Wednesday, February 29, 2012

தோற்ற மயக்கங்கள்: (சமூக ஒடுக்குமுறைகளும் வர்க்கப் பார்வையும் பற்றி) கலாநிதி ந.இரவீந்திரன்

தோற்ற மயக்கங்கள் பற்றி தத்துவார்த்தமாய் நிறையவே பேசப்பட்டுள்ளது. தோற்ற மயக்கத்தினால் பாம்பாகத் தெரியும் கயிறுபற்றி அத்வைதம் பேசும். பிரமமே உண்மைப் பொருள் எனக் காண இயலாதவகையில் கயிறாகக் கிடக்கும் இவ்வுலகைப் பாம்பாக மயங்கும் ஆன்மாக்கள் பற்றி தின்று கொழுத்த மடத்துச்சாமிகள் புலம்பட்டும்@ உங்கள் முன்னே இருக்கும் வீடும் துணையும் பிரச்சினைகளும் பொய்யாகிவிடுமோ என பாரதி கேட்டதை அறிவோம். எமக்கு முன்னால் விசுவரூபங்கொண்டுள்ள யதார்த்தங்களும் பிரச்சினைகளும் தொடர்பிலான தோற்ற மயக்கங்கள் பற்றி இக்கட்டுரை பேசும்.
“நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்” என்ற மரபுத்தொடர் இது தொடர்பில் நினைவுக்கு வரும். துரத்தும் நாயிடமிருந்து தப்புவதற்கு கல்லைத் தேடும்போது கிடைப்பதுமில்லை, கொட்டிக்கிடக்கும் கல் குவியலைக் காணுகையில் நாய் எதுவும் துரத்துவதுமில்லை என்பதாக இதற்கு பொதுவழக்கில் பொருள்கொள்வது மரபு. இதுவும் ஒரு தோற்ற மயக்கமே. இங்கு மறைபொருளாய் உறைந்துள்ள உண்மை தெரிந்த பின்னர் நாய் துரத்துவதோ கொட்டிக் கிடக்கும் கற்களோ காணாமல் ஓடிவிடும்.
கைதேர்ந்த சிற்பியால் தத்ரூபமாய்ச் செதுக்கப்பட்ட நாயின் சொரூபத்தை வறட்டுவாத நோக்கில் அணுகும்போது, அது உண்மையில் வெறும் கல்தானே என்ற எண்ணம் தோன்றும்@ அழகியல் நோக்கு மேவிய கலைப்பித்தருக்கு அது உயிர்ப்பான நாயாகவே தோற்றம் காட்டி கல் கண்ணி;ல் படாமலேபோகும். சமூகப்பார்வைகொண்ட யதார்த்தவாதிக்கு கல்லில் உண்மைத் தோற்றமுடைய நாய் போன்ற அழகிய சிற்பம் தெரியும். அகநிலைவாதத்தப்பெண்ணங்களுக்கு இடமளிக்காத இந்த சமூகப் பார்வை கைவரப்பெறாத முந்திய இரு தோற்றங்களும் மயங்கிய மனநிலையின் பாற்பட்டவை.
எமது பிரச்சினைகளின் தீர்வுக்கு மார்க்சியத்தை பிரயோகிப்பதில் வெளிப்படும் தோற்ற மயக்கங்களைக் கண்டு, இறுதியில் சரியான மார்க்சிய அணுகுமுறையை வந்தடைவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்ள இக்கட்டுரை முயலும்.
1
எமது சமூகம் எதிர்நோக்கும் சாதிய – தேசியப் பிரச்சினைகளைப் போதியளவு கவனத்திற்கொள்ளாமல் மார்க்சியத்தை வறட்டுத்தனமாக வர்க்கப் பிரச்சினைக்குரியதாக மட்டுப்படுத்திய தோற்றமயக்கம் எம்மிடமிருந்தது. அத்தகைய வறட்டுத்தனத்தில் மார்க்சியத்தை வெறும் வர்க்க பேதம் பற்றி மட்டும் பேசும் கல்லாக்கியபோது சாதியவாதிகளும் தேசியவாதிகளும் தத்தமக்கானவையே உண்மைத்தோற்றமாய்க் காட்சிப்படுத்தி ஏனையவற்றைக் காணவியலாமலாக்கி முன்னெடுத்த செயற்பாடுகள் மென்மேலும் பிரச்சினைகளை இடியப்பச் சிக்கலாக்குவதற்கு வாய்ப்பானது. இலங்கையில் இனத் தேசியவாதமும் இந்தியாவில் தலித்தியவாதமும் இவ்வகையில் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் அவற்றால் மேலும் சிக்கலாக்கப்பட்ட நெருக்கடிகளிலிருந்தும் மீட்சிபெற்று தீர்வினை எட்டுவதற்கு மார்க்சியத்தைப் பிரயோகிக்க இயலுமா?
