Tuesday, June 6, 2017

இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா

இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின் இரண்டாவது ஆண்டு விழா எதிர்வரும் 10.06.2017 சனிக்கிழமை(10.00 AM) அன்று ஹட்டன் மாணிக்கப்பிளிளையார் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும்.அமரர் எஸ் திருச்செந்தூரன் நினைவு அரங்கு திரு லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும்.இவ்விழாவில் வரவேற்புரையினை இலங்கை கல்விச்சமூக சம்மேளனத்தின். பொதுச்செயலாளர் திரு .ஆர் சங்கரமணிவண்ணன் நிகழ்த்துவார். பிரதம அதிதியாக யாழ்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை கல்வியியல்பேராசிரியர் மா. சின்னத்தம்பி அவர்களும் கௌரவ அதிதிகளாக பேராதனைப் பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ் அவர்களும் இலங்கையின் கல்வி நிர்வாக சேவை அலுவலர்களுக்கான பயிற்சி இணைப்பாளர் திரு பீ.ஆறுமுகம் அவர்களும் கலந்துகொள்வார்கள். மாலை கலைஞர்+ என் சாம்பசிவமூர்த்தி அரங்கில் நடைபெறவுள்ள இசைச்சங்கமம் ,மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் சம்மேளனத்தின் கலாச்சாரக்குழு தலைவர் திரு எஸ் சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் நடைபெறும். இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மெட்ரோ செரமிக் உரிமையாளர் திரு எஸ் பொன்னுசாமி அவர்கள் கலந்து கொள்வார். கௌரவ அதிதிகளாக சமூகசெயற்பாட்டாளரும், கல்வியியலாளருமான திரு. எம். நாகலிங்கம் சூரியகாந்தி ஆசிரியர் திரு சிவலிங்கம் சிவகுமாரன் மற்றும் மலையகத்தின் முன்னனி இசையமைப்பாளர் ரீ.எம் சிறீதரன் அவர்களும், கலந்து சிறப்பிப்பர். சம்மேளனத்தின் பிரதம இணைப்பாளர் திரு.எஸ். சேகர் நன்றியுரை வழங்குவார். நிகழ்ச்சசித் தொகுப்பிணை சம்மேளனத்தின் செயற்குழு உறுப்பினர் ஜே.ஜெலூசன் வழங்குவார்.


Tuesday, November 17, 2015

‘எமது கருத்துக்கள் செயற்பாடுகள் யாவும் மானுடத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்களே ஆகும்‘ பொதுச்செயலாளர் ஆர். சங்கரமணிவண்ணன்


அதிபர் தரம்–111க்கான போட்டிப் பரீட்­சையை முன்­னிட்டும் அதி­பர்­க­ளுக்­கான வினைத்­திறன் பரீட்­சையை முன்­னிட்டும் இல­வச செய­ல­மர்­வு­களை இலங்கை கல்விச் சமூக சம்­மே­ளனம் திரு. லெனின் மதிவானம் தலைமையில் அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்­லூ­ரியில் நடைப்பெற்ற போது சம்மேளத்தின் பொதுச் செயலாளர் ஆர் சங்கரமணிவண்ணன் தமதுரையில்
‘இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவை எட்டி நிற்கின்ற வரலாற்றுப் பயனத்தின் இடைவெளியில் பல ஆசிரியர்கள், அதிபர்கள், மற்றும் கல்வித் துறை சார்ந்தவர்களின் பங்கேற்றும் பிரசன்னமும் ஒன்று சேரலும் எமக்கு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. கல்விச் சுமூகத்தினர் அலை அலையாக எமது சம்மேளனத்தில் சேர்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் ஆசிரியர்களின் உரிமைகள், சுயகௌரவம் என்பனவற்றில் அதிக கரிசனை காட்டி வருகின்ற அதே சமயம் எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சியிலும் கவனமெடுப்பது எங்களது பிரதான இலக்காகும். சமூகமாற்றத்தில் கல்விச் சமூகத்தினரின் பங்கு எந்தளவு என்பது சுவாரசியமான கேள்வியாகும். சமூகமாற்றத்துக்கான பயனிப்பில் ஆசிரியர்-மாணவர்கள், மற்றும் புத்தி ஜீவிகள் போன்ற ஏனைய  தளங்களையும் சமூக உணர்வு பெற உந்தித்தள்ளுவதே எமது இலக்காகும். ஒருவகையில் எமது கருத்துக்கள் சிந்தாந்தங்கள் யாவும் மானுடத்தை வென்றெடுப்பதற்கான போராட்டங்களே ஆகும். இதற்காக தான் நாங்கள் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடாத்திய சமூக இலக்கிய கட்டுரைப் போட்டிகளும் நமது சமூகம் குறித்த தேடலையும் மீனாட்சியம்மாள், போராசிரியர் கைலாசபதி முதலிய ஆளுமைகளையும் முன்னிறுத்தியே நடாத்தப்பட்டன. இப்போட்டியினூடாக சமூகம் பற்றிய தேடலில் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள் சிலர் எமது செயற்பாடுகளில் ஆர்வம் கொண்டு அணுசரனை வழங்கியுள்ளனர். மக்களின் நலனிலிருந்து அந்நியமுறாமல் அவர்கள் வழங்கிய பங்களிப்பு விலைமதிப்பற்றது. அதற்கான கணக்கு விபரங்கள் மிக தெளிவாக சமர்பிக்கப்பட்டுள்ளன என்பதையும் நான் பெருமித்த்துடன் கூறிக் கொள்கின்றேன். அந்தவகையில் அதிபர் ஆசிரியர்கள் தமது போட்டி பரீட்சையை வெற்றிகரமாக எதிர் கொள்வதுடன் அதற்கு நன்றி செலுத்துமுகமாக சமுகத்திற்காக செயற்படுவதே ஆகும் என்றுக் கூறுவதைவிட வேறென்ன பெருமை‘

