Wednesday, October 24, 2012

புதிய பண்பாட்டுத் தளம் அங்குரார்பண உரை ந. இரவீந்திரன்


புதிய பண்பாட்டுத் தளம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், கலந்துகொண்டு தொடர்செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கான கொள்கைத் திட்டங்களை வகுக்க முன்வந்துள்ள முன்னோடித் தோழர்களே - உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.  
நாங்கள் வெவ்வேறு தளங்களில் செயற்படுகிறவர்களாக உள்ளோம்; அவை தம்மளவில் வெற்றிகரமாக தமது நோக்கங்களை நிறைவுசெய்ய இயலுமாயிருக்க இத்தகைய அமைப்பு ஏன் அவசியம் என்ற கேள்வி எழ இடமுண்டு. அத்தகைய அரசியல், கலை-இலக்கிய அமைப்புகளின் மக்கள் விடுதலைக் குறிக்கோளை பரந்துபட்ட பண்பாட்டு வெளியொன்றைத் தரும் வெகுஜன அமைப்பூடாக ஒன்றுபட்டுச் செயற்பட இது களம் அமைக்கிறது என்கிற வகையில் ஐக்கிய முன்னணிப் பரப்பு ஒன்றாக இந்தப் புதிய பண்பாட்டுத் தளம் அமைகிறது. அந்தவகையில் இங்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் மக்கள் விடுதலையை நாடும் முற்போக்கு அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையுமேயன்றி அவற்றுக்குப் போட்டியானதாகவோ, எதிரானதாகவோஅமையப்போவதில்லை.
மக்கள் விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு இருந்தபோதிலும், சிறு சிறு கொள்கைக்கோட்பாடுகளின் வேறுபாடுகளினால் நாம் பிளவு பட்டுள்ளோம். இதனால் மக்கள் விரோத சக்திகள் பலம்பெற்று மக்கள்மேல் மென்மேலும் சுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறார்கள். வேறுபட்ட அமைப்புகளாகவே உள்ள வரை பொது உடன்பாடான விடயங்களிலும் சேர்ந்து இயங்க முடியாதவர்களாக இருக்கிறோம். இந்த மன இடைவெளியைக் கடக்க இந்தத் தளம் உதவும்.
இதனை முன்னின்று தொடங்குகிற தோழர்கள் சில அமைப்புகளிலிருந்து வெளியேறியவர்களாக அல்லது வெளியேற்றப்பட்டவர்களாக உள்ளோம். இப்படி ஒரு அமைப்பிலிருந்து வெளியேறியதும் அதற்கு எதிரான கடுங்கோபம் கொண்டு அதனையே முதல் எதிரியாகக் கருதிச் செயற்படுவது மரபாக இருந்துவருவதுண்டு. அந்தக் குரோதங்களுக்கு இடமளிக்காமல், நாம் நேற்றுவரை செயற்பட்டோம் என்கிற வகையில் வேறெதையும்விட அந்த அமைப்பே அதிகம் சரி என்ற தெளிவோடு நாம் உள்ளோம் என்பதனாலேயே புதிய பண்பாட்டுத் தளம் ஒன்றை உருவாக்க முனைகிறோம்; அந்த எமது முன்னாள் அமைப்புகள் எமது முதல்நிலை ஐக்கியத்துக்கு உரியன.

