Saturday, May 14, 2011

நந்தினி சேவியர் - எதிர் நீச்சல் போடும் படைப்பாளி லெனின் மதிவானம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் எமது அலுவலக பணிக்காக திருகோணமலை சென்றிருந்தேன். என்னை எதிர்பாராத விதமாக சந்தித்த ~நீங்களும் எழுதலாம்’ சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர் தனபாலசிங்கம், ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளராகிய நந்தினி சேவியரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். நந்தினி சேவியரின் சிறுகதைகளை, கட்டுரைகளை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னரே வாசித்திருக்கின்றேன். அவரது எழுத்தில் முனைப்புற்றிருந்த சத்திய வேட்கையும் உண்மைத்தேடலும் இயல்பாகவே அவரது எழுத்தின் மீதான தொற்றை ஏற்படுத்தியிருந்தன. எதிர்பாராதவிதமான சந்திப்பாக இருப்பினும், எமது உரையாடல்கள் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருவனவாய் அமைந்திருந்தன. தமிழ் இலக்கியத்தின் இன்றைய செல்நெறி, அதன் வளர்ச்சி, தொய்வு குறித்தும்; இன்றைய இடதுசாரி இயக்கத்தின் போக்குகள், எதிர்காலத்தில் செய்ய கூடியவை- செய்ய வேண்டியவை என்பன குறித்தும் பலவாறாக எமது உரையாடல்கள் பரந்து சென்றன. ஓர் உண்மைக் கலைஞனுக்கு இருக்கக் கூடிய மனிதாபிமானத்தைப் பெற்றவர் நந்தினி சேவியர். இளம் எழுத்தாளர்கள் பால் மிகுந்த அன்பும், பரிவும் கொண்டு, அவர்களது ஆக்கங்களை படித்து முன்னேற ஊக்கமளிக்கின்ற உயரிய தார்மீகத்தை அவரிடத்தே அவதானிக்க முடிந்தது. இத்தகைய தன்னலமற்ற தொண்டின் விளைவாக, திருக்கோணமலை பிரதேசத்தில் பல அருமையான இளம் எழுத்தாளர்கள் உருவாகிவந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. வளரும் முற்போக்கு இலக்கியத்திற்கு நந்தினி சேவியர் ஆற்றி வரும் தலைசிறந்த பணிகளில் இதுவும் ஒன்றாகும். இவையாவும் விவரித்து விளக்கப்பட வேண்டியதொன்று என்ற போதிலும் இந்த சந்தர்ப்பம் அதற்கு ஏற்றதன்று.
சந்திப்பு ஏற்படுத்திய உந்துதல் மீண்டும் நந்தினி சேவியரின் கதைகளை வாசிக்க வேண்டும் என்ற அவாவை ஏற்படுத்தியிருந்தது. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவரது ~அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்;
என்ற சிறுகதை தொகுப்பை தேடிப் பெற்றேன். அத்தொகுப்பை மீண்டுமொரு முறை வாசித்த போது ஏற்பட்ட வாசக அனுபவத்தை பதிவாக்க முனைவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்
நந்தினிசேவியர் தமது இளமைப்பருவ முதலே தமது சிந்தனை செயற்பாடு, நடைமுறை என்பவற்றை பொதுவுடமை இயக்கத்துடன் இணைந்துக் கொண்டவர். அந்தவகையில் அத்தகைய இயக்கத்தின் பின்னனியிலிருந்தே தமது படைப்புகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றார்;.
