மேலாதிக்க நாடுகளின் வேட்டைக் காடாக அகப்பட்டுத் திணறும்
சிறிய நாடாக உள்ள இலங்கையினுள் தேசிய உருவாக்கத்துக்கு இருக்கும் சிரமம் காரணமாய்பின்
தங்கிய நிலையே இதற்குக் காரணம் என்ற மயக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. மாறாக, மேலாதிக்க நாடாக வளர்ந்துவிட்ட இந்தியாவில்கூட தேசிய இன ஒருமைப்பாட்டில் சிக்கல்
நிலை உள்ளமை பற்றிச் சென்ற தடவை எமது சந்திப்பில் அளவளாவியிருந்தோம். உண்மையில்
சாதித் தேசங்களாய்ப் பிளவுபட்டுஉள்ள சாதிய அமைப்பே இனத்தேசிய ஒருமைப்பாட்டுக்கு
தடையாக இருக்கிறது. இதுவே இரட்டைத் தேசியம் பற்றி தேடலை மேற்கொள்ளுமாறு
எம்மைநிர்ப்பந்திக்கிறது.
எலியோடு விளையாடும் பூனையாக இந்திய அதிகார வர்க்க
சேட்டையில் மாட்டுப்பட்டு அல்லற்பட்டு, இரத்தம் சிந்தி, மரணத்துள்
வாழ்ந்து, வாழ்வதும் பண்பாட்டுஅழிவுகளோடு அர்த்தமற்றதாக்கப்படக்
காண்போராய், உரிமைகளை மறுக்கும் பேரினவாதத்தோடு
அதற்கு நிரந்தரப் பகையேற்பட்டு
எமக்கேயெமக்கான ஆபத்பாந்தராக இந்திய மேலாதிக்கம் ஆகும் வகையில்
சீனத் தரப்புக்கு இலங்கை அரசு போய்விடக் கூடாதா என ஏங்கும் வகையில் தமிழ் மனங்கள்
இழிவடைந்த நிலையில் அவதிப்படுகிற எமக்கு தெரியும் இந்தியா எவ்வளவு பெரிய பூதாகார
வளர்ச்சியை எட்டியுள்ளது என்பது. இதை ஏற்க முடியாத பலகோடிமக்கள் இந்தியாவில்
இருக்கிறார்கள். நாலைந்து வருடங்களின் முன்னர் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிபெற்ற
திருப்பூரில் ஒருகலந்துரையாடலில் கல்ந்து கொண்டுஉரையாற்றியிருந்தேன் ஈழத்தமிழ்த்
தேசியப் பிரச்சனை பேசுபொருள். இந்திய மேலாதிக்க செயற்திட்டம் என்கிறவகையில்
அது எவ்வகையில் முடித்துவைக்கதிட்டமிட்டுள்ளது என்பதில் ஈழப் பிரச்சனைத்
தீர்வு உள்ளது எனப் பேசியிருந்தேன்.
சபையோர் அதிர்ந்து போவர் என்பது எதிர் பார்க்கத்
தக்கதுதான். இந்தியர்தான் இவ்வளவையும்
வளர்த்து இரத்தச்சகதி ஆக்கிக்குளம்பிய குட்டையில் நாறிப்போனமீன் தேடிக்கொண்டு
இருக்கிறார்கள் என்பதுபற்றி கேட்கவே செய்தனர். கூடவே, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும்
கேள்வியை ஒரு நண்பர் கேட்டார்," இவ்வளவு
வறுமையில் வாட்டப் படுகிற எம்மைக் கொண்ட இந்தியத்
தாய்த்திரு நாடு பிற நாடுகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகிற
நிலையிலா இருக்கிறது?" எமதுபுரிதலுக்கு
சிரமம் இருந்த போதிலும் இந்தியாவில்
கடுமையான வாழ்க்கை போராட்டத்தில் அல்லற்படுகிற பல கோடி மக்களையும் நசுக்கியவாறே
ஒருசிலலட்சம் பேரின் சுக போக வாழ்வு செழித்துவருகிறது என்பதை நாம் விளங்கிக்
கொள்ள வேண்டியதுதான். பாரம்பரியமாய் ஜெய சூரர்களாய் நீடித்தவர்களும், ஜனனாயக வாய்ப்பில் கருணாமூர்த்தம் காட்டி ஆட்சி பீடமேறி கொள்ளையடித்தவர்களும்
போல பல கோடி மக்கள் அப்படியொன்றும் செழிப்பான வாழ்வைஎட்டிவிட முடியாது
தானே? அதற்காக இன்னும் வறிய நாடாக இந்தியாவை
அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதா?
இந்த வறுமை அனைத்துச் சாதிப்பிரிவினரையும் தனக்குரியதாய்க்
கொண்டிருக்கக் கூடிய 'சமத்துவ' குணமுடைய உயர் பண்பாளர்; அதே வேளை பல நூறுஆண்டுகளய் உரிமைகள் மறுக்கப்பட்டு
உடலோடு உயிர் ஒட்டியிருக்கும் அளவில் மட்டும் உண்டுயிர்த்து வாழ அனுமதிக்கபட்டிருந்த
ஒடுக்கப்பட்ட மக்களேமிகமிக அதிக அளவில் தன்னைச் சொந்தம் கொண்டாட
முண்டியடிப்பதற்கு வறுமை தடை எதனையும் போடவும் முடியாது. அதிகாரச் சாதியில் உள்ளபாட்டாளி
வர்க்க நண்பர்கள் சிலருக்கு இதனைப் புரிந்து கொள்வதில் சற்றுச் சிரமப்பட
வாய்ப்புள்ளது. அவர்கள் தமது வர்க்க உணர்வையும், கடுமையாகஉழைத்தே வாழநேர்ந்த
தமது வாழ்க்கைப் போராட்டங்களில் தமது சொந்தச் சாதியினரால் அவமானங்களுக்கு
உள்ளாகநேர்ந்தது பற்றியும் உணர்ச்சிக் கொந்தளிப்போடு கருத்துரைப்பர்.
