Thursday, February 23, 2012

ஈழத்து சிறுகதையின் செல்நெறி: அநாதரட்சகனின் சிறுகதைகளை முன்னிறுத்தி....! லெனின் மதிவானம்

(நிமிர்வு என்ற சிறுகதை தொகுப்பின் முன்னுரை)
நவீன காலத்தே எழுந்த இலக்கியத்தின் உட்பிரிவுகள் யாவற்றிலும் சிறுகதை பொதுமக்கள் பெரிதும் விரும்பபடுகின்ற இலக்கிய வடிவமாகத் திகழ்கின்றது. இன்றைய சமுதாயச் சூழல் தோற்றுவிக்க கூடிய தனிமனித முரண்பாடுகளும் நெரிசல்களும் சிறுகதைக்கான நுகர்வோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்று, சிறுகதைக்கான உள்ளடக்கம், உருவம் சமகால வாழ்க்கைப் போராட்டத்தில் அதன் இடம் என்பன குறித்து விமர்சகர்கள் எவ்வளவுதான் அரிய கருத்துக்களையும் கோட்பாடுகளையும் வகுத்துக் கூறினாலும் அதன் இறுதி வெற்றி என்பது பொதுமக்கள் விரும்பும் நிலையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதுவும் தரமான சிறுகதைகளுக்கு புறத் தூண்டுதல் அவசியமில்லையென்றே தோன்றுகின்றது.
அநாதரட்சகன் அவ்வப்போது எழுதிய சிறந்த சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. அக்கதைகளை அவ்வப்போது சஞ்சிகைகளிலும் பத்திரிக்கைகளிலும் வாசிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருப்பினும், அவை கால அடைவில் தொகுக்கப்பட்டு வெளிவருகின்ற போதே ஆசிரியரது மன வளர்ச்சியையும் கலை முதிர்ச்சியையும் அறிய முடிகின்றது. அவ்வாசிப்புத் தரும் உந்துதல் தவிர்க்க முடியாத வகையில் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் சிறுகதைகளின் சாதனைகள் யாவை? அதன் போக்குகள் எந்தெந்த வகையில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது? போன்ற விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் அநாதரட்சகன் தொகுத்தளித்துள்ள சிறுகதைகளை வாசித்த போது இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றிச் சிந்திக்க வேண்டியதும் காலத்தின் தேவையாகின்றது.
உலகமயமாதலும் நவீன முதலாளித்துவத்தின் வளர்ச்சியும் என்றுமில்லாதவாறு சுரண்டலின் தளத்தை விரிவுபடுத்திருக்கின்றன. இதன் பின்னணியில் முனைப்புற்றிருக்கின்ற பின் நவீனத்துவம், அமைப்பியலியம், இருத்தலியம் முதலிய கோட்பாடுகள் உலகமயத்தை நியாயப்படுத்தி அதற்குச் சாதகமான கூறுகளை நிலைநிறுத்தி வருகின்றன. குறிப்பாக, இருத்தலியக் கோட்பாட்டை தமிழில் முன் வைத்தவர்கள் பொரும்பாலும் இயற்பண்புவாதத்தையே இலக்கியத்தில் நிலைநிறுத்த முயன்றனர். வரலாற்று அடிப்படையில் இயற்பண்புவாதம் யதார்த்தவாதத்திற்கு முற்பட்டது என்ற போதிலும் இன்றைய உலகமயமாதல் சூழலில் அதன் தேவையை, வர்க்க நலனையொட்டி அக்கோட்பாடு மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகின்றது.
