Tuesday, October 26, 2010

ஜீ போல் அன்ரனி : பண்பாளர், பல்துறைசார் புலமையாளர்

"மனித வாழ்வு மகத்தானது. ஒரு மனிதன் தன் அனுபவ திரட்சியை ஆற்றலை இந்த சமூகத்திற்கு கையளிக்கின்றானே இதுதான் மனித வாழ்விலே உயர்வானது. வேறு எந்த ஜீவனுக்கும் மனிதன் போல தான் வாழும் சமூகத்திற்காக எதையும் கொடுக்க முடியாது. நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது முதாதையர் தந்த அறிவையும், அனுபவத் திரட்சியையும் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகையால் இந்த பங்களிப்புகளியெல்லாம் எமக்கு ஈடுபாடு இல்லை என்று யாரும் சும்மா இருந்துவிட முடியாது. நிச்சயம் நமது சமூகத்திற்கு எம் ஆற்றலையும் அறிவையும் வழங்க கடமைப்பட்டிருக்கின்றோம்."
“புதியதோர் உலகம்”; என்ற நாவலில் சமூகம் குறித்தும் மனித குலத்தின் நாகரிகம் குறித்தும் பொறுப்பு மிக்க தந்தையொருவர் மகனுக்கு எழுதும் கடிதத்தின் ஒரு பகுதியே மேற்குறிப்பிட்ட வரிகளாகும். திரு. ஜி போல் அன்ரனி அவர்களின் அறுபதாவது வயதை ஒட்டி என் நெஞ்சில் எழுந்த பசுமையான நினைவுகளில் மேற்குறித்த வரிகளும் என் சிந்தனையில் நின்று நிலைக்கின்றது.
இக்கட்டுரையில் இரண்டு விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன். முதலாவது அவரை ஆசிரியர், அதிபர், பிரதிப்பரீட்சை ஆணையாளர் என்ற வகையில் நான் அறிந்து வைத்திருந்த தகவல்களை பதிவாக்க முனைகின்றேன். இரண்டாவது அவரது கலைதுறை சார்ந்த அனுபவங்களை வெளிக் கொணர முயல்கின்றேன். கலைத்துறையை பொருத்தமட்டில் கவிஞர், அறிவிப்பாளர், நடிகர், நாடக எழுத்தாளர் என்ற பல்துறை சார்ந்த ஆற்றல்களi கொண்டிருந்த போதும் நாடகத்துறை சார்ந்த அவரது பங்களிப்பே அவரை கலை இலக்கிய உலகில் கணிப்புக்குரியவராக்கியது என்ற வகையில் நாடகத்துறை சார்ந்த பங்களிப்புகளை இங்கு முதன்மை படுத்தி இக்கட்டுரையை எழுத முனைந்துள்ளேன் என்பதை இவ்விடத்தில் கூறுவது பொருத்தமானதாகும்.
நான் பள்ளி மாணவனாக வைகறைப் பொழுதில் உலா வந்துக் கொண்டிருந்த காலங்களில் வானொலியில் அலைவரிசையை செப்பனிட்டு அதனுள் முழுமையாக என்னை ஈடுபடுத்த முடியாலும், பள்ளி பாடங்களிலும் கவனம் செலுத்த முடியாமலும் இருந்த பொழுதுகளில்; வானொலி செய்தி; வாசிப்பின் போதும் சில வானொலி நாடகங்களுக்கு பின்னணி குரல் கொடுக்கின்ற போதும் ஜீ போல் அன்ரனி என்ற பெயர் கனீரென்ற குரலில் ஒலிக்கும். தொலைக்காட்சி செய்திகளை வாசிக்கின்ற போதும், எல்லாரும் கேட்டுப் புரியும் விதத்தில் தனக்கே உரித்தான கனீரென்ற குரலில் திரு. ஜீ போல் அன்ரனி அவர்கள் செய்தியை வாசிப்பார். அவ்வாறு அவர் தொலைக்காட்சியில் தோன்றும் போது எனது மாமா, மாமி, சித்தி யாவரும் அவர் ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் அவரது ஆற்றல், கற்பித்தலில்; கெண்டிருந்த ஆர்வம் என்பன குறித்து மகிழ்வுடன் கூற கேட்டிருக்கின்றேன். திரு. போல் அன்ரனி அவர்கள் அன்றைய நாட்களில் ஹைலன்ஸ் கல்லூரியில் புகழ்பெற்ற ஆசிரியராக கடமையாற்றியிருக்கின்றார் என்பதற்கு அவரின் மாணவர்களே சான்றாக அமைகின்றனர். மாணவர்கள் மத்தியிலே அவருக்கு தனிமரியாதையுண்டு. ஜி.போல் அன்ரனி என்ற பெயரானது ஒருவருக்கு பரிவு, பாசம், பயம் முதலிய தன்மையை தோற்றுவிக்கும் தன்மையானது. நான் அறிந்தவரையில் கனிவுள்ள இடத்தில் தான் கண்டிப்பும் இருக்கும் என்பதற்கியைய இயல்பாகவே எளிமையாகவும் இங்கிதமாகவும் பேசி பழகும் அவர் ஆழமான விவசாயங்களை கதைக்கும் போதும் அநீதிகளை கண்டிக்கும் போதும் அவேசத்துடன் தர்கி;த்து தனது கருத்தை நிலை நிறுத்துவார். முகத்துக்காக பிரச்சனைகளை பூசி மெழுகும் போலித்தன்மை அவரிடம் எப்போதும் இருந்ததில்லை.
