Thursday, November 3, 2011

நந்தினி சேவியாரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்“ வாசக நோக்கில் சில குறிப்புகள்- இதயராசன்-

சுரண்டல், இனபேதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றினை சமூக வாழ்நிலை மாந்தர்கள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர்.
மேய்ப்பன், ஒற்றைத்தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு. விருட்சம் ஆகிய எட்டுக்கதைகளும் வறுமை, இனம், சாதி ஆகிய மூன்று சமூகப்பிரச்சினைகளையும் உயிர்ப்புடன் நம்முன் பேசுகின்றன.
அயல்கிராமத்தைச் சேரந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறுகதைத் தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கதையை நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப அச்சொட்டாகச் சொல்வதில் வல்லவர். கூடவே எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக்குறிப்பாக எழுதமுற்படுகின்றேன்.
முதலாவது சிறுகதை – மேய்ப்பன்:
கடலோரத்துச் சிறுகிராமத்தில் தேவாலயம் அமைத்து, தொழிலும் தேவாலயமுமே உலகமாய் வாழ்கின்ற சங்கிலித்தாம் கிறகோரி என்னும் கிழவர், தனது மகன் காணாமல் போனபோது, மருமகள் தெரேசாவை கந்தசாமிக்கு தவிர்க்கமுடியாத காரணத்திற்காக மறுமணம் செய்து கொடுக்கின்றார். இதனை எதிர்த்த ஊர்மக்கள், உறவினர்கள் அவருடன் சேர்த்து தேவாலயத்தையும் ஒதுக்கி விடுகின்றனர். தேவாலயமும் கிழவர் மனதும் பாழ்பட்டுப்போகிறன. இறுதியில் சிதைவுறும் தேவாலயத்தைச் சீர்செய்வதற்காய் மீன்பிடிக்கக் கடலுக்குப்போய், புயலில் சிக்குண்டு உயிர்துறக்கின்றார்.
இங்கு மறுமணம், மதமாற்றம் என்னும் முரண்நிலை யதார்த்தம், தேவாலயத்துடன் பிணைக்கப்பட்ட வாழ்வின் ஊடாக, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல் நெருடலின்றி சொல்லப்படுகின்றது. பிரதான பகை முரண்பாடு பின்தள்ளப்பட்டு, உள்முரண்பாடுகள் தோண்டி எடுக்கப்பட்டு மக்களை மோதவிடுவதன் மூலம் பகை முரண்பாடு நேசசக்தியாய்த் தோன்றும் மாயைமயக்கம் இக்கதைவாயிலாக ஆசிரியர் சொல்வது வாசகரைச் சிந்திக்கத் தூண்டுவனவாய் உள்ளது.
இரண்டாவது கதை – ஒற்றைத்தென்னை:
அந்த மீனவக்கிராமத்தில் இரு கிழவர்கள் வசிக்கின்றார்கள். இருவரும் சம வயதினர். அதிரியாரின் மகன் பாலைதீவு படகுவிபத்தில் இறந்துபோகின்றான். அச்சோகத்தினைத் தாங்கமுடியாமல் தவிக்கும்போது, சந்தியாக் கிழவர் அவரைத் தேற்றுகிறார். இதில் உள்ள முரண் யாதெனில், சந்தியாக்கிழவர் தம் குடும்பமே அவ்விபத்தில் இறந்துபோன சோகத்தை வைத்துக்கொண்டே தேற்றுவதுதான். ஒரே வாழ்க்கை முறையில் ஒருவரின் மனம் வைரித்துப்போகின்றது, மற்றது நொந்துபோகின்றது.
கதை இவ்வாறு முற்றுப்பெறுகிறது.
குருநகரில் எதற்குமே அசையாத இரண்டு தென்னைகள்…!
ஒன்று அது. மற்றது…?
சந்தியாக் கிழவன்!
அவளுக்கு உடல் சிரில்க்கிறது.
வாழிடமும் தொழில் முறையும் அதனூடு பெறுகின்ற பட்டறிவும் தனியாளுக்குத் தனியாள் வேறுபடுவது தவிர்க்கமுடியாது. இறப்பு என்பது யதார்த்தமான போதிலும் ஜீவனையே உலுக்ககின்ற சாவு அவனைத் தும்பாக்கிப் போடுகின்ற சோகத்தினையும் அதனைத் தைரியத்துடன் எதிர்கொள்ளும் இன்னொருவரும் காட்டப்படுவதன் மூலம் சிறுசிறு ஏமாற்றங்களுக்காய்த் துவண்டுபோய், தற்கொலை செய்ய அலைபவர்களை விழிப்பூட்டுவதாய் உள்ளது. இதனைக் கற்பனையில் காட்டாமல் அவர்களின் வாழ்வின் மூலமே காட்டுவது, கதாசிரியரின் கருத்தியல் தளத்தின் பலத்தினைக் காட்டுகிறது.
மூன்றாவது கதை – கடலோரத்துக் குடிசைகள்:
மீனவக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த இரு சகோதரர்கள் ஒருவர் மரியசேவியர், மற்றவர் எட்வோட். மரியசேவியர், சுவாமியர் படிப்புப்படிக்க வெளிநாடு சென்று, வெகுகாலத்தின் பின்னர் கிராமத்துத் தேவாலயத்திற்குப் பங்குத்தந்தையாக வருகின்றார். தம்பி தனது மச்சாளைத் திருமணம்புரிந்து, கடற்றொழிலாளியாக வறுமையில் வாடுகின்றான். தமது உழைப்பினைச் சுரண்டும் சம்மட்டியாருக்கு எதிராகக் கலகம் செய்கின்றான். சுரண்டலை ஆதரிக்கும் அத்தனையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றான். கோவிலும் சுரண்டல் வர்க்கத்திற்குச் சார்பாக இருப்பதால் அப்பக்கமே போகாமல் விடுகின்றான். அண்ணன் பங்குத்தந்தை – தம்பி புரட்சிக்காரன், அண்ணனுக்கு வசதியான வாழ்க்கை விதவிதமான உணவுகள் ஆனால் பசியில்லை. தம்பியின் குடும்பம் பசியுடன் உணவில்லை. இதற்கான காரணத்தைத் தேடுவதாய்க் கதை இயல்பாக நகர்கிறது.
“நீங்கள் செத்தபிறகு வாற சொர்க்கத்தைப் பற்றிப் பேசிறியள்… நாங்கள் இப்ப இருக்கிற நரகத்தைப் பற்றிப் பேசிறம்.. அதை மாத்தப்பார்க்கிறம்…”
உதுகளைப் பேசிறதாலைதான் உங்கட வீட்டிலை வறுமை பஞ்சம்
சுவாமியார் இடைமறித்தார். எட்வேட் சிரித்தான்
“ஒவ்வொரு நாளும் கோவில்லையே பழிகிடக்கிற சந்தியா அண்ணை, பேதுறு அம்மான்… எல்லோருக்கும் இதனாலையே வறுமையும் கஷ்டமும்…?”
“மரங்களின் வேர்களினருகே கோடரிகள் போடப்படுகின்றன.. நற்கனி கொடாத மரங்கள் அத்தனையும் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்…”
எட்டுக்கதைகளிலும் முதன்நிலையில் வைத்துப் பேசப்பட வேண்டிய கதை இது. மதம், அரசியல், வறுமை, சுரண்டல் என்பனபற்றி வாசகரைக் கட்டுடைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
நான்காவது கதை – மனிதம்:
இவரது கதைகளில் இக்கதை இரு பக்கங்களைக் கொண்டதாகும். ஷெல் வீச்சில் முத்தரும் மனைவியும் செத்துப் போயினர். அவர்களது கைக்குழந்தையும் அண்ணனும் மட்டுமே தப்பியுள்ளனர். ஊரே சிதைக்கப்பட்ட நிலையில் யார் யாரைப் பார்ப்பது. ஒரு வயோதிபர் வெளியே வந்து கைக்குழந்தையைக் கையேற்கிறார். சிறுவன் தாய் தந்தையரின் உடலத்தை விட்டுச்செல்ல மனமின்றி அங்கேயே இருக்கின்றான்.
“எனக்குப் பசிக்குதுதான்...... நானும் உங்களோட வந்துட்டா ஐயாவையும் அம்மாவையும் காகம் கொத்திப்போடும்....... நீங்க தங்கச்சியைக் கொண்டு போங்க......”
யுத்தத்தின் கொடுமையினை சிறுகச் சொல்லி, பெருக உரைக்கும் கதை – மனிதம் மரிக்கவில்லை என்பதை சாட்சி பகரும் கதை.
ஐந்தாவது கதை – நெல்லிமரப் பள்ளிக்கூடம்:
நெடுத்து வளர்ந்த நெல்லிமரத்தடியில் உள்ள பள்ளிக்கூட்டம், அதில் கல்விகற்ற சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏனைய சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. கிணற்றில் தண்ணீர் அள்ளியதற்காக ஒரு சிறுவன் ஆசிரியரால் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறான். அதன் விளைவு அக்கிராமத்துச் சிறுவர்கள் பாடசாலை செல்லாமல், பின்னர் தங்கள் கிராமத்தில் பாடசாலையை நிறுவி பள்ளிக்குச் செல்வதே கதை.
“வாத்தியார்! இவன் கிணற்றுக்கட்டுல ஏறி துலாக்கயிற்றைப் பிடிச்சவன்”
ஜீவகாருண்யம் என்ற பெயரை மட்டுமே சூடியிருந்த மாணவன் முட்டுக்காய்த் தலையரிடம் போட்டுக் கொடுத்தமைதான் கதையின் முக்கிய திருப்புமுனையான அமைகிறது.