மார்க்சியத்தை வெறும் வர்க்கப் பிரச்சினைக்குரியதாக குறுகித் தறித்து அணுகும் போது, சாதியப்பிரச்சினையினதும் தேசியப் பிரச்சினையினதும் முழுமைப்பரிமாணங்களைக் காணத்தவறுவோம்@ மார்க்சியம் கண்டுகாட்டிய வர்க்கப் பார்வையில் சாதி – தேசியப் பிரச்சினைகளை அணுகாமல் சாதியவாத – தேசியவாதப் பார்வைகளில் தீர்க்க முயன்ற முயற்சிகள் அனைத்தும் தோற்றுப்போயுள்ளமை தெளிவு. சாதி – தேசியம் என்பவற்றை ஏன் வர்க்கப் பார்வையில் அணுக வேண்டும்?
அடிப்படையில் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்கள் எவரோ, அவர்களே ஆளும் வர்க்கங்களாக அமைந்து உடைமையற்று உற்பத்தி சக்தியை விற்கும் உழைப்பாளர்களை சுரண்டுகின்றனர். ஏதோ சில உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒரு பகுதி சுரண்டலுக்கு உள்ளாகும் மத்திய தர வர்க்கங்களும் உள்ளன. இன்றைய உற்பத்திசாதனங்களும் உற்பத்திக் கருவிகளும் உற்பத்தி சக்தியின் அபார வளர்ச்சியும் முற்றிலும் சமூக உழைப்பின் பேறானவை@ பல்வேறு வழிகளால் அத்தகைய சமூக உடைமை சில தனிநபர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விருத்திக்கு பிரதான காரணியான பாட்டாளிவர்க்கம் இழப்பதற்கு ஏதுமற்ற நிலையில் தனது உற்பத்திசக்தியை விற்று இவற்றை உருவாக்கியிருந்தது. அந்தப் பாட்டாளிவர்க்கம் புரட்சிவாயிலாக தனியுடைமையைத் தகர்த்து சமூக உடைமையாக மாறவேண்டிய நியாயப்பாட்டினை சாத்தியமாக்கும்போது அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளும் அற்றுப் போகும்.
சுரண்டலின் வடிவங்களாயே தேசியப் பிரச்சினைகளும் சாதியப் பிரச்சினைகளும் உள்ளன. அந்தவகையில், சுரண்டல் ஒழிக்கப்படும்போது தேசிய – சாதி ஒடுக்குமுறைகளும் அற்றுப்போய்விடும். பாட்டாளிவர்க்கப் புரட்சிவாயிலாக பூரண சமத்துவத்தை வென்றெடுக்கும் இலக்கினை அடையவொட்டாமல் திசைதிருப்பும் நோக்குடன் முதலாளித்துவ சக்திகள் இரண்டாம் நிலைக்குரிய தேசியவாத – சாதியவாத முரண்பாடுகளை தூண்டிவிடுவதாகக் கருதப்பட்டதுண்டு.
ஆயினும், பாட்டாளிவர்க்கப் போராட்டங்கள் தீவிரமாக முனைப்படைந்திருந்து மார்க்சியம் வெளிப்படக்காரணமாக இருந்த மேற்கு ஐரோப்பாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சிவாயிலாக சோஷலிஸத்தை வென்றெடுக்க இயலவில்லை. லெனினிஸம் என்ற விருத்தியை எட்டிய கிழக்கு ஐரோப்பாவினதும் ஆசியாவினதும் பகுதிகளையுடைய ருஷ்யாவில் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் விவசாய வர்க்கத்தையும் ஐக்கியப்படுத்தி ருஷ்யப்பாட்டாளி வர்க்கத்தால் முன்னெடுக்கப்பட்ட புரட்சிவாயிலாகவே சோவியத் யூனியன் வெற்றிகொள்ளப்பட்டு சோஷலிஸத்தை கட்டமைத்துக் காட்ட முடிந்தது. இதற்காக மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எழுப்பிய “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்தை, “ உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்” என்று லெனின் விருத்திசெய்ய வேண்டியிருந்தது.
முன்னதாக ஏங்கெல்ஸ் முதலாளித்துவ விருத்தியில் அதியுயர் வளர்ச்சியை அன்று எட்டியிருந்த பிரித்தானியாவில் பாட்டாளிவர்க்கப் புரட்சி சாத்தியமற்றுப் போனதற்கான காரணம்பற்றி ஆராய்ந்திருந்தார். குடியேற்ற நாடுகளைச் சுரண்டிய வருவாயில் ஒருபகுதி பிரித்தானியப் பாட்டாளிவர்க்க இயக்கவாதிகளை விலைபேச ஏற்படுத்தித் தந்த வாய்ப்போடு, ஒட்டுமொத்த பாட்டாளிகளது போர்க்குணத்தையும் மழுங்கடிக்கச்செய்ய ஏற்றதாக எலும்புத்துண்டுகளை வீச இயலுமாக்கியதால் சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலை பிரித்தானியப் பாட்டாளிவர்க்கம் இழக்க நேர்ந்தது. பிரித்தானியாவைப் போன்றே ஏகாதிபத்திய வளர்ச்சியை எட்டிய ஐரோப்பிய நாடுகள் இவ்வகையில் வரலாறு படைக்கும் ஆற்றலைக் கைநழுவவிட்டன.

