட தன்னிஸ்ட பெண் ஐன்மங்கள் சிலர் கேள்விக்கிசைந்தே விசாரணைச் சபையாரும் பெண்ணென்றால் பேயுமிரங்மென்னும் பழமொழிப்படி உடன்பட்டு விட்டார்கள். இத்திருத்தம் எங்கள் சமயம்,சாதி, தேசம், பழக்கவழக்கம்,கொள்கைகள் என்று சொல்லப்படுவன எல்லாவற்றிற்கும் முழுமாறானதாகும். பெண் தன்னெண்ணத்திற்கு நடந்து கொள்ளுதல் சைவநன்மக்களுள் எக்காலத்திலுமில்லை. கற்பெனப்படுவது சொற்றிறம்பாமையென்ற பிரகாரம் நாயகனுடைய சொற்படி ஒழுக வேண்டிய பெண் அவன் சொல்லை மீறி இருமனப்படுவளேல் அவள் செல்வத்தோடு கூடியவளாயினுமென் அவள் பொதுமகளாவாள்.. மேலும் பறங்கியர், ஒல்லாந்தர் முதலாம் அந்நிய சமயத்தினர் இந்த இலங்கையைப் பரிபாலித்தபோது சமயநிஸ்டூரம் செய்தனரேயன்றி இந்த விதமாக எங்கள் சாதிக்கட்டுப்பாட்டையழித்து இங்குள்ள பெண்களைப் பொதுக்கருமங்களில் பிரவேசிக்கச் செய்து பொதுமகளீராக்கி விடவில்லை. பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையே பேதமில்லையெனும் கொள்கை பூண்ட மேலைத் தேசத்தவர்களாகிய விசாரணை சங்கத்தார் தங்களைப்போல எங்களையும், தங்கள் பெண்களைப்போல எங்கள் பெண்களையும் மதித்து தீமைக்கும் கலகத்திற்கும், சாதி சமய மகத்துவங்களையும் பழைய சீர்திருத்தத்தையும் கெடுத்தற்கும் ஏதுவாகவுள்ள இந்தப் போலிச் சுவாதீனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது கட்டுப்பாடாகுமா? (இந்துசாதனம் 08.11.1928)..."



பெண்களது அரசியற் சுயாதீனத்தை மேற்கண்டவாறு மறுத்து எழுதிய இந்துசாதனப் பத்திரிகையின் ஆங்கிலப் பதிப்பில் பெண்களது வாக்குரிமையின் அவசியம் குறித்து மங்களம்மாள் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.



உலகம் முழுவதும் பெண்கள் தமது நிலையை உணர்ந்து தமது உரிமைகளுக்காகப் போராடத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் பெண்கள் வாக்களிப்பதற்கு மாத்திரமன்றி முனுசிபல், கவுன்சில், சட்டசபை போன்றவற்றுக்கான தேர்தல்களுக்கு வேட்பாளர் ஆவதற்கும் உரிமையுடையவர்கள். இத்தகைய உரிமைகள் அவர்களுக்கு இலகுவில் கிடைத்துவிடவில்லை. அவர்கள் தாமே தமது உரிமைகளுக்காகப் போராடியுள்ளனர். ஆனால் எமது இலங்கைப் பெண்கள் இத்திசையில் தமது சுட்டுவிலைத்தானும் அசைக்கவில்லை. எனவே சகோதரிகளே நாம் எமது உரிமைகளுக்காகப் போராடுவோம்: அவை கிடைக்கும் வரை சளைக்க மாட்டோம்.