நந்தினி சேவியரின் படைப்புகள் தெளிவான பார்வையுடன் இன்;னும் சரியாக மதிப்பிடப்படவில்லை என்றே தோன்றுகின்றது. அதற்கு அண்ணாரின் எழுத்துக்கள் யாவும் முழுமையாக தொகுக்கப்படாமையும் ஒரு காரணமாகும். குறுக்கு வழி திறனாய்வு முறையும் ஆழ்ந்த தேடலின்மையும் இந்நிலையை மேலும் வலுவாக்கியுள்ளது. இன்னொருப் புறத்தில் குழு நிலைப்பட்ட இலக்கியகாரர்களின் இழிபறி நிலைகளும் நந்தினி சேவியரின் கலைப்படைப்பின் பெறுமானத்தை புரிந்துக் கொண்டு தொடரத் தெரியாமையை தோற்றுவித்திருக்கின்றது. இந்நிலையில் நந்தினி சேவியரின் கலைப்படைப்பின் ஆளுமையை நேர்மையை இன்றைய விமர்சகர்கள் முழுமையாக வெளிக்கொணரத் தவறிவிட்டனர். இவ்வாறானதோர் சூழலில் நந்தினி சேவியரின் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் ஊடாக அவரது கலை - அனுபவம் - நேர்வை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு பிறிதொரு காரணமும் முக்கியமானதொன்றாகின்றது. தமிழ் இலக்கிய உலகில் நந்தினி சேவியர் கட்டுரையாளர், நாவலாசிரியர், கவிஞர் என வேறுப்பல ஆளுமைகளை தம் எழுத்தின் ஊடாக வெளிக்கொணர்ந்த போதும் சிறுகதைகளே அவரை கணிப்புக்குரியவராக்கியுள்ளது.நிலவுடமை சமூகமைப்பு சிதைவுண்டு முதலாளித்துவ சமூகவமைப்பு தோற்றம் பெற்றது. இந்த சூழலில் நிலபிரபுத்துவத்தின் உண்மை முகம் எப்படியிருக்கின்றது என்பதை, அதன் கொடூரத்தை எடுத்துக் கூறுவதற்காக தோற்றம் பெற்ற இலக்கிய வடிவமே நாவலாகும். அவ்வாறே, முதலாளித்துவ சமூகவமைப்பில் அது தோற்றுவிக்க கூடிய தனிமனித அவலங்கள,;; நெரிசல்கள், சலனங்கள் என்பனவற்றினை வெளிப்படுத்தக் கூடிய இலக்கிய வடிவமாக சிறுகதை தோற்றம் பெற்றது. நாவல் வாழ்க்கையை எடுத்துக் காட்ட சிறுகதை அதன் மறக்க முடியாத பாத்திரங்களை நிகழ்வுகளை எடுத்துக் காட்டுகின்றது. நாவலுக்கும் சிறுகதைக்கும் இடையிலான பாரிய வேறுபாடு இதுவாகும்.
சிறுகதை சமூகவுறவுகளில் வெளிப்படும் மனித நிலைகளை பின்புல உறைப்புடன் எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய உலகில் சிறுகதைப் பற்றிய சிந்தனைகளும் போக்குகளும் பல புதிய பரிமாணங்களை தோற்றுவித்திருக்கின்றது. தமிழ் சிறுகதை வரலாற்றிலும் இதன் பாதிப்பு நிகழாமல் இல்லை. வ.வே.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரத்தில் ஆரம்பித்து நமது யுகத்து ஆற்றல் மிக்க சிறுகதையாசிரியரான நீர்வைப் பொன்னயனின் ~~காலவெள்ளம் சிறுகதை தொகுப்பு வரை பலரும் பலவழிகளில் சோதனைகள் செய்து பார்த்து தான் இந்த புதிய திசை வழியை கண்டடைந்துள்ளனர். புதிய திசை வழி என்பதன் அர்த்தம் மக்களால் மக்களுக்கான இலக்கியம் என்ற அம்சத்தை சுட்டி நிற்கின்றது. பல ஆண்டுகளாக வளர்ந்த இயக்கம், போராட்டம், செயல் என்பனவற்றின் ஊடாக வளர்ந்து வந்ததொரு இக்கிய செல்நெறியாகும். இந்த பின்னணியில் சிறுகதை பற்றி நோக்ககின்ற போது அது வாழ்க்கையின் அவலங்களை துன்பங்களை எடுத்துக் காட்டுகின்றது. தனி மனித வாழ்வில் ஏற்படும் அவலங்கள் துன்பங்கள் வெளிக்கொணரப்படாவிட்டால் அவற்றினை அழித்து விட முடியாது. எனவே சிறுகதை மக்களின் வாழ்க்கை அவலங்களை துன்பங்களை மட்டும் சித்திரிப்பதாக அன்று அதனை தீர்ப்பதற்காக உந்துதலையும் வழங்குகின்றது என்பதை சிறுகதை வரலாற்றினை ஊன்றிக் கவனிப்பவர்களால் உணர முடியும்.