பின்னர் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வாயிலாக சோஷலிசம் கட்டமைக்கப்படும் வகையில் புதிய வரலாற்றுக்கட்டம் உருவாகிவிட்டது. சீனா முதல் கியூபாவரை தேசிய மறுநிர்மாணத்துடன் இணைக்கப்பட்ட சோஷலிஸ மாற்றியமைத்தலே இருபதாம் நூற்றாண்டின் பின் அரைப்பகுதியில் வரலாற்றுச் செல்நெறியாகியுள்ளது. அவ்வகையில் மாஓ சேதுங் சிந்தனையும் சேகுவேரவும் பெற்ற கவனிப்பு ஆழ்ந்த பொருளுடையன. புhட்டாளிவர்க்கப் புரட்சிகர உணர்வோடான தாயகப் பாதுகாப்பில் கியூபாவின் சாதனைகளுக்கு தொடர்ந்து தலைமைதாங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ பெறும் முக்கியத்துவமும், தென்னமெரிக்க நாடுகளின் எழுச்சிகள் வாயிலாக மார்க்சியத்தில் ஏற்பட்டுவரும் விருத்திகளும் கவனிப்புக்குரியன.
புரட்சிக் கொந்தளிப்பு பாட்டாளிவர்க்கப் போராட்ட முன்னெடுப்புகளால் சமூக மாற்றத்தை எட்டும் வரலாற்றுக்கட்டம் ருஷ்யப்புரட்சியினால் சாத்தியமான சூழலில் லெனின் பாட்டாளி வர்க்கத்தோடு ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அறைகூவலை ஒடுக்கப்பட்ட தேசங்களிடம் முன்வைத்தார். பாட்டாளிவர்க்கச் சிந்தனைமுறையின் வழிகாட்டலில் சீனா முதல் கியூபா வரை தேசிய விடுதலைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது சோஷலிச மாற்றியமைத்தலுக்கான புதிய வடிவம் சாத்தியமானது@ பாட்டாளிவர்க்கப் புரட்சி மாத்திரமல்ல, தேசிய விடுதலைப் போராட்டமும் சோஷலிஸத்தை வெற்றிகொள்ள ஏற்ற வாய்ப்பான மார்க்கமே!
அந்தவகையில், வர்க்கங்களிடையேயான போராட்டம் மட்டுமன்று தேசங்களிடையேயான போராட்டமும் வரலாற்றை இயக்கி இருப்பதனைக் காண்கிறோம். முதலாளித்துவத்தின் உச்சநிலையடைந்த ஏகாதிபத்திய நாட்டினால் ஒடுக்கப்பட்ட தேசம் முழுமையும் சமூக வர்க்கமாகச் சுரண்டப்படுகிறது. இவ்வாறு சமூக வர்க்கமாயுள்ள ஒடுக்கப்பட்ட தேசம் ஏகாதிபத்தியத்திலிருந்து பெறும் விடுதலை உலக முதலாளித்துவத்தின் ஒரு பிடியைத் தகர்ப்பதாகும்.
தனது நாட்டில் முதலாளித்துவத்தைத் தகர்ப்பதற்கு அவசியமான போர்க்குணத்தை ஏகாதிபத்திய நாட்டின் பாட்டாளிவர்க்கம் கையூட்டுகளினால் இழந்து போய்விட்டாலும், அதன் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சி ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலைக்கு தன்னாலான பங்களிப்பை நல்கியுள்ளது.
ஒடுக்கப்பட்ட தேசங்கள் முற்றாக விடுதலைபெறும்போது மட்டுமே சிதைக்கப்பட்ட தமது நாட்டின் போர்க்குணம் மீட்டெடுக்கப்பட்டு தமது விடுதுலையையும் வெற்றிகொள்ள இயலும் என்கிறவகையில் அவர்களுடைய நாட்டை முன்னிறுத்திய “தேசிய நலனை” விடவும் சர்வதேச நலன் அவர்களுக்கு அவசியமானதாகிறது. ஒடுக்கப்பட்ட தேசத்தின் விடுதலை இவ்வகையில் சோஷலிஸ நிர்மாணத்தின் பகுதியாக அமைவதால் இங்கு தேசப்பற்று சர்வதேச நலனின் பகுதியாக முடிகிறது. தேவேளை இந்தத் தேசவிடுதலை எந்த வர்க்க நலனை முன்னிறுத்தி வென்றெடுக்கப்படுகிறது என்பதிலேயே வரலாறு முன்னோக்கி நகர்கிறதா இல்லையா என்பது அமைந்திருக்கும் என்பதையும் கவனத்திலிருத்துவது அவசியமாகும். முதலாளித்துவ நோக்கில் விடுதலை பெற்ற இலங்கை, இந்தியா போன்ற தேசங்கள் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டமைத்து முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடக்காண்கிறோம். உடைமைகள் ஏதுமற்ற பாட்டாளிவர்க்கம் மட்டுமே சகல வர்க்கங்களது இருப்பையும் தகர்த்து புத்துலகம் படைக்கும் புதிய வரலாற்றினைப் படைக்கவல்லது என்கிற வகையில் மக்கள் சீனம், கியூபா போன்ற பாட்டாளிவர்க்கச் சிந்தனையை முன்னெடுத்த தேசிய விடுதலைகளே உள்நாட்டு நெருக்கடிகள் இன்றி மக்களினதும் தேசிய இனங்களினதும் பிரச்சினைகளைத் தீர்த்து வரலாற்றை முன்னோக்கி நகர்த்திச் செல்லக்காண்கிறோம். அந்தவகையில் சோஷலிஸத்துடன் இணைந்த தேசியமே ஆரோக்கியமான வளர்ச்சியை எட்டவல்லதாயுள்ளமை தெளிவு.