அமைப்புகள் சில இறுக்கமான கோட்பாடுகளில் நெகிழ்வைக் காட்ட இயலாதபோது வெளியேறுவதும்-வெளியேற்றப்படுவதும் சம்பவிக்கிறது. "நூறு பூக்கள் மலரட்டும், நூறு சிந்தனைகள் முட்டி மோதட்டும்" என்ற நிலைப்பாடு, ஆளுமை மிக்க அமைப்புகளால் முன்னெடுக்க இயலுமானது. கொள்கைத் திடமும் அரசியல் நேர்மையும் இருந்தால் நூறு சிந்தனைகள் முட்டிமோதும் களமாக அமைப்புகள் திகழ முடியும். ஏதோ சில தப்பபிப்பிராயங்களால் விலகல்கள் நேரினும், அங்கு முன்னெடுக்க இயலாமல் போன சுதந்திரமான விவாதங்களை இந்தப் புதிய பண்பாட்டுத் தளத்தில் தொடர இயலும். அந்தவகையில் எங்களில் சிலரை முன்னர் அங்கத்துவராய்க் கொண்டிருந்த அமைப்புகள் எம்மை நெருக்கமான நட்பு சக்திகளாகக் கொள்ளும்வகையிலேயே இந்த அமைப்பின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இன்றைய நெருக்கடிமிக்க சூழலில் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஏதோ சில தவறுகளோடு இடர்ப்படுவனவாய் உள்ளன, அவற்றின் அரசியல்-பண்பாட்டு நிலைநின்று அந்தத் தவறுகளைக் கண்டறியவோ திருத்தவோ இயலாதிருப்பதனால் மக்கள் இயக்கங்கள் முன்னேற இயலாதனவாயுள்ளன. அந்த இடர்ப்பாட்டைத் தனியொருவர் அல்லது தனியொரு அமைப்பு தீர்க்க இயலுமாயின் எமது அமைப்புக்குத் தேவை இருந்திருக்காது. பல்வேறு சிந்தனை வளங்களை, அனுபவங்களை உடைய நாம் எல்லோரும் ஒன்றுகூடி விவாதித்து ஏற்பட்டுள்ள தடையை இனங்கண்டு தாண்டிச்செல்லும் மார்க்கத்தைக் கண்டறிய இயலும் என்பதால் இந்தத் தளம் அவசியமாகியுள்ளது. அவ்வாறு காணும் புதிய மார்க்கம் அவரவர் செயற்படும் அமைப்புக்கு உரிய வழிகாட்டலாகஅமையும். சமூக மாற்றத்துக்கான போராட்டம் சமத்துவ சமூக (சோசலிச) அமைப்பாக்கத்தை கட்டியெழுப்புவதாக அமையவேண்டும் என்ற குறிக்கோளை முன்வைத்து ஏறத்தாழ ஒரு நூற்றாண்டை எட்டவுள்ளோம். சேர்.பொன்.அருணாசலம் ருசியப் புரட்சியை வரவேற்றவராக இருந்தார். "கிருத யுகம் எழுக" என்ற பாரதியை முன்னிறுத்தி ஐம்பதாம் ஆண்டுகளில் எழுச்சியுற்ற முற்போக்கு இயக்கம் சாதியத் தகர்ப்பு மற்றும் சமத்துவ அமைப்புக்கான போராட்டங்களை முன்னெடுத்து மூன்று தசாப்தங்கள் வலுவான அனுபவங்களைப் பெற்றிருந்தது. தேசிய இனப் பிரச்சனையை அணுகுவதில் முற்போக்கு இயக்கம் தவறிழைத்திருந்தது; ஆயினும் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராக ஒருபோதும் சென்றதில்லை. தமிழ்த் தேசியத்தின் வலதுசாரிப் பிரிவினர் முற்போக்கு இயக்கத்துக்கு எதிராகப் போனபோதிலும், இடதுசாரி உணர்வோடு மார்க்சியத்தை நாடிய இளைஞர் இயக்கங்கள் முற்போக்கு அணியை அரவணைத்து தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுக்க நாட்டங்கொண்டனர். ஆயினும் ஆயுதமேந்திய வலதுசாரிகள் அப்போராட்டத்தை எதிர் அனுபவத்துக்குரியதாக்கிவிட்டுள்ளனர்.
முற்போக்கு இலக்கிய இயக்கம் கோட்பாட்டு-நடைமுறை விவாதங்களினால் எழுபதுகளின் நடுக்கூறில் தேசிய கலை இலக்கியப் பேரவை தோற்றம் பெற்றிருந்தது. இவையன்றி, பிரதேச ரீதியாக இலங்கை பூராவிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் முற்போக்கு கலை இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன. அத்தகைய அனைத்து மக்கள் சார்பான அரசியல்-பண்பாட்டுச் செயற்பாடுகளது அனுபவங்களையும் கையேற்று, இன்றைய புதிய சூழலுக்கு அமைவாக வளர்க்கப்பட்ட சிந்தனை முறை ஒன்றை வகுத்து எடுத்துக்கொள்வதற்கு இந்தப் புதிய தளத்தைக் கட்டமைத்துக் கொள்கிறோம்.
அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த சாதியத்தகர்ப்புப் போராட்ட அனுபவம் மகத்தானது(சென்ற நூற்றாண்டின் நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து சிறுபான்மைத் தமிழர் மகாசபை அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிகளையும் ஒரே அணிக்குள் கொண்டுவர இயலுமானதில் கொம்யூனிஸ்ட்டுகளின் பங்கு விதந்துரைக்கத்தக்கது; அறுபதுகளில் ஆயுதமேந்திய ஒடுக்குமுறையை ஆயுதப் போரட்டத்தால் முறியடித்து சாதியத் தகர்ப்புப் போராட்டத்தைத் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் முன்னெடுப்பதற்கும் கொம்யூனிஸ்ட் கட்சியே தலைமையளித்தது). இப்போராட்டங்களின்போது ஆளும் சாதி நலம் ஒன்றையே மனங்கொண்ட தமிழ்த் தேசியம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே செயற்பட்டதிலிருந்து எமது தேசியம் ஆளும்-ஆளப்படும் சாதிகளின் தேசியங்களாகப் பிளவுபட்டுள்ளதைக் கண்டறிந்தோம். இந்தியாவில் மிகப்பெரும் போராட்டங்கள் கொம்யூனிஸ்ட்டுகளாலும் தலித்தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சாதிமுறை குறித்த தெளிவை எட்டமுடியாது போனது. கொம்யூனிஸ்ட்டுகள் வர்க்க அமைப்புத் தகர்ந்தால் சாதி ஒழியும் என்றனர்; சாதியத்தை அவ்வகையில் குறைமதிப்பீடு செய்யக்கூடாது என்ற தலித் மற்றும் திராவிடர் இயக்கத்தினர் வர்க்க ஒழிப்புக்குறிக்கோளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தவறினர். இதன்பேறாக மார்க்சிய நிலைப்பாட்டில் சாதியமைப்பைப் புரிந்துகொள்வதில் இந்தியச் சிந்தனையாளர்களிடையே இடர்ப்பாடுகள் நேர்ந்துள்ளது.
சாதி அமைப்பு நிலப்பிரபுத்துவத்துக்கு உரியது என்கிற நிலைப்பாடே இந்தியக் கொம்யூனிஸ்ட்டுகள் பலரிடம் காணப்படும் கருத்தோட்டமாகும். நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சமாயே இன்றும் காணப்படும் சாதி இருப்பைக் கருதுகின்றனர். இந்தக் கண்ணோட்டம் உள்ளவரை எமது சமூகத்தைப் புரிந்துகொள்ள இயலாதவர்களாயே இருப்போம். இதன் பேறாகவே அங்கு தலித் இயக்கங்களும் சாதியக் கட்சிகளும்  செல்வாக்குப் பெறக்கூடியதாகிறது. ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளது கோரிக்ககளைக் கொம்யூனிஸ்ட் கட்சி தனதாக்கிக் கொண்டு பாட்டாளிவர்க்கச் சிந்தனை அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுக்காத போது சாதிக் கட்சிகள் செல்வாக்குப் பெறுவது தவிர்க்க இயலாததாகும். ஒவ்வொரு சாதியிலுமுள்ள சுரண்டலாளர்களே சாதியக் கட்சிகளைக் கட்டியெழுப்புகின்றனர். பலநூறு வருடங்களாய்ப் பண்பாட்டு ஒடுக்கு முறைக்குட்படுத்தப்பட்டுச் சுரண்டப்பட்டு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களதும், அவர்களது வாழ்க்கை நிலையை ஒத்துள்ள பிற்படுத்த சாதி மக்களதும் கோரிக்கைகளைக் கொம்யூனிஸ்ட் கட்சி தனதாக்கிப் போராடும்போது சுரண்டலாளர்களான சாதித் தலைவர்கள் அவ்வச் சாதி மக்களால் நிராகரிக்கப்பட இடமேற்படும்.