எமது உரிமைகளை தாமாக எவரும் எமக்கு வழங்கப் போவதில்லை. நாம் வழங்கும் சீதனத்தின் மூலம் வாக்களிக்கவும் சட்டசபைப்பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படவும் உரிமை பெற்ற எமது சகோதரர்கள் எமது பிறப்புரிமைகள் பற்றி ஒரு சொல்லைத்தானும் விசாரணைச் சபையாருக்கு அனுப்பிய பல்வேறு விண்ணப்பங்களில் கூறுவதற்கு நினைக்கவில்லை……. நாம் ஆண்களுடன் சமஉரிமை பெறவேண்டும். வாக்களிப்பதற்கு மாத்திரமல்ல சட்டப் பிரதிநிதிகளாகத் தேர்தெடுக்கப்படும் உரிமையும் எமக்குத் தேவையானது. சுருக்கமாகக் கூறின் இப்போது நிலவும் அசமத்துவ நிலை நீக்கப்பட்டு இலங்கைப் பெண்கள் ஆண்களுடன் சமத்துவமான அரசியல் உரிமைகளைப் பெறவேண்டும் (Hindu Organ 03.10.1927)



சேர். பொன். இராமநாதன் போன்றோர் பெண்களது சமூகப் பங்களிப்பை மறுத்து பெண்களுக்கு வீடே உலகம் என்ற கருத்தை வற்புறுத்தியதற்கு மாறாக மங்களம்மாள் விவாகம் செய்யாமல் சமூகப்பணி செய்வது பற்றியும் குறிப்பிட்டார்.



பெண்களுக்கு விவாகம் ஒன்றே முடிந்த முடிவு எனக் கருதக் கூடாது. பெண்கள் கன்னிகளாக இருந்து கடவுட் பணியோ, சமூதாய சேவையோ செய்ய முடியும் (இராமலிங்கம் வள்ளிநாயகி :1985:17) எனவும் எழுதினார்.



மங்களம்மாள் யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்லாது இலங்கையின் ஏனைய பகுதிகள் சிலவற்றிற்கும் தமது பணிகளை விரிவுபடுத்தினார். குறிப்பாகத் திருகோணமலைக்குச் சென்று அங்கு பெண்கள் அமைப்புகளில் சொற்பொழிவாற்றுவதிலும் ஈடுபட்டார். திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கத்தின் 11ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்து மாதர் சங்கங்களின் நோக்கங்கள் பற்றியும் உலக மேம்பாடு குறித்து பெண்கள் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் உரையாற்றினார்.(ஈழகேசரி 11.03.1931)



இந்தியாவில் தங்கியிருந்த சில வருடகாலத்தினும் அங்கும் அரசியல் காரியங்களில் ஈடுபட்டார். காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்ட மங்களம்மாள் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து செயற்பட்டார். 1927 இல் சென்னையில் நடைபெற்ற மாநகரசபைத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டார் .இவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஐஸ்டிஸ் கட்சி வேட்பாளர் மிகக் குறைந்த வாக்குகளாலேயே வெற்றி பெற்றார்.. (3)



இத்தகைய பன்முக ஆளுமை கொண்ட மங்களம்மாள் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. அவரது எழுத்துக்கள் யாவும் அட்டவணைப் படுத்தப்பட்டால் அவரது கருத்துக்களின் பரப்பைத் தெளிவாக அறியமுடியும்.



மங்களம்மாளின் சமகாலத்தவரான இன்னோர் முக்கிய பெண்மணி மீனாட்சியம்மாள் நடேசையராவார்.தமிழ்நாடு தஞ்சாவூரைச் சேர்ந்த இவர் இளமைக்காலத்தில் இலங்கை வந்தார்.மலைநாட்டின் முதலாவது தொழிற்சங்கத்தை நிறுவியவரான நடேசையரை மணமுடித்த மீனாட்சியம்மாள் மலையக மக்களுக்கான சேவையிலேயே தனது வாழ்நாளைக் கழித்தார்.



மங்களம்மாளைப்போலவே மீனாட்சியம்மாளும் எழுத்தாளராவார். பத்திரிகைத் துறையிலும் ஈடுபட்டவர். நடேசையர் வெளியிட்ட தேசபக்தன் எனும் பத்திரிகையில் தேவையானபோது தலையங்கங்களும் கட்டுரைகளும் எழுதினார். அத்துடன் இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை என்ற தமது பாடல் தொகுப்பொன்றொன்றையும் 1940 ஆம் ஆண்டு வெளியிட்டார்.