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் ஆலோசகர் சிரேஸ்ட சட்டத்தரணி ஜனஜித்  கல்லூரியின் அதிபர் எம். சாந்தகுமார்பிரதிக் கல்விப் பணிப்பாளர் அலி ஜின்னா, சீடா செயற்றிட்ட இணைப்பாளர் வீ.விஜயானந்தன்,டாக்டர்கள் டி. சந்திரராஜன், ரவிவர்மா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.அத்துடன் இந்தியாவில் Master Athletics Federation of India நடத்திய 5000M ஓட்டப் போட்டியில் முதலிடத்தை (தங்க பதக்கத்தை) பெற்ற SLECOவின் நலன்புரி அமைப்பின் தலைவர் சந்திரன் அவர்களுக்கான பாராட்டு விழாவும் இடம்பெற்றது.

Tuesday, August 4, 2015

பதுளையில் ‘கூலித்தமிழ்‘ விமர்சனமும் ‘வெண்கட்டி‘ அறிமுகமும்

பதுளையில் ‘கூலித்தமிழ்‘ விமர்சனமும் ‘வெண்கட்டி‘ அறிமுகமும்


இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் நூல் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை அறிமுகமும் என்ற­ நிகழ்வு பதுளையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் தலைமையுரை ஆற்றுவதையும், ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் துணைப்பீடாதிபதி வ. செல்வராஜா, சம்மேளனத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் திரு. எம். மதன், ஊவா வெல்லஸ்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. மா.ரூபவதணன்,   எம். எஸ். இங்கர்சால் ஆகியோர் உரையாற்றுவதையும்  கூட்டத்தில் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.

Thursday, July 30, 2015

வெண்கட்டி: மாற்று உரையாடலுக்கான தளம் - புஸ்பகுமார்

மனித சமூகத்தில் ஒவ்வாரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்பட்டுவருகின்ற தேவைகளுக்கும் மாற்றங்களுக்கும் அமைவாக அமைப்புகள் உருவாகின்றன. இவ்வாறு தோற்றம் கொண்ட அமைப்புகள் தமது அமைப்பு சார்ந்த உறுப்பினர்களிடையேயும், பொது மக்களிடமும் கருத்தியல் தொடர்பாடலை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஒவ்வொருவகையான முறைமைகளையும் கருவிகளையும் தோற்றுவித்துக் கொள்கின்றன. சிறுபத்திரிகைகள் இந்த பின்னணியிலேயே தோற்றம் கொள்கின்றன. அந்தவகையில் “வெண்கட்டி” இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் என்ற அமைப்பு சார்ந்து வெளிவந்த பத்திரிகையாகும். இப்பத்திரிகையின் ஆசிரியர் திரு. எம்.எஸ். இங்கர்சால்.

காலத்தின் தேவைகளை கவனத்திலெடுத்து தோற்றம் கொண்டதே இலங்கை கல்விச் சமூக சம்மேளம் என்ற அமைப்பாகும். இதன் தோற்றம் மலையகத்தை தளமாகக் கொண்டு  இருப்பினும், காலத்தின் தேவைகளையும் செல்நெறியையும் ஒட்டி மலையகத்தின் எல்லையை தாண்டி முழு இலங்கைத் தழுவிய அமைப்பாக இது பிரவாகம் கொண்டுள்ளது. வெண்கட்டி  கல்வித் துறைச் சார்ந்த அமைப்பொன்றின் வெளியீடு என்ற வகையில் அதில் இடம் பெறுகின்ற பெரும்பாலான ஆக்கங்கள் கல்விப் புலம் சார்ந்த்தாகவே இருக்கின்றன.