இவ்வகையில் இரட்டைத்தேசிய நிலை ஏற்பட இடமின்றி ஒட்டுமொத்த விடுதலைக்குறிக்கோளைத் தமிழ்த் தேசியம் முன்னிறுத்த இயலுமாயிருந்ததற்கு கொம்யூனிஸ்ட்டுகள் ஒடுக்கப்பட்ட மக்களது சாதிய இழிவுகளுக்கு எதிரான போராட்டத்தைத் தலைமையேற்று முன்னெடுத்தமையே காரணமாகும். சாதிப்பிரச்சனையல்ல, வர்க்கப் போராட்டம் மட்டுமே எமது அக்கறைக்குரியது என்றிருந்திருப்பின், அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் தலித்பௌத்தர்கள் என்ற புதிய சக்தி தோற்றம் பெறுவதைத் தவிர்த்திருக்க இயலாது போயிருக்கும். அத்தகைய தலித் தேசியம் எதிர்நிலை கொண்டிருப்பின் தமிழ்த் தேசியம் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் என்பதைச் சொல்லித் தெரிந்து கொள்ளும் அவசியமில்லை. இன்று பிரித்தாளும் பேரினவாத தந்திரோபாயத்துக்கு இடைவெளி ஒன்று ஏற்பட்டுவருவதும் கவனிப்புக்குரியது. இதுகுறித்து ஆளும் சாதித் தேசியத்தை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியர்கள் அக்கறை கொள்ளப்போவதில்லை. மார்க்சியத்தைத் தத்துவார்த்த ஆயுதமாக ஏற்றுள்ள நாமே விடுதலை பிளவுபடாதது என்ற குறிக்கோளுடன் இரட்டைத்தேசிய யதார்த்தத்தைப் பேசுபொருளாக்கி சரியான வடிவில் சுயநிர்ணயக் கோரிக்கை வடிவம்பெற ஆவன செய்தல் வேண்டும். அதற்கு அமைவாக சாதிகுறித்த சரியான புரிதலை முன்வைப்பது அவசியமாகின்றது.

சாதித் தகர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வாய்ப்பான எமது சூழல் காரணமாக கைலாசபதி, சிவத்தம்பி, ஏ.ஜே.கனகரட்னா போன்ற சிந்தனையாளர்கள் சாதிமுறை குறித்த புரிதல் கொள்ளக்கூடிய இடத்துக்கு எம்மை இட்டுவந்துள்ளனர். இந்தியச் சிந்தனையாளர்களும் பல தெளிவுகளை எமக்கு ஏற்படுத்தியிருந்தபோதும், இரட்டைத் தேசிய வரையறை அவர்களுக்கு வரம்பிட்டிருந்தது. குறிப்பாக அம்பேத்கர் சாதி குறித்துக் காத்திரமான ஆய்வுகள் வாயிலாக பெரும் வெளிச்சங்களை ஏற்படுத்தியவர். அவரது அந்தப் பங்களிப்பை மார்க்சிய ஒளியில் மீட்டெடுத்த ஆனந்த் டெல்டும்டே, பல திறவுகோல்களை வழங்கினார்; ஆயினும் இரட்டைத்தேசியக் கோட்பாட்டுப் புரிதலின்மையால் சரியான மார்க்கத்தை வந்தடைய இயலவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் ஏராளமான தலித் மக்கள் பங்கெடுத்திருந்தபோதிலும், எப்போதுமே தலித் தேசியம் ஏகாதிபத்தியச் சார்பு கொள்ளும் வகையிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் நடந்துகொள்கின்றனர் எனக் கூறுகிறார். உண்மையில் தலித் மக்களை அன்று வென்றெடுத்திருந்த காந்தி தலைமையிலான அரைத் தாராளவாத பிராமணத்தேசியம் தலித்மக்களது கோரிக்கஒகளைக் கவனம் கொண்டிருப்பின் பிந்திய தலித் எழுச்சிக்குத் தேவை இருந்திருக்காது. அதற்கு அவர்கள் மார்க்சியர்கள் இல்லையே? மார்க்சியரான ஆனந்த் டெல்டும்டேயும் இரட்டைத் தேசியக் கோட்பாடின்மையால் கடந்த காலத்தையே தவறாகப் புரிதல் கொள்கிறார்; பின்னர், எதிர்கால மார்க்கத்தை எப்படி சரியாக முன்வைக்க இயலும்?
எமது மண்ணில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்படைந்திருந்தபோது, அதன் ஒளியிலிருந்து கைலாசபதி தமிழர் சமூகத்தின் வரலாற்றுச் செல்நெறி குறித்து ஆழமான முடிவுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். "பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்", "ஒப்பியல் இலக்கியம்", "அடியும் முடியும்" போன்ற நூல்கள் இது தொடர்பில் ஆழமான கற்றலுக்குரியன. வீரயுகத்தில் "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்ற முழக்கத்தோடு முன்னேறிய மருதத்திணை ஏனைய திணைகளை வெற்றிகொண்டு அரசுருவாக்கத்தைச் செய்துகொண்டமையைக் காட்டியவர், தொடர்ந்த வணிக ஆதரவு ஆட்சிக்கு எதிராக நிலப்பிரபுத்துவ ஆட்சியை வெற்றிகொள்ள வெள்ளாள நிலப்பிரபுக்கள் மேற்கொண்ட வர்க்கப் போராட்டமே பக்திப்பேரியக்கம் எனக் காட்டியிருந்தார். அந்தவகையில் ஆதிக்கம்பெறும் வர்க்க இருப்பில் சாதி அமைவதை மட்டுமன்றி, சமூக மாற்றத்தில் பண்பாட்டுப் புரட்சியின் பங்களிப்பையும் காட்டியுள்ளார்.
