Thursday, September 16, 2010

கட்சி இலக்கியமும் கட்சிசாரா இலக்கியமும்- லெனின் மதிவானம்

மனித சமூகத்தின் வளர்ச்சியை தூண்டும் சக்தியாக அதிகாரத்திற்கு எதிராக போராடும் வர்க்கங்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவே சமூகத்தை மாற்றியமைக்க முடியும். தமது அடிமை முறையிலிருந்து விடுப்பட்டு பொருளாதார ரீதியாகவும் ஆத்மார்த்த ரீதியாகவும் சுதந்திர பிரஜையாக வாழ முடியும். இந்த விடுதலையை அடைவதற்கு தொழிலாளர்கள்-விவசாயிகள் தங்கள் நலன்சார்ந்த கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர சிந்தாந்தம் இன்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது. அவ்வகையில் மிகவும் முன்னேறிய சித்தாந்தத்தையும் அது பெற்றிருக்க வேண்டும்.

உழைக்கும் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்றபோது கட்சி ஸ்தாபனம் குறித்தும் அதனடியாக எழுகின்ற கட்சி இலக்கியம் குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகின்றது. கட்சி இலக்கியம் என்பது பாட்டாளி வர்க்க கட்சியை முதன்மைப்படுத்தியே படைப்பாக்கப்பட வேண்டும் என்பது அதன் நியதியாகும். கட்சியின் போராட்டங்களை சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுத்து செல்வதற்கான தளம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இத்தகைய மக்கள் எழுச்சிக்காகவும் புரட்சிகர பணிக்காகவும் பரந்துபட்ட மக்களை விழிப்பு கொள்ளச் செய்வதும் அணிதிரட்டுவதும் கட்சி இலக்கியத்தின் பிரதான இலட்சியமாகும். மாறாக கட்சியை மிகைப்படுத்தி, கட்சி உறுப்பினர்களை புனிதர்களாக காட்ட முனைவது கட்சி இலக்கியமாகாது. அதே சமயம் கட்சியில் உள்ள சிறுசிறு முரண்பாடுகளை பிரதானமாக்கி அதனை வெகுசனத் தளத்திற்கு கொணர்ந்து கட்சியை சிதைப்பதும் கட்சி இலக்கியமாகாது. மாக்ஸிம் கோர்க்கியின் ‘தாய்’, யங்மோவின் ‘இளமையின் கீதம்’, நிக்கொலாய் ஒஸ்றோவஸ்க்கி ‘வீரம் விளைந்தது’ முதலிய படைப்புகள் கட்சி இலக்கியத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.



மேற்குறிப்பிட்ட அடிப்படையில் நோக்குகின்ற போது கட்சி சாராத எழுத்தாளர்கள் யாவரும் சமூகமாற்றத்திற்கான பங்களிப்பினை வழங்கவில்லையா என்ற வினா எழுகின்றது. அத்தகைய அளவுக் கோல்களை கொண்டு பார்க்கின்ற போது சீன இலக்கிய முன்னோடி லூசுன் கூட நிராகரிக்கபடவேண்டியவராவார். லூசுன் குறித்து மா ஓ கூறிய பின்வரும் வரிகள் கவனத்தில் கொள்ளத் தக்கதொன்றாகும்.



” லூசுன் கட்சியில் இல்லாத ஒரு கம்யூனிஸ்ட். அவர் சீன கலாசார இயக்கத்திற்கு மாபெரும் பங்களிப்பு நல்கியவர். அவர் சிறிய காற்றுக்கு வளைந்துக் கொடுக்காத புல் போன்றல்லாது பெரும் புயல் காற்றுக்கும் ஈடு கொடுத்து நிற்கக் கூடிய பெரு விருட்ஷம் போன்றவர்“
இப்பின்னணியில் நோக்குகின்ற போது ஒருவர் கட்சியில் சந்தா செலுத்தி அங்கத்தவராகிவிட்டார் என்பதற்காக மட்டும் அவரை புரட்சிகர இலக்கியவாதி என நாமம் சூட்டிவிடமுடியாது.சில சமயங்களில் அவ்வாறனவர்களின் சிந்தனை, செயற்பாடுகள் மக்கள் விரோதமானவையாக அமைந்திருந்ததை நாம் பல சந்தர்ப்பங்களில் காணக் கூடியதாக உள்ளது.
இன்றைய சூழலில், சகலவிதமான ஜனநாயக தேசிய முற்போக்கு மார்க்சிய சக்திகளையும் இணைத்துக் கொண்டு பொது வேலைத்திட்டத்தில் பங்கெடுக்கவேண்டிய காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றொம். வெகுசன சக்திகளை உருவாக்காத வெறும் புல்லுருவித்தனமான வரட்டுவாதமானது வெறும் கோசங்களின் அடிப்படையிலான புலம்பல்களுக்கே இட்டுச் செல்லும்.  

தனிப்பட்ட எழுத்தாளர்கள் மட்டுமல்ல கலை இலக்கிய இயக்கங்கள் கூட ஐக்கியப்பட்டு செயற்படவேண்டியுள்ளது. அரசியலில் எவ்வாறு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமோ அவ்வாறே கலை இலக்கியத்திலும் ஒரு ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment