Thursday, September 16, 2010

உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு உசுப்புகிற சிந்தனைகள் - அ.மார்க்ஸ்


(தமிழக அரசால் கோவையில் நடத்தி முடிக்கப்பட்ட உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து இருதரப்பிலிருந்தும் ஒருபட்சமான கருத்துக்களே முன்வைக்கப்பட்டன. கருணாநிதியைத் தமிழினத் துரோகியாக வரையறுக்கும் தமிழின ஆதரவாளர்கள், மாநாட்டில் பேசப்பட்ட ஆய்வுக்கருத்துக்கள் குறித்து பேசத்தயாராக இல்லை. இன்னொருபுறம் சுயநலம் தவிர வேறுதும் அறியாத கருணாநிதி ஆதரவாளர்கள் இந்த மாநாட்டைக் கருணாநிதியின் உச்சபட்ச சாதனையாக வர்ணித்துக் கொண்டாடத் தயங்கவில்லை. இந்த இரு நிலைகளிலிருந்தும் விலகி வேறுபல முக்கியமான பார்வைகளை முன்வைக்கிறது தோழர் அ.மார்க்சின் இந்த கட்டுரை. குறிப்பாக ஈழத்தில் நடந்த இறுதிப்போருக்குப் பின்னால் இணையத்திலும் வெளியிலும் உருவாகியுள்ள புதிய தமிழின ஆதரவுச்சக்திகளும் ஏற்கனவே உள்ள தமிழ்த்தேசிய சக்திகளும் கருணாநிதியை எதிர்ப்பது என்றபெயரில் திராவிடத்தையும் திராவிடச்சிந்தனைகளையும் குறிப்பாக பெரியாரின் பணிகள் மற்றும் கருத்தியல் பங்களிப்பையும் முற்றாக நிராகரிப்பது என்னும் நிலைப்பாட்டையும் எடுத்துள்ளனர். ஏற்கனவே இந்த நிலைப்பாட்டில் உள்ள குணா, நெடுமாறன், பெ.மணியரசன் போன்றவர்களுடன் இப்போது சீமான், பாரதிராஜா போன்றோரின் குரல்களும் இணைவதைக் காணமுடிகிறது. ‘திராவிடர்கள் பூர்விகக் குடியல்லர்’ என்பது போன்ற கருத்துக்களையும் ஆரியர் வருகை, சிந்துச்சமவெளியில் அமைந்த திராவிடர் நாகரிகம் போன்ற கருத்தாக்கங்களை மறுப்பதில் பார்ப்பனிய-இந்துத்துவவாதிகளுடன் தமிழ்த்தேசியவாதிகளும் இணைவது என்பது கவனிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. இந்நிலையில் தமிழ்த்தேசியவாதிகள், இந்துத்துவவாதிகள் என இருதரப்பினரும் மறுக்கும் திராவிடத்தின் இருப்பை செம்மொழி ஆய்வரங்கக் கருத்துக்கள் உறுதிசெய்வதைக் கவனப்படுத்துகிறது அ.மாவின் இந்த கட்டுரை.அதேநேரத்தில் இந்த மாநாட்டின் பின்னணியில் உள்ள கருணாநிதியின் தமிழினத்துரோகம் மற்றும் புழுத்துநாறும் வாரிசு அரசியல், புகழ்ச்சி விருப்பம் ஆகியவை குறித்தும் கடுமையாக விமர்சிக்கிறது. அதனாலேயே பொதுவாக லும்பினிக்காக எழுதப்படும் கட்டுரைகளைத் தவிர வேறு இதழ்களிலோ இணையங்களிலோ வெளியாகும் கட்டுரைகளை வெளியிடுவதில்லை என்னும் வழக்கத்திற்கு மாறாக அ.மார்க்சின் இந்த கட்டுரையை முக்கியத்துவம் கருதி வெளியிடுகிறோம். - லும்பினி)

எள்ளளவும் மனக் குறுகுறுப்போ தயக்கமோ இல்லாமல் ஒரு குடும்பத் திருவிழாவாக செம்மொழி மாநாட்டைக் கருணாநிதி அரசு நடத்தி முடித்தது குறித்த கூர்மையான விமர்சனங்கள் தமிழ் இதழ்களில் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. அது குறித்துப் பேசுவதல்ல இங்கு எனது நோக்கம்.