மலையகப் பகுதிகளில் கல்விக்கான வாய்ப்புகள் மிகவும் அரிதாக காணப்பட்ட சூழலில் அங்கு வாழும் மக்களின் சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்டு உழைத்த ஆசிரியர்களில் ஜீ போல் அன்ரனி; முக்கியமான ஒருவர். இக்கால சூழலில் இவருடைய மாணவர்கள் விசாலமான நாகரிகத்தை கட்டியமைத்துக் கொள்வதற்கும் வழிகாட்டியாக நின்றார். இர. சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்று ஒரு மாணவ பரம்பரை உருவாக்குவதில் திரு. ஜீ. போல் அன்ரனி அவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. பின்னாட்களில் சமூகம் கலை இலக்கியம் குறித்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானோர் இவரின் மாணவர்களாவர். இவர்களில் சிலர் காலப்போக்கில் சமூதாய சார்பிலிருந்து தடம் புரண்டு போனாலும் குறித்த கால சூழலில் வெம்மை சூழ் கொண்ட போது அதற்கான அடித்தளத்தை இட்டவர் திரு. ஜீ போல் அன்ரனி என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை.
திரு. போல் அன்ரனி அவர்கள் தமது மாணவர்களை அதிகமாக நேசித்தவர் அவரின் கல்வி முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டவர். ஆசிரியரொருவரின் கற்பித்தலை மாணவனொருவன் புரிந்துக் கொள்ள வேண்டுமாயின் அவ்வாசிரியர் மாணவர்களின் விருப்பிற்குரியவராக இருக்க வேண்டுமென்பது கல்வி உளவியல் நியதியாகும். திரு. போல் அன்ரனி அவர்கள் மாணவர்களை நேசித்தது போன்று மாணவர்களும் அவரை நேசித்ததன் காரணமாக அவரது சிந்தனைகள் மாணவர்களிடையே வேர் கொண்டு கிளைபரப்பியிருந்தது. பிறிதொரு விடயம் யாதெனில் அவர் தன் அரசியல் நிலைப்பாட்டை கட்சி சார்ந்து வெளிப்படுத்திக் கொண்டவரல்லர். திரு. ஜி போல் அன்ரனி அவர்களுக்கு பொதுவுடமை சிந்தாந்த்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அவ் ஈடுபாடு காரணமாக பெண் விடுதலை, சாதி எதிர்ப்பு, மத எதிர்ப்பு கொண்டவராக தமது செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொண்டார். அத்துடன் மாக்ஸிய, தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் மிக நெருக்கமான உறவுக் கொண்டவராக காணப்படுகின்றார். ஒவ்வொரு காலக் கட்டங்களிலும் தாம் வகித்து வந்த பதவிகளை பயன்படுத்தி அத்தகையோருக்கு உதவுவதில் முக்கியமான பங்காற்றி வந்துள்ளார்.
1997 களின் இறுதிப்பகுதியில், ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கான விடைத்தாள் மதீப்பிட்டிற்காக நான் பரீட்சை திணைக்களத்திற்கு சென்றிருந்த போது தான் நண்பர் ஒருவரின் அதிபர் தரத்திற்கான பரீட்சை பெறுபேறு பற்றி அறிவதற்காக கவிஞர் இதயராசவுடன் அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்;. பெரும் பதவியில் அதிகாரத்திலிருக்கின்ற ஒருவர் நம்மிடம் எத்தகைய உரையாடலை மேற்கொள்வார்; என்பது குறித்த ஐயமும் எனக்கு இருந்தது. அவருடன் உரையாடிய பின்னர் எத்தகைய பக்குவமும் சமூதாய உணர்வுக் கொண்ட மனிதர் என்பதை என்னால் உணர முடிந்தது. பின்னாட்களில் நான் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு நியமனம் பெற்று சென்ற பின்னர் எங்களுக்கிடையிலான உறவு பல விதங்களில் பலமடைந்து வந்தது. மிகவும் நெருங்கி பழக கூடிய வாய்ப்பு எனக்கு இக்காலத்தில் ஏற்பட்டது.