சமுதாயத்தில் கீழ்த்தட்டிலிருக்கும் மாந்தரைச் சித்திரிக்கும் எழுத்துக்கள் யாவும் “யாதார்த்தம்”, “முற்போக்கு” என்ற அடைகளைப் பெற்றாலும் கூர்ந்து நோக்கின் அவை யாவும் அத்தகைய பண்புகளைப் பெற்றிருக்காது என்பதை நாம் அறியலாம். யதார்த்தவாதம், இயற்பண்புவாதம் என்பன பற்றிய தெளிவின்மையே இத்தகைய குழப்பங்களை தோற்றுவித்திருக்கின்றன. சில நேரங்களில் இவ்விரண்டு கோட்பாடுகளையும்; ஒன்றெனக் கருதி மயங்குகின்ற நிலையும் காணப்படுகின்றது. இயற்பண்புவாதம் என்பது உள்ளதை உள்ளவாறே எடுத்துக் காட்டும் கோட்பாடாகும்;. இது புற சூழலை விட அகமன உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றது. நம்பிக்கை வரட்சி, முடிவற்ற சோகம் என்பன இயற்பண்புவாதத்தின் அடிப்படைகளாகும். இதன் காரணமாக இயற்பண்புவாதம் தோன்றிய காலம் முதலாகப் புறவுலகினின்றும் வரலாற்று உணர்விலிருந்தும் அந்நியப்பட்டே வந்துள்ளது.இதற்கு மாறாக யதார்த்தவாதம், நிகழ்வுகளின் காரணத்தையும் அதற்குரிய வரலாற்றுப் பின்புலத்தையும் சித்திரிக்கின்றது. வகைமாதிரியான சூழலில் வகைமாதிரியான பாத்திரங்களைப் படைக்கின்றது. மனித நேயம், மனித துயரம், அனுதாபம், மனித விடுதலை போன்ற அம்சங்கள் யதார்த்தவாதத்ணதால் வெளிக் கொணரப்படுகின்றது. பாத்திரப்படைப்புகளின் பொதுத் தன்மையும் தனித் தன்மையும் படைப்பாக்கப்படுகின்றன. யதார்த்தவாதமானது சோகத்தை இசைத்தாலும் அவை கூட சமூக அசைவியக்கத்தை முன்னெடுப்பதாகவே அமைந்திருக்கின்றன.
யதார்த்தவாதத்தின் தர்க்க ரீதியான வளர்ச்சியே “சோஷலிச யதார்த்தவாதமாகும்”;. சோஷலிசத்தைத் தோற்றுவித்த நாடுகளிலேயே இக்கோட்பாடு தோன்றியது. யதார்த்தவாதத்தில் வகைமாதிரியான பாத்திரப் படைப்புகள் வெளிக் கொணரப்பட்ட போதிலும் அவை படைப்பில் ஓரங்கட்டப்பட்ட நிலையிலே பாத்திரமாக்கப்பட்டுள்ளன. யதார்த்தவாதம் சமுதாயப் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் சித்திரித்து நிற்க, சோஷலிச யதார்த்தவாதம் அவற்றினை வர்க்கப் போராட்டத்தின் அடைப்படையில் நோக்கி, அப்போராட்டத்தில் முகிழக் கூடிய பாத்திரங்களையே சித்திரிக்கின்றது. அந்தவகையில் சோஷலிச யதார்த்த வாதம் என்பது சோஷலிச நாடுகளிலே தோன்றி வளரக் கூடியதாகும். இலங்கை போன்ற நாடுகளுக்கு அக் கோட்பாடு பொருத்தமற்றதாகக் காணப்பட்டது. தேசிய இலக்கியம், மண்வாசனை இலக்கியம் போன்ற கோட்பாடுகளே பொருத்தமானதாக அமைந்திருந்தன.இந்தப் பின்னணியில் அநாதரட்சகன், தமது கதைகளில் சமூகம் சார்ந்த- ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக் கூறுகளை எவ்வாறு கையாண்டுள்ளார்? அவரது புரிந்துக் கொள்ளலின் அடிப்படை யாது? போன்ற விடயங்கள் பற்றி நோக்குவோம்.