ஏனெனில் இதில் பங்குபெற்ற நமது உள்ளூர்த் தமிழ் ‘அறிஞர்கள்’, பேராசிரியர்கள் முதலானோர் கொஞ்சமும் வெட்கமின்றி பேரரசர் மற்றும் இளவரசியின் புகழ்பாடி நின்றதில் எள்ளளவும் வியப்பில்லை. நமது தொன்மைத் தமிழ்ப் பாரம்பரியத்தின் தொடர்ச்சிகளில் ஒன்றாக இதையும் நாம் கொள்ள முடியும் தானே. தமிழின் தொன்மையையும் தொடர்ச்சியையும் இம்மாநாட்டில் ஜார்ஜ் ஹார்ட் முதலான அறிஞர்கள் வியந்து பாராட்டவில்லையா? அதிகாரத்தை நத்திப் பிழைக்கும் புலமைப் பாரம்பரியமும் இந்தத் தொல் மரபுகளில் ஒன்றுதான் என விட்டுவிட வேண்டியதுதான். பெரியார் நமது புலமைப் பாரம்பரியம் குறித்து, அவருக்கே உரித்தான கிண்டல், நகைச்சுவை, கூர்த்த நுட்பம் ஆகியவற்றுடன் கூறியுள்ள கருத்துக்கள் நினைவில் புரள்கின்றன.