இவ்விடத்தில் முக்கியமானதோர் விடயம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. கல்விச் சமூகத்தின் பிரத்திதித்துவத்தை மட்டும் வைத்துக் கொண்டு முழுமையான சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா என்பது சுவாரசியமான வினாதான். இருப்பினும் கல்விச் சமூகம் சார்ந்து, குறிப்பாக பின்தங்கிய சமூகத்தில் இருந்து பிறப்பெடுக்கின்ற முரண்பாடுகளும் அதனடியாக எழுகின்ற போராட்டங்களும் புறக்கணிக்கத்தக்கவை அல்ல. முக்கியமாக ஒவ்வாரு பண்பாட்டு அரசியல் போராட்டங்களும் சமூகத்தில் மற்றப் பிரிவினருடன் சேர்ந்து நடத்துகின்ற போராட்டங்களாகும். இத்தகைய முன்னெடுப்புகளுக்கான மானுட அறிவுத் தளத்தில்  மைய பகுதியின் ஒரு பன்முகப்பட்ட விவாத்த்திற்கான தேவையை இப்பத்திரிகை எந்தளவு சுமந்து வந்திருக்கின்றது என்பது குறித்து சிந்திக்க முனைவதே இக்கட்டுரையின் நோக்காகும்.

இப்பத்திரிகையில் இடம்பெறுகின்ற சில செய்திகள்(இவ்வமைப்பில் முக்கிய பொறுப்பேற்றுள்ளவர்களின் கருத்துக்கள்) முக்கிய கவனத்திற்குரியவையாகின்றன. 

சம்மேளனத்தின் தலைவர் திரு. லெனின் மதிவானம் “புதிய சவால்களை எதிர்நோக்க கூடிய இன்றைய சூழலில், அதன் புறப்பாட்டை சரியான திசையில் முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆசிரியர் சார்ந்த தொழிற்சங்க அமைப்பு  ஒன்று உண்டா என்ற கேள்வியும் எழுகின்றது. நாம் திறந்த மனதோடு கூடி விவாதித்து ஜனநாயகத் தன்மை கொண்ட முடிவுகளையே முன்வைக்க முனைகின்றோம். ஜனநாயகம் மறுக்கப்பட்ட அமைப்பு எப்படி எதேச்சதிகாரத்திற்கு போகின்றது என்பதையும் அவ்வம்சம் எப்படி முற்றிலும் கீழ்படிந்த ஆளுமையற்ற சங்க உறுப்பினர்களை உருவாக்குகின்றது என்பதனையும் கடந்த கால அனுபங்கள் எமக்கு புதிய படிப்பினையாக அமைந்திருக்கின்றன”.

எனவும் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கர மணிவண்ணன் “”தனிநபர்களின் தனித்துவங்களையும் வேறுப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்வது எமது இலக்காகும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்" எனவும், கல்விக் குழு தலைவர் திரு. எஸ். குமார் “”மக்களிடம் ஒரு கலாசார மாற்றம் ஏற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். தேவைப்படும் கலாசார மாற்றத்தை கல்வித் துறையினூடாக ஏற்படுத்துவதற்கான மக்கள் பங்கேற்க கூடிய வெளிகளை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.ஒரு ஸ்தாபனத்தின் செயற்பாடுகள் ஜனநாயக தன்மைக் கொண்டதாக இருக்க வேண்டுமானால் உறுப்பினர்கள் விவாதிப்பதற்கும், தங்களது கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதற்குமான திறந்த வெளிகளை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளோம். ஒருவகையில் இவ்வகையான செயலமர்வுகளின் ஊடாக இத்தகைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றோம். எமது இத்தகைய செயற்பாடுகள்  நாகரிகமிக்க சமுதாயத்தின் ஒரு பகுதி தேவையையாவது உருவாக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனபதை ஒரு துளி கர்வமும் இல்லாமல் பிரகடனப்படுத்திக் கொள்கின்றோம் ". எனவும் குறிப்பிடுகின்றனர்.  

