“நம் குழந்தைகள் வயிறு நிறைய உண்ண வேண்டுமென்பதற்காக, குளிருக்கு அடக்கமான ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்காக, மூட்டைப்பூச்சிகள் இல்லாத படுக்கைகளில் தூங்க வேண்டும் என்பதற்காக, நம் குழந்தைகளுக்காகவும் மக்களுக்காகவும் பொருள் உறபத்தி செய்ய வேண்டும் என்பதற்காக….” போராடினோம் என தமது நாவலில் வங்காரி என்ற பாத்திரத்தின் ஊடாக உழகை;கும் மக்களின் வேள்வியை வரித்துக் கொண்ட ஆப்பிரிக்க நாவலாசிரியர் கூகி வா தியாங்கோ தன் எழுத்துக்களால் சமூக வரலாற்றின் பக்கங்களை திண்ட நிர்பந்திக்கப்பட்ட சமூகப் பின்னணியே நாமும் அம்மக்களுக்கான விடுதலையையொட்டி நம் எழுத்துக்களால் தீண்ட நிர்பந்திக்கப்பட்டுள்ளதை வரலாறு எமக்கு புதிய படிப்பினையாக தந்திருக்கின்றது.
உதயனின் ‘சொடுதா’ என்ற இந்நாவல் பற்றி முன்னுரையாக சில குறிப்புகளை எழுத தொடங்கு முன்னே கலை இலக்கியம் பற்றிய மேற்குறித்த உணர்வுகள் முந்திக் கொண்டு வருகின்றன. இது ஒரு புறமிருக்க, இந்நாலாசிரியர் எனக்கு அறிமுகமான நாட்களிலிருந்தே இலக்கியத்தின் உயிர் அதன் சமுதாய பணியாகும் என்ற கருத்தோட்டத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக இருந்து வந்திருக்கின்றார். கிராம வாழ்க்கையை நேசிக்கின்ற அவர் அவ்வாழ்க்கையினடியாக தோன்றுகின்ற வாழ்வின் உன்னதங்களையும் கருத்தோட்டங்களையும் தமது எழுத்துக்களின் ஊடாக வெளிப்படுத்தியிருப்பதை அவரது எழுத்துகளினூடாக அறிய முடிகின்றது. இந்நாவலை வாசித்தப் போது முனைப்பாக சில விடயங்கள் கூற வேண்டியுள்ளது. இக்கதையில் இறால் பிடிப்பதற்காக நீர்கொழும்பிலிருந்து வந்து மன்னார் பிரதேசத்தில் வாடியடித்து தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களும் அவர்களுடன் இணைந்த குடுபங்களையும் தவிர்த்துவிட்டு பார்த்தால் அக்கதையில் நடமாடும் பலதரப்பட்ட பாத்திரங்கள் யாவும் மன்னார் கடற்கரை பிரதேசத்தை சார்ந்ததவையாகவே அமைந்துள்ளன. கொழும்பு, நீர்கொழும்பு, கச்சதீவ, நெடுந்தீவு, இராமேஸ்வரம், தனுஷ்கோடி என பல ஊர்கள் கதையில் இடம்பெற்ற போதினும் அவை பெரும்பாலும் பேச்சிலே குறிக்கும் பெயர்களாகவும் சில சமயங்களில் கதையின் பாத்திரங்கள் சென்று வந்த ஊர்களாகவும் தான் இடம்பெறுகின்றன. அந்தவகையில், இன்றைக்கு அறுபது வருடங்களுக்கு முன்னம் இருந்த மன்னார் கடற்கரை பிரதேசத்து சூழ்நிலையையும் அவ்விடத்து மக்களது வாழ்க்கை நிலையையும் எடுத்துக்காட்டுவதாக கதை அமைந்துள்ளது. மன்னார் கடற்கரை பிரதேசத்தின் ஊர்கள், அவற்றின் சுற்றுப்புறங்கள் இயற்கைச் சூழ்நிலைகள், பருவ மாறுதல்கள், அவற்றிடையே வாழ்க்கை நடத்துகின்ற மனிதர்கள், அவர்களின் குணங்கள், செயற்பாடுகள் முதலியவற்றை இந்நாவல் சித்திரிக்கின்றது.