வெளிநாட்டிலிருந்து முக்கிய பல தமிழறிஞர்கள் வந்திருந்தனர். தமிழகப் பேராசிரியர்கள் பலரும் பங்குபெற்றனர். ஆனால் இன்றும் தமிழை அதன் படைப்பாற்றல் திறனை வீச்சுடன் பயன்படுத்தி வரும் நவீன எழுத்தாளர்கள் யாரும் இதில் பங்கு பெறாதது நமது கவனத்திற்குரியது. எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி முதலானோரின் பெயர்கள் நிகழ்ச்சி நிரலில் இருந்தபோதும் அவர்களும் கலந்து கொள்ளவில்லை. ராமகிருஷ்ணன் ஏதோ வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததாக யாரோ சொன்னார்கள். கோணங்கி தன்னைக் கேட்காமலேயே பெயரைப் போட்டு விட்டார்கள் என வெளிப்படையாகச் சொல்லி தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டார். மற்றபடி ஒரு காலத்தில் தவிர்க்க இயலாத இலக்கிய மற்றும் அறிவு ஜீவித ஆளுமைகளாக இருந்து, இன்று சுய முன்னேற்றத்திற்காகவும், அரசியல் மற்றும் வணிக நலன்களுக்காகவும் தமது அறிவு நேர்மை அனைத்தையும் இழந்து கருணாநிதி குடும்பப் புகழ் பாடுபவர்களாக மாறியவர்கள், பொது நிகழ்வுகளில் இரட்டைக் கரை வேட்டியுடன் வரத் தயங்காதவர்கள். இப்படியான ‘நவீன எழுத்தாளர்கள்’ சிலர் மட்டுமே மாநாட்டில் முகங்காட்டினர். (பொன்னீலனை மட்டும் வேண்டுமானால் ஒரு விதிவிலக்கு எனலாம்)கடுமையாக அரசை விமர்சித்து வருவதாகக் காட்டிக் கொள்ளும் நூல் வெளியீட்டாளர்கள் சுருக்கமாக மாநாட்டில் கடை போட்டுத் தன் பங்களிப்பைச் செய்தனர். ஜெயமோகன், சாருநிவேதிதா போன்றோர் அழைக்கப்படாததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஜெயமோகன் ஏற்கெனவே கருணாநிதியை விமர்சித்தவர். அவரை அழைக்கமாட்டார்கள். தமிழவன் போன்ற பேராசிரியர்கள், எல்லோராலும் மதிக்கப்படக்கூடிய ஆ.சிவசுப்பிரமணியம் தொ. பரமசிவன் போன்ற ஆய்வறிஞர்கள், ஞானி, தி.க.சி போன்ற ஆபத்தற்ற மூத்த விமர்சகர்கள் கூட அழைக்கப்படாததை இப்படித்தான் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. தப்பித் தவறியும் கூட அரச குடும்பத்தின் மீதும், மாநாடு குறித்தும் விமர்சனங்கள் ஏதும் பதிவாகிவிடக் கூடாது என்பதில் ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருந்துள்ளார்கள்.மாநாடு நடத்தும் இக் காலகட்டம் குறித்தும், நோக்கம் குறித்தும் மிக அடிப்படையான ஒரு விமர்சனம் தமிழ்ச் சூழலில் இருந்தது. உலகத் தமிழ் மாநாடுகளை இதுவரை நடத்தி வந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் தற்போதைய தலைவரும், எதற்காகவும் அறிவு நாணயத்தை இழக்கத் தயாராக இல்லாதவருமான ஜப்பானியத் தமிழியல் அறிஞர் நொபோரு கராஷிமா அவர்கள், இப்படியான ஒரு மாநாட்டுத் திட்டத்தைத் தமிழக அரசு முன் வைத்தபோது, இன்று உடனடியாக அதை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என உறுதியாக மறுத்தார். இன்றைய சூழலில் இப்படியான ஒரு மாநாடு குறித்த தயக்கம் என்பது ஒருபுறம். மற்றபடி ஒரு ஆராய்ச்சி மாநாட்டை இப்படி அவசர கோலத்தில் நடத்த இயலாது. 2011 வாக்கில்தான் அது சாத்தியம் என்று அவர் உறுதிபடக் கூறினார். தமிழக அரசின் அவசரத்தை எல்லோராலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஊரறிந்த ரகசியம்தான் அது. ஈழப் பிரச்சினையில் சரிந்துவிட்ட தனது பிம்பத்தைக் தேர்தலுக்கு முன்னதாகத் தூக்கி நிறுத்தி உலகத் தமிழ்த் தலைவர் என்கிற பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளும் அவரசத்தின் முன் கராஷிமாவின் உறுதி எம்மாத்திரம்.தமிழாராய்ச்சி மாநாட்டைத்தானே நடத்த முடியாது என்கிறீர்கள், ‘உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு' என்பதாகப் புதிய பெயரைச் சூட்டி நடத்துகிறேன் பாருங்கள் எனக் களமிறங்கினார் கருணாநிதி. சிவத்தம்பி முதலான மூத்த தமிழறிஞர்கள் அதற்கு ஒத்துழைத்தனர். சிவத்தம்பி அவர்களுடன் மிக நெருக்கமாகப் பழகியவன் என்கிற முறையில் அவர் இத்தகைய முடிவெடுத்ததில் எனக்கு வியப்பில்லை. ஒரு நேரத்தில் விடுதலைப் புலிகள் இடைக்கால அரசு ஒன்றை அமைக்க வாய்ப்பிருந்தபோது சிவத்தம்பி பெயர்தான் அதற்குச் சிபாரிசு செய்யப்பட்டது என்பது நினைவிருக்கலாம். நாங்களெல்லாம் அப்போது அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினோம். இன்னொரு சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு அவரை வெளிநாட்டுத் தூதுவராக நியமிக்க முன் வந்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. (எனினும் பேராசிரியர் அதை ஏற்கவில்லை) அந்த அளவிற்கு இரு தரப்பினரும் மதிக்கத்தக்கவராக இருந்தவர், இருப்பவர் அவர்.பேராசிரியர் அவர்கள் வந்தது மட்டுமல்ல. அவர் அளித்த பேட்டிகள் இங்கே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின. ‘ஈழம்’ என்கிற சொல்லே சிங்கள மூலத்திலிருந்து உதிந்த சொல், அதை நான் தவிர்க்க விரும்புகிறேன்’ என்றார். தவிரவும் அப்பெயர் இளைஞர்களின் ஆயுதப் போராட்ட அரசியலுடன் தொடர்புடையதாகி விட்டதையும் சுட்டிக் காட்டினார். ‘நான் முதலில், இலங்கையன், எனது அடுத்த அடையாளமே தமிழன்’ என்றார். உங்களுக்கும் அப்படித்தானே, முதலில் நீங்கள் இந்தியர்கள், அப்புறம் தானே தமிழர்கள்’ என்றார். ’வெறுமனே ஈழத் தமிழன் எனக் கூறி இலங்கை மீதுள்ள எனது பாரம்பரிய உரிமையை விட்டுவிட முடியுமா’ என்றார். உள்நாட்டுத் தமிழ் அகதிகள் பற்றி ஒரு பத்திரிகை வினவியபோது ‘அதெல்லாம் எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை. இங்கே வந்து பேசக் கூடாது’ என்றார். ஆமாம் அவர்கள் பெரிய துன்பத்திற்காளாகியுள்ளார்கள். உடனடியான நிவாரணம் அவர்களுக்குத் தேவை என்கிற ரீதியிலும் கூட அவர் பேசத் தயாராக இல்லை. எனினும் முன்னதாக தினமணி இதழுக்கு அவர் பேட்டியளித்த பொழுது, ‘இலங்கை எங்களது தீவு. தமிழர்கள் அங்கு இருந்தார்கள். இருக்கிறார்கள். எதிர்காலத்திலும் இருப்பார்கள். இந்த உரிமையை நாங்கள் விட்டுவிட மாட்டோம்’ என்கிற ரீதியில் கூறியதைப் படித்தபோது, எத்தகைய நைந்த நெஞ்சிலிருந்து இந்தச் சொற்கள் எழுகின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. எனினும் உலக அளவில் ஏற்கப்பட்ட தமிழாய்வின் தலைமகன் என்கிற பரிமாணத்தைத் தாண்டுவதற்கு அவர் விரும்பவில்லை.