மீனாட்சியம்மாள் மலையகத் தொழிலாளரின் நலனில் பெரும் அக்கறை கொண்டிருந்தார். இக்காலத்தில் மலைநாட்டுத் தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமானதாய் அமைந்திருந்தது அரை அடிமை நிலைமையில் தொழிலாளர் வாழ்ந்தனர். தோட்டங்களில் காணப்பட்ட கங்காணிமுறை , துண்டுமுறை போன்றவை அதிகளவு சுரண்டலுக்குக் காரணமாயின. பெண் தொழிலாளர் நிலைமை ஏனையவர் நிலையை விடச் சிரமம் நிறைந்ததாய்க் காணப்பட்டது. ஒடுக்குமுறைச்சட்டங்களுக்குத் தமது எதிர்ப்பை எந்தவிதத்திலாவது தெரிவிப்போருக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இத்தொடர்பில் பல பெண்களும் கூடக் கடூழிய சிறைத்தண்டனை பெற்றனர்.



இத்தகைய ஒரு பின்னணியிலேயே மலையகத்துத் தொழிலாளர்களின் துயரை விபரிப்பதாகவும்.இவற்றை நீக்குவதற்குரிய செயல்களில் ஒன்றிணைந்து ஈடுபடுமாறு தூண்டுவதாகவும் இவரது பாடல்கள் அமைந்தன. தமது கருத்துக்களைப் பரப்புவதற்குரிய சாதனமாக இசையைக் கையாண்டார். அவரது பாடல் தொகுப்பக்கு எழுதிய முன்னரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.



இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமை வர வர மிகவும் மோசமாகிக் கொண்டே வருகிறது. இலங்கை வாழ் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்ககாகத் தீரமுடன் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. அத்தகைய பிரசாரம் பாட்டுகள் மூலமாகச் செய்யப்படின் அதிக பலனளிக்கும். இதை முன்னிட்டே இன்று இலங்கை வாழ் இந்தியர்களின் நிலைமையைப் பாட்டுக்களின் மூலம் எடுத்துக்கூற முன் வந்துள்ளேன். இந்தியர்களைத் துக்கத்தில் அழ்ந்துவிடாது தங்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்குத் தீவிரமாகப் போராடும்படி அவர்களை இப்பாட்டுக்கள் தட்டியெழுப்ப வேண்டுமென்பதே எனது அவா (மீனாட்சியம்மாள் நடேசையர்:1940)





மீனாட்சியம்மாள் பொதுக் கூட்டங்களில் பாடல்கள் பாடித் தொழிலாளரிடையே விழிப்புணர்வைத் தட்டியெழுப்பியது மாத்திரமன்றி எழுத்துத்துறையிலும் ஈடுபட்டிருந்தார். பெண்களது முன்னேற்றம் கருதியதாக இவரது பெரும்பாலான கட்டுரைகள் அமைந்திருந்தன . தேசபக்தன் பத்திரிகையி்ல் ஸ்திரிகள் பக்கம் என ஒரு பகுதியை ஆரம்பித்தார். இது 1928 ஆம் ஆண்டு முற்பகுதியிலிருந்து ஆரம்பமாயிற்று பெண்கள் சுதந்திரம்,சமத்துவம் ஆகியவற்றை வற்புறுத்திய மீனாட்சியம்மாள் பெண்கல்வி, முன்னேற்றம் பெண்கள் தொடர்பான சட்டச்சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து இப்பக்கத்தில் அடிக்கடி எழுதினார். பெண்களது சுதந்திரம், முன்னேற்றம் பற்றி பேசியும் எழுதியும் வந்தால் மாத்திரம் போதாது. நடைமுறையில் இவற்றைப் பிரதிபலிக்கும் செயல்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என இவர் அடித்துக்கூறினார்.

