Wednesday, January 30, 2013

மலையக மக்கள் - வாழ்வும் இருப்பும் - திலகர்


மூன்று தசாப்த கால யுத்தத்துக்குப் பின்னான இலங்கையின் அரசியல் சூழல் பல மாற்றங்களைக் காண விழைகின்றது. இதில் உள் - புற நோக்கங்கள் பல இருக்கலாம். எது எவ்வாறெனினும் அவரவர் அவரவருக்கு இயன்ற முறைகளிலும்  வழிகளிலும் தமது இருப்பை உறுதி செய்வதற்கான முனைகளில் ஈடுபாடு காட்டவேண்டியது அவசியமாகின்றது.

இந்த யுத்தம் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசத்தையும் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களையும் மையப்படுத்தியிருந்தாலும் அது சர்வதேசரீதியாக தமிழர், தமிழ் மொழி பேசுவோர், தமிழ்மொழி எனும் பரப்புகளுக்குள் தாக்கத்தை செலுத்தியுள்ளது. வடகிழக்கு வாழ் இலங்கைத் தமிழ் மக்களிலிருந்து தமிழ்த்தேசியத்துக்கான போர் தொடங்கியிருந்தாலும் வடகிழக்குக்கு உள்ளேயும் வெளியேயும் வாழ்ந்த- வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் அனைவரும் போருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்பும் செய்துள்ளார்கள், பாதிக்கப்பட்டுமிருக்கிறார்கள். தமிழ்த்தேசியப் போராட்டத்தின் தாற்பரியங்களை தேடியறியாது அது தமக்கானதும்தானா என்பதையும் அறியாது அந்த களத்திலும் உணர்வுரீதியாகவும் பங்கேற்றவர்கள்  இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள். இதனால் போரினாலான பாதிப்புகளில் ஏனையோர் போன்றே மலையக மக்களும்  பெரும் துன்பப்பட்டுள்ளார்கள். 

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் தமிழ்த் தேசியப் போராட்டத் தரப்பினரால் வெளியேற்றப் பட்டதன் பின்னர் தமக்கும் தமிழ்த்தேசியத்துக்கான  விடுதலையில் பங்குண்டு என்கிற மனநிலை முஸ்லிம்களிடத்தில் மறைந்துவரத் தொடங்கியதையே அரசியல் சூழலில் அவதானிக்க முடிகின்றது. மறுபுறத்தில் மலையக அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் உள்ள தலைவர்கள் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், தன்னை தமிழ்த் தேசியவாதிகளாகக் காட்டிக் கொண்டும், தமிழ்த்தேசியப் போராட்ட அமைப்புகளுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தும் மலையக மக்களை தமிழ்த்தேசிய கருத்தியலில் மூழ்கடித்து வைத்திருந்தனர்.இதற்கு பல ஆதாரங்களைச் சொல்லலாம்.

ஞாபகமூட்டலுக்காக, ஈரோஸ் தமது 13 அங்கத்தவர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்றை மலையக மக்களுக்காக ஒதுக்கியமை (அமரர் இராமலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் - ராகலை), திம்பு கோட்பாட்டில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பற்றிய ஒரு அத்தியாயம் உள்வாங்கப்பட்டமை, அமரர் சந்திரசேகரன் (மலையக மக்கள் முன்னணியின் தலைவர்) தமிழ்த்தேசிய வடகிழக்கு அமைப்புகளுடன் இணைந்து ஆரம்பகால அரசியல் நடவடிக்கைகளில் செயற்பட்டமை, பின்னாளில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நேரடியாக  தொடர்பு வைத்திருந்தமை, உதவி செய்தமை, சிறை சென்றமை, தவிரவும் அமரர் சந்திரசேகரன் மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் போன்றோர் பொங்குதமிழ் நிகழ்வின் பிரதானமானவர்களாக கலந்துகொண்டமை, 2002ல் போர்நிறுத்த உடன்பாடு நிலவிய காலத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் படத்தையும் தனது படத்தையும் ஒரே சுவரொட்டியில் சேர்த்து மலையகம் உட்பட கொழும்பு நகரங்களில் ஒட்டியதோடு பொங்குதமிழுக்கு சமனான ஒரு நிகழ்வை நுவரெலியாவில் நடாத்தியமை போன்றவற்றை இப்போதைக்கு கூறிக்கொள்வோம்.