தமிழர்கள் இன்று குறைந்த பட்சம் ஆறேழு நாடுகளில் பாரம்பரிய உரிமைகளோடு வாழ்கின்றனர். எனினும் தமிழகத்திற்கு அடுத்தபடியான தமிழர்களின் நாடாக இருப்பது ஈழம் தான். அங்கு இப்படியான ஒரு பேரழிவு நிகழ்ந்துள்ளபோது இந்தக் கொண்டாட்டம் தேவைதானா என்கிற நியாயமான கேள்வி எல்லோர் மத்தியிலும் இருக்கத்தான் செய்தது. உண்மையில் இந்த கேள்வியை முன்னெடுத்துச் சென்றிருக்க வேண்டியவர்கள் தமிழ் எழுத்தாளர்களாகிய நாம்தான். உலகத் தமிழ்க் கொண்டாட்டங்களைப் புறக்கணிக்க இயக்கம் நடத்திய மரபும் நமது தமிழ்ச் சிறு பத்திரிகைகளுக்கு உண்டுதானே. ஆனாலும் இங்கே தமிழ் எழுத்தாளர்களுக்கு இன்று ஒரு பொதுவான அமைப்பு இல்லை. கலை இலக்கியப் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முதலான இடதுசாரிக் கட்சிகளின் கலை இலக்கிய அமைப்புகள் அவர்களது கட்சி நிலைப்பாட்டை ஒட்டிப் பெரிய விமர்சனமின்றி மாநாட்டில் பங்கு பெற்றன. ‘தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ என்றொரு அமைப்பு சில எழுத்தாள நண்பர்களால் உருவாக்கப்பட்டபோது எனக்கு அவர்களோடு அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்தபோதும் மனதார மகிழ்ச்சியுற்றேன். குறிப்பான அரசியல் திட்டத்துடன் செயல்படுபவர்கள் இப்படியான ஒரு ஒருங்கிணைப்பைச் செய்யக் கூடாது என்பதில்லை. சொல்லப்போனால் அவர்கள்தான் முன் கை எடுக்க முடியும். ஆனால் பெரிய அளவில் பொதுவான எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் வண்ணமாக அவர்களின் செயல்பாடுகளும், அறிக்கைகளும் அமைந்திருக்க வேண்டும். அப்படி அமையவில்லை. இறுதி நேரத்தில் அவர்களும் எந்தச் சிறு எதிர்ப்பையும் காட்டாமல் ஒதுங்கிக் கொண்டார்கள்.இங்கொன்றைச் சொல்லியாக வேண்டும். ஈழப் பிரச்சனையில் கடுமையாகக் கருணாநிதி அரசை விமர்சித்துக் கொண்டிருந்த இந்த நேரத்தில் இம் மாநாடு தேவைதான எனக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய அமைப்புகள் எதுவும் எந்தப் பெரிய எதிர்ப்பையும் மாநாட்டு நேரத்தில் காட்டவில்லை. போதாக்குறைக்கு விழுப்புரத்தில் நடைபெற்ற தண்டவாளப் பெயர்ப்பு நிகழ்வு ஒன்றைக் காரணம் காட்டி தமிழ்த் தேசிய அமைப்புகள் மீது தமிழக அரசு ஒரு தாக்குதலை மேற்கொண்டு கடும் அடக்குமுறைக்குத் தான் தயாராக உள்ளதைக் காட்டிக் கொண்டது. நக்சல்பாரிப் பாரம்பரியத்தில் வந்த புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலான அமைப்பினரே இந்த அச்சுறுத்தலுக்கெல்லாம் அஞ்சாமல் ஆங்காங்கு துண்டறிக்கை மற்றும் சுவரொட்டிகளை வெளியிட்டுக் கைதாயினர். இதைக் கண்டித்து மனித உரிமை அமைப்புகள் சார்பாக நாங்கள் வெளியிட்ட அறிக்கை மாநாட்டு களேபரங்களுக்கிடையில் இரண்டு வரிச் செய்திகளாக மட்டுமே பத்திரிகைகளில் இடம் பிடித்தன.