நந்தினி சேவியர் தமது இளமைக் காலத்தில் யாழ்பாண கிராம சூழலில் சந்திக்க நேர்ந்த சமூகப் பிரச்சினைகள் தொடக்கம் பின்னாட்களில் இடதுசாரி சிந்தனையாளராக செயற்பாட்டாளராக வளந்த காலத்தில் தாம் சந்தித்த அனைத்து சமூகப் பிரச்சினைகளையும் சிறுகதைகளாக்கியுள்ளார்.
இத்தொகுப்பில் இடம்பெறுகின்ற ‘வேட்டை’ என்ற கதை தம்பர் என்ற முதியவர்க்கும் அவர் வளர்க்கும் வெள்ளயன் என்ற நாய்க்கும் இடையிலான உறவுக் குறித்து சித்திரிக்கின்றது. இது தொடர்பில் நந்தினி சேவியரின் உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றது.
“தம்பரும் நாயும் ஒரே மாதிரி. அந்த நாய்க்கும் வயது கடந்து விட்டது. மெலிந்து எலும்புகள் உடலைப் புடைத்துக் கொண்டு வெளியில் தெரிய, முன்னங்கால் ஒரு பக்கம் சாய்ந்து தம்பரைப் போலக் கம்பீரமாக நடக்கும் ஒரு அலாதி.... நாய்தான் தம்பர்...தம்பர்தான் நாய்”
என தம்பருக்கும் நாய்க்கும் இடையிலான உறவை காட்டும் நந்தினிசேவியர் ஒரு படி மேலே சென்று நாய் இறந்த போது தம்பர் அடைந்த வேதனையை அவர் இவ்வாறு தீட்டுகின்றார்.
“தம்பர் கதறினார். அவரது தாயும் தகப்பனும் இறந்த போதும், மனைவி மக்கள் வீடு விழுந்து மடிந்த போதும் எப்படி அழுதாரோ அதேபோல...இது அவரது கடைசி நஷ்டம். அவரது உணவுக்கு வழி செய்யும் அந்த உயிரின் நாடித் துடிப்பு மெதுவாக அடங்கிக் கொண்டிருக்கின்றது.”
மானுட நேயம் என்பது அர்த்தமுள்ளதாக மாறுகின்றபோது, இந்த நேயம் சக மனிதனில் மட்டுமல்ல தனக்கு பிரியமான விலங்குகள், பறவைகள் மரங்கள் மீதாகவும் படர்ந்து விரிகின்றது. இந்த நாகரிகத்தின் பின்னணியில் தான் பாரதியும் ‘காக்கை குருவி எங்கள் ஜாதி’, ‘வாலைக் குழைத்து வரும் நாய்தான் -அது மனிதனுக்கு நல்ல தோழனடி பாப்பா’ என்றும் பாடினார். பாரதி வழி வந்த நந்தினி சேவியரிலும் இந்த நாகரிகம் துளிர்விட்டு கிளைப்பரப்புகின்றது. கிராம வாழ்க்கையின் உன்னதங்களை அழகுற எடுத்துக்காட்டிய சிறுகதையாசிரியர், தன் கண் எதிரே உறுத்திக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் குரூரங்களையும் அவலங்களையும் மனதை பிழியும் துன்பக் காட்சிகளையும் கண்டு தூரவிலகி காட்டியவரல்லர். ஆண் பெண் காமவேட்டையிலும் இருபாலரின் சதைப் பசியையும் இலக்கிமாக்கி அதனூடே தமது வயிற்றுப் பிழைப்பிற்க்கும் கம்பீரத்திரத்திற்கும் வழித் தேடிக் கொணட பல எழுத்து சூரர்கள் ஆர்பரித்து நிற்கும் இ;ன்றைய நாளில், நந்தினி சேவியர் அத்தகைய வாழ்க்கைக்குள்; காணப்படுகின்ற இன்னல்கள் முரண்பாடுகள் மோதல்கள் என்பனவற்றினை எடுத்துக் காட்டுகின்றார். அவரது தொகுப்பில் அடங்கியுள்ள அனைத்து