இக்கதையாசிரியர் கல்விப் புலத்தோடு சம்பந்தப்பட்டவர் என்றவகையில் தான் சந்திக்க நேர்ந்த அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டே கதைகளை ஆக்கியிருக்கின்றார். அதனால்தான் இத்தொகுப்பில் அடங்கியுள்ள பெரும்பாலான கதைகள் கல்விப் புலத்துடன் சம்பந்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. ‘சபலம்’, ‘நிமிர்வு’ ‘ஆறாத அவலம்’, ‘விகற்பம்’, ‘இழப்பு’, ‘தவிப்பு’, ‘பசித்த மனம்’ முதலிய கதைகள் இதற்குத் தக்க எடுத்துக் காட்டுகளாகும். இக்கதைகளை வாசித்த போது ஓர் உண்மை தெரிகின்றது. அநாதரட்சகன் ஆசிரியராகவோ, கல்விப் பணிப்பாளராகவோ நின்று கொண்டு அத்தகைய அதிகாரிக்குரிய கண்ணோட்டத்துடன் எழுதவில்லை. இதயமுள்ள சாதாரண மனிதன் என்ற நிலையில் நின்று கொண்டுதான் பார்க்கின்றார். அத்தகைய சாதாரண மனிதனாக நின்று பார்த்து, மனித அவலத்தை சமத்துவமின்மையை: கல்வியில் காணக்கிட்டும் ஏற்றத்தாழ்வை, அதன் வர்க்க நலனை தமது கதைகள் மூலமாக வாசகனிடத்தில் பதிய வைக்கின்றார். எடுத்துக் காட்டாக ‘சீருடை’ என்ற கதையில் பாடசாலையினால் வழங்கப்பட்ட இலவச சீருடை எங்கே என ஆசிரியர் போபத்துடன் வினவ அந்த மாணவன் தனது தம்பிக்கு மருந்தெடுக்க அம்மா விற்றுவிட்டாள் எனத் தயங்கித் தயங்கிக் கூறும் வரிகள் இதயமுள்ள எவரின் உள்ளத்தையும் உருக்கிக் குருதி குழாய்களில் உள்ள இரத்தத்தை உறையச் செய்து விடுகின்றது. அவ்வாறே இத்தொகுப்பின் தலைப்பாக அமைந்த ‘நிமிர்வு’ என்ற கதை தனக்கு தொழில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அர்பணிப்புடன் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியை பற்றியது. இக் கதையில் கல்வி அதிகாரிகளின் மனோபாவம், செயல் ஆகியவற்றின் மூலம் எழும் வர்க்க முரண்பாடுகளும் கருத்தோட்டங்களும் நுண்ணயத்துடன் தீட்டப்பட்டுள்ளன.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைககளில் ‘விகற்பம்’, ‘வைராக்கியம்’ ஆகிய கதைகள் சாதிப்பிரச்சனை பற்றியவை. இவற்றில் வைராக்கியம் என்ற கதை மலையகத்தில் சாதி என்பது எவ்வாறு ஒரு கலாசார முரண்பாடாக உள்ளது என்பதனையும் அது வாழ்வில்- காதலில் தோற்றுவிக்கக் கூடிய முரண்பாடுகளையும,; இறுதியில் அதனையும் மீறிக் காதல் வெற்றி பெறுவதனையும் ஆசிரியர் படைப்பாக்கியிருக்கின்றார். விகற்பம் என்ற கதை யாழ்பாண சமூகத்தில் போருக்குப் பின்னர்; நிலவக் கூடிய சாதிய உணர்வுகள் பற்றியதாக அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இது வரை பெற்ற உரிமைகள் என்பது ஆதிக்க சக்திகளின் மனமாற்றத்தால் பெற்றதல்ல. ஒடுக்கப்பட்ட மக்களும் அதன் நேச சக்திகளும் (நல்லெண்ணங் கொண்ட ஆதிக்க சாதியினரும்) நடாத்திய போராட்டத்தின் மூலமாகப் பெறப்பட்ட உரிமைகளாகும். இலங்கையில் ஆங்காங்கே சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் திட்டுகளாகவும் தீவுகளாகவும் இடம்பெற்றிருப்பினும் அதன் உச்சத்தை நாம் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டத்திலே காணக் கூடியதாக உள்ளது.
அறுபதுகளில் சாதியப் போராட்டம் எவ்வாறு பிரதான முரண்பாடாக இருந்ததோ அவ்வாறே எழுபதுகளில் தமிழத்; தேசியப் போராட்டமும் முனைப்புப் பெற்றது. மார்க்சிஸ்டுகள் சிங்கள மக்களுடன் ஐக்கியப்படுதல் என்பதன் மறுபுறமாக இனவொடுக்கு முறைக்கு எதிராக போராடுதல் என்ற அம்சத்தையும் கவனத்திலெடுத்திருப்பார்களாயின் தமிழ் ஜனநாயக சக்திகளின் ஒரு பகுதினரை வென்றெடுத்திருக்க முடியும். தமது தவறை நேர்மை மிக்க இடதுசாரிகள் இன்று சுய விமர்சனம் செய்து வருகின்றனர். அதேசமயம் தமிழ்த் தேசியத்தின் இன்றைய பின்னடைவிற்கும் சீரழிவிற்கும் தமிழ்ப் பிற்போக்கு இனவாத சக்திகளே பிரதான காரணம் என்பதை வரலாறு எமக்கு நிரூபித்திருக்கின்றது.