இக்கருத்துக்களை சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகின்றபோது  கல்விச் சமூகத்தினரிடையே தோன்றிய அமைப்புகள் குறித்தும் அதன் தலைமைகள் குறித்தும் அதிருப்தி தோன்றியுள்ள அல்லது நம்பிக்கை இழந்துள்ள சூழலில், வெவ்வேறு ஆசிரிய தொழிற் சங்கங்களில் இயங்கியவர்களும் வெவ்வேறு அரசியல் பண்பாட்டு அமைப்புகளில் மற்றும் அமைப்பு சாராது இயங்கியவர்கள் மக்கள் நலனிலிருந்து அந்நியமுறாமல் பொது இலக்கொன்றிக்கான  ஒன்று சேரலே இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் என்ற அமைப்பு தோற்றத்திற்கான பின்னணி என்பதை அறிய முடிகின்றது. உறுப்பினர்களின் வேற்றுமைகளை மதிக்கின்ற அதே சமயம் ஒடுக்குமுறைகள், சுரண்டல், என்பவற்றிற்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை ஒரு ஸ்தாபனமாக ஒழுங்கமைக்கும் செயற்பாடாக இவ்வமைப்பு செயற்படுகின்றது என்பதை உணர முடிகின்றது. அந்தவகையில் வெகுசன தளத்தில் பரந்துபட்ட மக்கள் பிரிவினர் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வெளிகளை நோக்கிய பயணிப்பாகவும் இவ்வமைப்பின் செயற்பாடுகள் அமைந்திருப்பதனைக் காண முடிகிறது. தெளிவாக நோக்கின் பல்வேறுபட்ட ஜனநாயக முற்போக்கு சமூக சக்திகளின் தனித்தனிப் பண்புகளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளல் என்பதே இதன் பொருளாகும். அந்தவகையில் பாரம்பரியமான கல்வி ஸ்தாபன முறைகளிலிருந்து சற்றே அந்நியப்பட்டு பரந்துபட்ட ஜனநாயகம் நோக்கிய அமைப்பாக இது கட்டியெழுப்ப படும் என நம்பிக்கை கொள்ள முடிகின்றது.


இதனை உறுதிபடுத்தும் வகையில் திரு. எம்.என். இங்கர்சால் எழுதியுள்ள “இலங்கை கல்விச் சமூக சம்மேளனம்: ஒரு மாற்று முகாம் உருவாக்கப்படுவதை நோக்கி” என்ற கட்டுரை அமைந்துள்ளது. இவ்விதழில் இடம் பெறுகின்ற காரல் மார்க்ஸின் கல்விச் சிந்தனைகள் என்ற கட்டுரை என்ற கட்டுரை முக்கியமானதொன்றாகும். காரல் மார்க்ஸின் கல்விச் சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்ற இக்கட்டுரை வர்க்க சமூகவமைப்பில் “சகலருக்கும் கல்வி”, “கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது” என தத்துவம் பேசினாலும் கூர்ந்து நோக்கின் வர்க்க வேறுபாடுகள் கல்விப் புலத்திலும் தாக்கம் செலுத்துவதைக் காணலாம். மனிதன் வாழ்வதற்கான உரிமைகளில கல்வி முக்கியமானதோர் கூறாகும். கல்வியுரிமையை மறுப்பது என்பதும் அடிப்படை உரிமை மீறலாகும். இவ்வகையில் நோக்குகின்றபோது கல்வியில் தொடர்ந்துக்  கொண்டிருக்கும் ஏற்றதாழ்வுகளை இனங்கண்டு மனித குலத்திற்கு பொதுவான நாகரிகமான கல்விச் சிந்தனையை முன் வைத்தவர் காரல் மார்க்ஸ். அவரது கல்விச் சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது அவசியமானதொன்றாகும்.

மேலும், பேராசிரியர் மா. சின்னத்தம்பியின் ”மாற்று திறானாளிகளுக்குரிய கல்வி தேவைகளும் வளர்ச்சியும்” என்ற கட்டுரையும், கலாநிதி த. கலாமணியின் ‘ “முதியவர்களின் உளநலம் பேசப்பட வேண்டிய பொருள்களுக்கான முகவுரை” என்ற கட்டுரையும் முக்கிய கவனிப்புக்குரியவைகளாகும். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டு விளிம்பு நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் குறித்தும் முதியோர்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இக்கட்டுரைகள் வெளிபடுத்தியிருக்கின்றன. உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வருகின்ற தர்க்க ரீதியான சிந்தனைகளின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. கல்விப் புலத்தில் இத்தகைய மதிப்பீடுகள் ஆய்வுகள் விருத்தி பெற வேண்டியதன். அவசியத்தை இவை உணர்த்தி நிற்கின்றன.