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சம வாய்ப்புகள் இருந்தபோதிலும், இந்தியாவினுள் தேசிய இனப் பிரச்சினைகளும் ஊழல்களும் மலிந்து அதன் வளர்ச்சியைப் பாதிக்கின்றன@ தவிர, அயல்நாடுகளில் தலையீடு செய்து, அவற்றின் சுயாதிபத்தியத்தைத் தகர்த்து தனது அபிலாஷைகளை நிறைவேற்ற இந்திய ஆளுந்தரப்பு தொடர்ந்து முயற்சித்தவண்ணமுள்ளது. சொந்த நாட்டினுள் தனது மக்களை ஒடுக்கியவாறு, ஏனைய தேசங்கள் மீதும் மேலாதிக்கம் புரிந்தவண்ணமே இந்திய ஆளும்கும்பல் முன்னேற்றத்தை எட்ட முயல்கிறது. மாறாக, சோஷலிஸ சீனம் அதிக விலையேற்றமற்ற வணிகத்தை ஏனைய நாடுகளுடன் மேற்கொள்ளும் அதேவேளை, அந்தந்த நாடுகளின் இறைமையை மதித்து அவற்றின் அரசியலில் தலையிடாத வகையிலான உறவையே பேணுகிறது. தனது மக்களினதும் தேசிய இனங்களதும் சுயநிர்ணயத்தை மதிக்கும் பாட்டாளிவர்க்க நலன்சார்ந்த சோஷலிஸப்பண்பின் பேறு இது.
ஆக, சமூக ஒடுக்குமுறையாக உள்ள தேசியப் பிரச்சினையின் தீர்வில் எந்த வர்க்க நலன் - நோக்கு என்பன முன்கையெடுத்தன என்பது மிகுந்த முக்கியத்துவத்துடன் கவனிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. பாட்டாளி வர்க்கப்பார்வை என்பது உலகப்பாட்டாளி வர்க்க இயக்க அனுபவங்களின் தொகுப்பான மார்க்சிய – லெனினிய – மாஓ சேதுங் சிந்தனையைக் கற்பதன் வாயிலாகவும், அதன் வழிகாட்டலோடு சொந்தச்சமூகப் பிரச்சினைத் தீர்வுக்குப் போராடுவதன் வாயிலாகவும் புடமிடப்படுவதாகும். பாட்டாளிவர்க்கம் தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுக்கும் போது அதன் வாயிலாக எமது நாட்டின் பாட்டாளிவர்க்கச் சிந்தனை விருத்தியுற இயலும்@ சமூக வர்க்கமாக ஒடுக்கப்படும் பிரிவினர் போராடும்சூழலில் அந்தப் பிரச்சினையைப் பாட்டாளிவர்க்கப் பார்வையில் எவ்வாறு அணுகி எத்திசைவழியில் போராட்டத்தை முன்னெடுப்பது என்பதே அவசியம்பெறும். அவ்வகையில் தேசிய இனப்பிரச்சினை இலங்கையில் முதன்மை பெற்றுள்ளது.
11
இலங்கைச் சமூகம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற்றபோது “ இலங்கை தேசியம்” ஓரளவுக்கு உயிர்ப்புடையதாயிருந்தது. மிகுந்த விலைகொடுத்த போராட்டங்கள் வாயிலாக விடுதலையை வென்றெடுத்த இந்தியாவில் இந்தியத்தேசியம் உணரப்பட்ட அளவுக்கு இல்லையெனினும் இலங்கைத் தேசிய உணர்வு இங்கே முற்றாக இல்லாமலும் இல்லை. இந்தியத் தேசியக் கருத்தியலின் தாக்கத்தினாலும் இங்கு இலங்கைத் தேசியம் அர்த்தமுடையதாகியிருந்தது. அதைவிடவும், எமக்கான புவியியலும் பொருளியல் நலனும் அதற்கான உயிர்ப்பை வழங்கியிருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே முதன்முதலில் வணிக நாட்டத்தைப்பெற்று சிங்களச் சமூகத்திலிருந்து உருவாகிய தேசிய முதலாளிவர்க்கம் உடனடியாகத் தனக்கான போட்டியை முஸ்லிம் வணிகர்களிடம் முகம்கொள்ள நேர்ந்தது. அந்தவகையில் முதல் இனக்கலவரம் 1915இல் முஸ்லிம்களுக்கு எதிரானதாக அமைந்தது. முஸ்லிம்களது அரசியல் கோரிக்கையை முன்னெடுப்பதற்கு ஏற்றதாக சட்டசபையில் தமக்கான பிரதிநிதித்துவத்தை இஸ்லாமியர்கள் கோரிய போது, ஒரேமொழியைப் பேசுகிற வகையில் தாமே அதனைப் பிரதிபலிக்க இயலும் எனக்கூறி இலங்கைத் தமிழர் முஸ்லிம்களுக்கு எதிரான நிலை எடுத்தமையால் சிங்களப் பேரினவாதிகளுடனேயே இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் கூட்டுச் சேர்ந்திருந்தனர். அவ்வகையில் இலங்கைத் தேசிய உணர்வே இலங்கைத் தமிழர்களிடம் மேலோங்கியிருந்தது.