கதைகளிலும் வேட்டையாடுதல், மில்லில்வேலை செய்தல், கிணறுவெட்டுதல், கல்லூடைத்தல், சைக்கில் ஓட்டுதல் பட்டறையில் உழியும் கையுமாக இருக்கும் கொல்லர், என பல கிராம தொழில்களின் மேன்மையை காட்டுகின்றார். அதே சமயம் கிராம புறத்து வாழ்க்கை இன்பலோகமாக மட்டும் அமைந்துவிடவில்லை: வாழ்க்கை அங்கும் போராட்டந்தான். இந்த அடிப்படையை உணராதவர்கள் தமக்கு பிடித்த இன்பமான வாழ்க்கையை மட்டுமே படைப்பாக்கி தந்தனர். சமுதாயத்தில் முரண்பாடுகளும் மோதல்களும் தோன்றி மாற்றத்தை வேண்டி நிற்கும் காலக்கட்டத்தில் மக்கள் சார்பில் குரல் எழுப்பும் இலக்கிய கர்த்தாக்கள் சமுதாயத்தில் உள்ள இன்னல்களையும் முரண்பாடுகளையும் அதனடியாக எழும் கருத்தோட்டங்களையும் சித்திரித்துக் காட்டத்தவறியல்லை. இந்த புதிய பார்வையை, ஆழமான விசாலமிக்க நாகரீகத்தை நந்தினி சேவியரின் சிறுகதைகளில் காணமுடிகின்றது.நந்தினி சேவியரின் தனித்துவங்களில் ஒன்று தான் கட்சி இலக்கியம் பற்றிய அவரது படைப்புகளாகும். கட்சி இலக்கியம் என்பது மனிதனை அவனது ஆக்கப்ப+ர்வமான செயலுக்கு இட்டுச் செல்லக் கூடியது. மனிதர் உணவை மனிதர் பறிக்கும் சமுதாயத்தை மாற்றுவதற்கான இயக்கமொன்றினை அடிப்படையாக கொண்டு படைக்கப்படும் இலக்கியமாகும். அவ்விலக்கியமானது மக்களை அமைப்பாக்கம் செய்வதுடன் அது சமூகமாற்றத்திற்கான ஸ்தாபன மயப்படுத்தப்படட போராட்டங்களையும் வலியுறுத்தி நிற்கின்றது. தேசிய-பாலின-வர்க்க-சாதி ஏற்றத்தாழ்வுகளைத் தகர்த்துப் பொதுவுடைமைப் புத்துலகம் படைக்கும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் போராட்டங்களைச் சரியான திசைமார்க்கத்தில் முன்னெடுத்து செல்வதற்கான தளம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இதுவே கட்சி இலக்கியத்தின் அடிப்படை இலட்சியமாகும்.இதற்கு மாறாக, கட்சி இலக்கியம் கட்சியை உச்சமாக கொண்டு கட்சி உறுப்பினர்களை புனிதர்களாக காட்டுவது அல்ல. அவ்வாறே கட்சிக்குள் நடைப்பெறக் கூடிய விவாதங்களையெல்லாம் வெகுசன தளத்திற்கு கொண்டு வந்து அவ் அமைப்பின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும் கட்சி இலக்கியமாகா. அது எதிர்புரட்சிகரமான செயலாகும். மாஓ கட்சி உறுப்பினர்களிடையேயான முரண்பாடுகள் குறித்தும் மக்கள் மத்தியிலான முரண்பாடுகள் குறித்தும் தெளிவானதோர் நிலைப்பாட்டினை முன்வைத்தார். தமிழ் சூழலில் கட்சி இலக்கியம் என்பது தமது அமைப்பு சார்ந்தவர்களை உச்சமாக காட்டுவதற்கும் தமது அமைப்பு சாராதவர்களை எல்லாம் எதிரியாக காட்டவும் பயன்படுகின்ற இலக்கிய போக்காகவே வளந்து வந்துள்ளதை காணலாம். பலர் புனைப்பெயர்களை தமக்கு சாதமான வகையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். புரட்சிகரமான சமுதாய மாற்றங்களை விரும்பும் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் இந்த அறிவு ஜீவிகள் குழப்பவும் செயலற்றவர்களாக காட்டவும் முனைகின்றனர். முதலாளித்துவ சித்தாந்தத்திற்கும் தொழிலாளி வர்க்க சித்தாந்தத்திற்கும் இடையிலான போராட்டத்தில் இவர்கள் முதலாளித்துவத்துடன் கைகோர்த்து நிற்பவர்களாவார். இந்த முழக்கங்களின் பின்னணியில் வாசகர்களையும் பொது மக்களையும் ஏமாற்ற முயல்கின்றனர்.
மார்க்சியர் என்ற வகையில் நோக்குகின்ற போது அவர்கள் இரு விதங்களில் சுரண்டல், அதிகாரம், ஒடுக்குமுறைகளுக்கு எதிரானவர்களாகவும் சமூக செயற்பாட்டாளர்களாகவும் காணப்படுகின்றனர். ஒன்று கட்சி அமைப்பை சார்ந்த மார்க்சியர்கள். இவர்கள் அமைப்பு சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாக காணப்படுவர். அமைப்பு சாராத மார்க்சியர்கள் மக்களை விழிப்படைய செய்வதுடன் அவர்களை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போர்க்குணம் கொண்டவர்களாக மாற்றுவர். சீன இலக்கிய முன்னோடி லூசுன் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். நமது சூழலில் சிலர் தமது தத்துவ தெளிவி;ன்னை காரணமாக இதனைக் கண்டுக் கொள்ள தவறியுள்ளனர். தமிழில் கட்சி இலக்கியம் சார்ந்த படைப்புகளை படைப்பாளுமையுடனும் நேர்மையுடனும் வெளிக் கொணர்ந்த படைப்பாளிகளில் நந்தினி சேவியர் முக்கியமானவொருவர். அவரது ‘நீண்ட இரவுக்கு பின’;, ‘மத்தியானத்திற்குச் சற்று பின்னபாக’, ‘ஆண்டவனுடைய சித்தம்’ ஆகிய சிறுகதைகள் இதற்கு தக்க எடுத்துக்காட்டுகளாகும். அவரது கட்சி இலக்கிய படைப்புத்திறனுக்கு உதாரணமாக நீண்ட இரவுக்கு பின் என்ற கதையில் வரும் பின்வரும் பந்தியை எடுத்துக் காட்டலாம்:
.. மச்சான் பாத்தியே ரத்தினபாலாவைப் போலையும் உன்னைப் போலையும் எத்தினை தமிழ் சிங்களச் சீவன்கள் கஷ்டப்பட்டு வந்ததோ தெரியாது, நாங்கள் கதைச்சதாலை எங்களுக்குப் பிரச்சினை விளங்கிச்சுது... மற்றதுகள்?~~குலம் உத்தியோகம் கிடைக்காது என்கிறதாலை மட்டும் நான் இந்த முடிவுக்கு வரயில்லை. நீங்கள் படுகிற கஷ்டத்தைப் பார்த்த பிறகும் இந்த நாட்டிலை இருக்கிற பிரச்சினையைத் தீர்க்கிறதுக்கு நீங்கள் சொல்கிற மார்க்கந்தான் சரி எண்டு எனக்கு விளங்கி விட்டது. நானும் வரதனோடை சேர்ந்து உழைக்க வேணும். இண்டைய நிலையில் அது கூடக் கிடைக்குமோ தெரியாது. ~ரத்தினபாலா
போல நானும் விடிவுக்கான மார்க்கத்தைக் காண உழைக்கப்போகிறேன். அந்த நிலை வந்தால்தான் விடிவும் இந்த நிலைக்கு முடிவும் வரும். என்னை நம்பு நான் திருந்தியிட்டன்.”