இத்தகைய உந்துதல்களினால் மலையக இளைஞர்கள் பலரும் தமிழ்த் தேசியப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு உயிரிழப்பு, சிறைவாசம், எவ்விதத் தொடர்புமில்லை எனினும் தன்னை உறுதிப்படுத்த அடையாள அட்டை இல்லாத காரணத்தால் வருடக்கணக்கில் சிறைவாசம் என  தமிழ்த் தேசியப் போராட்டத்தில் மலையக மக்கள் விரும்பியோ விரும்பாமலோ  பங்காளிகளாகிவிட்டனர்.

இவர்களின் அரசியல் தொழிற்சங்கத் தலைமைகள் தம்மையும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டதன் மூலமும் தமிழ்த் தேசியப் போராட்டத்தலைமைகள் அந்த ஆதரவை ஏற்றுக்கொண்டதன் மூலமும் மலையக மக்கள் தமது உண்மையான பிரச்சினைகளைப்பற்றி அக்கறை கொள்ளாது போனார்கள். நாளை உருவாகப் போகும் தமிழருக்கான நாட்டில் தமக்கும் பங்குண்டு என்ற கனவிலேயே அவர்கள் வாழ்ந்துவிட்டதாகத் தோன்றுகிறது. அந்த அப்பாவி மக்களின் கனவுகளுக்கு அவர்களது தலைவர்களும் ஏட்டிக்குப்போட்டியாக தீனி போட்டிருப்பதை மேற்சொன்ன நிகழ்வுகளால் விளங்கிக் கொள்ளலாம்.  

இன்று தமிழ்த் தேசியத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் முன்னெடுப்பாளர்களுக்குச் சாதகமாக அமையாத முடிவினை தந்திருக்கிற ஒரு சூழலில், ஆயுதப்போராட்டத்தின் பின்னான அரசியல் தலைமைகள் ஆளும் பெரும்பான்மை சிங்களத் தலைமைகளிடம் பேச்சுவார்த்தை நடாத்தித்தான் தீர்வுகளைக் காணவேண்டும் என்கிற நடைமுறை நிலவுகின்ற சூழலில் மலையக மக்களின் இருப்பு, வாழ்வு குறித்து யார் எத்தகைய முடிவை நோக்கி நகர்த்துவது என்பது இப்போது எழுந்திருக்கும் வினா.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலை யக மக்களின் 250 ஆண்டுகால இலங்கை வாழ் வரலாற்றில் 70 வருடகால அரசியல் தொழிற்சங்க வரலாறும் அடங்குகின்றது.  1947களில் இவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களைக் கொண்டிருந்தனர். அது இனவாதிகளின் கண்களை உறுத்தவே மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. பின்னர் 1977 வரை நியமனத் தெரிவின் மூலம் அரசியல் காலம் தள்ளியமையும் 1977க்குப்பின் இன்றுவரை அவர்களின் அபிவிருத்திப் பணிகள் என்ற போர்வையில்  அரசாங்கத்துடனான கைகோர்ப்புடனும் அரசியல் நகர்ந்து செல்ல இன்னும் அடிப்படை பிரச்சினைகளில் இருந்து முழுமையாக விடுபடாத மக்கள் கூட்டமாகவே வாழ்ந்து வருகின்றனர். 