இரண்டாவது இனக்கலவரம் முப்பதுகளில் இந்திய வம்சாவழித் தொழிலாளர்களுக்கு (குறிப்பாக துறைமுகத் தொழிலாளர்களாய்ப் பெரும்பான்மையினராக இருந்த மலையாளிகளுக்கு) எதிரானதாக இடம்பெற்றது. சிங்களத் தொழிலாளிவர்க்கத்திடமே இலங்கைத் தேசியத்தைவிட சிங்களத் தேசியம் முனைப்புறத்தொடங்கியதன் அறிகுறி இது. அப்போது அந்த இந்திய வம்சாவழித் தொழிலாளர்களை அணிதிரட்டிய நடேசய்யர் இலங்கை எமது தயாகம் என முழக்கமிட்டு, இலங்கைத் தேசியக் கருத்தியலை இந்திய வம்சாவழித் தொழிலாளர்களிடம் விதைக்கத் தொடங்கியிருந்தார்.
சிங்களப் பேரினவாதம் ஏனைய தேசிய இனங்களை ஒடுக்கி, சிங்கள மக்களுட்பட அனைவரையும் பாதிப்படையச் செய்வதனை முதன்முதலில் இனங்கண்ட தலைவராக நடேசய்யர் திகழ்ந்தார். சிறுதேசிய இனங்களில் பெரும்பான்மையினராகவும், பெரும்தொழிலாளர் பட்டாளமாயும் விளங்கிய இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளர்களை அவர் ஸ்தாபனமயப்படுத்தி அரசியல் விழிப்பூட்டினார். புhரதி வளர்த்தெடுத்த இந்தியத் தேசியம்- தமிழினத் தேசியம் என்பன இணக்கமுற்ற வடிவில், சாதியத் தகர்ப்பும் பெண்விடுதலையும் கொண்டதான வீரியமிக்க கருத்தியலைக் கையேற்றவராக நடேசய்யர் இங்கு இயங்க முற்பட்ட போது தமிழகத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய பெரியாரித்துடனும் உறவுடையவராக இருந்தார். பின்னர் “இந்திய வம்சாவழித் தமிழர்” என்ற அடையாளத்தை ஒழித்து “மலையகத் தேசிய இனம்” என்பதாய் ஆகும் இலங்கையர் என்பதற்கான அடையாளங்கொள்ள ஏற்ற கருத்தியலை நடேசய்யர் தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் பரப்பினார். மலையக மக்களது தேசிய நலனைச் சிங்களப் பேரினவாத சக்திகளிடமிருந்து வென்றெடுக்க முனையும்போது இனவாதம் மேலோங்கிவிடாதவகையில் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் வலுவான ஐக்கியத்தைப் பேணினார்.
இத்தகைய பலம்பொருந்திய தேசிய இனத்தை வலுவிழக்கச் செய்துவிட வேண்டும் என்ற எத்தனிப்பை பெரு முதலாளிவர்க்க சிங்களப் பேரினவாதம் முன்னெடுத்தது. மலையக மக்களின் குடியுரிமைப் பறிப்பு சுதந்திர இலங்கையில் சிறுதேசிய இனங்களுக்கு எதிரான மிகப்பெரும் தாக்குதலாய் அமைந்தது. இதனையும் பெருமுதலாளிவர்க்க நலன்பேணும் இலங்கைத் தமிழ்த்தலைமை அமைச்சரவையில் அங்கம் வகித்தவாறு ஆதரித்தது என்பது பெரும் வரலாற்றுத் துயர். பின்னர் 1962 இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரால் தேசிய முதலாளித்துவச் சிங்களப் பேரினவாதம் மலையக மக்களில் கணிசமானோரை இந்தியாவுக்கு நாடு கடத்தியபோது, தொகைரீதியில் சிறுதேசிய இனங்களில் முதல்நிலையினர் என்பதையும் மலையக மக்கள் இழந்தனர். இத்தகைய இரு நடவடிக்கைகளினாலும் அவர்களது அரசியல் ஆளுமை முற்றாகத் தகர்க்கப்பட்டு நாலாம் இடத்துக்குத் தள்ளப்பட்டனர்.