சரி, இப்போது மாநாட்டில் முன் வைக்கப்பட்ட உருப்படியான கருத்துக்களைக் கொஞ்சம் அசை போடுவோம். உருப்படியான கருத்துகளை சிந்துவெளி முத்திரைகளை வாசிப்பதில் பல ஆண்டுகளாகத் தன்னை ஈடுபடுத்தி வரும் பின்லாந்து நாட்டு இந்தியவில் அறிஞர் அஸ்கோ பர்போலா, மாஸ்கோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத் தமிழியல் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் ஆகியோரே முன் வைத்தனர். 23 ஆய்வரங்குகளில் 239 அமர்வுகள் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்தபோதும் வெறும் 168 அமர்வுகள் மட்டுமே நடந்தன. அவற்றிலும், விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே பார்வையாளர்களாக இருந்தனர் எனப் பத்திரிகைகள் எழுதின. இவற்றில் துதிபாடல்கள் தவிர்த்த உருப்படியான கட்டுரைகள் மிகச் சிலவே. நமது ‘high profile’ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் பலரும் குறிப்பிடத்தக்க எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சாதி அரசியல், ஆராய்ச்சி மாணவர்களை நோண்டுவது, எப்படி துணை வேந்தராக ஆகலாம் என யோசிப்பது ஆகியவற்றிற்கு மத்தியில் ஆராய்ச்சிக்கு அவர்களுக்கு நேரமேது?மேற்குறித்த மூன்று முக்கிய அறிஞர்களும் ஆரம்பத்தில் கருத்தொருமித்து குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டின் மிகப் பெரிய பங்களிப்பு என நாம் அதைத்தான் சொல்ல வேண்டும். வடமொழியின் செல்வாக்கு, பாதிப்பு ஆகியவற்றிற்கு ஆட்படாது. முற்றிலும் சுயேச்சையாகவும் முன்னோடியாகவும் ஒரு இலக்கியப் பாரம்பரியத்தைத் தமிழ், தமிழ் மட்டுமே கொண்டிருந்தது என்பது ஒன்று. மற்றது சிந்துவெளி நாகரிகம் என்பது ஆரிய வருகைக்கு முற்பட்ட, முற்றிலுமான ஒரு உள்ளூர் நாகரிகம் மட்டுமல்ல. அது திராவிட வேர்களைக் கொண்டிருந்தது என்பது. மூன்றாவது திராவிட, தமிழ்க் கூறுகள் கங்கைச் சமவெளி நாகரிகத்திலும் சமஸ்கிருத மொழியிலும் ஊடுபாவியுள்ளன என்பது. சொற்கள், இலக்கிய வடிவங்கள், அழகியல் கோட்பாடுகள் எனப் பலவும் சமஸ்கிருதத்திலிருந்து தான் தமிழுக்கு வந்தன என்பதை இந்த அறிஞர்கள் ஒத்த குரலில் மறுத்துள்ளனர். சிந்துவெளி நாகரிகம் குறித்த வரலாற்றுப் புரட்டு ஒன்றை இந்திய அளவில் வலதுசாரி பாசிச சக்திகள் மேற்கொண்டு வரும் சூழலில் இந்த மாநாட்டின் ஊடாக இந்த அம்சங்கள் வலியுறுத்தப்பட்டது மிக முக்கியமான ஒரு பங்களிப்பு எனலாம்.நீண்ட காலமாகச் சிந்துவெளி முத்திரைகளை வாசிக்க முனைந்து வரும் அஸ்கோ பர்போலா இதற்கு முன்னதாக சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம்தான் என இந்த அளவிற்கு உறுதியாகச் சொன்னதில்லை. அப்படியும் ஒரு கருத்துண்டு என்றே குறிப்பிட்டு வந்தார். எனது ‘ஆரியக் கூத்து’ நூலிலும் வேறு சில கட்டுரைகளிலும் இதைக் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இன்று அவர் ஹரப்பா மக்களின் மொழி திராவிடக் கூறுகளைக் கொண்டிருந்தது (Proto Dravidian) என்பதை உறுதிபடக் கூறியுள்ளார். கலைஞர் கருணாநிதி செவ்வியல் தமிழ் விருதைப் பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரையில் அவர் இதைப் பதிவு செய்தார். மூவாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் மிக்க சமஸ்கிருதம் இணை சொல்லத் தக இயலாத அளவு இலக்கிய வளம் மிக்கது என்பது உண்மையே. கி.மு.1500-1300 வாக்கில் சிரியாவிலிருந்த மிடானி அரசு காலத்திய மூல இந்தோ-ஆரிய மொழிக் கூறுகளைக் (Proto Indo-Anjam) கொண்டுள்ள பழமையான மொழி அது என்பதிலும் ஐயமில்லை. கி.மு.2000-க்குரிய, மத்திய ரஷ்யாவில் வழங்கப்பட்ட இந்தோ-ஈரானிய மொழிக் கூறுகளையும் கூட அதில் காணலாம். “ஆனால் இவை எதுவுமே தமிழின் வேர்களுக்கு முந்தியதில்லை. மூல திராவிட மொழிக் காலகட்டத்திற்குக் கொண்டு செல்லத்தக்கது தமிழ். கி.மு. 2600-1700 காலகட்டத்தில் சிந்துவெளிக் குறும்பிரதிகள் பலவற்றையும் இத்தோடு அடையாளம் காண இயலும்” என்றார் பர்போலா. கி.மு. 1000 வாக்கில் எழுதப்பட்ட ஆகப் பழைய இலக்கியமான ரிக் வேதத்தில் குறைந்த பட்சம் ஆறு திராவிடக் கடன் சொற்களைக் காண முடியும். அவை: ‘முகம்’, ‘களம்’, ‘பழம்’, ‘குண்டம்’,கான (குருடு), கியாம்பு (நீர்த் தாவரம்)