ஸ்திரிகள் முன்னேற்றமடைய வேண்டுமெனப் பலபேர்கள் எழுத்து மூலமாயும் வெறும் பேச்சாகவும் பேசுகிறார்களே தவிரக் கையாள்வது கிடையாது. சில மகான்களும் பிரசங்க மேடைகளில் நின்று பெண்களுக்குக் கல்வி வேண்டும், சுதந்திரம் வேண்டும் அவர்கள் முன்னேற்றமடையாவிட்டால் தேசம் முன்னேற்றமடையாது என்று வாயால் பேசுகிறார்கள் அவர்கள் வீட்டில் அம்மாக்களுக்கோ கோஷா திட்டம். இவ்வாறு விபரம் அறிந்தவர்கள் நிலைமையே மோசமாயிருந்தால் அதிகம் படிப்பறிவில்லாத ஆடவர் தங்கள் மனைவிமார்களை எப்படி நடத்துவார்கள்? பெண்மக்களில் சிலர் பெண்கள் முன்னேற்திற்காக ஈடுபட்டு உழைத்தாலும் அதற்கு ஆயிரம் இடயூறுகள் ஏற்படுகிறதே தவிர அனுகூலங்கள் ஏற்படுவது அரிதாக இருக்கிறது. (தேசபக்தன் 18.06.1928) என எழுதினார் அவர் இக்காலத்தில் நிகழ்ந்த பெண்கள் வாக்குரிமை இயக்கத்திற்கும் மீனாட்சியம்மாள் ஆதரவு அளித்தார். பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தில் அங்கம் வகிக்காவிடினும் பெண்களது வாக்குரிமை தொடர்பாக அக்காலத்தில் நிகழ்ந்த செயற்பாடுகளையும் விவாதங்களை இக்கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிட்டது போல பெண்களுக்கு வாக்குரிமை அறிவிப்பது பாரதூரமான தவறு என்ற கருத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக சேர். பொன்னம்பலம் இராமநாதன் பெண்களுக்கு வாக்கரிமை அளிப்பதை மிக வன்மையாக எதிர்த்தார்.



குடும்ப அங்கத்தவர்களுடைய இதய அமைதியையும் இசைவையும் குலைத்து அமைதியின்மைக்கு வழிவகுத்துவிடும் என்றும் (டெயிலிநியூஸ் - 01.12.1927) "பன்றிகளின் முன்னர் முத்தைத் தூவுவது போலாகும்" எனவும் (டெயிலிநியூஸ் 16 .01.1928) அவர் கூறினார். இராமநாதனுடைய இத்தகைய நிலைப்பாடு குறித்துப் பெண்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் காணப்பட்டது.பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் எதிரியாகவே இவர் கருதப்பட்டார்.

மீனாட்சியம்மாள் தேசபக்தனில் எழுதிய கட்டுரையொன்றில் இராமநாதனின் இத்தகைய பிற்போக்குத்தனமான நிலைப்பாடு குறித்துக் கண்டனம் செய்தார்.



டொனமூர் கொமிசன் முன் இலங்கைப் பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க வேண்டும் என வற்புறுத்தி கனம் நடேசையரும் ஹீமான் பெரி.சுந்தரம் முதலியோரும் சாட்சியம் கொடுத்துள்ளனர். ஆனால் சேர். பொன்னம்பலம் இராமநாதனைப் போன்றவர்கள் குறுகிய நோக்கத்துடன் பெண்களுக்குச் சமஉரிமை கொடுக்கக் கூடாதென்ற விடயமானது பொதுமக்களுக்கு ஆச்சரியமாகத்தானிருக்கும். இந்தியாவை விட முற்போக்கடைந்திருப்பதாகப் பாவிக்கும் இலங்கையில் ஸ்திரிகளுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாதென்றால் இலங்கை எவ்விதத்தில் முற்போக்கடைந்திருக்கிறது? சமீபத்தில் சேர். ஜெகதீஸ் சந்திரபோஸ் கல்கத்தா பெண்கள் விடுதிச்சாலையை திறந்து வைக்கயில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் என்ற எண்ணத்தை விட்டுவிட வேண்டும். ஆண்களும் பெண்களும் முன்னேற்றமடைவதற்குப் பெண்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். பெண்கள் அத்தகையதொரு நோக்கம் கொண்டு உலக வாழ்க்கையில் இறங்குவார்கள் என நம்புகிறோம். என்றார். இப் பொன்மொழிகளை சேர். இராமநாதன் போன்றோர் கவனிப்பார்களாயின் அவர்கள் நிலை மாறினாலும் மாறலாம். உலக சரித்திரத்தில் பெண்களின் உதவியின்றி விடுதலை பெற்ற நாடு ஏதேனும் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. சேர். இராமநாதன் போன்றோர்கள் இலங்கையில் பெண்கள் பொதுசன சேவையில் ஈடுபடக்கூடாதென்றால் ஒரு பெண் கூட எக்காலத்திலும் வெளியில் வரக்கூடாதென்று ஒரு சட்டம் நிரந்தரமாக ஏற்படுத்த முயற்சித்தல் மேலாகும்.(தேசபக்தன் 13.04.1928)