எவ்வகையிலேனும் ஏற்பட்டிருக்கும் அபிவிருத்திகளை புறந்தள்ளிப் பார்க்காது இவர்களது அடிப்படை பிரச்சினைகள் குறித்து பார்வையை செலுத்துவது பொருத்தமானது. இன்னும் மலையகத் தமிழர்களில் பலருக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் இல்லை அல்லது முறையாகப் பதியப்படுவதில்லை. இன்னும் மலையகத் தமிழர்களில்  பலருக்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை  இல்லை. தமது ஜனநாயக உரிமையைப் பாதுகாக்கும் வாக்குரிமை முழுமையாக இல்லை அல்லது வாக்காளர் இடாப்புகளில் அவர்களை பதிவு செய்துகொள்வதில் திட்டமிட்ட புறக்கணிப்பு இடம்பெறுகின்றது. ஏன் இவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகள் என்றுகூட இன்னும் முழுமையாக பிரகடனப்படுத்தப்படவில்லை. இந்த நிலைமைக்கு காரணம் என்ன?

1948ல் குடியுரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் அதனை மீளப் பெறுவதில் ஏற்பட்ட அரசியல் புறப்படுகைகள் 1960களில் பெருவாரியாக இருந்ததும் 1977க்குப்பின் வாக்குரிமை சிறுகச்சிறுக கிடைக்கத் தொடங்கியதும் மந்தமானது. வாக்குரிமையைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அதனாலான அறுவடைகளை சிலர் தமது குடும்பம் சார்ந்த அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ள, மற்றையோர் அவர்களிடம் பிழைப்பு நடாத்தும் ஒரு போக்கு வளரத் தொடங்கியது. இந்தப்பட்டியலுக்குள் படித்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் பலர் அதிகாரி பதவிகளில் ஒட்டிக் கொண்டமை அரசியல் வறட்சிநிலைக்கு ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.

1977க்குப் பின் தமிழ்த் தேசியப் போராட்டம் வெகுஜனமயப்பட்டதோடு, தாம் தெரிவு செய்த தலைவர்கள் அமைச்சர்களாவ தற்கே என்றும் தமது உரிமைக்கான போராட்டம் தமிழ்த் தேசியப் போராட்டத்துடன் இணைந்தது என்றும்  அது இறுதியில் கிடைக்கும் என்ற மனப்பாங்கிலும் மலையக மக்கள் இருந்துவிட்டனர் அல்லது அவ்வாறான மனப்பாங்கை தமிழ்த்தேசிய ஆதரவு ஊடகங்கள் தோற்றுவித்தன. எனவே தாம் வாக்களித்தவர்கள் அமைச்சுப் பதவிகளுடாக தமக்கு அபிவிருத்திப் பணிகளை பெற்றுக் கொடுப்பதையே அரசியல் உபாயமாக காட்டிக் கொள்ள மக்களும் அந்த கலாசாரத்திற்கு பழக்கப்பட்டுவிட்டனர். தமது அடிப்படை உரிமைகளான பிரஜாவுரிமை, பிறப்புப்பதிவு, தேசிய அடையாளம், வாக்குரிமை போன்ற விடயங்களை மானசீகமான தலைவர்கள் பெற்றுத்தரப் போகும் பெருந்தீர்வில் அடைந்துவிட முடியும் என வாளாவிருந்துவிட்டார்கள் அல்லது அது குறித்து சிந்திக்காமலேயே இருந்துவிட்டார்கள்.

ஒருபுறம் 1977 முதல் அமைச்சுப்பதவிசார் அரசியற்தலைமைகளுக்கு பழகிப்போன இந்த மலையக மக்களை மறுபுறம்  தமிழ்த் தேசியத்தலைமைகள் எவ்வாறு அணுகின என்பதும் ஆராயப்பட வேண்டியது. திம்பு கோட்பாட்டில் மலையக மக்களின் பிரஜாவுரிமை பிரச்னை முன்வைக்கப்பட்டமையை மறுப்பதற்கில்லை. எனினும் 2002ம் ஆண்டு போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் நடாத்தப்பட்ட நேரடி பத்திரிகையாளர் மாநாட்டில் வே.பிரபாகரன் தெரிவித்த கருத்துகள் மலையக மக்கள் குறித்த தமிழ்த்தேசிய போராட்டத் தலைமையின் உண்மையான பக்கத்தைக் காட்டியது. மலையக மக்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் தமது  பிரச்சினைகளைத் தாமேதான் பார்த்துக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். அந்த மக்கள் யாருக்கு வாக்களித்தார்களோ அவர்களிடம்தான் தமது  பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனும் தொனிப்பட கருத்துத் தெரிவித்தார். 

ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய விடுதலை என உயிர் கொடுக்க முன்வந்த, யுத்த சூழ்நிலையினால் தமிழர்கள் என்ற பொது அடையாளத்தில் வாழ்வைத் தொலைத்த மலையக மக்கள் தமது மானசீகமான தலைமை தம்மைப்பற்றி கொண்டிருக்கும் கருத்து குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டிய காலம் அப்போதே தோன்றியிருந்தது. ஒருவேளை யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்ந்து சமாதான உடன்பாடுகள் தமிழ்த் தேசியத்துக்கு சாதகமாக எட்டப்பட்டு வடகிழக்குவாழ் தமிழ் மக்களின் நிலைமை இன்றைய நிலைமையைப் போலல்லாது இருந்திருப்பினும்கூட மலையக மக்களின் நிலை இப்போதுள்ள நிலையிலிருந்து  மாற்றத்தையேனும் கண்டிருக்காது என்பதுதான் யதார்த்தம். எனவே தமிழ்த்தேசியப் போராட்டத் தலைமைகளாலும் அதனைப் போற்றிப் புகழ்ந்த தமது தலைமைகளாலும் பௌதீக அபிவிருத்திக்கு அப்பால் அரசியல் மட்டத்தில் கைவிடப்பட்டுள்ள மலையக மக்களின் அடிப்படை தேவைப்பாடுகள் குறித்த கவனம் செலுத்துதல் இப்போது இன்றிமையாததாகின்றது.

மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளான பிறப்புச் சான்றிதழ், அடையாள அட்டை, வாக்குரிமைப் பதிவு போன்றன யாரால் நிறைவேற்றப்படுதல் வேண்டும்? படித்தவர் முதல் பாமரர் வரை தேர்தல்களில் தெரிவு செய்யப்படும் அரசியல்வாதிகளிடம் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வேண்டி நிற்கின்றனர். அவர்களும் தமக்குப் போதுமான அதிகாரத்தை வழங்குவதன் மூலம் (தமக்கு அளிக்க வேண்டிய வாக்குகளைத்தான் அப்படி சொல்கிறார்கள்) இந்த உரிமைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியளித்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்வதுமே இடம் பெற்று வருகின்றது. மாறாக உண்மையாகக் கேட்டுப் பெறவேண்டிய தேவைப்பாடுகள் மறைக்கப்பட்டுள்ளன அல்லது தெரியாமலிருக்கின்றன. 

மேற்படி அடிப்படை விடயங்களை மக்கள் அடைந்து கொள்ளும் அரச நிர்வாக பீடம்  கிராமமட்ட அரச நிர்வாகியான கிராம உத்தியோகத்தர் எனும் கிராம நிலதாரி கையிலேயே உள்ளது. இவரே அரசாங்க நிர்வாகப் பொறிமுறையின் கடைசி நிலை அதிகாரி. மக்களுடன் நேரடியாக தொடர்புகளை  மேற்கொள்பவர். மலையகத்தமிழர் செறிந்து வாழும் நுவரெலியா, பதுளை மாவட்டங்களில்  மாத்திரமே இவர்களுக்காக இவர்களில் இருந்தே ஏறக்குறைய 100 பேர் கிராம உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர். இந்த நியமனத்தைப் பெற்றுக் கொடுத்தது  யார் என வீராப்பு காட்டுவதிலேயே தலைவர்களின் காலம் கழிகின்றது. நுவரேலியா, பதுளை, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் கொழும்பிலுமாக சுமார் 15 லட்சம் மலையகத் தமிழர் வாழ்கின்றனர். ஆக 15 லட்சம் பேருக்கு 100 கிராம சேவகர்களைக் கொண்டதாக மாத்திரமே இந்த மக்கள் நிர்வாகக் கட்டமைப்பில் பங்கு பெறுகின்றனர் என்பதே உண்மை. மலையக மக்கள் செறிவாக உள்ள பிரதேசங்களில் 120 சிங்களர்களுக்கு ஒரு  கிராம அதிகாரி என்றிருக்கையில் 9000 மலையகத் தமிழர்களுக்கு ஒரு கிராம அதிகாரியே இருப்பதாக  புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இலங்கை அரசாங்கம் தற்போது நிர்வாக எல்லையை மீள் நிர்ணயம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்த மீள்நிர்ணயத்தில் அரசத் தரப்பு தமக்கே உரிய பாணியில் செயற்படும் என்பதில் எவ்வித மாற்றுநிலையும் இருக்கப்போவதில்லை. அதற்காக மலையக மக்கள் தமது தேவைகள் குறித்து கொடுத்ததைப் பெற்றுக்கொள்ளும் கையறு நிலையிலிருப்பதா அல்லது தமது தேவைப்பாடுகள் குறித்து காரணகாரியங்களுடன் வாதங்களை முன்வைத்து அதனை நிறைவேற்ற முயற்சிப்பதா? நிர்வாக எல்லை மீள்நிர்ணயம்தான் அதிகாரப்பகிர்வின் மறைமுகமான வடிவம். அரச நிர்வாகப் பொறிமுறையில் மலையக மக்கள் எவ்வாறு உள்வாங்கப்படப் போகிறார்கள்  என்பதில்தான் அவர்களது எதிர்கால இருப்பு குறித்த கேள்வி தங்கியுள்ளது.

