Sunday, August 12, 2012

சரிநிகர் சரவணனுடன் ஒரு சந்திப்பு - மாற்று உரையாடலுக்கான களம்: லெனின் மதிவானம்

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நண்பர் என். சரவணனை( சரிநிகர் பத்திரிகையில் இணைந்து செயற்பட்டவர்) மல்லியப்பு சந்தி திலகர், பிரபா, ஜெயகுமார் ஆகியோருடன் அவரது வீட்டில் சந்தித்தேன். அவர் வெளிநாடு சென்று இலங்கை வந்த பின்னர் இது எனது இரண்டாவது சந்திப்பாகும். சராவுக்கும் எனக்குமான உறவு பன்முகமானது. என்னை விட எனது தந்தைக்கும் சகோதரனுக்கும் இடையிலே அந்த நட்புறவு உருவானது. ஒரு காலக்கட்ட ஆர்பரிப்பில் சமூக தளங்களில் இயங்கிய எங்களிடையே ஒரு பாரிய இடைவெளி இருந்தது என்பது  உண்மைதான். சரா என் தந்தை மீது மிகுந்த மரியாதைக் கொண்டிருந்தார். அவரை அவரது அரசியல் குருவாக என்னிடம் பல தடவைகள் கூறியிருக்கின்றார். என் தந்தையும் சராவில் அதிகமான மரியாதைக் கொண்டிருந்தார். கல்வியின் நசிந்த போக்குகளை விமர்சனம் செய்த அவர் சரா படிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். சராவில் இருந்து மாறுப்பட்ட கருத்துக்கள் வந்த போது கூட அவர் அது பொறுத்து எத்தகைய விமர்சங்களையும் வைத்ததில்லை. சாராவும் அப்படி தான். அந்தளவிற்கு அவர்களிடையிலான பாசமும் மரியாதையும் இறுக்கமானதாக இருந்தது.   அந்த மரியாதை உணர்வுடன் அவருடைய மகன் என்றவகையிலே என்னுடனான உறவுகளை- தொடர்புகளை அவர் பேணிவந்தார். சில சமயங்களில் சராவை தமது அரசியல் பணிகளை முன்னெடுத்த மக்கள் மத்தியில் எனது அமைப்பு சார்ந்த  மாறுப்பாடுகள் காரணமாக வில்லனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளேன் என்பதை பின்னால் சரா மூலமாகவும் அவரூடாக அறிமுகமாகியிருந்த நண்பர்கள் மூலமாகவும் அறியமுடிந்தது. இப்போது சிந்திக்கின்றபோது அணிசார்ந்த பிரச்சனைகளே எங்களது முரண்பாட்டிற்கு அடிப்படையாக இருந்தள்ளது என்பதை உணர முடிகின்றது.  