அடுத்துப் பெரியதாக இருந்த இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான பேரினவாதத்தின் தாக்குதல் எழுபதுகளில் தொடக்கம்பெற்று, எண்பதுகளில் உள்நாட்டு யுத்தம் என்ற கோரவடிவத்தை எடுத்தது. அதற்கு எதிராகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத் தமிழ்த் தேசியம் ஐக்கியப்படுத்தவேண்டிய சிங்கள உழைக்கும் மக்களோடு கைகோர்க்கத் தவறியதுமட்டுமன்றி, மற்றொரு சிறுதேசிய இனமான முஸ்லிம் மக்களைப் பகைத்து சிங்களப் பேரினவாதத்துடன் கூட்டுச்சேர நிர்ப்பந்தித்ததன் வாயிலாக தனது தோல்விக்கான அடித்தளங்களைத் தானே தேடிக்கொண்டது. தமிழ் இனவாத அச்சுறுத்தலிலிருந்து சிங்கள மக்களையும் நாட்டையும் மீட்டதாக வீரவசனங்கள் பேசியவாறு சிங்களப் பேரினவாத அதிகாரக்கும்பல் ஒட்டுமொத்தமாய் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும்போது, தமது மீட்சிக்காகப் போராட இயலாதவகையில் சிங்கள உழைக்கும் மக்கள் கையறு நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஆண்ட பரம்பரைத் தமிழ்ப்பேரினவாதம் இவ்வகையில் சிங்களப் பேரினவாதத்துக்கு பேருதவி நல்கியுள்ளது.
ஆக, நவீன இலங்கைவரலாறு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முழு நாடும் போராட வேண்டியதாகவும், பேரினவாதத்துக்கு எதிராக சிறுதேசிய இனங்கள் போராட வேண்டியதாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு தேசிய இனங்கள் மத்தியில் சுரண்டுவோர்க்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையில் போராட அவசியங்கள் உள்ள போதிலும், சமூக வர்க்கமாய் ஒடுக்கப்படும் தேசிய இனவடிவம் அதனை மறக்கடித்து தேசிய இன நலன்களை வென்றெடுக்கப் போராடும் அவசியத்தை வலியுறுத்திவிடுகிறது.
அதற்காக சிறுதேசிய இனங்களின் மக்கள் தத்தமது சுரண்டற் கும்பல்களிடம் தமது கோரிக்கைகளை முற்றாகத் தாரைவார்த்துவிடக்கூடாது. இனத்தேசிய நலன் எனக்கூறி சுரண்டற் கும்பல் தனது தேவைகளை நிறைவுசெய்து கொண்டு உழைக்கும் மக்களை நட்டாற்றில்விட்டுப் பேரினவாதிகளோடு கை கோர்த்து தமது சொந்த மக்களை ஒடுக்குவதற்கும் தயங்குவதில்லை என்ற விழிப்புணர்வுகொள்ளல் அவசியம். அதேபோன்று, சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் பேரினவாதிகளால் ஏமாற்றப்படுவதற்கு எதிராகப் போராடித் தமது வாழ்வாதாரங்களை வலுப்படுத்த விருப்பங்கொண்டுள்ளனர்@ அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின் பேரினவாதத்துக்கு எதிராக சம உரிமைகளுக்காகப் போராடும் சிறுதேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வலியுறுத்திப் போராடி, அனைத்து மக்களையும் ஐக்கியப்படுத்தச் சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.
இவ்வகையில் வர்க்கங்களிடையேயான போராட்டங்கள் வாயிலாக மட்டுமன்றி தேசிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இனத்தேசியங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் வாயிலாகவும் வரலாறு வளர்ந்து செல்கிறது என்கிற விடயம் உலக மார்க்சிய (குறிப்பாக தென்னமெரிக்க மார்க்சிய) சிந்தனையாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. எம்மைப்பொறுத்தவரை சமூகவர்க்கமாய் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிச் சுரண்டப்படும் இத்தகைய முறை தேசிய உருவாக்கத்தை சாத்தியப்படுத்திய முதலாளித்துவத்துடன்தான் தோன்றியதென்றில்லை@ எமது சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் வர்க்கங்களாக இன மரபுக் குழுக்கள் தகர்ந்து உருவாகியதல்ல – ஆளும் சாதிகளான இன மரபுக்குழுக்களால் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மற்றும் இடைநிலைச் சாதிகளாக மாற்றப்பட்ட இன மரபுக் குழுக்களை சமூக வர்க்கங்களாக ஆக்கிச் சுரண்டுவதன் வாயிலாகவே எமது வரலாறு இயங்கிவந்துள்ளது. முழுமையாக வர்க்கப்பிளவுறாத இத்தகைய சாதிச் சமூகத்தில் மார்க்சியப் பிரயோகம் எவ்வடிவில் சாத்தியம் என்பதே எம்முன் உள்ள பிரச்சினையாகும்.