பெண்கள் முன்னேற்றத்திற்கு எதிரான கருத்துக் கொண்டிருந்தவர்களை இவ்வாறு காரசாரமாக விமர்சித்த மீனாட்சியம்மாள் அதே சமயம் பெண்கள் உரிமைக்காகச் செயல்பட்ட நகரத்து உயர்குழாத்துப் பெண்களுக்கு அவர்களது நடவடிக்கைகளை மேலும் பரவலாக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார். குறிப்பாகப் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் பற்றிக் கூறும போது, இச்சங்கமானது டொனமூர் கொமிசன் இலங்கைக்கு வந்தகாலத்தில் ஆரம்பிக்கப் பெற்றதெனினும் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். என்றுதான் சொல்ல வேண்டும். இச்சங்கத்தினர் இதுவரை செய்துள்ள வேலை எப்படியிருந்த போதிலும் இனித்தான் அதிக வேலை செய்யவேண்டியவர்களாக இருக்கிறார்கள். மேற்படி சங்கத்திற்கு வருடசந்தா ரூபா 50 ஆக வைத்திருக்கிறபடியால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதில் சேர்ந்துழைக்க வசதியிராது. பணம் படைத்தவர்கள் மாத்திரம் தங்கள் காரியத்தைச் செய்து முடிப்பது போதுமானதாகாது. எல்லாச் சகோதரிகளும் கலந்துழைக்க வேண்டிய வேளையில் பணம் படைத்தவர்கள் மாத்திரம் தலையிடுவதைக் கொண்டு அதிக பலம் கிடைக்காது. ஆகவே சகோதரிகள் தாங்கள் கொண்ட காரியத்தைச் செய்து முடிக்க வேண்டுமானால் ஆங்கிலம் தெரியாத சகோதரிகளிடத்தும் பிரசார வேலையைத் துவக்க வேண்டும்.(தேசபக்தன் 26.01.1929)



மீனாட்சியம்மாள் காந்திய இயக்கத்தாலும் இந்தியாவில் நிகழ்ந்த முற்போக்குச் செயற்பாடுகளாலும் கவரப்பட்டிருந்தார் என்பது அவர் தேசபக்தன் பத்திரிகையின் ஸ்திரிகள் பக்கத்தில் பிரசுரித்த விடயங்களிலிருந்து தெரியவருகிறது. பெண்கள் பற்றிய காந்தியின் கருத்துக்கள். இந்தியாவில் பெண்கள் தொடர்பாக ஏற்பட்ட சட்ட சீர்திருத்தங்கள் பற்றிய செய்திகளை அவர் அடிக்கடி பிரசுரித்தார். அத்துடன் இந்தியாவுக்குச் சென்றிருந்த காலங்களிலும் அங்கு அரசியல் நடவடிக்கைகளிற் பங்கு பற்றினார். கோயம்புத்தூரில் நடந்த சத்தியாக் கிரகமொன்றில் பங்கு பற்றியமைக்காக மங்களம்மாளுக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது.(ஈழகேசரி 27.03.1930)