நாவலின் கதாநாயகனான மரியாசு தனது தந்தையின் மறைவுக்கு பின்னர் சம்மட்டியாக வருகின்றான். அவருக்கு துணையாக வந்து சேர்கின்ற சீமாம்புள்ள மரியாசின் தந்தையின் காலத்திலிருந்தே அவனது குடும்பத்திற்கு விசுவாசமான தொழிலாளி. மரியாசு வாழ்க்கைப் பாதையில் அடி எடுத்து வைக்கிற இளைஞன் நல்ல உழைப்பாளி, இயற்கையோடு இணைந்துக் கிடக்கின்ற கடற்தொழில் சார்ந்த நவீன தொழிற்நுட்பத்தை கையாண்டு தொழிலாளர்களின் வேலை சுமையை குறைப்பதுடன் லாபத்தில் அவர்களுக்கு பங்குகொடுக்கவும் செய்கின்றான். மக்களை நேசிக்கின்ற அவனது பண்புகள், நடத்தைகள் இயல்பாகவே தொழிலாளர்களின் வாழ்வோடு அவனை கலக்க வைக்கின்றது. தமது திறமையால் அதிக லாபத்தை சம்பாரித்த பின்னர் அதனை தொழிலாளர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டாடுவது, சீமாம்புள்ளயின் கடைக்குட்டியான ரெத்தின மாலையின் மீது ஏற்படுகின்ற காதல் கொள்வது, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவளது மூத்த சகோதரி சுகந்த மாலையுடன் ஏற்படுகின்ற உடலுறவு அதனடியாக எழுகின்ற மனப்போராட்டங்கள்: ரெத்தினமாலையை விட்டு விலகி செல்கின்ற பண்பு யாவும் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். அந்தவகையில் மரியாசு என்ற இளைஞனின் பலம், பலவீனங்கள், வெற்றிகள் தோல்விகள், ஆசைகள், ஆசைமுறிவுகள் முதலியவற்றை இந்நாவல் விபரிக்கின்றது.
இந்நாவலில் இடம்பெறுகின்ற பிறிதொரு முக்கியமான பாத்திரம் தான் சுதந்தமாலையாகும். வாசகனின் நெஞ்சில் ரெத்தின மாலை விட சுதந்த மாலையே மறக்க முடியாத பாத்திரமாக இருப்பாள். கதையில் சுகந்த மாலை ஒரு சோகக் கதாநாயகியாகவே இடம் பெற்றுள்ளாள். அவளை நேசிப்போரும் உள்ளனா,; வெறுப்போரும் உள்ளனர். கச்கேரியில் அரச உத்தியோகம் பார்க்கும் இராஜேந்திரன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன் என்பதற்காகவே சுகந்த மாலைக்கு பொருத்தமற்ற அவரை திருமணம்செய்து வைப்பதற்காக அவளது தந்தையான சீமாம்புள்ள முனைகின்ற போது, சுகந்த மாலைக்கு இயல்பாகவே மரியாசு மீது ஏற்படுகின்ற காதல், தவிர்க்க முடியாத உறவு- கர்ப்பம், சமூகத்தின் பழிச்சொற்களுக்கு அஞ்சி தனது கர்ப்பத்தை மறைத்துக் கொண்டு இராஜேந்திரனை திருமணம் செய்ய முனைதல், பின்னர் தனது முயற்சி தோல்வி அடைய தற்nhலை செய்துக் கொள்ளல் போன்ற அம்சங்கள் சராசரி பெண்ணுக்குரிய உணர்ச்சிகளையும் வாழ்க்கைப்போராட்டங்களையும் எடுத்துக்காட்டுகின்றது. இங்கு ஒழுக்கத்தைப் பற்றி நினைவுக்கு பதிலாக அப்பெண்ணின் உணர்வுகளும் மனப்போராட்டங்களுமே வாசகனின் உள்ளத்தை பாதிக்க கூடியதாக உள்ளது. விரக்த்தி, கசப்பு, தோல்வி, நம்பிக்கையின்மை முதலியன காரணமாக தனிமனிருக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான உறவு காட்டப்படுகின்றது. அந்தவகையில் சுகந்த மாலை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலக்கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட சமூக வர்க்கத்தை எதிர்த்து நின்று தோற்றுப் போகும் பாத்திரமாகவே உருவம் பெற்றுள்ளாள்.