மலையக மக்களின் பலம் அவர்கள் இலங்கையில் 15 லட்சம் பேர் வாழ்கின்றனர் என்பதாகும். ஆனால் இந்த 15 லட்சம் பேரும் நிலத்தொடர்பற்ற வகையில் தமது வாழ்விடங்களைக் கொண்டுள்ளது இவர்களின் பலவீனமாகும். வடகிழக்கு வாழ் இலங்கைத் தமிழர் போன்று இவர்கள் குறித்த ஒரு நிலத் தொடர்புள்ள பிரதேசத்தில் வாழவில்லை. பல்வேறு மாவட்டங்களில் சிங்கள மக்களுடன் இணைந்ததான பிரதேசங்களில் வாழ் கின்றனர். எனவே அரசநிர்வாக விடயங்களில் சிங்கள கிராம நிலதாரிகள் இவர்களை புறக்கணிப்பது இலகுவாகிவிடுகின்றது. இவர்கள் செறிவாக வாழும் நுவரெலியா பதுளை மாவட்டங்க ளிலேயே புறக்கணிப்பு பரவலாக இருக்கும்போது செறிவு குறைவாகவுள்ள மாவட்டங்களில் நிலை படுமோசமாகவே இருக்கும்.

பெருந்தோட்டங்களில் கூலித்தொழிலாளர்களாக  வேலை செய்யும் மலையகச் சமூகத்தின் பெரும்பகுதியினர் குடியிருப்பு அடிப்படையில் தோட்டங்களில் (மறுவடிவில் கிராமத்துக்குரிய சில பண்புகளுடன்) வாழ்கின்றனர். அந்த தோட்டப்பிரிவுகள் சில ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம் ஒரு கிராமமாக கணிக்கப்பட்டு அதற்குரிய அதிகாரியாக மலையகத்தமிழர் ஒருவரை நியமிப்பது அவசியம். ஆகக் குறைந்தது மக்கள் தமது அரச நிர்வாகப் பொறிமுறைக்கு உட்பட்ட தேவைகளை நிறைவு செய்துகொள்ள வழிமுறை இதுவொன்றேயாகும்.