பர்போலா அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. ஹரப்பா மொழி திராவிடம் எனும் போது சிந்துவெளி முத்திரைகள் மற்றும் நாகரிகத்தை விளங்கிக் கொள்வதில் சங்க இலக்கியத்தின் பங்கு அதிகமாகிறது என்றார். மூல திராவிட, சொற்களஞ்சியம், மொழி அமைப்பு ஆகியன குறித்து போதிய ஆய்வுகள் இன்று இல்லாததே சிந்துவெளி நாகரிகத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாமைக்குக் காரணம் என்றும் கூறினார். அவரது கட்டுரையின் தலைப்புகூட ‘சிந்துவெளி எழுத்துப் பிரச்சினைக்கு ஒரு திராவிடத் தீர்வு’ என்பதுதான். மொழி மட்டுமின்றி வடநாட்டு மக்களிலும் ஒரு சாரார் திராவிட இன வழியில் வந்தவர்களே. நுணுக்க ஆய்வுப் பயிற்சி அற்ற சாதாரண மக்களும் கூட தமது தமிழறிஞன் ஊடாக சிந்துவெளி முத்திரைகளை வாசிக்க உதவி செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.

சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே. ஆரிய ஊடுருவல் பின்னரே நிகழ்ந்தது. தென்னகம் நோக்கி நகர்ந்த திராவிடர்கள் எல்லோரும் ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்டவர்கள் அல்லர். மேய்ச்சல் நிலம் தேடிக் கொஞ்சம் கொஞ்சமாக வந்து குடியேறித் தம் மேலாண்மையை நிறுவிய ஆரியர்கள் பூர்வ திராவிடக் குடியில் மேல் தட்டிலிருந்தவர்களிடம் தமது ஆரிய மொழியைப் பயிற்றுவித்தனர். கங்கைச் சமவெளி முழுமையும் இப்படியாக ஆரியம் பரவியபோதும் மூல திராவிடக் கூறுகளை இன்றும் அதில் காண இயலும். ஆரியப் படை எடுப்பிலிருந்து விலகி நின்ற தென்னகத்தில் திராவிடம் செழித்தோங்கியது.

சிந்துவெளி எழுத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான ‘மீன்’ குறி, ‘மீன்’ எனும் சொல்லுக்கு தமிழில் உள்ள இரு அர்த்தங்கள் (மற்றது நட்சத்திரம்) ‘வெளி’யைக் குறிக்க குத்துக் கோடுகளுக்கு இடைப்பட்ட வெளியைப் பயன்படுத்துதல், இவற்றை எல்லாம் இணைத்து சிந்துவெளி முத்திரைகளில் உள்ள கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைத் தமிழ்ச் சொற்களின் ஊடாக அவர் பிறிதொரு கூட்டத்தில் வாசித்து விளக்கியது நம்மை வியப்பிலாழ்த்துகிறது. கார்த்திகை நட்சத்திரக் குறிகளை அவர் மீன், மேமீன், பசுமீன், வெள்ளிமீன், வடமீன், வடவெள்ளி, அனுமீன் என்பாகத் தமிழால் வாசித்தார். சிந்துவெளி திராவிடர்கள் முருகளை வணங்கியிருக்கலாம் எனவும் அவர் கருத்துரைத்தார்.

‘மொழியிலாகட்டும் இலக்கியப் பாரம்பரியத்திலாகாட்டும் சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் தனித்தியங்கியது சங்கத் தமிழ்’ என்றார். ஜார்ஜ் ஹார்ட் எல்லாமே சமஸ்கிருதத்திலிருந்துதான் சென்றது. சமஸ்கிருதம் எதையும் பிறமொழகளிலிருந்து பெறவில்லை என்கிற கருத்து தவறு. நேரெதிராகவே வரலாறு அமைந்துள்ளது. திராவிட மொழிகளுக்குள்ளும் தமிழ் தனித்துவமானது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவை எல்லாம் 70 முதல் 80 சதம் வரை சமஸ்கிருதத்தைச் சார்ந்திருந்தன. அது மட்டுமல்ல. தமது மொழியிலிருந்த ஆற்றல் மிகுந்த பல சொற்களை அவை கைவிட்டன. தமிழ் ஒன்றே சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கூடியவரை தவிர்த்து நின்றது. தவிரவும் இன்றுவரை ஆற்றல் மிகுந்த தனது தொடக்க காலச் சொற்களை அது கைவிட்டதில்லை.சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் இன்னொரு முக்கிய வேறுபாடும் உண்டு என்றார் ஹார்ட். சங்கத்தமிழ் என்பது சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைப் பாடிய மொழி. இன்றளவும் தமிழ் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வைப் பேசக்கூடிய தன்மையைத் தொடர்ச்சியாகப் பேணி வருகிறது. சமஸ்கிருதமோ அன்றாட வாழ்வியலுக்கு அப்பாற்பட்ட ஒருவகை உலகியல்சாராத் தன்மையைப் பேசிய மொழியாக இருந்தது.