இவ்விடத்தில் பிறிதொரு வினாவும் எழுகின்றது. நாவலாசிரியர் சுகந்த மாலையும் மரியாசும் கல்யாணஞ் செய்து சுகமாக வாழ்ந்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுகின்றது. நாவலாசிரியர் முயன்று சேர்க்கும் எதிர்பாராத முடிவை காட்ட வேண்டும் என்பதற்காக அவ்வாறு காட்டினார் எனக் கொள்ள முடியாது. சில எழுத்தாளர்களும் திரைப்படயாசிரியர்களும் சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும் வேறுப்பாடுகளையும் பணக்காரனின் மகளை டாக்ஸி டைவருக்கு கட்டி வைப்பதாதோலோ, அல்லது கலப்பு திருமணங்களினாலோ தீர்த்து விடலாம் என்று கற்பனை செய்தனர். பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரையில் ஆங்காங்கே கூறப்பட்ட மனிதாபிமான கருத்துக்களைக் கொண்டு பிச்சனைகளை தீர்த்து விடலாம் என இவர்கள் கனவுக் கண்டது ‘தீமையை எதிர்த்து போராடாதே’ என்ற தத்துவ போதனைக்கு வழி வகுப்பதாக அமைந்தது. மந்திரத்தால் மாங்காய் விழாதது போல மனமாற்றத்தினால் இவற்றை ஒழித்து விட முடியாது என்பதை இதுவரைக்கால போராட்டமும் வாழ்க்கையும் எனக்கு உணர்த்தியிருக்கின்றது. அந்தவகையில் வாழ்க்கை யாதார்த்தத்தின் உண்மையை உணர்ந்து பாத்திரங்களை படைத்தளித்த ஆசிரியர் காதல் திருமணம் என்பவற்றை பொருளடிப்படையில் தீர்மாணிக்கின்ற ஏற்றத் தாழ்வான சமுதாயத்தில் மரியாசு, சுகந்தமாலை திருமணம் பல்வேறுப்பட்ட முரண்hடுகளை தோற்றுவிக்கும் என்பதை உணர்ந்திருமையினாலோ என்னவோ அவர் அவ்வாறு செய்யவில்லை. அதேசமயம் சீமாம்புள்ளயின் இடைக்குட்டியான சொர்ணமாலைக்கும் சம்மாட்டியாரின் மகனான சகாயத்திற்கும் இடையிலான காதலை ஏற்படுத்தி அதனை வெற்றிப்பெற வைப்பது எந்தளது சாத்தியமானது என்பது சுவாரசியமான வினாவாகும். இப்பாத்திரங்கள் விதிவிலக்காக இருப்பினும் யதார்த்த படைப்பிற்கு வளம் சேர்க்கும் வகையிலான வகை மாதிரியான பாத்திர படைப்புகள் அல்ல.
சீமாம்புள்ள பாத்திரம் சுகந்தமாலையின் தகப்பனாகவும் மறுப்புறத்தில் மரியாசு சம்மட்டியாரின் குடும்பத்திற்கு நன்றி விசுவாசத்துடன் கடமையாற்றும் கூலியாகவும் இருந்துக் கொண்டு பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் எதிர்நோக்கும் விதமும் அவற்றை புரிந்துக் கொள்ள முயலும் விதமும் மனிதாபிமானமுள்ளவர்களின் ஆத்மாவை உலுக்கிவிடுகின்றது. கூடவே தமது மகள் தமக்கு சம்மாட்டியரான மரியாசுடன் பாலுறவுக் கொள்வதை நேரடியாக பார்த்த போது வெளியே சொல்ல முடியாமல் அவருக்கு உண்டாகும் மனவேதனைகளும் பரிதவிப்புகளும் குருதி குழாய்களில் இரத்தத்தை உறையச் செய்துவிடுகின்றன. இக்கட்டத்தை படிக்கும் போது என் உள்ளம் உருகி கண்ணீரும் வந்து விட்டது.
இவ்வாறு பல ரக மனிதர்களின் உணர்வுகளை சமுதாய பின்புலததில் வைத்து படைப்பாக்கம் செய்திருக்கின்ற நாவலாசிரியர் மனித வாழ்க்கையின் விதம் விதமான போக்குகளையும், மனிதர்களின் உணர்ச்சிகளையும் அவற்றின் விளைவுகளையும் யதார்த்தமாகவும் அழகாகவும் படைத்திருக்கின்றார்.
இந்நாட்டின் அதிகார வர்க்கமும் பேரினவாதிகளும் ஆரம்ப கால முதலாகவே தமிழர்களின் இனத்தனித்துவத்தை சிதைக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தனர். இக்காலப்பகுதில் வட-கிழக்கு சார்ந்த அரசியல் தலைவர்களும் புத்திஐPகளும் இலங்கைத் தேசியம் குறித்து கவனம் செலுத்திருந்தமையினால் பேரினவாதம் பற்றி சிந்திக்க தவறிவிட்டனர். சேர்.பொன். அருணாசலம் போன்றோர் பேரினவாத்தை அடையாளம் கண்டிருந்த போதும் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அவரின் மறைவு துரதிஸ்டவசமானதொன்றாகி விடுகின்றது. பின் வந்த தலைவர்கள் அதனை கவனத்திலே எடுக்கவில்லை. உயர் மத்திய தர வர்க்க வாழ்க்கை முறைகள், அரசியல் சிந்தனைகள், அரச சலுகைகள் காரணமாக பேரினவாதம் குறித்து அவர்கள் சிந்திக்க தவறிவிட்டனர். பேரினவாதத்தை அரசியல் தளத்தில் சரியாக அடையாளம் கண்டு அமைப்பு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளாவார்.
இந்நாவலின் கதை நிகழ் காலமான 1950களில் ஏகாதிபத்திய சார்பு அரசியல் சக்திகள் தூக்கியெறிப்பட்டு தேசிய முதளாளித்துவ சக்திகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருந்த காலமாகும். தேசிய முதலாளித்துவம் அரசியல் அரங்கில் பிரவேசிக்கின்ற போது அது தன்னகத்தே சில முற்போக்கான பண்புகளை கொண்டிருக்கும் என்பதை வரலாறு எமக்கு உணர்த்தியிருக்கின்றது. அந்நிய முதலீட்டின் பிடிப்பும் அதன் தாக்கமும் தமக்கு பாதகமாக இருப்பதனை தேசிய முதலாளிகள் இனங்கண்டனர். இதற்குமாறாக தேசிய முதலாளித்துவம் தத்தமது நாட்டில் கைத்தொழில் துறையினையும் வர்த்தக அபிவிருத்தியினையும் மேற்கொண்டது. இது தமது நாட்டினை அபிவிருத்தி செய்வதாக அமைந்நிருந்தது. தமது நாட்டினை காலணித்துவ ஆட்சிக்குட்படுத்தி அதனூடாக நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்துக் கொணடிருந்த குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிராக இருந்த அதேசமயம் நவீன கொள்ளைக்காரர்களான ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவும் அது செயற்ட்டமை அதன் பிரதானமான அம்சமாகும். இதன் தாக்கத்தை நாம் இலங்கையிலும் காணக்கூடிதாக இருந்தது. இருப்பினும் அதன் வர்க்க நலன் காரணமாக அது வெகு விரைவிலேயே ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து மக்கள் விரோத செயற்பாடுகளிலும் ஈடுப்படத் தொடங்கியது. ஒரு அம்சமாகவே இனவாதமும் அது தொடர்பான சிந்தனைகளும் வளரத் தொடங்கின்.