இவர்களை விட டாக்டர் நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐய்யர் (தந்தை பெயர் முருகேசு) நேசம் சரவணமுத்து, திருமதி ஈ.ஆர். தம்பிமுத்து, திருமதி அன்னம்மா முத்தையா, பரமேஸ்வரி கந்தையா, நோபிள் ராஐசிங்கம் போன்றோர் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைக்காலப் பகுதியில் அரசியல் துறையிலும் சமூக முன்னேற்றத்துறையிலும் உழைத்த பெண்களிற் சிலராவர். இவர்களுள் பெரும்பாலானோர் பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படாமலே உள்ளன.



இவர்களுள் நேசம் சரவணமுத்து இலங்கைச் சட்ட சபைக்கு முதல் முதல் நியமிக்கப்பட்ட பெண் ஆவார். 1931 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இவர் கொழும்பு வடக்கிற்கான அங்கத்தவராயிருந்தார். இவர் சட்டசபை அங்கத்தவராகப் பதவி வகித்த காலத்தில் வறிய மக்கள், பெண்கள் தொடர்பான சட்டத் திருத்தங்களுக்காக வாதாடினார். விதவைகள், அநாதைகள், ஆதரவுப்பணம் சம்பளச்சபை நிறுவுதல் பெண் ஆசிரியர்கள் திருமணமானதும் வேலையிலிருந்து நீக்கப்படும் நடைமுறையை அகற்றுதல் என்பன இவர் சட்டசபையில் எழுப்பிய முக்கிய பிரேரணைகள் சிலவாகும்.



வருமானவரி விதிக்கும் தராதரத்திற்குக் குறைவாகச் சம்பளம் பெறும் தொழிலாளரின் நலன் கருதிச் சில விதிகளை இயற்றுவதற்கான சட்டம் ஒன்றை வர்த்தக, தொழில் அமைச்சு விரைவில் உருவாக்க வேண்டும் என்று பிரேரிக்கப்பட்டது. இச்சட்டம் பல நிலைகளிலுள்ள தொழிலாளருக்கு தராதரச் சம்பள அளவு, சம்பளத்தின் கீழ் எல்லை என்பவற்றை நிர்ணயிப்பதற்கான சம்பளச்சபை (Wages Board) ஒன்றை நிறுவுதல், தொழிலாளரது சுகாதாரம், வீட்டுவசதிகள் ஆகியவற்றுக்குத் தொழில் கொள்வோரைப் பொறுப்புடைய வராக்குதல், வைத்தியவசதி, இலவசக்கல்வி, ஓய்வூதியம், காப்புறுதி அகியவற்றுக்கான திட்டம் ஆக்குதல் வேண்டும் எனவும் கோரப்பட்டது. (The Hansard 11.06.1936 AU:586)



ஆசிரியர்களாகத் தொழில் புரியும் பெண்கள் தமக்குத் திருமணமானதும் வேலையிலிருந்து கட்டாயமாக ஓய்வு பெறவேண்டும் எனக் கல்வித் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தது. இப்பிரேரணை நீக்கப்பட வேண்டுமென நேசம் சரவணமுத்து வாதாடினார். இது மாணவிகளின் கல்வி நலத்துக்கும், நாட்டினது நலத்துக்கும் உகந்ததல்ல என அவர் கூறினார். அவ்விடயம் பற்றி ஆராய்ந்த கல்விக்கான நிருவாகக்குழு திருமணமான பெண் ஆசிரியைகளை எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் உட்படுத்த கூடாது என முடிவு செய்தது.(The Hansard 26.01.1939)



நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயர் ஒரு வைத்தியராவார். இவரது கணவர் நடேசையருடன் சேர்ந்து மலையகத்தில் தொழிற்சங்கத்தை உருவாக்க உழைத்தவராவார். நல்லம்மா மீனாட்சியம்மாளுடன் சேர்ந்து மலையகத் தொழிலாளரிடையே சமூக சேவை செய்தார். அத்துடன் 1928 இல் பெண்கள் வாக்குரிமைச் சங்கம் நிறுவப்பட்ட போது அதன் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவரானது மாத்திரமன்றி இணைச் செயலாளராகவும் பணி புரிந்தார்.