      இப்படியான உறவின் பின்னணியில் தான் எங்களது சந்திப்பு நடந்தது. ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் மல்லியப்பு சந்தி திலகர்  வண்ணச்சிறகு( அரு சிவானந்தன்) கவிதைகள், அவரது ஆளுமைகள் பற்றி தமிழ் சங்க கூட்டமொன்றில் பேசியிருந்தார். இயல்பாகவே எங்களது உரையாடல்கள் அக்கவிஞரை பற்றியதாக இருந்தது. இந்நாட்டில் நசிந்து போன அரசியலின் பின்னணியில் இனவாதம் குமிழிட்டு மேற்கிளம்பிய போது அது மலையக மக்களின் இருப்பை எத்தகைய சிதைவுக்குள்ளாக்கியது என்பது பற்றியும் அதனால் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் தமது அடையாளங்களை இழந்து படும் துன்பங்கள்- இன்னும்  இது போன்ற சொல்லவெண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இந்தியாவிற்கு திரும்பிய மலையகத் தமிழர்கள் தங்களது அடையாளத்தை இன்றும் இலங்கையுடன் இணைத்து சிலோன் தமிழர்களாக காணும் நிலை காணப்படுகின்றது என்பதை திலக் தமிழக பயண குறிப்புகளுடனும் வீடியோ காட்சிகளுடனும் விளக்கினார். மேலும் இந்தப் பின்னணியில் முகிழ்ந்த வண்ணச்சிறகு கவிதைகள் எவ்வாறு இந்த வாழ்க்கையை பிரதிப்பலித்து நிற்கின்றன என்பது பற்றிய தாக மல்லியப்பு சந்தி திலகரின் உடையாடல் அமைந்திருந்தது.
தொடர்ந்து எமது உரையாடல் சந்திப்பின் முதல் நாள் (ஞாயிற்றுக் கிழமை) வீரகேசரி பத்திரிக்கையில் வெளியாகியிருந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரனின்  மலையக மக்களின் அடையாளம் பற்றிய பேட்டி தொடர்பாக திரும்பியது. பேராசிரியர் மலையக மககளின் இருப்பையும் சமூக உருவாக்கத்தையும் சிதைக்கும் வகையில் மலையக மக்களின் இனத்துவ அடையாளத்தை இந்திய வம்சாவழி தமிழர் என்றே குறிப்பிடுகின்றார். மலையக கல்வி மற்றும் மலையக பல்கலைகழகம் தொடர்பில் ஆரோக்கியமான கருத்துக்களை முன் வைத்து வரும் அவர் மலையக மக்களின் இருப்பு தொடர்பில் அத்தகைய பாரதூரமான கருத்துக்களை முன் வைத்திருப்பது வேதனைக்குரிய விடயம் என்பதை நான் உட்பட பல நண்பர்கள் எடுத்துக் காட்டினார்கள்.  
மலையக தேசிய இனத்தின் வளர்ச்சியை உழைக்கும் மக்கள் நலன் சார்பான கண்ணோட்டத்தில் நோக்குவது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வலிகோலும். ஆனால் இன்று வரை இலங்கை அரசாங்கமும் ஏனைய ஏகபோக சக்திகளும் இம்மக்களை குறிப்பதற்காக இந்தியத் வம்சாவழி தமிழர் என்ற அடையாளத்தையே உபயோகித்து வருகின்றனர். இப்பதமானது இலங்கையின் பெருந்தேசியவாதிகளும் ஏகபோக வர்க்கத்தினரும் இம்மக்களை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. ஓர் உறுதியான இன, மத, மொழி அரசியல் பொருளாதார, பிரதேச வேறுபாடுகளை கொண்டிருக்கின்ற இம்மக்கள் மலையக தமிழர் என்ற உணர்வையே கொண்டு காணப்படுகின்றனர்.
இலங்கையில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கக் கூடிய, அதே சமயம் மலையகத் தமிழருடைய எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு வர்க்கப்பிரிவினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்கள் இலங்கையில் தரகு முதலாளிகளுடன் ஏகபோக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றவர்களாவர். இந்திய இலங்கை நட்புறவின் மூலம் கிடைக்கின்ற சகல விதமான  சலுகைகளையும் இவ்வர்க்கத்தினரே அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நலனின் பின்னணியில் தான் மலையக தமிழர் சமுதாயத்தில் தோன்றிய மத்தியதர வர்க்கம் அவ்வப்போது வந்து குடியேறும் இந்தியத் தமிழர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உழைக்கும் வர்க்கத்தினரை தமக்கு சாதகமாக காட்டி அதனூடாக தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே இந்திய வம்சாவழி தமிழர் என்ற பதத்தை பிரயோகிக்கின்றனர் என்பதாக அக்கலந்துரையாடல் அமைந்திருந்தது. இக்கருத்தினை நான் அழுத்திக் கூறிய போது அதுவரை அமைதியாக இருந்த பிரபா உணர்ச்சி வசப்பட்டவராக என் கைகளை பிடித்து இதனைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். இதற்காக தான் இதுவரை போராடிக் கொண்டிருக்கினறோம் என்பதையும் இதற்காகவே நாம் ஒரு வெகுசன அமைப்பாக இணைய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.
இக்கருத்துக்களை மிகமிக அவதானத்துடன் கேட்டுக் கொண்டிருந்த   சரா சில வினாக்களை எழுப்பினார்.  இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வந்து, இங்கு புதியதொரு சமூகமாக உருவாக்கமடைந்த அனைத்து மக்களையும் மலையக தேசியத்துடன் இணைப்பது சாத்தியமானதா?   இன்று நாடு பூராவும் நகர சுத்திகரிப்பு தொழிலில் ஈடுப்பட்டு வருகின்ற தொழிலாளர்களை எந்த தேசியத்திற்குள் அடக்குவீர்கள்?  இன்று மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் வசித்துவருகின்ற தமிழர்களை மலையக தேசியத்திற்குள் அடக்க முடியுமா? போன்ற வினாக்களை எழுப்பிய அவர் இன்று இம்மக்களில் பலர் சிங்கள அடையாளங்களை பின் பற்றுகின்றவர்களாகவே காணப்படுகின்றனர் என்பது பற்றியும் விளக்கினார்.
இவரது வினாக்களின் படி கலந்துரையாடல் வசதிக்காக மலையகத்றிற்கு வெளியில் வசிக்கும் மக்களை பின்வருமாறு  வகைப்படுத்திக் கொண்டோம். (1)மலையகத்தை வசிப்பிடமாகக் கொண்ட அதே சமயம் மலையகத்திற்கு வெளியில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள், (2)மலையகம் எனும் இனத்துவ அடையாளத்தை கொண்டிருக்கின்ற அதே சமயம் மலையகத்திற்கு திரும்ப முடியாத அல்லது திரும்ப விருப்பம் இல்லாதவர்கள், (3)மலையகத்திலிருந்து வெளியேறி வடகிழக்கின் எல்லைப் புறங்களில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள், (4)தென்பகுதியில் வாழும் மலையக தமிழர்கள்.. 
இவ்வகைப்பாட்டின் படி,  இம்மக்கள் வடகிழக்கு தமிழரின் பண்பாட்டினை விட மலையக தமிழரின் பண்பாட்டு பாரம்பரியங்களையே தழுவுகின்றவர்களாகவும்;, அவற்றுடன் அதிக ஒற்றுமை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களின் எண்ணிக்கை ஏனைய மக்களோடு ஒப்பிடுகின்றபோது மிகக்குறைவாக காணப்படுகின்றது. இம்மக்களின் சுயநிர்ணய உரிமை, சுரண்டல், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களை  தனித்தனியாக எடுக்க முடியாது. அதே சமயம் அவற்றைப் புறக்கணித்து விடவும் முடியாது. எனவே அவர்களை “மலையக தமிழர்“என்ற தேசியத்துடன் இணைந்து முன்னெடுப்பதே முற்போக்கானதாகும்.     மலையகம் என்பதை பரந்த அடிப்படையில் நோக்குகின்றபோது மேற்குறிப்பிட்ட மக்கள் பகுதியினரை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டும் என்ற கருத்து இன்று முனைப்படைந்து வருகின்றது. பரந்துப்பட்ட வெகுசன இயக்கங்களாலும் இடதுசாரி அமைப்புகளினாலுமே இத்தகைய போராட்டங்கள் சாத்தியமாக முடியும் என்ற கருத்து கருத்தாடலில் முனைப்படைந்திருந்தது. சராவுக்கு இக்கருத்துக்கள் உடன்பாடானவையாக இருந்திருக்க வேண்டும் என நம்புகின்றேன். அவர் இக்கருத்துகளில் தனது உடன்பாடான கருத்துக்களையே கூறியிருந்தார்.
இத்தகைய மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுப்பட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன என்பதும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய வெகுசன பண்பாட்டு இயக்கத்தின் அவசியம் முக்கியமானதாக காணப்படுகின்றது. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்குதல் அவசியமானதாகும். அதாவது கடந்த காலங்களில் மலையக தமிழர்களிடையே எழுந்த  வெகுசன பண்பாட்டு இயக்கங்கள் குறித்த பார்வையும் விமர்சனங்களும் முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். அவ்வியக்கங்களின் வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட புதியதோர் மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஆதர்சனமாக அமைகின்றன.  
இறுதியாக சராவின் வீட்டில் இரவு போசணத்தையும் முடித்துக் கொண்டு அவரது வீட்டிலிருந்து விடைப்பெறும் போது மலையகத்திற்கென மின்னியல் நூலகம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் முடிவு செய்தோம். கணிணி தொடர்பில் தேர்ச்சி பெற்றிருக்கின்ற நண்பர்கள் சரா, திலக் முதலியோர் தொழிற்நுட்ப பகுதியையும் ஆவணங்கள் சேர்ப்பது தொடர்பிலிலான பொறுப்பினை நான், பிராப ஜெயக்குமார் ஏற்றோம். இம்முயற்சி செயற்படுத்த வேண்டிய ஒன்றாகும்.  
இறுதியாக நான் வீட்டை நோக்கி புறப்பட்ட போது மலையமக்களின் அபிலாஷைகளை வென்றேடுக்க கூடிய வெகுசன பண்பாட்டு இயக்கம் பற்றிய சிந்தனையே மீண்டும் மீண்டும் என் சிந்தனையை தட்டிக் கொண்டிருந்தது. என்னுடன் பயணித்த நண்பர்களின் இதயத் துடிப்புக் கூட அவ்வாறுதான் இருந்தது என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. இத்தகைய ஆரோக்கியமான உரரையாடலுக்கு காரணமாக இருந்த சராவின் இலங்கை வருகை எம்மை ஐக்கியப்படுத்தியது மட்டுமின்றி செயற்திறனுக்கான உந்துதலையும் தந்தது.

1 comment:

  1. நல்லமுயற்சி.தொடருங்கள்.தேவையெனில் பங்களிப்போம்.

    ReplyDelete