இதன் தாக்கத்தையும் இந்நாவலி;ல் காணக் கூடியதாக உள்ளது. இறால் பிடிப்பதற்காக நீர் கொழும்பிலிருந்து வந்திருக்கும் மீனவர்களுக்கும் மன்னார் பிரதேசத்தை சார்ந்த மீனவர்களுக்கும் இடையிலான முரண்பாடு, அப்பிரச்சனையை தீர்த்து வைப்பதில் பொலிஸாரின் பக்கச்சார்பு, இவற்றைக் கடந்து தாங்கள் தொழில் செய்து பிழைப்பவர்கள் என்றவகையில் அவர்களிடையே ஏற்படுகின்ற மனிதநேய உணர்வு என்பனவற்றை இந்நாவல் காட்டுகின்றது. இன மொழிவேறுப்பாடுகளைக் கடந்து வர்க்க ஒருமை உணர்ச்சிகளே இவர்களை ஒன்று சேர்க்கும். நாவலாசிரியரைப் பொறுத்த மட்டில் அவர்களை மனிதாபிமான அடிப்படையிலே ஒன்று சேர்த்து வைக்கின்றார்.
இவ்விடத்தில் நாவலாசிரியரின் அரசியல் பார்வைப் பொறுத்து சிந்தித்த போது பிறிதொரு படைப்புடன் ஒப்புவமை காணவேண்டியதும் அவசியமான தொன்றாகின்றது. “செ. யோகநாதன் சிறுகதையொன்றில் மீன் பிடிக்கும் தொழிலாளியின் வர்க்க உணர்ச்சியின் உதயம் சித்திரிக்கப்படுகின்றது. புதிதாக திருமணமான மறுநாளே அவனை வேலைக்குப் போகச் சொல்கின்றார் அவனுடைய முதலாளி. இதுவரை முதலாளி சொல் மீறாத தொழிலாளி வேலைக்குப் போகத் தயங்குகின்றான். முதலாளி அவனைத் திட்டி, வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார். அவன் மீது அனுதாபம் கொண்ட தொழிலாளி ஒருவனும் ஒருத்தியும் அவனுக்கு முதலாளியை எதிர்த்து நிற்க ஊக்கமளிக்கின்றனர். முதன் முதலில் தெழிலாளி அடிமைத்தனத்தை உதறியெறிகிறான். வேறு தொழிலாளிகளோடு சேர்ந்து முதலாளியின் கட்டளையை மீறிக் கடற்கரைக்கு மீன் பிடிக்க போகிறான். அவனையும் போராடும் தொழிலாளரையும் அடக்கத் தொழிலாளர் சிலரையே அடியாட்களாக முதலாளி கொண்டு வருகின்றான்;. தொழிலாளர்களிடையே போராடுவது பற்றி ஐயங்கள் உள்ளன. கருங்காலிகள் தொழிலாளர்களை வெட்ட முயலும் போது, உணர்ச்சிமிக்க தொழிலாளர்கள் ஒன்றுக் கூடி எதிர்க்கின்றனர். தொழிலாளி வர்க்க ஒற்றமை இவ்வாறு தோன்றுகின்றது. சுரண்டலை உணர்ந்து அதனை உதறியெறிய முற்படும் தொழிலாளி தாங்கள் ஒரு வர்க்கம், முதலாளி சுரண்டும் வேறு வர்க்கம் என்னும் உண்மையை அறிகின்றார்கள்(வானமாமலை. நா (1999), மார்க்சிய அழகியல், மக்கள் வெயியீடு, சென்னை. பக்.33,34)