இனமுரண்பாடும் யுத்தமும் மேலோங்கிய சூழலில் அவை தோற்றுவிக்கக் கூடிய வாழ்க்கைக் கோரங்கள், தவிப்புகள், துன்பங்களை சிறப்பாகச் சித்தரிப்பவையாக ‘மனச்சிறை’, ‘சிதைவு’ ஆகிய கதைகள் அமைந்துள்ளன. காணாமல் போன கனவனைப் பற்றிய கவலையும் பரிதவிப்பும் அடையும் ஒரு பெண்ணின் மன உணர்வுகளை ‘மனச்சிறை’ என்ற கதை வெளிப்படுத்துகின்றது. யுத்தச் சூழலில் காணாமல் போன சிறுவர்கள் குறித்தும்: அதனால் ஏற்படுகின்ற பெற்றோரின் சொல்வொனா துயரங்களையும் அதனடியாக எழுகின்ற மனவோட்டங்களையும் ‘சிதைவு’ எனும் கதை சித்திரிக்கின்றது. இக்கதை இனப்படுகொலைகளைக் காட்சியாகப் பதிய வைக்கின்றது. இவ்விடயம் பற்றி நந்தினி சேவியரும் ‘தொலைந்து போனவர்கள்’ என்ற சிறகதையொன்றினை எழுதியுள்ளார். அவ்வகையில் இவ்விரு கதைகளும் இதுவரை காணாமல் போனவர்களையும் மனித அவலங்களையும் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. மறுபுறத்தில், யுத்தச் சூழலில் இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல்கள், கூடவே காணாமல் போன இஞைர்கள் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு கதைகளை எழுதியவர்கள் வெகு சிலரே. குறைந்தபட்ச விமர்சனங்களை முன்வைத்தவர்கள் கூட இனந்தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். ரஜனி திராணகம, அன்ரனி நோபேட், செல்வி என இப்பட்டியலை நீட்டிச் செல்லாம். இந்தப் பின்னணியில் நமது எழுத்தாளர்களின் மௌனத்தை நாம் புரிந்துக் கொள்ள முடிகின்றது. இன்று இந்த மௌனம் கலையப்பட்டுள்ளது என்பதற்கு யோ. கர்ணன், ஷோபாசக்தி (புலம்பெயர்ந்திருந்ததனால் யுத்த காலத்திலும் மேற்குறித்த பதிவுகளை வெளிக் கொணர முடிந்தது.) முதலானோரின் எழுத்துக்கள் சான்றாய் அமைந்திருக்கின்றன.
இன்று இனவாதம், இன முரண்பாடு என்பன பல நிலைகளில் குமிழிட்டு மேற்கிளம்பியுள்ளது. மறுபுறத்தில் தமிழர் சமூகவமைப்பில் புரையோடியிருக்கின்ற சாதிய கருத்தியல் இன்று புதிய வடிவில் மக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தி வருகின்றது. இந்தச் சூழலில் இவ்விரு முரண்பாடுகளையும் கவனத்திலெடுத்து சமூகமாற்ற செயற்பாடு;களை முன்னெடுக்கின்ற போது “இரட்டைத் தேசியம”; பற்றிய தேடல் அவசியமானதாகின்றது. இன்று இலங்கை இந்திய சூழல்களில் சமூகமாற்றத்தில்; இரட்டைத்தேசியம் வகிக்கும் பங்கு குறித்து விரிவான ஆய்வுகளை ந. இரவீந்திரன் செய்து வருகின்றார். எமது சூழலில் இன, சாதிய கருத்தியல் ஒடுக்குமுறையின் வடிவங்களாக உள்ளமையால் ஐரோப்பிய சமூகம் போல்லல்லாமல் அரசியல் புரட்சிக்கு முன்னதாக பண்பாட்டுப் புரட்சியே இன்றைய சூழலின் யதார்த்தமாகியுள்ளது.