திருமதி ஈ.ஆர். தம்பிமுத்துவும் பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் ஸ்தாபக அங்கத்தவர். இவரது கணவர்1923 இல் கிழக்கு மாகாணத்துச் சட்டசபைப் பிரதிநிதியாக இருந்தபோது பெண்களுக்கு வாக்குரிமை தொடர்பான ஒரு பிரேரணையை அறிமுகப்படுத்தியவர்.ஆனால் அப்போது அப்பிரேரணை சட்டசபையில் ஆதரவு பெறவில்லை. (The Hansard CNC பக் 649) தொடர்ந்து திருமதி தம்பிமுத்து பெண்களுக்கான வாக்குரிமைக்கோரிக்கையை வற்பறுத்தினார். பெண்கள் வாக்குரிமைச் சங்கம் நிறுவப்பட்டபோது அதன் உபதலைவர்களில் ஒருவரானார்.1927 ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் திகதி முதன் முதல் இச்சங்கத்தை ஸ்தாபிப்பதற்காகப் பெண்கள் கூடிய போது திருமதி தம்பிமுத்துவே பெண்கள் வாக்குரிமைச் சங்கம் Women Franchise Union என்ற பெயரைப் பிரேரித்தார் (Daily News 08.12.1927)



இதுவரை மேலே கூறிய விடயங்களிலிருந்து நகர்சார்ந்த குடும்பத்துப் பெண்கள் மாத்திரமன்றி கணிசமான அளவு வெவ்வேறு பிரதேசங்களைச் சார்ந்த பெண்களும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து சமூக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமை புலனாகிறது. எனினும் இலங்கையின் நவீன அரசியல் சமூக வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலைக்கு வரலாற்றியலில் காணப்படும் ஆண்நிலைப் நோக்கு என்கிற காரணம் மாத்திரமன்றி பொதுவாகவே சமூகத்தில் பெண்கள் பற்றி நிலவும் அலட்சிய மனோபாவத்தால் அவர்களைப்பற்றிய சான்றுகள் பாதூகாக்கப்படாது அழிந்து போனதும் இன்னோர் காரணமாகும் இத்தகைய தடங்கல்களைத் துணிவோடு எதிர்கொண்டு தகவல்களைத் திரட்டி பெண்கள் வரலாற்றை மீளமைக்கும் பணி இன்றைய பெண்ணிலை ஆய்வாளர்களின் பாரிய பணியாக உள்ளது.



அடிக்குறிப்பும் சான்றாதாரமும்

1. இத்தொடரபில் பின்வரும் நூல்களும் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கன

I. குமாரி ஐயவர்த்தனா

II. Doreen Wikramasinghe

A Western Radical in Sri Lanka

Women`s Education and Research Centre Publication Clombo, 1991

Dr, Mary Rutnam

A Canadian Pioneer for Women`s Rights Sri Lanka

Social Scientists Association Publication Colombo, 1993



III. சித்திரலேகா மெளனகுரு மீனாட்சியம்மாள் நடேசையர், பெண்நிலைச் சிந்தனைகள் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 1993

IV. இராமலிங்கம் வ. மங்களம்மாள் மாசிலாமணி பெண்ணின் குரல் : 8, 1985

2. மங்களம்மாளின் இளைய புதல்வராகிய எம். டி. பாஸ்கரனுடன் கடிதத் தொடர்பு மூலமாக பெற்ற தகவல்

3 மேலது

(பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவன இதழான நிவேதினியில் வெளியான இக்கட்டுரை அதன் தேவைகருதி நன்றியுடன் மீள்பிரசுரிக்கிறோம்)
நன்றி; பெண்ணியம்

No comments:

Post a Comment