நாவலாசிரியரைப் பொறுத்தமட்டில் சம்மாட்டிகளின் சுரண்டல், ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டத்தை ஒரு மனிதாபிமானமுள்ள மக்கள் சார்பான- இதயமுள்ள சம்மட்டியொருவரை படைத்து விட்டதில் அமைதிகாணுகின்றார் என்றே கூறவேண்டும். இந்நாவலாசிரியர் இன்னுஞ்சிறிது ஆழமாக சமுதாய பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் நோக்குவாராயின் அவர் காணுகின்ற அநீதிக்கு எதிராக கலகக் குரல்களையும் எதிர்ப்புணர்வுகளையும் காண முடியும் என்ற விமர்சனத்தை முன் வைத்தால் அதனை ஏற்க கூடிய முதிர்ந்த பக்குவம் இந்நாலாசிரியருக்கு உண்டு என்றே நம்புகின்றேன்.
இந்நாவல் அப+ர்வமான உணர்ச்சி பீறல்களையும் சுழிப்புகளையும் ஏந்தும் படிமக் கோவையாக அமையவில்லை. தற்காலத்தில் முன் பின் நவீனத்துவர்கள் போல பழந்தமிழ் பனுவல்களை நயத்து- அல்லது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத மேற்கத்திய நாடுகளின் மர்மகதைகளையும் மாயாஜாலங்களையும் நயத்தது குறியீடு, படிமம் போன்ற இலக்கிய உத்திகளினூடாக வாசகர்களை மிரட்டி முக்குளிக்க செய்கின்றனர். இப்போக்கிருந்து அந்நியப்பட்டு இருக்கின்றமையினால் மதியாழத்தையும் நுண்மான் நுழைப்புலத்தையும் கவசமாக கொண்டிராத சாதாண வாசகனுக்கும் பொருள் விளங்குவதாக இந்நாவல் அமைந்துள்ளது. கருத்தை கதையாக சொல்லுகின்ற திறன் இந்நாவலாசிரியரின் தனித்துவவமான அம்சமாகும்.
வடிவப் பரிசோதனையில் அதிகம் அக்கறை காட்டுபவரல்ல. பாரம்பரியமான நாவல் வடிவத்தைக் கையாண்டு தன் கண் எதிரே உறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் குரூரங்களையும் அவலங்களையும் மனசை பிழியும் துன்பக் காட்சிகளையும் படைப்பாக்கியிருக்கின்றார். இவ்விடத்தில் முனைப்பான விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். முற்போக்கு படைப்பாளிகளின் படைப்புகளில் அழகியல் தன்னை இல்லை என்ற குற்றச்சாட்டு தூய அழகியல் வாதிகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமது பிற்போக்கு தனமான கருத்துக்களை முன் வைப்பதற்கும,; மக்களின் ரசனையை கீழ்மைப்படுத்துவதற்கும் அவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றார்கள். அக்குற்றச்சாட்டுகளை சிறிதளவேனும் சரியென சொல்லத்தக்க வகையில் அரசியலை முதன்மைப்படுத்தி அதன் வடிவத்தில் கவனமெடுக்காத எழுத்தாளர்கள் சிலரின் அசீரண ஆக்கங்களும் அவசர முயற்சிகளும் அழகியல் வாதிகளுக்கு சாதகமாக அமைந்து விடுவதுண்டு. இலக்கிய கர்த்தாக்கள் மனித வாழ்க்கையும் அது தோற்றவிக்கும் சமுதாய முரண்பாடுககையும் எந்தளவு உள்நின்று நோக்குகின்றார்கள் என்பதைப் பொறுத்தே கருத்தை அழகியல் அடிப்படையில் ஆக்கும் சக்தி அவர்களுக்கு வந்தமைகின்றது.