111

கூர்மையான வர்க்கப்போராட்ட அரசியல் உலைக்களத்தில் மார்க்ஸ் தனது ஆய்வை மேற்கொண்டமையால் வரலாற்றுச் செல்நெறியை சாதிமுறைச்சமூகம் எவ்வகையில் ஏற்படுத்திவந்தது என்பது குறித்துக் கவனங்கொள்ள இயலவில்லை. இந்தியா குறித்த பிரித்தானிய அறிஞர்களது குறிப்புகளை அடிப்படையாக வைத்தே மார்க்ஸ் இந்தியச் சமூகத்தை அறிய முடிந்தது. மாற்றமுறாது இனமரபுக் குழு வாழ்வைச் சாதிகளாக நீடித்துக் கொண்டிருக்கும் தேங்கிப்போன சமூகமாய் இந்தியாவை மார்க்ஸ் ஆரம்பத்தில் பார்த்தார். அந்தப்பழைய வாழ்முறை தொடர்வதன் வெளிப்பாடாக மாட்டையும் குரங்கையும் வழிபடுவோராய் இந்துக்கள் உள்ளனரெனக் கண்டார். அந்நியத் தலையீடுகளும் மதவிவகாரங்களுந்தான் இந்தியாவை இயக்கியதேயன்றி, இந்தியாவுக்கெனச் சொந்தமான வரலாறு கிடையாது எனக் கருதினார். இத்தகைய ஆசிய உற்பத்திமுறையினைக் கொண்டுள்ள அரபுச் சமூகத்தில் முகமது நபியினால் மதமூடாகவே ஒரு புரட்சியை எவ்வாறு ஏற்படுத்த இயலுமாயிருந்தது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற அவாவினையும் மார்க்ஸ் வெளிப்படுத்தியிருந்தார். இறுதிக் காலத்தில் மார்க்ஸ் பாட்டாளி வர்க்க இயக்கச்செல்நெறி பற்றி மட்டுமன்றி தேசிய விடுதலைப் போராட்டங்கள் குறித்தும் அக்கறைக் கொண்டிருந்தார். ஆயினும் இவை பற்றியதான கோட்பாட்டு உருவாக்கங்களை ஏற்படுத்து முன்னர் மரணம் முந்திக் கொண்டது.
இந்தியாவில் சாதிச் சமூகம் தனக்கான பிரத்தியேக வரலாற்றுச் செல்நெறியைக் கொண்டிருந்தது. இங்கும் மதவடிவிலான பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாக சமூக மாற்றங்கள் நிகழ்ந்தேறின. விவசாய வாழ்முறையில் சுரண்டல் சாத்தியம்பெற்ற ஆளும் சாதியும் பிராமணச் சாதியினரும் பெற்றிருந்த அதிகாரங்களைத் தகர்த்து வணிகச் சாதியினரது நலன்களுக்கான சத்திரிய ஆட்சி வலுப்பெற ஏற்றதாக பௌத்த – சமண சமயங்களின் எழுச்சி அமைந்தன. இதனால் வலுவிழந்த பிராமண மதம் ஏழெட்டு நூற்றாண்டுகளின் பின்னர் புதிய இனமரபுக்குழுக் கடவுளர்களை இணைத்துப் புதிய மதமான இந்து சமயத்தை வடிவமைத்தது. கி.பி. 4ம் நூற்றாண்டில் அந்தப் புதியதான இந்துசமய எழுச்சி விவசாயச் சாதிகளது ஆதிக்கத்தை வென்றெடுத்து இந்திய முறையிலான நிலப்பிரபுத்துவம் 7ம் நூற்றாண்டிலிருந்து எழுச்சிகொள்ள வழிகோலியது.
புதிய வரலாறு படைப்பதிலும் பண்பாட்டுப் புரட்சிக்கான அவசியத்தை நாம் புரிந்துகொள்வது அவசியம். அதேவேளை பல்வேறு போராட்ட வடிவங்களது இணைப்புகள் வாயிலாக பாட்டாளிவர்க்கச் சிந்தனை முறையோடு உழைக்கும் மக்களின் ஆட்சியை வென்றெடுப்பது அவசியமாகும். இதற்கான வழிமுறையை யாழ்ப்பாணத்தில் 1966 ஒக்ரோபர் 21 எழுச்சிமார்க்கம் “சாதிமுறை தகரட்டும் சமத்துவநீதி ஓங்கட்டும்” என்ற முழக்கத்தின் வாயிலாக அணிதிரட்டிய மக்கள் போராட்டங்கள் வாயிலாக கற்றுத்தந்த வகையில் தொகுத்தெடுப்பது அவசியம்.
எந்தவொரு சாதியையும் எதிரிச்சாதியாக இலக்கு வைக்காமல், மார்க்சிய வழிகாட்டலில் பாட்டாளிவர்க்க நலனை முதன்மைப்படுத்திய சமூக மாற்ற இலக்குடையதாக அப்போராட்டம் அமைந்திருந்தது. சாதிய நோக்கில் பெரியாரியம் மற்றும் தலித்தியவாதம் எதிரிச்சாதியை கட்டமைத்தபோது சாதிகளிடையே மோதல்கள் வளர்ந்தனவேயல்லாமல் ஆரோக்கியமான வளர்ச்சிகள் எட்டப்படவில்லை என்பதற்கு இந்தியாவில் உதாரணங்கள் அனந்தம்.