அதேபோல மலையக மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில்  அவர்களிலிருந்தே கிராம நிலதாரிகள்  நியமிக்கப்பட வேண்டும். அதுவே இப்போதைய அரசியல் கோரிக்கை. மலையக மக்களின் பாராளுமன்ற அங்கத்துவ எண்ணிக்கையின் குறைவு பற்றிக் கவலைப்படும் பலர் அந்த தெரிவுக்கு அடிப்படையான வாக்குரிமை விடயத்தை நிர்வாகரீதியாக செயலாற்றக்கூடிய அதி காரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று குரல் எழுப்பாமை முட்டாள்தனமானது எனச் சொல்வது தவறில்லை. ஒரே தடவை 11  உறுப்பினர்கள் மலையக மக்களின் சார்பாக பாராளுமன்றத்தில் இருந்தபோதும்கூட இந்த அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. ஏனெனில் பாராளுமன்றம் அதில் பேச்சு என்பன உணர்ச்சிப்பூர்வமான செய்திகளை பத்திரிகைகளில் படிக்கத் தரலாமே தவிர உண்மையான பணியை ஆற்ற உதவப் போவதில்லை என்பதுதான் யதாரத்தம்.

மலையக மக்களுக்கு ஆகக்குறைந்தது அவர்கள் வாழ்கின்ற கிராமத்தின் அதிகாரியாக அவர்கள் சார்ந்த ஒருவரை  நியமிக்கக் கோரும் அரசியல் முன்னெடுப்பே இங்கு மிகமிக அவசியம். சில மேதாவிகளுக்கு இது அற்ப கோரிக்கையாகக்கூட தெரியலாம். ஆனால் இந்த அதிகாரி மட்டத்தில்தான் இந்த மக்களின் எதிர்கால இருப்பு இருக்கின்றது. இந்த அதிகாரிகள் இவர்களை புறக்கணிக்கின்றபோது தேசிய நீரோட்டத்தில் இருந்து இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதன் தொடர்ச்சியாக இவர்கள்  வாழ்வு பண்பாட்டு மாற்றம் மொழிமாற்றம் என தமது இருப்பை இழந்து பின்னோக்கிச் செல்லும் பண்பை பல பிரதேசங்களில் அவதானிக்க முடிகின்றது. இது சில வருடங்களுக்குள்ளாகவே நிலத்தொடர்பற்ற வகையில் பரந்து வாழும் தமது  சகமக்களிடம் இருந்து சிறுகச்சிறுக இவர்களை துண்டித்து  இந்த மக்களின் செறிவு மிகமிக தாழ்ந்த நிலைக்கு தள்ளிவிடுவதற்கான வழியாகி விடும். இது இப்போதைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிலை.

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் வாழும் மலையக மக்கள் தமது மொழி அடையாளத்தை முதலாவதாக இழந்து வருகிறார்கள். அதேநேரம் இனரீதியாக தொடர்ந்தும்  தமிழர்களாகவே காட்டப்படுகின்றனர். இது இவர்களை தோட்டக்கம்பனிகளுக்கு அடிமைத் தொழிலாளியாக மட்டுமல் லாது உள்ளுர் மக்களுக்கே அடிமையாக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் அபாயத்தைக் கொண்டுவந்துள்ளது. தமிழ் பேசும் தமிழராகவே தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள சிரமப்படும் நிலையில் சிங்களம் பேசும் தமிழராக எந்தளவுக்கு இது சாத்தியப்படும் என சிந்திக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் நிலவுடமையாளரல்ல. இன்றும் கூலித்தொழிலாளர்களே. எனவே அடிமைப் போக்கு விரைவாக வளர்ந்துவிடும். சிலசமயம் இவர்கள் அழகாக உடுத்தக்கூடாது, தங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றெல்லாம் சிங்கள கிராம இளைஞர்களினால் அசுசுறுத்தப்படும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

நிலத்தொடர்பற்ற வகையில் வாழும் இம்மக்களுக்கு தனியான மாவட்டம், மாகாணம் அல்லது தனியான அலகு கேட்பது  ஒற்றையாட்சி உக்கிரமடைந்து வரும் இலங்கை அரசியலில் எந்தளவு சாத்தியமானது என்பது சிந்திக்க வேண்டியுள்ளது. அதேநேரம் மனப்பாங்கு ரீதியாகவும் குடியிருப்பு ரீதியாகவும் (10- 20 குடும்பங்களைக் கொண்ட ஒரு லயம். அவ்வாறு 10-15 லயங்களைக்கொண்ட ஒரு தோட்டம்) குழுமமாக வாழுவது மாத்திரமே இப்போதைக்கு மலையக மக்களின் பலம். இவ்வாறு குழுமமாக வாழும் இவர்கள் மொழி அடிப்படையில் ஓர் அடையாளத்தைப் பெறுகின்றனர். பல இடங்களில் சகோதர முஸ்லிம் மக்களுடன் இந்த அடையாளம் வலுப்பெறுகிறது. இதைவைத்து அந்த கிராமத்தின் அதிகாரியை தமதாக்கிக் கொண்டு தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வழியை காணுதல் வேண்டும்.

