Thursday, October 7, 2010

'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்' லெனின் மதிவானம்

ஆசிரியர் : ஜான் பெர்கின்ஸ்
தமிழில் : இரா. முருகவேல்

உலகமயத்தின் தந்திரோபாயங்களில் ஒன்று அது தனக்கு சாதகமானதோர் கூட்டத்தை மூன்றாம் உலக நாடுகளில் தோற்றுவித்துக் கொண்டதாகும். அந்தந்த நாடுகளில் உள்ள மேல் தட்டு வர்க்கத்தினரையும் அதிகாரிகள் கூட்டத்தையும் மற்றும் புத்திஜீவிகளையும் பல்தேசிய கம்பெனிகளினுடாகவும் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாகவும் தமக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்கின்றது. ஏற்கனவே சமூகமாற்ற இயக்கங்களிலும் தொழிற்சங்களிலும் செயற்பட்ட சிலர் உலகமயத்தின் தாக்கத்தினால் சிதைந்து சின்னா பின்ன மாகியுள்ளனர். இவர்களுக்கு தன்னார்வ நிறுவனங்கள் பெருந்தொகையான பணத்தை சம்பளமாக வழங்குவதாலும் செல்வந்த நாட்டினர் வழங்கும் அந்தஸ்து அங்கீகாரமும் மற்றும் வெளிநாட்டு புலமை பரிசில்கள் காரணமாகவும் இவர்கள் கேவலமான எந்தவொரு செயலையும் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சமூகமாற்ற இயக்கங்களில் பணியாற்றிய காலங்களில் பெற்ற அறிவை உலகமயமாதல் சூழலுக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து தமது எஜமானுக்கான விசுவாசத்தைக் காட்டி வருகின்றார்கள். யாவற்றுக்கும் மேலாக பொதுஜன தொடர்பு சாதனங்களை தமதாக்கி கொண்டு மக்கள் மத்தியில் தாம் சார்ந்த கருத்தியலை நிலைநிறுத்தி வருவது உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் பலமான அம்சமாகும். இவ்வாறானதோர் சூழலில் உலகமயத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தை முன்னெடுக்கின்ற போது இது தொடர்பில் தெளிவானதோர் தீட்சண்யம் மிக்க பார்வையை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாய்வின் போதும் இவ்விடயம் கவனத்தில் கொள்ளப்படுகின்றது.
உலகமயமாதலின் தாக்குறவுக்குட்பட்ட நாடுகளில் மக்களை ஆட்சி செய்வது பாராளுமன்றமோ அல்லது அரசோ அல்ல. மாறாக ஏகாதிபத்தியமே தமது பொருளாதார நலன்களுக்காக இந்நாடுகளை ஆட்சி செய்து வருகின்றது. தமது கொள்கைகளை உலகமயமாக்கற் சக்திகள் உள்நாட்டில் இருக்கின்ற வால் பிடிப்பு ஆசாமிகள் மூலமாக மக்கள் மத்தியில் திணித்து வருகின்றது. இதன் மூலமாக மக்கள் மத்தியில் எழுச்சி பெற்று வருகின்ற ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை தடைப்படுத்தி, அந்நாடுகளில் காணப்படுகின்ற இன, மத, மொழி, நிற, சாதி அதற்கேற்புடைய வகையில் அந்நாடுகளினுள் காணப்படும் இன,மத,மொழி சாதி பாலின முரண்பாடுகளை விகாரப்படுத்தி தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
வறிய நாடுகளுக்கு கடன் உதவி, அபிவிருத்தி என்கின்ற பெயரில் உலகமயம் அந்நாடுகளினுள் கொண்டு செல்லப்படுகின்றன. அந்நாடுகளுக்கு கடன் வழங்கி, பின்னர் அவற்றினை திருப்பி செலுத்தாத வகையில் அதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணியினை சிறப்பாக செய்வதற்கென பொருளாதார அடியாட்கள் பயிற்சியளிக்கப் படுகின்றனர். இவ்வாறு பொருளாதார அடியாளாக கடமையாற்றி ஓய்வு பெற்ற அமெரிக்கரான ஜான் பெர்கின்ஸ் என்பவர் எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற நூல் இதனை அழகுற எடுத்துக் காட்டுகின்றது.
இன்றைய உலகமயம் என்பது பன்னாட்டு முதலாளித்துவ வடிவமாக அமைந்திருக்கின்றது. அது முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் சார்ந்த புதிய சர்வதேச வேலைப் பிரிவினை ஒன்றினைத் தோற்று வித்திருப்பதுடன், புதிய சர்வதேச பொருளாதார நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்கு கட்டியம் கூறிநிற்கின்றது. அதன் பிரதான அடிப்படைகளி லொன்று கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கையாகும்.
உலகமயத்தை எதிர்த்து மக்கள் சார்ந்த அமைப் பொன்றினைக் கட்டியெழுப்புவதில் தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு முக்கிய இடமுண்டு. இப்பின்புலத்தில் மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை தகர்க்கும் வகையிலும் மக்களை புரட்சியிலிருந்து புறந்தள்ளும் வகையிலும் ஆதிக்க சக்திகள் மேற்கொண்டுள்ள உத்திகளில் ஒன்றாகவே பண்பாட்டு ஆக்கிரமிப்பு அமைந்துள்ளது. ஜான் பெர்கின்ஸ் தமது பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம் என்ற நூலில் வெளிப்படுத்துகின்ற அவரது இந்தோனேசிய அனுபவம் முக்கியமான தொன்றாகும்.