சாதிய - இனத்தேசிய விடுதலையில் சமூக மாற்ற இலக்கு வென்றெடுக்கப்படுவதற்கு ஏற்றதாக ஆளும் சாதி மற்றும் பேரினவாதப்பிரிவின் உழைக்கும் மக்களுடனும் ஜனநாயக நல்லெண்ணம் கொண்டோருடனும் ஐக்கியப்படுவது அவசியம் என்பதையே ஒக்ரோபர் 21 எழுச்சி மார்க்கம் எமக்கு கற்றுத் தந்தது. அதேவேளை வலுவான பண்பாட்டு ஒடுக்குமுறையையும் சாதி – தேச ஒடுக்குமுறைகள் கொண்டுள்ளன. முதலாளித்துவ வளர்ச்சியில் உதயமான ஏகாதிபத்தியம் துப்பாக்கிகளுடன் மட்டுமல்லாமல் பைபிளுடனும் வந்தமை குறித்துப் பேசப்பட்டுள்ளது. அவ்வாறே சாதியொடுக்குமுறை தொடங்கும்போதே பிராமணியம் சமூக – பண்பாட்டு ஏகாதிபத்தியமாய்ச் செயற்படத் தொடங்கியிருந்தது.
மருதத்திணை மேலாதிக்கத்தில் வேளாண்மைச் சமூகமான வேளாளர் ஏனைய திணைகளை ஆட்சிப்படுத்தியபோது வட இந்தியா வளர்த்தெடுத்த பிராமணியத்தை தமக்கானதாக ஏற்றுக்கொண்டு பிராமணச் சாத்தியரையும் நிலவுடையமையாளராக்கினர். அதேவேளை, தமது அதிகாரத்தைப் பிராமணர்க்கு தாழ்ந்ததாக ஆகிவிடாமற்பார்க்கும் வகையில் சைவசித்தாந்தத்தைக் கட்டமைத்துக் கொண்டனர். யாழ்ப்பாணத்தில் வெள்ளாள மேலாதிக்கமே ஆன்மீகத் தலைமையையும் கையகப்படுத்தி ஒரு சாதிப்பிரிவினர் என்கிறவகையில் பிராமணருக்கு இடம்வைக்காத வரலாற்றை இயக்குவதற்கு சைவசித்தாந்தம் உதவிகரமாய் அமைந்தது. இவ்வகையிலான சமூக – பண்பாட்டு ஏகாதிபத்தியமாய் ஆளும் சாதி அமைந்தவாறே சுரண்டல் நிகழும் எமது சமூகத்தில் பண்பாட்டுப் புரட்சிக்கான அவசியம் மீள வலியுறுத்தப்பட வேண்டியதாகிறது.
இவை குறித்து மேலும் விரிந்த தளத்திலான உரையாடல் அவசியம்@ இட அமைதி கருதி அதனை இங்கு தவிர்ப்போம். எத்தகைய தோற்ற மயக்கங்களுக்கும் இடமின்றி, சாதியவாத – தேசியவாத முடக்கங்களுக்கு ஆட்படாமல் புதிய சிந்தனை முறையைத்தேடுவோம். பாட்டாளிவர்க்கப் போர்ச்சுவாலையில் பிறப்படுத்த புதிய சிந்தனையான மார்க்சியத்தைக் கையேற்போம். கால – தேச மாற்றங்களோடு அது பெற்றுவந்த வளர்ச்சிகளைக் கற்போம்.
ஏகாதிபத்தியக் கட்டத்தில் தேசிய விடுதலைப்போராட்டம் சாத்தியப்பட்ட உதயத்தின்போது லெனினிஸமாக மார்க்சியம் வளர்ச்சிபெற்றது. இன்றும் அதே காலகட்டமே நீடிக்கிறது. அத்தகைய தேசிய விடுதலைப் போராட்டத்தில் மார்க்சிய – லெனினிஸப் பிரயோகமாக மாஓ சேதுங் சிந்தனை வடிவம்பெற்றது.
வேறுபட்டு இயங்கிவரும் எமது வரலாற்றினைக் கற்றுக்கொண்டு மார்க்சிய – லெனினிஸத்தைப் பிரயோகிக்க ஏற்றதான தெளிவினை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கம். அதற்கான உந்துதல் உருவாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் எமது தேடலை மேலும் விரிந்த தளங்களுக்கு வளர்த்தெடுக்க இயலும்! வர்க்கத்துக்கானது மட்டுமே மார்க்சியம் என்ற தோற்ற மயக்கத்தைத் தகர்த்து, வர்க்கப்பார்வையின் அவசியத்தை விளங்கிக்கொள்ள முயல்வோம்!
“உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, தலித் மக்களே ஒன்றுசேருங்கள்!”

No comments:

Post a Comment