நந்தினிசேவியரின் ககைளில் இனம் மதம் மொழி சாதி கடந்த மானுட விடுதலைக்கானச் சிந்தனையும் அதனை அடைவதற்கான அமைப்பாக்க சிந்தனையும் முனைப்படைந்திருப்பதைக் காணலாம். இவ்வுறவுகள் கோட்பாடாக விவரிக்கப்படாமல் பாத்திர படைப்புகளின் ஊடாக, அதன் அழகியல்; குன்றாத வகையில் சித்திரித்துள்ளமை அவரது தனித்துவமாகும்.
பிரெஞ்சுப் புரட்சியின் போது, புரட்சிக்காரர்களை அரசு கில்லட்டனில் வைத்து ஈவிரக்கமற்ற நிலையில் கொன்று குவித்தது. இதனை பார்த்து பார்த்து மரத்து போன மனித உள்ளங்கள்- சில வேலைகளில் அதனைப்பார்த்துக் கொண்டே பெண்கள் எம்பிராய்ட் செய்தார்களாம். இன்று எமது சூழலில்- நகர வாழ்க்கையின்; அவலங்களையும் இன்னல்களையும் பார்த்து பார்த்து மரத்துப் போன மக்கள் எவருக்காகவும் உதவ முன்வராத பண்பு வளர்ந்து வருவதை காணலாம். இதன் தாக்கம் கிராம புறங்களையும் பாதிக்காமல் இல்லை என்ற போதிலும் ஆங்காங்கே மனித நேயம் குடிக் கொண்டிருப்பதை அவரது “ஒரு பகற் பொழுது” என்ற சிறுகதை சித்திரிக்கின்றது.
இந்நாட்டிலே இனவாதம் குமிழ்லிட்டு மேற்கிளம்பிய போது அது தோற்றுவிக்க கூடிய பரிமாணங்கள், வாழ்க்கை கோலங்கள் சமுதாய அவலங்கள் அதன் பின்னணில் காணாமல் போகும் மனிதர்கள் பற்றி கூறுவதாக “தொலைந்து போனவர்கள”; என்ற சிறுகதை அமைந்திருக்கின்றது. இக் கதை இன்றுவரைக் காணாமல் போனவர்களை ஞாபகப்படுத்துகின்றது.
இவ்விடத்தில் முக்கியமான பிறிதொரு விடயம் பற்றிய தெளிவும் அவசியமாதாகும். அதாவது நந்தினி சேவியர் இலக்கிய உலகில் காலடி வைத்த காலத்தில் தான் இலங்கையின் வடக்கில் சாதிய எதிர்ப்பு போராட்டம் துளிர் விட்டு உச்சத்தை அடைந்திருந்தது. டானியல் இப்போராட்டம் சார்ந்த இயக்கத்திலும் போராட்டங்களிலும் பங்கு பற்றிய காலங்களில் எழுதிய சிறுகதைகளில் சாதியம் கடந்த வர்க்க உணர்வே முனைப்புற்றிருந்தது. இடதசாரி கட்சியிலிருந்தும் இப் போராட்டங்களிலிருந்தும் அவர் தூர விலகிய பின்னர் வர்க்க சிந்தனையை விட சாதி தீவிரமே அவரது படைப்புகளில் முதன்மைப்படுத்தப்பட்டது. அந்தவகையில் டானியல் ஊடாக தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வும் போராட்ட உணர்வுகளும் வெளிக்கொணரப்பட்டன என்ற போதினும், மக்கள் இயக்கங்களையும் இலக்கியங்களை தாக்குவதற்கும் தகர்த்தவதற்கும் கூட அத்தகைய படைப்புகள் காரணமாக அமைந்தன. இவ்வகையில் நந்தினி சேவியரின் படைப்புகளை நோக்குகின்ற போது தேசிய ஜனநாயக சக்திகளின் குரலாகவே அவரது படைப்புகள் அமைந்துக் காணப்படுகின்றன. இறுதி வரை நந்தினி சேவியர் இத்தகைய இயக்கத்தோடு இணைந்திருந்தமை இதற்கான அடிப்படையெனக் கூறுவது தவறாகாது.