Thursday, September 15, 2011

சென்னையில் அப்பாவி இலங்கை யாத்திரீகள் மீது சீமான் கட்சியினர் காடைத்தனம்! சேசாஸ்திரி

இந்தியாவுக்கு யாத்திரை மேற்கொண்டுவிட்டு,
இலங்கை திரும்புவதற்காக தமிழகத் தலைநகர்
சென்னையில் ஹோட்டல்களில் தங்கியிருந்த
சிங்கள பயணிகள் மீது, சீமான் நடாத்தி வரும்
‘நாம் தமிழர் இயக்கத்தை’ச் சேர்ந்த காடையர்
கும்பலொன்று தாக்குதல் நடாத்தியதுடன்,
அவர்களது உடைமைகளையும்
சேதப்படுத்தியுள்ளது.
வை.கோபாலசாமி, ப.நெடுமாறன், டாக்டர்
ராமதாஸ், தொல்.திருமாவளவன், சுப.
வீரபாண்டியன் போல, சீமானும் தீவிரமான
சிங்கள எதிர்ப்பாளர் என்பது எல்லோருக்கும்
தெரிந்த விடயம். ஆனால் அதற்காக இவ்வாறான
காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில்
ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் கூட
எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
‘அடித்தால் திருப்பி அடிப்பேன்’ என்பது
சீமானின் வீராவேச வசனம். அப்படியானால்
இங்கு அந்த சிங்கள யாத்திரீகர்கள் அடித்தா
சீமான் அவர்கள் மீது தனது காடையர் கும்பல்
மூலம் தாக்குதல் நடாத்தியுள்ளார். ஒரு
கதைக்காக, இலங்கை அரசாங்கம் அங்குள்ள
தமிழ் மக்களை பாரபட்சமாக நடாத்துவதால்தான்,
சிங்கள மக்களைத் தான் தாக்கியதாக சீமான்
நியாயம் பேசுவாராக இருந்தால், இலங்கை
அரசாங்கத்துக்கு சகல வழிகளிலும் உதவி
வரும் இந்திய அரசுத் தலைவர்களையல்லவா
சீமான் முதலில் தாக்க வேண்டும்.
இப்படித்தான் புலிகளும் முதலில் சிங்களப்
பேரினவாத அரசுக்கெதிராக என்று சொல்லிப்
போராட்டத்தை ஆரம்பித்து, பின்னர் சாதாரண
சிங்கள மக்களைத் தாக்கி, அதன் பின்னர்
முஸ்லீம் மக்களைத் தாக்கி, அவர்களைப்
அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து
துரத்தி, கடைசியில் தமிழ் மக்கள் மீதே
கைவைத்து, இறுதியாக முள்ளிவாய்க்காலில்
இறுதியும் அறுதியுமாக அழிந்து போனார்கள்.
மக்கள் மீது கைவைப்பவர்கள் இறுதியில்
இவ்வாறான முடிவைத்தான் அடைவார்கள்
என்பதை, சீமான் போன்றவர்கள் மறந்துவிடுவது
தான், அவர்கள் முட்டாள்தனமானதும்,
கோழைத்தனமானதுமான செயல்களில் மீண்டும்
மீண்டும் ஈடுபடுவதற்குக் காரணம்.
கருணாநிதியின் ஆட்சியின் போது இல்லாத
துணிச்சல், சீமான் போன்றவர்களுக்கு
இப்பொழுது ஏற்பட்டிருப்பதற்குக் காரணம்,
ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதலமைச்சர்
ஜெயலலிதாவும், அவரது கட்சியும் திடீரென
முன்னொருபோதும் இல்லாத வகையில்
இலங்கைக்கு எதிராக மேற்கொண்டிருக்கும்
தீவிர எதிர்நிலைப்பாடுதான். ஜெயலலிதாவின்
இந்தத் திடீh பல்டிக்குக் காரணம், அரசியல் லாப
நோக்கிலான சந்தர்ப்பவாதம் மட்டுமின்றி, அவர்
சில வெளிச் சக்திகள் இலங்கைக்கு எதிராக
மேற்கொண்டிருக்கும் வேலைத்திட்டத்துடன்
பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதும்தான்.
இதில் ஏற்கெனவே சீரழிந்து போன இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியும், புதிதாகச் சீரழியத்
தொடங்கியிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியும் அணி சேர்ந்திருக்கையில், சீமான்
போன்றவர்கள், தமிழக அரசியலிலும்
இதைவிடவும் மோசமான வன்முறைச்
சம்பவங்களில் எதிர்காலத்தில் ஈடுபடக்கூடிய
வாய்ப்பு நிச்சயமாக உருவாகும்.
கருணாநிதியின் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு
சீர்குலைந்து விட்டது என்று சொல்லி
ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, இத்தகைய
காடைத்தனங்களை தொடர்ந்தும் அனுமதித்தால்,
அவரது முந்திய ஆட்சிகளின் போது
நடாத்தப்பட்ட அடாவடித்தனங்களுக்காக, அவரை
மக்கள் வீட்டுக்கு அனுப்பியது போல, திரும்பவும்
அவரை ஆட்சியிலிருந்து மக்கள் விரட்டத்
தயங்கமாட்டார்கள் எனபதை, அவர் உணர
வேண்டும். இந்திய - இலங்கை உறவுகளைச்
சீர்குலைப்பதை நோக்கமாகக் கொண்டு, சில
வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலில்
மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்களை,
இந்திய மத்திய அரசும் கைகட்டிப் பார்த்துக்
கொண்டிராமல் உடனடியாகக் கட்டுப்படுத்த
வேண்டும்.

 
வானவில், 10 ஆவணி 2011

1 comment:

  1. இப்படியோ கட்டுரையை தமிழிலில் எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லையா.... இந்தக் கட்டுரையை தயவு செய்து சிங்கள மொழியில் வெளியிடுங்கள்.... படிப்பவர்கள் ரசிப்பார்கள்....

    ReplyDelete