Thursday, September 23, 2010

மலையக கூத்துக்களின் மீட்டுருவாக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சும் கலைஞர் ஹலன்

மலையக மக்களின் சமூக வரலாற்றை ஆராய்வதில் கல்வெட்டுகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்பனவற்றை விட நாட்டார் இலக்கியங்களே முக்கிய சான்றுகளாக விளங்குகின்றன. இவை முழுமையாக மலையக மக்களுடைய சமூக வரலாற்றை எழுத முற்படுகின்ற போது புறக்கணிக்க முடியாத சான்றுகள்.


இத்தகைய பின்புலத்தில் மலையக கூத்துகள் பற்றி நோக்ககின்ற போது எம் மக்களின் சமூக இருப்புக்கான அடையாளங்களாக மட்டுமன்று, சமூக மாற்றத்திற்கான பண்பாட்டு கருவூலமாகவும் விளங்குகின்றன. மலையக மக்களின் சமூக வாழ்க்கை மாறுதற்கேற்ப அவர்களது சிந்தனைகளும் வாழ்க்கைப் போக்குகளும் மாற்றமடைகின்றன. இதன் தாக்கத்தினை நாம் மலையக நாட்டார் இலக்கியத்திலும் காணக் கூடியதாக உள்ளன.

மலையகத்தில் கூத்துகளை ஆடுவதற்கான தனியான கலைஞர்கள் இல்லை. அவர்கள் வாழ்வதற்காக கடினமான உழைப்பில் ஈடுபட்டதுடன், அத்தகைய வாழ்க்கை போராட்டங்களினூடாகவே தமது பராம்பரிய கூத்துக்களையும் நடாத்தி பேணி வந்துள்ளனர். அத்துடன் மலையகத்தில் சமூகவுணர்வுக் கொண்ட படித்த வர்க்கம் பார்வையாளர்களாகவோ அல்லது பங்காளர்களாகவோ வரும் சந்தர்ப்பம் குறைவாக காணப்பட்டமையினால் இலங்கையில் வடகிழக்கு பகுதிகளில் கூத்துக்கள் பாதுகாக்கப்பட்டது போன்றோ அல்லது மீட்டுருவாக்கம் செய்யப்பட்;டது போன்றோ மலையக கூத்துகள் ஆவனப்படுத்தப்படவோ புணரமைக்கப்படவோ இல்லை.

இத்தகைய வரட்சி மிக்க சூழலில் மறைந்து வருகின்ற மலையக கூத்துக்களை கல்விப் புலத்தில் ஆய்வுக்குட்படுத்தியது மட்டுமன்று அதனை புதிய தலைமுறையினருக்கு ஏற்ப புணரமைத்து வழங்கியதில் திரு. திருச்செந்தூரன், வி.டி. தர்மலிங்கம் முதலானோருக்கு முக்கிய பங்குண்டு. இவர்களுக்கு பின்னர் மலையக கூத்துகள் தொடர்பான சிற்சில ஆய்வுகள் வெளிவந்த போதிலும் களத்திலான பரிசோதனை முயற்சிகள் ப+ச்சியமாகவே இருந்தன. இந்நிலைமை மலையக கூத்துகளில் ஓர் தலைமுறை இடைவெளியை ஏற்படுத்தியிருந்தன எனக் கூறலாம்.

இவ்வாறான சூழலில் மலையக கூத்துக் கலைஞர் பிரான்ஸிஸ் ஹலனின் முயற்சிகள் மலையக கூத்துக்களின் மீட்டுவாக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவனாக அமைந்திருக்கின்றன. ஹலன் நோர்வ+ட் போற்றி தோட்டத்தை பிறப்பிடமாக கொண்டவர். இவரது தந்தை நாடக ஆசிரியராக இருந்ததுடன் கூத்திலும் அதிகமான ஆர்வத்தை கொண்டிருந்தவர். குறிப்பாக இவரது நாடகங்களில் கூத்து முறையினை நடிப்பு, ஆடல் பாடல் இடம் பெற்றுள்ளதை அவருடன் உரையாடிய போது அறியக் கூடியதாக இருந்தது. இத்தகைய பின்னனியில் தன்மை பட்டைத்தீட்டிக் கொண்ட திரு. ஹலன் தான் ஓர் இளம் ஆசிரியராக இருந்தமையினால் மலையக கூத்துகளை குறிப்பாக காமன் கூத்தை நவீன மேடைக்குரியதாக மாற்றி அதனை மாணவர்களை கொண்டே ஆடிவந்தார். ஒரு வகையில் மலையக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக ஆய்வாளர்கள் மலையக கூத்துக்கள் பற்றி அறியவும் அது குறித்து தேடவும் உந்து சக்தியாக விளங்கியதுடன் மிக முக்கியமாக இத்துறையில் உழைக்க கூடியவர்களை மலையக மக்கள் கலை அரங்கு என்ற அமைப்பை உருவாக்கி கூத்து தொடர்பில் ஆர்வம் உள்ள பலரை இணைத்து செயற்பட்டு வருகின்றமை இவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும். தமது இத்தகைய ஆர்வத்திற்கும் செயற்பாட்டிக்கும் தமக்கு வழிக்காட்டியவர்கள் போற்றி தோட்ட தொழிலாளர்கள் என நினைவுக் கூறும் ஹலன் அத்தகைய செயற்பாடுகளை உழைக்கும் மக்கள் சார்ந்த தளத்திலிருந்து முன்னெடுப்பது ஆரோக்கியமானதாகும்.

இறுதியாக ஒன்றைக் கூறலாம். பாரம்பரிய கூத்துக்கள் தொடர்பான மீட்டுருவாக்க முயற்சிகள் மூன்று தளங்களில் இடம்பெற்று வந்துள்ளதை அறியலாம். ஒன்று பாரம்பரிய மரபுகளை அதன் மரபுத் தூய்மை கெடாத வகையில் பாதுகாத்து வருகின்றமை. இரண்டாவது புதிய உள்ளடக்கங்களை புகுத்தி அதனூடாக சமூகம் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடத்தல். மூன்றாவது நமது பாரம்பரிய மரபுகளையும், மேற்கத்திய நாடக மரபுகளையும் தழுவி புதியதோர் நாடக மரபினை உருவாக்குதல். மாற்றத்தின் இயக்கவியல் வளர்ச்சியை புரிந்துக் கொள்கின்றவர்கள் இந்த மூன்றாவது நிலையை ஆதாரமாக கொண்டு புதியதொரு நாடக மரபை தோற்றுவிப்பதற்கான அவசியத்தை உணர்வர். இவ்வாறானதோர் சூழலில் ஹலன் போன்ற மக்கள் கலைஞர்கள் மலையகத்திகென்றோரு நாடக மரபை உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment

There was an error in this gadget