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளை ஒட்டு மொத்தமாக நோக்குகின்ற போது முக்கியமானதொரு விடயம் பற்றிய கவனம் செலுத்துதல் அவசியமானதாகும். அதாவது நமது சிறுகதை எழுத்தாளர்கள் படைப்பாளிகள் திரும்பத் திரும்பத் ஒன்றையே கூறுவதற்கான காரணம் அவர்களது சமூக தரிசனம் பற்றிய தெளிவின்மையாகும். நமது சிறுகதைப் படைப்பாளர்கள் சிலர் தத்துவார்த்த தெளிவு அல்லது அறிவுப் பெற்றிருப்பினும் அவர் அதனை கதை நிகழ் சூழலுக்கேற்ப தமிழ் மரபிற்கேற்ப பொருத்தி பார்ப்பதில் இடருகின்றனர். இந்த சமூக அனுபவம் விஸ்தரிக்கப்படாமையால் கலைப்படைப்புகளில் காலத்திற்கேற்ற உள்ளடக்கத்தினை அதன் வடிவம் சிதையாதவகையில் வெளிக் கொணரத் தவறிவிட்டனர். அந்தவகையில் நந்தினி சேவியரின் கதைகள் மனிதாபிமானமுள்ளவர்களின் இதயத்தை நெருடும் சக்தியாக பொழிந்துக் கிடக்கின்றது. கதையில் வரும் பாத்திரங்கள் உயிருள்ள ஜீவன்களாக இருக்கின்றன. அவை மனிதாபிமானமுள்ளவர்களின் ஆத்மாவை உலுக்கும் சக்தியாக பொழிந்துக் கிடக்கின்றது. ஈழத்து தமிழ் மரபை பேணி உலக இலக்கியத்தில் இடம்பெறத் தக்க சிறுகதைகளை படைக்க நமது நாட்டு எழுத்தாளர்களாலும் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவனவாக நந்தினி சேவியரின் சிறுகதைகள் அமைந்துக் காணப்படுகின்றன.
தேசியம், மண்வாசனை என்ற கோட்பாட்டு போராட்டங்கள் இயக்க ரீதியாக முன்னெடுக்கப்பட்ட போது மக்களின் சமகால வாழ்க்கை இலக்கியமாக்கப்பட்டன. பிரதேசம் சார்ந்த மொழிநடை பழக்கவழக்கங்கள் புதிய அழுத்தங்களுடன் இலக்கிய உலகில் சஞ்சரித்தன. இந்த இலக்கியப் போக்கினை நந்தினி சேவியர் கடைப்பிடித்திருந்தார் என்பதை இத் தொகுப்பில் அடங்கியிருக்கின்ற சிறுகதைகள் எடுத்துக் காட்டுகின்றன. கவிஞர் இ.முருகையன் வழங்கியள்ள முன்னுரையும் நந்தினி சேவியரின் படைப்பாளுமையை சிறப்பான முறையில் மக்களுக்கு அறிமுகம் செய்கின்றது.
அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தொகுப்பு சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனத்தார் தேசிய கலைஇலக்கிய பேரவையுன் இணைந்து வெளியிட்டுள்ளனர்(1993). விலை- 12 ரூ. (இந்திய விலை)

நன்றி: இனியொரு.கொம்.(2010- டிசம்பர்)

No comments:

Post a Comment