Thursday, September 23, 2010

புதுவிசை (ஜீலை - செப் 2010)ஆசிரியர் :- ஆதவன் தீட்சண்யா
வெளியீடு :- சி.14, டெலிகாம் குடியிறுப்பு, ஓசுர்

இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற மிக முக்கியமான சிறு பத்திரிகைகளில் ஒன்று புதுவிசை இதழாகும். சிறுபத்திரிகை பொறுத்த விமர்சனங்கள், கருத்தோட்டங்கள் பல தளங்களிலிருந்தும் முன்வைக்கப்படுகின்றன. கடந்த கால அனுபவங்களும் புதிய கண்ணோட்டங்களும் சிறுபத்திரிகைகள் குறித்த பின்வரும் வரையறையை செய்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளன.
பெருமளவில் விற்பனையாகின்ற, மக்களின் இரசனையை கீழ்மைப்படுத்தி வணிக நோக்கில் வெளிவருகின்ற பத்திரிக்கைகளுக்கு மாறாக கொள்கை உறுதியுடனும் இலட்சிய பீடிப்புடனும், யாவற்றுக்கும் மேலாக சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்ற ஆற்றலினையும் கொண்டு வெளிவருகின்ற பத்திரிக்கைகளே சிறு பத்திரிகை என அழைக்கப்படுகின்றது.
இவ்வகையில் வெளிவருகின்ற சிறுபத்திரிகை முயற்சிகள் தனிநபர் அல்லது குழு முயற்சியாக வெளிவருகின்றன. ஆவற்றில் சில சஞ்சிகைகள் சோதனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ள முடியாமல் காலப்போக்கில வெளிவராமல் நின்று விடுவது நமது கடந்தகால அனுபவங்களாகும்;.
புதுவிசை இதழை பொறுத்தமட்டில் அண்மைக்காலத்தில் வருகின்ற சஞ்சிகைகளில் மக்கள் சார்பு பண்பை சிறப்பாக கொண்டு வெளிவருவதுடன் அது தொடர்ந்தும் வெளிவந்துக்கொண்டிருப்பது அதன் முக்கிய சாதனையாகும். ~பாவம் அந்த சனங்களை விட்டு விடலாம் (த. அகிலன்), அவ்வாட்ட இன்ட எப்பா! ஆகிய கட்டுரைகள் இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலைமைகள் குறித்து அழகுற எடுத்துக் காட்டுகின்றது. ~தொண்ணூறுகளின் அசைவியக்கம்: தலித் அடையாளத்தை முன்வைத்து (அ. ஜெகநாதன்), தலித்தியத்தில் மராத்திய மகர்கள் (புதிய மாதவி), தேவேந்திரர்களின் உள்@ர் போராட்டமும் உக்கிரமான பேரியக்கமும் (கோ. ரகுபதி) ஆகிய கட்டுரைகள் தலித்மக்களின் இருப்பு குறித்தும் போராட்டம் குறித்தும் பல்வேறு பல்வேறு பார்வைகளை நிலை நிறுத்துகின்றது. தலித் இலக்கியம், அடையாளம், சமூக இருப்புக் குறித்த விவாதங்களை நடாத்த வேண்டிய காலச் சூழலில் நாம் வாழ்கின்றோம். ஆழமான நுட்பமான மார்சிய ஆய்வுகளினூடாகவே அத்தகைய ஆய்வுகளை வெளிக்கொணர முடியும்.
திரு ந. இரவீந்திரனின் புதுவிசை கட்டுரைகள் மார்சிய தத்துவத்தை தமிழ் சூழலுக்கு ஏற்ப, தமிழ் மரபுக்கேற்ப எவ்வாறு பிரயோகித்து சமூக மாற்ற செயற்பாடுகளை முன்னேடுக்கலாம் என்பதற்கான தேடலாகும். அத்தகைய முயற்சியின் தொடர்ச்சியாகவே இச்சஞ்சிகையில் இடம்பெறுகின்ற ~~இனக்குழு மேலாண்மையால் பிளவுற்ற அதிகாரத்துவப் படிமுறைச் சமூகத்தின் வரலாற்றியல்
என்ற கட்டுரை அமைந்துள்ளது. தாய்தெய்வத்திலிருந்து போர்த்தெய்வம் வரை (சி.மௌனகுரு) என்ற கட்டுரை இன்றைய சூழலுக்கேற்ப பெண்ணியநோக்கில் எழுதப்பட்ட கட்டுரையாகும்.
உலகமயம் : சொல்ல நினைத்தவைகள் சில (லெனின் மதிவானம்), கிடாக்களி (தஞ்சை சாம்பான்), ஆகிய கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. இருள் திரவியம் (பாலசுப்ரமணியம்), சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள், (அழகிய பெரியவன்), மீன் குமாரன் (கம்பீரன்) ஆகிய சிறுகதைகளும், ஈஸ்வர சந்தானமூர்த்தி, ஜொஸிவா தமிழி, சம்பு, அன்புச் செல்வன், பா.ராஜா, புவனராஜன், ந.பெரியசாமி, இரா. சின்னசாமி ஆகியோரது கவிதைகளும் இடம் பெறுகின்றன.
இச் சஞ்சிகை தன்னால் இயன்ற மட்டும் மக்களின் சுக துக்கங்களை இசைக்க முனைகின்றது. இச்சஞ்சிகையை வாங்குங்கள், படியுங்கள், ரசியுங்கள், விமர்சியுங்கள், பலருக்கு சொல்லுங்கள் என்று வாசகர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்ளலாமா?
web : pudhuvisai.com

No comments:

Post a Comment

There was an error in this gadget