இலக்கியத்தில் உள்ளடக்கம் எவ்வாறு கால, தேச வர்த்தமாணங்களுக்குக் கட்டுப்பட்டும் அதனை மீறியும் இயங்குகின்றதோ அவ்வாறே அதன் வடிவமும் அத்தகைய தாக்கங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றது என்பதை இலக்கிய வரலாறு எண்பித்திருக்கின்றது. உள்ளடக்க ரீதியாக மட்டுமன்று வாசிக்கின்ற முறையிலும் மாற்றத்தை கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும். முற்போக்கு இலக்கியத்திற்கும் அழகியல் பிரச்சனைகள் உண்டு. காலத்திற்கு ஏற்ற வடிவத்தை மக்களின் நலனிலிருந்து அந்நியமுறால் படைப்பாக்கித் தர வேண்டியது முற்போக்கு- மார்க்சியப் படைப்பாளிகளின் கடமையாகும். எழுத்தாளர் கூகி வோ தியான்கோவின் நாவல்களில் இத்தகைய பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க அரசியல் பண்பாட்டு பின் புலத்Nதூடு மெஜிக்கல் ரியலிஸ பாணியில் இவர் எழுதிய மக்கட் சார்பான அரசியல் நாவல்கள் முக்கியமாவையாகும். இவரது ‘கறுப்பின மந்திரவாதி’(றுணையசன ழக வாந ஊசழற), ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்’(னுநஎடை ழn வாந ஊசழளள), ஆகிய நாவல்கள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். தமிழ் நாவல் இலக்கியத்தில் இத்தகைய முயற்சிகள் மேற் கொண்டதாக தெரியவில்லை. இத்தகைய முயற்சிகளை தமிழில் சாத்தியமாக்கும் போது தான் உலக நாவல் இலக்கிய வரிசையில் தமிழ் நாவல் இலக்கியத்திற்கும் உரிய இடம் கிடைக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம். இந்நாவலின் உரையாடல்கள் எல்லாம் மன்னார் பிரதேசத்து மண்ணின் மணம் கமழும் பேச்சுத் தமிழில் அமைந்துள்ளன.அவற்றை புரிந்துக் கொள்வதில் சிரமமில்லை. நமக்கு அதுவோர் இன்ப அனுபவமாகவே உள்ளது. பொரும்பான்மையான உவமைகள், பழமொழிகள் கடற்கரை பிரதேச மக்களின் பேச்சு வழக்கில் இருந்து எடுத்தாளப்படுகின்றன. இந்நாவலாசிரியர் அம்மக்களின் வாழ்க்கையை உள்நின்று நோக்கியதால் தான் பாமரர் வழக்குகளையும் உவமை உருவகங்களையும் தமக்கு தேவையான வகையில் எடுத்தாள முடிந்நது. அவரது தமிழ் நடை அழகிய அற்புதமான தமிழ் வசனம் என்றுக் கூறலாம். இத்தகைய கொச்சை தமிழ் நடை நாவலின் தனிச் சிறப்பு என்றே கூறவேண்டும்.
கரையோர மக்களின் வாழ்க்கைப் போக்கின் ஒரு காலக்கட்டத்தின் நெடுக்கு வெட்டு முகத்தை இந்நாவலின் முலம் எமக்களித்த நண்பர் உதயன் அவர்களுக்கு எனது பராட்டுகள். எத்தனையோ நிலைகளிலிருந்தும் தளங்களிலிருந்தும் படிகளிலிருந்தும் வாழ்க்கையின் வரம்பற்ற கோலங்களைக் கண்டு மேலும் பல நாவல்களை உதயன் எமக்காக படைக்க வேண்டும்.
No comments:
Post a Comment