இக்கதையில் பொன்னையா வாத்தியார் எனும் அன்புள்ளங் கொண்ட, மாணவர்களால் நேசிக்கப்படுபவரும், முட்டுக்காயர் எனும் பட்டப்பெயர் கொண்ட பஞ்சாட்சரம் வாத்தியார் - இவருக்கு நேர் விரோதமான சாதித் திமிர் கொண்டவராகச் சித்தரிக்கப்படுகின்றார். அமைதியான மாணவர் அநீதிக்கு எதிராக தமது எதிர்ப்பினைப் புலப்படுத்துவதும் அதன் மூலம் ஒடுக்கப்படும் கிராமம் ஒன்று விழிப்புறுவதும் இயல்பாகவே சொல்லப்படுகின்ற போதிலும், சொல்ல வேண்டியவை நிறையவேயுண்டு என்பதை கதையில் சொல்லப்படும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இது ஒரு நாவலுக்கான நகர்வைக் கொண்டுள்ளது எனலாம்.
ஆறாவது கதை – தவனம்:
83 யூலைக் கலவரத்தின் போது புறக்கோட்டையில் இறால் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமிழர். சக சிங்கள ஊழியர்களால் காப்பாற்றப்பட்டுப் போஷிக்கப் படுவதையும் கலவரத்தின் அவலமும் சொல்லப்படும் கதை இது. அந்தத் துன்பியல் நிகழ்வில் நாமும் அகப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது.
ஏழாவது கதை – எதிர்வு:
யாழ்ப்பாணத்தில் யுத்தச் சூழ்நிலையில் தமது மாமனாரின் மரணச் சடங்கினை திட்டமிட்டபடி சமயாசாரப்படி நடாத்த முடியாமல் சவுக்குத் தோப்பில் புதைத்தமையும் மரண வீட்டில் குண்டுவீச்சு நிகழ்ந்த போது தப்பிப் பிழைக்க ஓடிய உறவினர்கள் பின்பு நிஜத்தினை மறந்து,
“அவன் கொமியூனிஸ்காரன் அதுதான் கோயில் சடங்கு செய்யாமல் மாமனைச் சவுக்குமரக் காட்டுக்குள்ள தாட்டுப்போட்டான்”
என்று கூறும் முரண்நிலை யதார்த்தத்தினை இலாவகமாக சிறப்பான கதை கூறல் மூலம் சொல்வது இக்கதையின் வெற்றியாகும்.
எட்டாவது கதை – விருட்சம்:
இலங்கை இனப்பிரச்சினையின் வெளிப்பாடே மதங்கள் மோதிக் கொள்வது. சாதாரண மக்களின் உணர்வினைத் தூண்டுவதும், இதில் புத்தரும் - பிள்ளையாரும் அரச மரத்துக்கு உரிமை கோருவது இலங்கைக்கே உரித்தான பண்பாகும். இதனை மரங்களை நேசிக்கும் ஒரு உள்ளத்தின் மூலம் யதார்த்தத்துடன் இணைத்து, பண்பாட்டுத் தளத்தில் விபரிப்பது அற்புதமாக வாய்த்துள்ளது. இக்கதை நிச்சயமாக சிங்களத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாகும்.
“போர்க்காலத்துக்கு முன்னர் ஊரின் பெருவிருட்சங்கள் பல சிறு கோவில்களாக சூலங்களுடன் நின்றநிலைமாறி ஆக்கிரமிப்பின் இன அடையாளங்களாக அரசமரங்களும் அதன் கீழ் புத்தர்களும் உருவாகிவிட்டமையை இவன் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு”
விருட்சங்களே இன அடையாளங்களா......?
பெரு விருட்சங்களின் கீழ் தெய்வங்களை வைத்துப் பூசிப்பதன் மூலம் விருட்சமும் அச்சூழலும் புனிதம் பெறுவதோடு சூழலும் பேணப்படுகிறது என்பது ஏதோ உண்மைதான். ஆனால் சகோதரர்கள் போல வாழவேண்டியவர்கள் அந்தத் தெய்வத்திற்காக ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவதுதான் அவலத்திலும் அவலம். இதனை நந்தினி சேவியர் சிறப்பாகவே பதிவுசெய்துள்ளார்.
முடிவுரை :
எனவே இச்சிறுகதைகள் எட்டும், எட்ட முற்படும் எல்லைகளை விட்டகலாதபடியே எம்மையும் ஈர்க்கின்றன. அனைத்து விதமான அவலங்களிடையேயும் மனிதம் மரிக்காமல் இன்னும் உயிர்புடன் உள்ளதையே இக்கதைகள் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன என்ற வகையில் இச்சிறுகதைத் தொகுதிக்கு ‘மனிதம்’ என்ற தலைப்பிட்டிருப்பினும் பொருந்தும் என்று கூறி, நந்தினி சேவியரிடமிருந்து இன்னமும் துடிப்பான, துல்லியமான கதைகளை எதிர்பார்த்து, தளரா மனத்துடன் முதிர்ந்த கதைகளை இன்னும் இன்னும் வேண்டி நிற்கின்றோம்.

2 comments:

 1. nal vaalthukal
  Vetha.Elangathilakam
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
 2. எனது வலையில் பகிர்ந்துள்ளேன்.
  - துவாரகன் http://vallaivelie7.blogspot.com/

  ReplyDelete

There was an error in this gadget