எங்களது உரையாடல்களில் பெரும்பாலும் சொந்த விவகாரங்கள் எதுவுமிருக்காது. படித்த நூல்களில் இருந்த குறிப்புகள், ரசனைக் குறிப்புகள், பல நூல்கள் பற்றிய தகவல்கள் கூடவே, தான் ஆசிரியராக இருந்த காலத்தில் மேடையேற்றிய நாடகங்கள், அறிவிப்புத் துறையில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் குறித்து அவர் கூறுவார். தற்காலத்தில் அறிவிப்புத் துறையில் காண்கின்ற சீரழிந்த போக்கினை சுட்டிக் காட்டுகின்ற அதேசமயம், எந்த துறைகளில் முயற்சித்தாலும் கடின உழைப்பும் நேர்மையும் அவசியம் எனக் கூறும் அவர் உழைப்பின் மகத்துவத்தை எப்போதும் போற்றிவருகின்றவர்.
அவர் பிரதிப் பரீட்சை ஆணையாளராக கடமையாற்றிய காலத்தில் எந்தளவு பொதுமக்கள் தொடர்பும் பொது மக்கள் மீது மதிப்பும் கொண்டிருந்தார் என்பதை நான் நன்கு அறிவேன். இவரை போல இன்னும் சில அதிகாரிகள் இருந்தால் கல்வி உலகு இனிய உலகாக இருக்கும். ஆசிரியர்கள், அதிகாரிகளின் மதிப்பு பொதுமக்களிடையே பரவியிருக்கும் என்பதில் ஐயமில்லை.
எவர் ஒருவர் மற்றவர்களுடைய கருத்தை செவிமடுக்கின்றாரோ அவரே தமது கருத்துக்களை வெளியிடுகின்ற தகுதி பெற்றவர் என்பது மனித நிலைப்பட்ட நாகரிகமாகும். திரு.ஜி.போல் அன்ரனி அவர்களிடம் காணப்பட்ட இந்த பண்பே அவரை சமூக முக்கியத்துவம் உடைய மனிதராக்கியது. பிறரது அறிவுத் திறனை மதிக்கும் பண்பு அவரிடம் நிறைந்து இருந்தது.
திரு.ஜி. போல் அன்ரனி அவர்கள், பல்துறை சார்ந்த ஆற்றல்களை கொண்டவராக காணப்படினும் நாடக துறையே அவரை மிக முக்கியமான சாதனையாளராக மாற்றியது என்பது புற நிலைப்பட்ட உண்மையாகும். அவரது நாடகங்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவராது இருப்பினும் அவரது நாடகங்களில் மூலப்பிரதிகள் சிலவற்றினை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அது தொடர்பான விடயங்களை பதிவாக்குவது காலத்தின் தேவையாகும்.
சமூக சீர்த்திருத்த நாடகங்கள் ஊடாக வளர்ந்த அவரது சிந்தனை தளம் பொதுவுடமை தாக்கத்திற்கு உட்பட்டதன் காரணமாக உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை அவர்களின் தன்மானம் கலந்த மூச்சை, போர்குணத்தை சித்திரிக்கும் நாடகங்களாக- சிந்தனையாக பரிணாமம் அடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது.
ஒருவருடைய முயற்சிகள் போராட்டங்கள், எப்படியிருந்தாலும் அவர் பற்றிய மதீப்பீடுகளை செய்ய நோக்கங்களை மட்டும் பார்க்க கூடாது. அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளையும் நோக்க வேண்டும். இந்த வகையில் திரு. ஜி. போல் அன்ரனி அவர்களின் பல்துறை சார்ந்த பங்களிப்பானது ஒரு நாகரிகமானதொரு சமூதாயத்திற்காகவும், புதியதோர் தென்றலுக்காகவும், தமது செயற்பாடுகளை, ஆக்க இலக்கிய முயற்சிகளினூடாக முன்னெடுத்து வருகின்றவர்.
எமது யாசிப்பு அவரது நாடகங்கள் தொகுக்கப்பட்டு வெளிக் கொணரப்படுவதுடன் தொடர்ந்து இத்துறையில் துறையில் முயற்சிக்க வேண்டும் என்பதாகும்.

No comments:

Post a Comment