இந்தோனேசியாவிற்கு பன்னாட்டு கம்பெனிகள் மூலமாக வழங்கப்பட்ட கடனை அவர்கள் திருப்பி அளிக்காத வகையில் பாõர்த்துக் கொள்வதுடன், இந்தோநேசியாவிற்கு அருகாமையில் உள்ள லாவோஸ், வியட்நாம் முதலிய நாடுகளிலே பரவிவந்த கம்யூனிசக் கருத்துக்கள் இந்நாட்டினுள் தலையெடுக்காது இருப்பதற்காகவும் ஒரு பொருளாதார அடியாள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாது என்பது குறித்து இந்நூல் அலசுகின்றது.
அமெரிக்காவின் வணிக நலனை முன்னிறுத்தி உருவாகிய பன்னாட்டு நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட்டன என்பது குறித்து பின்வரும் ஜான் பெர்கின்ஸ் கூற்று முக்கியமானது:

“இந்த அமைப்பு மூர்க்க வெறிகொண்டு ஓடியதன் விளைவுகளை இன்று நாம் பார்க்கிறோம். மனிதத்தன்மையற்ற சூழல் நிலவுகின்ற, மனிதர்களைக் கசக்கிப் பிழிகின்ற ஆசியத் தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு நமது மிகவும் மரியாதைக்குரிய நிறுவனங்களின் நிர்வாகிகள் ஏறத்தாழ அடிமைகளுக்குத் தரப்பட்டது போன்ற கூலியையே தந்து வருகிறார்கள். எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுமென்றே விஷப் பொருட்களை (tணிதுடிணண்) மழைக் காடுகளினூடே ஓடும் ஆறுகளுக்குள் கொட்டுகின்றன. அவை திட்டமிட்டே விலங்கு களையும் தாவரங்களையும் அழிப்பதோடு, பழம் பண்பாடுகளைப் பின்பற்றும் மக்களையும் கூட்டங் கூட்டமாகக் கொன்று குவிக்கின்றன. மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான ஆப்பரிக்கர்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை அளிக்க மறுக்கின்றனர். நமது நாட்டிலேயே பன்னிரெண்டு மில்லியன் மக்கள் அடுத்தவேளை உணவைக் குறித்துக் கவலை கொள்ளும் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் வளங்களும் பொருளாதாரமும் இவர்கள் மூலமாக ஈவிரக்கமற்ற முறையில் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவற்றினைத் தக்க ஆதாரங்களுடன் விபரிக்கின்றது இந்நூல்.

No comments:

Post a Comment