இன்று பல்வேறு போராட்ட வடிவங்களைப் பிரயோகித்து மகத்தான பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம்; ஆயுதப் போராட்டத்தை அதியுச்சமான யுத்தமாகவும் முன்னெடுத்து மீள்பார்வைகளை அதன்மீது செலுத்திவருகிறோம். அவற்றோடு பண்பாட்டுப் புரட்சிகள் வாயிலாகவே எமக்கான சமூக மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன என்ற வரலாற்று அனுபவத்தையும் கவனம் கொள்ளவேண்டியவர்களாயுள்ளோம். வடக்கில் ஏற்றத் தாழ்வு அமைப்பு உருவாகி நிலக்கிழார்களின் கீழ் வர்ணக் கோட்பாட்டு உதவியுடன் பிராமண ஆதிக்க சமூகக் கட்டமைப்பு நிலவியபோது வைசியர்களான வணிகர்களை மேலான வர்ணமாகக் காட்டவல்ல கருத்தியல்களான பௌத்த-சமணப் புரட்சி சமூக மாற்றத்தைச் சாத்தியமாக்கின. பிராமண மேலாதிக்கம் அப்போது வீழ்த்தப்பட்டபோதிலும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்த நிலப்பிரபுத்துவச் சாதிகளை அணிதிரட்டி, அந்தச் சாதிகளுக்கும் புனிதக் கற்பிதங்களைப் புனைந்து பிராமணியம் மீளுருவாக்கம் பெறத் தடை இருக்கவில்லை. தமிழகத்தில் பக்திப்பேரியக்கம் வாயிலாக அதிகாரம் பெற்ற வெள்ளாளர்கள் பிராமணர்போல தண்டனை விலக்களிக்கப்பட்டமையைக் கைலாசபதியும் காட்டியுள்ளார்.
ஆக, பண்பாட்டுப் புரட்சியின் அவசியத்தை உணர்ந்தவர்களாயும் இந்த அமைப்பை முன்னெடுக்க முனைகிறோம். இதனை ஏற்க இயலாதவர்கள் தமது ஏற்புக்குரிய போராட்ட வடிவங்களைத் தமது அமைப்பின் வேலைத்திட்டமாக வைத்தவாறே, பண்பாட்டுத்தளத்தில் சேர்ந்து இயங்க வாய்ப்பான அளவுவரை இணைந்து இயங்கத்தடை இல்லை. அதற்கு அமைவான வெகுஜன அமைப்பாகவே புதிய பண்பாட்டுத் தளம் அமையும். இதன் வடிவம், கோட்பாட்டுநிலை, செயற்பாட்டுமுறை என்பன குறித்து கூட்டு விவாதங்கள் வாயிலாக எதிர்காலத்தில் முடிவுகளுக்கு வருவோம். எந்தத் தனி நபர் விருப்பு வெறுப்புச் சார்ந்தில்லாத, உண்மையான மக்கள் இயக்கமாக இதனை வடிவமைப்போம். "மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றின் உந்து சக்தி" என்ற புரிதலுடன் இயங்குவோம். மக்களே வரலாற்றைப் படைக்கிறார்கள் எனக் கூறிவிட்டு, மக்கள் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர்கள் பின்னால் அதன் வாய்ப்பைவைத்து தாமே தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதும்-செயற்படுவதும் என்ற தவறு ஏற்படாத வகையில் மக்கள் அமைப்புக்குரிய பண்புகளுடன் இதனைக் கட்டமைப்போம்.
இவ்வாறு தலைவர்களாவோர் பின்னால் தன்முனைப்புக்கொண்டு தாம் இட்டதே சட்டம் என இயங்குவது ஏன்? அவ்வாறு நேராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பாட்டாளி வர்க்கத் தலைமை அவசியம்; எந்தநிலையிலும் சிறுமுதலாளி வர்க்க அற்பத்தனங்களுக்கு ஆட்படாமல், விமர்சனம்-சுயவிமர்சனத்தை முன்னெடுப்போம். கூடவே கூட்டுத் தலைமை அமைப்பாக எமது கட்டமைப்பைவடிவமைப்போம்.