சங்கத் தமிழ் ஆற்றலின் தொடர்ச்சியை நம்மாழ்வார் முதலானோரின் பக்திப் பாடல்களில் காண முடியும். தமிழக பக்தி இயக்கச் செல்வாக்கு தமிழக எல்லைகளைத் தாண்டி விரிந்தது. துளசி ராமாயணம் முதலியன தமிழ்ப் பக்தி இயக்கத்தின் தாக்கத்தில் உருவானவை. அந்த வகையில் சங்க இலக்கியத் தாக்கத்தை அவற்றில் காண இயலும். இந்திய அளவில் மிக முக்கியமான, ஆகப் பெரிய இலக்கியமான கம்பராமாயணம் சில சமஸ்கிருதக் கூறுகளைக் கொண்டிருந்த போதும் தமிழின் பாரம்பரிய மரபுக் கூறுகளே அதில் மிகுந்துள்ளன. சங்கப் புலவர்கள் சமஸ்கிருத இலக்கியங்களை அறிந்திருந்தனர். ஆனால் அவற்றை அப்படியே அவர்கள் பின்பற்றவில்லை. காலப்போக்கில் சமஸ்கிருதச் செல்வாக்கு தமிழில் படிந்தது உண்மைதான். ஆனால் தமிழ் இலக்கியங்கள் அதன் சங்க வேர்களையே அடிப்படைக் கூறுகளாகக் கொண்டிருந்தன. இந்திய மொழியில் பரவும் சமஸ்கிருதம், அரபி, பாரசீகம் முதலான வேர்களைக் கொண்டுள்ளன. ஒரே விதி விலக்கு தமிழ்தான் இந்த வகையில் சுயேச்சையானது. வாய்மொழிப் பாரம்பரியத்திலிருந்து அது உருவானது என்றார் ஹார்ட்.தொல்காப்பிய அமைப்பு வெளிப்படுத்தும் ஆழமான அறிவு நுட்பத்தையும், விசாலாமான பார்வையையும் திறந்த நோக்கையும் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி கூறியதை வாசித்தபோது பல ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் பொ.வேல்சாமி இந்த அம்சத்தை அடிக்கடி வலியுறுத்திக் கூறியது என் நினைவுக்கு வந்தது. தொல்காப்பியம் சமஸ்கிருத மரபைச் சார்ந்து எழுதப்பட்ட நூல் என்பதை துப்யான்ஸ்கி மறுத்தார். ஐந்திர மரபைப் பின்பற்றி தொல்காப்பியம் எழுதப்பட்டது என்பதையும் பாணினியின் ‘அஷ்டத்யாயி’, யஸ்கரின் ‘நிருத்தம்’, ரிக் வேதத்தின் ‘பிரதிஷ்க்யா’ முதலியவற்றிலிருந்து சில பகுதிகள் அப்படியே தொல்காப்பியத்தில் மொழியாக்கப்பட்டுள்ளன என சுப்பிரமணிய சாஸ்திரி கூறுவதையும் துப்யான்ஸ்கி ஆணித்தரமாக மறுத்தார். பிரதிநிதிகளுக்கிடையேயான பரஸ்பர உறவு என்று மொழிபெயர்ப்பு என்ற வடிவில் அக்கால கட்டத்தில் அமையவில்லை. மற்றவற்றை மீண்டும் எழுதுதல் (Rendering) என்கிற வடிவத்திலேயே பிரதிஉறவுகள் அன்று அமைந்தன. ஒன்றிலிருந்து இன்னொன்று சிலவற்றை எடுத்துக் கொள்வது எங்கும் நடக்கக் கூடியதே. தவிரவும் தான் பிறவற்றிலிருந்து எடுத்துக் கொண்டதை தொல்காப்பியர் மறைப்பவரும் அல்லர். சுமார் 150 இடங்களில் ‘என்மனார் புலவர்’ எனக் கூற அவர் தயங்கவில்லை.

ஒரு செவ்வியல் மொழி என்பது அம்மொழி மற்றும் அதிலுள்ள இலக்கியங்களின் அமைப்பைப் பகுத்து, விமர்சித்து, தொகுத்து அறிவுத் தொகுதிகளாகத் (treatise) தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் ‘நன்னூல்’, ‘யாப்பருங்கலம்’, ‘அகப்பொருள்’, முதலான இத்தகைய நூற்கள் தமிழில் உருவாகியுள்ளதே அது ஒரு செம்மொழி என்பதற்கான சான்று என்றோர் துப்யான்ஸ்கி.

