Wednesday, September 1, 2010

திருக்குறலுக்கும் கல்வியியலுக்குமான புதிய பார்வை-புதிய பங்களிப்பு

குறலில் கல்விச் சிந்தனைகள் ஒரு சமூக நோக்கில் மறுவாசிப்பு என்ற நூல் கலாநிதி ந. இரவீந்திரனால் எழுதப்பட்டு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் (விஞ்சு பதிப்பகத்துடன் இணைந்து) வெளியீடாக வெளிவந்துள்ளது. பொதுவாகவே கலாநிதி ந. இரவீந்திரனின் எழுத்துக்கள் சமூக அநீதியையும் அடக்குமுறையையும் அவற்றுக்குரிய பண்பாட்டு தளத்தில் அடையாளம் கண்டு அதற்கு எதிரான பார்வையை வெளிப்படுத்தியுள்ளன.







இந்நிலையில் திருக்குறளின் வழி கல்வி சிந்தனைக் குறித்த ஆய்வையும் புதியதோர் கோணத்தில் ஆய்வு செய்ய முனைகின்றது இந்நூல்.






மிக அன்மைக் காலம் வரை திருக்குறல் இரண்டு தளங்களில் நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. ஒன்று இன்றைய உலகமயமாதல் சூழலில் மேற்கு நாடுகளின் மேலாதிக்க பண்பாட்டை மக்களிடம் திணிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பண்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அதன் வினைப் பொருளாக தோன்றியுள்ள பின் நவீனத்துவம் முதலிய கோட்பாடுகள் “அடித்தள மக்களின் விடுதலைக்கு தடையாக மதப்பற்றும் சாதிப்பற்றும் மட்டுமல்ல மொழிப்பற்றும் கூட தடையாக இருக்கின்றன” என்ற அடிப்படையில் தமிழரின் பண்பாட்டு பாரம்பரியங்கள் சகலவற்றையும் நிராகரிக்கின்றன. தமிழரின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் வெறும் பார்பணிய கலாசாரமாக மட்டுமே கருதியதால் ஏற்பட்ட சிந்தனையாகும். இத்தகைய சிந்தனைகளின்; மூலமாக நமது பண்பாட்டில் முகிழ்ந்து வந்த போர்குணமிக்க உள்ளடக்க கூறுகளையும் வடிவங்களையும் நிராகரிப்பதுடன் மக்களின் வாழ்விலிருந்து விடுபட்டு தொலைதூர தீவுக்குள் ஒதுங்கி விட்ட இந்த புத்திஜீவிகள் திருக்குறலை நிராகரிகரிப்பது தற்செயல் நிகழ்ச்சியல்ல.






மறுபுறத்தில், முற்போக்குவாதத்தையும் மார்க்சியத்தையும் இன்றைய யதார்த்த சூழலுடன் பொருத்தி பார்க்காது வெறுமே மூல நூலை ஒப்புவிப்போரும் பாராயணம் செய்வோரும் கருதுகோள்களையும் முடிவுகளையும் மனப்பாடம் செய்துவிட்டு அவ்வப்போது மேற்கோள் காட்டி விட்டாலே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என முடங்கிய இவர்கள் திருக்குறலை நிராகரிப்பது வியப்பிற்குரியதொன்றல்ல. இந்நிலையில் திருக்குறல் பற்றிய இவர்களது பெரும்பாலான ஆய்வுகளில் திருக்குறல் குறித்து எழுந்த மொழிப்புரையே ஆய்வுக்கான மூல நூலாக அமைந்திருக்கின்றது. எனவே திருக்குறலில் வெளிப்பட்ட சமுதாயம் சார்ந்த சிந்தனையை இவர்களால் உணர்ந்துக் கொள்ள முடியாது இருக்கின்றனர். அதன் விளைவாக திருக்குறலை, நிலவுடமை மற்றும் அதிகார தரப்பு சார்ந்த நூல் எனவும் அது பெண்ணடிமைக் தனத்தை போற்றுகின்ற நூல் எனவும் கருத்து கூறப்பட்டன.






இவ்வாறானதோர் சூழலில் திருக்குறலின் மூல நூலை சமூக நோக்கில் மறு வாசிப்பு செய்த இந்நூலாசிரியர், திருக்குறலில் கல்விக் குறித்த சிந்தனை முதன்மைப் பெற்றுள்ளது, என்பதனையும் அந்நூலில் சமத்துவ நோக்கு, அதிகாரத்துவ எதிர்ப்பு, பன்மைத்துவத்தை போற்றும் நெறி, உழைப்பிற்கு முதன்மை தரும் நோக்கில் உலகியலை போற்றும் பண்பு முதலிய குறித்த பார்வைகளை சமூதாய நோக்கில் எவ்வாறு வெளிக் கொணர்கின்றது என்பதை தக்க ஆதாரங்களுடன் முன்வைக்கின்றார்.






இன்றைய காலச் சூழலில் போற்றப்படும் கல்விச் சிந்தனையாளர்களான சாக்கிரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டில், ரூசோ, பிரோபல், ஜோன்டூயி, விவேகானந்தர்,இரவீந்திரநாத்தாகூர் முதலியோர் முன்வைத்த கல்விச் சிந்தனைகள், மற்றும் யுனேஸ்கோவின் கல்விப் பற்றிய அறிக்கைகளில் கூறப்பட்ட கருத்துக்கள் திருக்குறலில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை தக்க ஆதாரங்களுடன் வெளிக் கொணர்கின்றது இந்நூல் மேற்குறித்த கல்விச் சிந்தனையாளர்கள் யாவரும் சமூகத்திற்கும் கல்விக்கும் இடையிலாக உறவுக் குறித்து சிந்தித்ததை விட, கலைத்திட்டத்தின் மூலம், பாடத்திட்டத்தின் மூலமான சமூகத்திற்கு பொருத்தமான நற்பிரஜையை உருவாக்குவதையே தமது இலக்காக கொண்டு செயற்பட்டனர். இவர்களின் சிந்தனையில் சமத்துவமற்ற சமூக அமைப்பு குறித்தோ அதனடியாக வெளிப்பட்டு நிற்கின்றன வறுமை, வேலையின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், களவு, பொய், மோசடி, ஏமாற்று என்பன குறித்தோ அவற்றினை உருவாக்கும் சமூக அமைப்பு குறித்தோ கவனமெடுக்க தவறிவிட்டனர். எனவே எல்லோருக்கும் பொதுவான, கல்வி முறையை முன் மொழிந்தார்கள். அச்சிந்தனை யதார்த்ததிற்கு பொருத்தமற்றதாக அமைந்திருந்தது.






இங்கு சமூமாற்ற சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் மாற்றுக் கல்விக்கான சிந்தனையை முன் வைத்தார்கள். அத்தகைய தமிழியியல் சூழலில் அத்தகைய சிந்தனைக்கான அடித்தளம் திருக்குறலில் இருப்பதை இந்நூலின் ஊடாக அறிய முடிகின்றது. எதிர் காலத்தில் திருக்குறலில் வெளிப்பட்டுள்ள கல்வி சிந்தனையை பாரதியார், மற்றும் மார்க்சிய சிந்தனைகளின் கல்விக் கொள்கைகளுடன் ஒப்பு நோக்குவதன் மூலமாக சுதந்திரமான கல்வி ஆய்வுகளை வெளிக் கொணரலாம். இத்தகைய ஆய்வுக்கு இந்நூல் வழிகாட்டியாக அமைந்துள்ளது எனக் கூறின் தவறாகாது.


No comments:

Post a Comment