இந்த இடத்தில்தான் எமது "புதிய பண்பாட்டுத் தளம்(புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு)" ஏன் மலையகத்தில் தொடங்கப்படுகிறது என்பதற்கான பதில் அடங்கியுள்ளது. இலங்கையிலேயே தொழிலாளர்கள் மிகப் பெரும்பான்மையாகச் செறிந்துள்ள பகுதி மலையகம். முப்பதுகளில் மலையக மக்களுக்குத் தலைமை தாங்கிய நடேசையரும் மீனாட்சியம்மாளும் மிகச்சிறந்த தலைமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர். அவர்கள்தான் முதன்முதலில் சிங்களப் பேரினவாதம் அச்சுறுத்தலாய் வளர்வதை இனங்கண்டனர்; அதற்காக இனவாதத்திற்கு இடங்கொடுக்காது, சிங்கள முற்போக்கு சக்திகளோடு வலுவான ஐக்கியத்தை ஏற்படுத்த விடாமுயற்சி மேற்கொண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய விஸ்த்தரிப்பு வாதத்துக்கு இடமளிக்காது இந்த மண்சார்ந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். பின்னாலே இளஞ்செழியனும் தொழிலாளிவர்க்க நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக முற்போக்கான இடதுசாரித் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதற்கு உதாரணமிக்க தலைவராக வாழ்ந்து காட்டினார்; அவரும் சிங்கள முற்போக்கு சக்திகளுடன் வலுவான ஐக்கியமுன்னணி ஏற்படுத்துவதற்கு அயராது உழைத்தவர் என்பதறிவோம். இவற்றுக்கான அடிப்படை மலையகத் தொழிலாளர்களின் தலைவர்களாக இவர்கள் காணப்பட்டார்கள் என்ற புரிதல் அவசியமாகும்.
அத்தகைய தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியாக முன்னேற வேண்டும் என்ற திடங்கொள்வதற்காகவே அட்டனில் இந்த அமைப்பின் அங்குரார்ப்பணத்தை மேற்கொள்கிறோம். கொம்யூனிஸ்ட்டுகளது உறுதியான தலைமை மலையத்தில் காணப்பட்ட எண்பதுகள்வரை மலையகம் ஆளுமையோடு இருந்துள்ளது. முற்போக்கு புத்திஜீவிகள் எல்லாவகையிலும் மலையகத் தொழிலாளர்களின் புத்திரர்களாகத் திகழ்ந்தார்கள். எண்பதுகளுக்குப் பிந்திய உலகமயமாதல் சூழல் புதிதாக எழுச்சியுற்ற புத்திஜீவிகளை மலையகத் தொழிலாளர்களிலிருந்து அந்நியப்படுத்தியிருந்தது. இதனால் ஏற்பட்ட பலவீனங்களை அறிவோம்; மீண்டும் தொழிலாளர்களின் புத்திரர்கள் எனும் உணர்வுகொள்ளும் புரட்சிகர  புத்திஜீவிகளை தொழிலாளர்களும் அணிதிரட்டப்படும் எமது அமைப்பினால் உருவாக்கும்வகையில் எமது செயற்பாடுகளைக் கட்டமைப்போம். அனைத்து வகைகளிலும் புதிய பண்பாட்டாளர்களாய் எம்மைப் புடமிட ஏற்ற வேலைத்திட்டத்தைக் கண்டடைவோம்.
இந்தத் தொழிலாளிவர்க்கக் குணாம்சத்தைச் சிறுமுதலாளிவர்க்கப் பண்பு மேவியுள்ள ஏனையபகுதிச் செயற்பாட்டளர்கள் வந்தடையப் புதிய பண்பாட்டுத் தளம் தன்னாலான பங்களிப்பை நல்கும். எமது அங்கத்தவர்கள் தன்முனைப்புக்கு மேலாக சமூக உணர்வை முன்வைப்பவர்களாக இருப்பர்; முழு நாட்டின் நலனுக்கு உட்பட்டதாக அவரவர் பிரதேச நலத்தைக்கருதி அதன் மேம்பாட்டுக்காகப் போராடுவோம்; புத்திஜீவிகள் தொழிலாளிவர்க்க உணர்வை வரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவர்; நீண்டகால நோக்கிற்கு பாதகம் விளைக்காத உடனடிக் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவோம்; நாம் தொடக்குனர் என்றபோதிலும் மக்களே வரலாற்றைப் படைப்பவர்கள் என்பதில் எப்போது தெளிவுடையவர்களாய் இருப்போம்.

No comments:

Post a Comment