‘ஆரியம் X திராவிடம் என்கிற எதிர்வு ஒரு கற்பனை; ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களல்லர். ஆரியத்துக்கு முந்திய சுயேச்சையான நாகரிகம் ஒன்று இங்கே கிடையாது. சிந்துவெளி நாகரிகம் என்பது ஆரிய நாகரிகமே’ என்றெல்லாம் இந்துத்துவவாதிகள் சமீப காலங்களில் பரப்பி வந்த கருத்துகளுக்கு செம்மொழி மாநாட்டினூடாக மேலுக்கு வந்த இந்தச் சிந்தனைகள் இறுதி ஆப்பை அடித்துவிட்டன. அமெரிக்காவில் ‘செட்டில்’ ஆகியுள்ள சில இந்துத்துவ மூளைகள் தாம் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்து விட்டதாகப் பொய்யுரைத்து மாட்டிக் கொண்ட செய்திகள் மிக விரிவாக அன்றே இந்து மற்றும் ஃப்ரண்ட்லைன் முதலான இதழ்களில் வெளியாகின. எனது ‘ஆரியக்கூத்து’ நூலில் மிக விரிவாக இதை எழுதியுள்ளேன். மேலும் ஒரு நிரூபணமாக அஸ்கோபோலா போன்றோரின் செம்மொழி மாநாட்டுக் கருத்துகள் அமைந்துள்ளன.

நல்ல நகைச்சுவை ஒன்றை ரசிக்க விருப்பமுள்ளவர்கள் ரெடிஃப்’ இணையத்தளத்தில் இத்தகைய அமெக்க வாழ் அறிஞர்களில் ஒருவரான எஸ். கல்யாணராமன் என்பவர் செம்மொழி மாநாட்டில் மேலுக்கு வந்துள்ள இச்சிந்தனை குறித்துப் புலம்பியுள்ளதைப் பாருங்கள். அகில இந்தியத் தேசியத்திற்கு இந்தக் கருத்துக்கள் எதிரானவையாம். கல்யாணராமன் போன்றோர் இப்படிச் சொல்கிறார்கள் என்றால் நமது தமிழ்த் தேசியவாதிகள் பர்போலா போன்றோரின் இந்தக் கருத்துக்களை இது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது என்று கூறி அவர்களோடு இணைவதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில் அவர்களும் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ எனப் புலம்புகிறவர்கள்தானே.முக்கிய தமிழ் இலக்கியங்கள் பிறமொழிகளில் பெயர்க்கப்படுதல், குறிஞ்சி, முல்லை முதலான ஐந்து நிலங்களை காட்சிப்படுத்தும் பூங்காக்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைத்தல், கராஷிமா தலைமையில் இன்றுள்ள உலகத் தமிழாராய்ச்சி மன்றத்திற்குப் போட்டியாக மதுரையில் ‘தொல்காப்பியர் செம்மொழித் தமிழ்ச் செம்மொழி மாநாடு' கொண்டாடுதல், குமரிக் கண்டம் தொடர்பான தொல்லியல் ஆய்வுகள் செய்தல், இந்திய தேசிய அளவில் கல்வெட்டியல் நிறுவனம் ஒன்றை அமைத்தல், தமிழ் வளர்ச்சிக்கென ஆண்டு தோறும் 100 கோடி ஒதுக்குதல், முந்தைய சட்டமன்றக் கட்டிடத்தில் ‘செம்மொழித் தமிழாய்வு நூலகம்' அமைத்தல், 16 ‘பிட்’ யுனிகோட் வடிவத்தை கணினித் தமிழுக்கெனத் தரப்படுத்தி ஆணை வெளியிடுதல் முதலானவை மாநாட்டு இறுதியில் அறிவிக்கப்பட்டன. தமிழை ஆட்சி மொழியாக்குதல், நீதிமன்ற மொழியாக்குதல், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு முதலான தீர்மானங்களும் இயற்றப்பட்டன.இந்த அறிவிப்புகளில் சில வரவேற்கப்பட வேண்டியவைதான். எனினும்,இளவரசியின் சபையில்

கோமாளி வேஷமிட்டு

கூத்தடித்துக் கும்மாளமிடுகிறது

கலை கலையாய்

கலைஞர் கூட்டம்

அடக்கமாய் அமைதியாய்

மாயச் சாட்டையை

தோளில் துவள விட்டபடி

சாந்தமாய் வீற்றிருக்கிறாள்

பணிவான இளவரசி.

கலைகள் சங்கமிக்கும்

இளவரசியின் ராஜ்ஜியத்தை வியாபித்து

கலை கலையாய்

அலை அலையாய்

வெளியெங்கும் பரவிச் செல்கிறது

வேஷங்களின் துர்நாற்றம்

பெருமிதமாய் சுவாசித்து

அகம் மகிழ்கிறாள் இளவரசி.

தனித்திருந்து என் அறையில் ஆசுவாசமாய் குடித்துக்

கொண்டிருந்தாலும்

காற்றைப் பீடித்திருக்கும்

துர்நாற்றத்தை முகர்ந்தபடிதான்

சுவாசித்திருக்கிறேன் நானும்.நன்றி: சி. மோகன்

( குமுதம் தீராநதி - ஆகஸ்ட் 2010)No comments:

Post a Comment

There was an error in this gadget