அவ்வாறே, அன்பு ஜவஹார்ஷாவின் “புதிய ஆசிரியர்- அதிபர் சேவை பிரமாணக் குறிப்புகளும் பிரச்சனைகளும்” என்ற கட்டுரை ஆசிரியர் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புகள் பற்றிய அறிமுகத்துடன் அது தொடர்பில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்தும் விவாதிக்கின்றன. அதிபர் ஆசிரியர்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும் மற்றும் அதனை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவர் தம் சேவை பிரமாணக் குறிப்பு பற்றிய தெளிவு அவசியமாகின்றன. இவ்விடயத்தை இக்கட்டுரை கவனத்திலெடுத்திருக்கின்றது  எனலாம். இனிவரும் காலங்களில் பெண்களின் படைப்புகளையும் அவர்கள் பற்றிய பிரச்சனைகளையும் உள்ளடக்கி வெண்கட்டி வெளிவருமாயின் அவ்விதழ் முழுமைப் பெற்றதாக இருக்கும் எனத் தோன்றுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹட்டனில் நடைப்பெற்ற கூலித்தமிழ் நூல் வெளியீட்டில் திரு. மு. நித்தியானந்தன் குறிப்பிட்டது போல ” கல்வித் துறைச் சார்ந்து விவாதிக்க வேண்டிய காத்திரமான சிந்தனைகளை வெண்கட்டி பத்திரிகை தன்னகத்தே கொண்டுள்ளது” என்ற கூற்று மிக பொருத்தமானதாகவே தெரிகின்றது.

தனிமனித தாக்குதல்களுக்கும் புலம்பல்களுக்கும் அப்பால் - தன் காலத்து வேடிக்கை மனிதர்களிலிருந்து அந்நியப்பட்டு புதிய மனிதனுக்கான , புதிய வாழ்க்கைக்கான, புதிய கலாசாரத்திற்கான பயனத்தில் வெண்கட்டியும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் என நம்பலாம். இவ்விதழ் தொடர்ந்து வெளிவர வேண்டியது அவசியமானதாகும்.

Sunday, July 19, 2015

மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்

மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சன நிகழ்வையும் வெண்கட்டி பத்திரிகை வெளியீட்டையும் இலங்கை கல்விச் சம்மேளனத்தினர் ஒழுங்கமைத்துள்ளனர். இந்நிகழ்வு எதிர்வரும் 25/07/2015  அன்று காலை 9.30 மணிக்கு ஹட்டன் டிக்கோயா நகரசபை மண்டபத்தில் நடைவுள்ளது. திரு. லெனின் மதிவானம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன் வழங்க, திரு. எச்.எச். விக்கிரமசிங்க நூல் அறிமுக உரையை வழங்குவார். மேலும் ஆய்வுரையை கலாநிதி ந. இரவீந்திரன், சூரியகாந்தி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமார் ஆகியோர் வழங்கவுள்ளனர். அத்தோடு வெண்கட்டி பற்றிய அறிமுகவுரையை பத்திராதிபர் திரு. எம். எஸ். இங்கர்சால் வழங்க நன்றி உரையை சம்மேளனத்தின் ஊவா மாகாண இணைப்பாளர் திரு. எம். மதன் வழங்குவார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கலாசாரக் குழுத்தலைவர் திரு. எஸ். சிறிஸ்கந்தராஜா மற்றும் உபதலைவர் சதிஸ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

Tuesday, June 16, 2015

இலவச செயலமர்வு- பதுளை

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு பதுளை அல்-அதான் முஸ்லிம் மகா வத்தியாலயத்தில் இலவச செயலமர்வை நடாத்த தீர்மானித்துள்ளது.
இந் நிகழ்வு எதிர்வரும் யூன் 20 ஆம் திகதி(சனிக் கிழமை) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு பதுளை வலய உதவிக் கல்வி பணிப்பாளர்  திரு. வீ.கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளா்களாக தேசிய கல்வி நிறுவக தலமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதி முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், தரண வெளிவாரி பட்ட பிரிவு நிறுவகத்தின் இணைப்பாளர் மதன் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, June 2, 2015

அதிபர் தரம் 111 பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பலாங்கொடை

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு ஹட்டன், கண்டி, பலாங்கொடை, பதுளை ஆகிய பிரதேசங்களில் இலவச செயலமர்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளது.
இதன் முதல் நிகழ்வு எதிர்வரும் யூன் 7 ஆம் திகதி(ஞாயிறு) அன்று பலாங்கொடை கனகராயன் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு பலாங்கொடை வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் செல்வி ஆர். கலாரமணி பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ  ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார்(கையடக்க தொலைபேசி 0718533144) ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.