உழைக்கும் மக்கள்- ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கரிசனைக் கொண்டு: அந்த மக்களில் ஒருவராக நின்று கொண்டிருக்கும் ஒரு படைப்பாளி ஒடுக்கப்பட்டுள்ள பிற உழைப்பாளி மக்களுடன் ஒருமைப்பாடு கொள்வதும் அவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பதும் அதுக் குறித்து உலகத்தாரின் மனச்சாட்சியோடு உரையாடல் நிகழ்த்துவதும் தவிர்க்க முடியாத சமூக நியதி. மலையகம் சம்பந்தப்பட்ட ‘பசித்த மனம்’, ‘வைராக்கியம்’ ஆகிய கதைகளை இந்த பின்புலத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மலையகத்தில் றப்பர் தோட்ட வாழ்வியலின் பின்னணியில் இக்கதைகள் எழுந்துள்ளன. இம்மக்கள் தங்களை மலையக தமிழராக அடையாளம் காட்ட விரும்பாத அதேசமயம், மலையக தலைமைகளும் இவர்களை மலையகத் தமிழராக கொள்வதில்லை. இன்று இப்பகுதியில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் சிங்கள அடையாளத்துடன் வாழவே முற்படுகின்றனர். பாட்டாளி வர்க்கத் தலைமையிலான அமைப்பு எழுச்சி பெறுகின்ற போது அவ்வமைப்பு இனவாத சூழலுக்கு அப்பால் செயற்படக் கூடியதாக இருக்கும் போது அம்மக்களும் கருத்திற் கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. அதேசமயம் அம்மக்களும் அத்தலைமையை பெற்று மலையக தேசியத்திற்குள் வரக் கூடியதாக இருக்கும். இறப்பர்த் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு பற்றி பின்வரும் மலையக நாட்டார் பாடல் அழகுற எடுத்துக் காட்டுகின்றது:

“றப்பர் மரமானேன்
நாலுபக்க வாதுமானேன்
எரிக்க விறகுமானேன்
இங்கிலீஷ் காரனுக்கு
ஏறி போக காருமானேன்”
இந்நாட்டார் பாடலுக்குப் பின்னர் மலையகத்தின் இறப்பர் தோட்ட வாழ்வுப் பற்றி நான் வாசித்த முதல் கதை இதுவாகும். அந்தவகையில் இக்கதைகள் அவ்வாழ்வு பற்றிச் சிந்திக்கத் தேடத் தூண்டு;பவையாக அமைந்திருக்கின்றன. இருப்பினும் ஒற்றைச் சட்டகத்தின் வழியாகப் பார்க்கும் அக்கதைகளில் பிற பரிமானங்களைப் பார்க்காமல் இருந்து விடக்கூடாது என்பதை உரிமையுடன் சுட்டிக்காட்டினால் அதை ஏற்கும் முதிர்ந்த பக்குவம் கொண்டவராக அநாதரட்சகன் விளங்குகின்றார் என நினைக்கின்றேன்.
அவ்வாறே,‘சபலம்’ என்ற கதை ஏனைய கதைகளின் போக்கிலிருந்து அந்நியப்பட்டதாகக் காணப்படுகின்றது. யுத்தத்தினால் கணவனைப் பறிக்கொடுத்த அபலைப் பெண் தன் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், வாழ்வின் அடிப்படை இன்ப நாட்டம், அது இணை விழைச்சு தன்மையுடையது என்ற பிராய்டின் கொள்கையில் பெண்ணை பால்க் கவர்ச்சியாகக் காட்டியிருப்பது அநாதரட்சகன் போன்று சமூக அநீதிகளை விமசர்னம் செய்யும் எழுத்தாளர்களுக்குரிய நாகரிகம் அல்ல என்பதையும் தோழமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். இது அவரது ஆரம்ப காலத்துக் கதையாக அமைந்திருக்க வேண்டும். ஒருவகையில் சமூகம் சார்ந்த படைப்புகளை எமக்களித்த கதையாசிரியர் எவ்வாறு உருவாகி வந்தார் என்ற தடத்தை வாசகர்களுக்கு எடுத்துக் கூறவும் இக்கதையை இத்தொகுப்பில் சேர்த்திருக்கலாம். எது எவ்வாறாயினும் இத்தொகுப்பு அவரது ஆளுமை வளர்ச்சியின் பல் பரிணாமங்களை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருக்கின்றன.