இது பின்னாளில் கிராமப்பிரிவுக்கு அடுத்ததான பிரதேச செயலகப்பிரிவுகளையும் இப்போதைக்கு இவர்களை உள்வாங்காத உள்ளூர் ஆட்சிமன்ற நிர்வாகத்தையும் இவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான அடிப்படையாக அமையும். அவ்வாறில்லாது அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம் போடுவது அத்திவாரமில்லாத கட்டிடத்தில் எத்தனை மாடிகள் கட்டுவது எனும் சிந்தனைக்கு ஒப்பானதாகவே அமையும். 

அரசாங்கம் இப்போதைக்கு வடகிழக்குக்கு வெளியே 28 பிரதேச செயலகங்களின் அரசப்பணிகளை இருமொழிகளிலும் (சிங்களம், தமிழ் )  ஆற்றவேண்டும் என உத்தியோகபூர்வ அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதில் 20 பிரதேச செயலகங்கள் மலையக மக்களின் செறிவு கூடியவை. இந்த திட்டத்திற்கான புள்ளிவிபர அடிப்படையில் இன்னும் 60 பிரதேச செயலகங்களை இவ்வாறு மாற்றிப் பெறமுடியும். அப்போது மலையக மக்கள் வாழும் பிரதேசம் அதிகம் உள்வாங்கப்படும். சிங்களப் பிரதேசத்தில் வாழ்கின்ற மலையக மக்கள் தமக்கான பணியை தமது மொழியில் ஆற்றும் வசதியை இது பெற்றுக் கொடுக்கும். அதேநேரம் அந்த பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு கீழாக வரக்கூடிய கிராம நிலதாரி பிரிவுகள் மலையக மக்களுக்கானதாக அமையும்போது இப்போதைய புள்ளிவிபரங்களின்படி 700 முதல் 800 கிராம சபை பிரிவுகள் மலையக மக்களுக்கானதாக அமையும் வாய்ப்புள்ளது. 

தமிழ்மொழியில் நிர்வாகச் செயலாற்றக்கூடியதான பிரதேச செயலகப்பிரிவுகளிலும் கிராமசபை பிரிவுகளிலும் அதிகாரிகளாக மலையகத்தமிழர்களே நியமிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையே இப்போதைக்கு வலுவாக முன்வைக்கப்படுதல் வேண்டும். வடகிழக்கு வாழ் தமிழ் அரசியல் தலைமைகள் இந்த கோரிக்கையை முன்னெடுக்கப் போவதில்லை. ஏனெனில் இதெல்லாம் அங்கு ஏற்கனவே உண்டு. எனவே மலையக மக்களுக்கான கோரிக்கைகள் மலையகத்தில் இருந்தே எழும்ப வேண்டும். அதற்காக அரசியல்வாதிகள் தான் இந்த குரலை எழுப்ப வேண்டும் என்று மௌனித்து  இருப்பது தவறு. அவர்கள் அறியாததையெல்லாம் அவர்களிடம் எதிர்பார்த்து  நிற்பது மகா தவறு. மலையக மக்களுக்கான குரல் மலையக மக்கள்சார் அக்கறையுள்ள அனைத்துத்தரப்புக்களினாலும் எழுப்பப்படுதல் வேண்டும்.  இதுவே எதிர்கால மலையக மக்களின் இருப்பைத் தீர்மானிக்கும்.

நன்றி - நமது மலையகம்.கொம்

No comments:

Post a Comment