அநாதரட்சகன் வடிவப் பரிசோதனையில் அதிகம் அக்கறை காட்டுபவரல்ல. பாரம்பரியமான சிறுகதை வடிவத்தைக் கையாண்டு தன் கண் எதிரே உறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் குரூரங்களையும் அவலங்களையும் மனசை பிழியும் துன்பக் காட்சிகளையும் படைப்பாக்கியிருக்கின்றார். வெற்று அலங்கார வார்த்தை ஜாலங்களை வைத்துச் செல்லரித்துப் போன தத்துவங்களுக்கும் போலி தனமான கோட்பாடுகளுக்கும் வண்ணம் ப+சிப் பொது மக்களையும் வாசகனையும் ஏமாற்ற முற்படாமை இக்கதையாசிரியரின் நுண்ணுணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
அதேசமயம், இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் சற்று அழுத்திக் கூற வேண்டியுள்ளது. அதாவது இலக்கியத்தில் உள்ளடக்கம் எவ்வாறு கால, தேச வர்த்தமாணங்களுக்குக் கட்டுப்பட்டும் அதனை மீறியும் இயங்குகின்றதோ அவ்வாறே அதன் வடிவமும் அத்தகைய தாக்கங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றது என்பதை இலக்கிய வரலாறு எண்பித்திருக்கின்றது. உள்ளடக்க ரீதியாக மட்டுமன்று வாசிக்கின்ற முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. முற்போக்கு இலக்கியத்திற்கும் அழகியல் பிரச்சனைகள் உண்டு. காலத்திற்கு ஏற்ற வடிவத்தை மக்களின் நலனிலிருந்து அந்நியமுறால் படைப்பாக்கித் தர வேண்டியது முற்போக்கு- மார்க்சியப் படைப்பாளியின் கடமையாகும். இன்றைய சிறுகதை வளர்ச்சியில் முக்கிய கணிப்பைப் பெற்றுள்ள ஆதவன் தீட்சண்யாவின் சிறுகதைகள் இந்த சீரிய பணியினை செய்திருக்கின்றது. இதற்கு “கதையின் தலைப்பு கடைசியாக இருக்கக் கூடும்” என்ற கதை தக்க எடுத்துக்காட்டாகும். இந்திய அரசியல் பின்புலத்தில் நின்றுக் கொண்டு மெஜிக்கல் ரியலிச பாணியில் எழுதப்பட்ட கதையாகும். இந்திய சமூகத்தில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இக்கதை அமைந்துள்ளது. இக்கதை சொல்லும் பாணியில் பவனி வருகின்ற பாத்திரங்கள் யாவும் இன்றைய விடுதலையை நாடும் அதே நிலைக்குரிய பாத்திரங்களை மறுவாசிப்புச் செய்ய ஏதுவாக உள்ள புனைக்கதை ஏற்பும் சமூகமாற்றத்திற்கான உந்தலும் முற்போக்கு இலக்கியத்திற்கு மாத்திரமன்று முழுத் தமிழ் இலக்கியத்திற்கும் வழங்கிய மகத்தான பங்களிப்பாக அமைந்துள்ளது. அநாதரட்சகனின் சிறுகதைகளை வாசிக்கின்ற போது அவர் வடிவ அமைப்பில்- கதை சொல்லுகின்ற முறையில் இத்தகைய உத்திகளை கையாண்டிருக்கலாமே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எனினும் அவ்வகையான புதிய திசை வழியை கைக்கொள்ளாது பராம்பரிய முறையில் தமது கதைகளைப் படைத்திருப்பது அவரது கதை சொல்லும் பாணியின் ஓர் அம்சம் என்று நாம் அமைதி காணலாம்.
இறுதியாக இத்தொகுப்பை வாசியுங்கள், பலருக்கு வாசிக்கக் கொடுங்கள், மௌனத்தில் சிக்கித் தவிக்கும் வரலாற்றை உரக்கப் பேசிடுவோம் என வாசகர்களை உரிமையுடன் கேட்டுக் கொள்ளலாமா?

No comments:

Post a Comment