கூடவே ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வந்தோர் சிந்தனை ஆதிக்கம் புரிய
முயல்வது குறித்து ஆதங்கம் தெரிவிப்பர்.
பாட்டாளி வர்க்கச் சிந்தனையின் பேரில் ஒடுக்கப்பட்ட மக்கள்
எதிர்நோக்கும் விசேடித்த பிரச்சனைகளை நிராகரிப்பது
எவ்வகையிலும் நியாயமானதல்ல.கல்விவாய்ப்பும், கௌரவமான தொழில்பெறும்
நிலையும் முழுமையாக மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
இட ஒதுக்கீட்டின் வாயிலாக சிறியமுன்னுரிமை வழங்கப்படுவது எந்தவகையிலும் சமூகச்
சீர்கேடுகளைத் தந்துவிடப் போவதில்லை. இதையே சகிக்க முடியாமல் எதிர்க்கிற மேல்
சாதி அகம்பாவம் மோதித் தகர்க்கப் பட வேண்டிய
ஒன்றெனப் புரிதல் கொள்ளாத ஒருவரை விடுதலை
நேசிப்பாளர் என எப்படிக் கருத இயலும்?
ஆயினும், வறட்டுத்தனமாக
வர்க்கத்தை மட்டுமே பார்க்கிற சிந்தனைமுறை வினோதமான காரணங்களை
முன்னிறுத்தி இடஒதுக்கீட்டை நிராகரிக்க வழிப்படுத்தஇடந்தரும். இதற்கு முன்னொருபோது
மார்க்சிஸ்ட் கட்சி உதாரணமாயிருந்துள்ளது. அதன் பொதுச்செயலாளராக இருந்த
ஹரிகிஷன்சிங் சுர்ஜித் கூறும் இக்கருத்தில் இதன் வெளிப்பாட்டை அவதானிக்கலாம்:
"குஜராத்தில் ஆரம்பித்து இதர மாநிலங்களிலும், ஆதரவு பெற்ற இட ஒதுக்கீடு -
எதிர்ப்புப் போராட்டம்குறித்து கட்சி ஒரு கொள்கை வழிப்பட்ட நிலையை எடுத்தது.
உழைப்பாளர்களின் இதர பிரிவினரிடையே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வுஉருவாகக்கூடிய
அபாயத்தை கட்சி சுட்டிக் காட்டியது. ஒரு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ
அரசாங்கத்தினால் உறுதிகூறப்பட்ட வேலைக்கான இட ஒதுக்கீட்டினால் மட்டும்
தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை ஏற்படப் போவதில்லை.இதர உழைக்கும் பிரிவினரை எதிர்த்துக்கொண்டு
இது வெற்றிகரமாகப்போவதில்லை; மாறாக
முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களையும், அவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் இ.காங்கிரசையும்
எதிர்த்த பொதுவானபோராட்டத்தில் அவர்களுடன் இணைந்து தான் இதைச்சாதிக்க
முடியும்." பல்லாண்டுகால
துரோகமிழைத்தலுக்கான சிறிய பரிகாரத்தையே சகிக்கமுடியாத உயர்சாதி மனப்பாங்கு
'பாட்டாளி வர்க்க' உணர்வின்
எந்தவகை வடிவமாக கருதத் தக்கது? 'தமக்கு எதிரான
வெறுப்புணர்வு' உயர் சாதி நயினாமாரிடம் ஏற்பட்டுவிடும்
என்பதற்காக உரிமைக்காக குரல் எழுப்பாதிருந்தால்
எப்போதுதான்அவர்கள் சக மனிதர்கள் என்ற கௌரவத்தைப்
பெறவியலும்? ஆதிக்கசாதிச் சோசலிசம் எட்டப்பட்ட
பின்னர், இனி அவமானப்படும்
சாதி இழிவுக்குரிய மனிதக்கூட்டம் வேண்டியதில்லை என்ற பின்னர் கருணைகூர்ந்து
நீங்கள் தரும் 'விடுதலைப் பிச்சையைத் தான்' அவர்கள் பெறத் தகுதியானவர்கள்
என்று கருத்தா?கண்ட நிண்ட சனங்களை வைக்கிற இடத்திலை
வைக்கவேணும் என்று இப்போதும் வெளிப்படையாகக்
கூறும் கனவான் கூட்டம் மதிப்புக்குரியது; எழுச்சியுறும்மக்கள்
சக்தியின் புரட்சிக் கொந்தளிப்பில், பிறர் உழைப்பில்
தண்டச் சோறுண்ட சுரண்டல் கும்பலே
இழிவுக்குரியது - வந்தனை செய்து துதிக்கத்தக்கவர் உழைப்பாளரே என்ற மாற்றம் ஏற்படும்போது தமக்கான அவமானப் பாத்திரத்துக்கான
நிதர்சனத்தையும் அந்த 'மதிப்பாளர்கள்' புரிந்துகொள்வார்கள். செத்துப்போனசாதியம்
பற்றி இன்னும் என்ன பேச்சு என்கிற 'ஜனநாயக' வேடதாரி ஆதிக்கசாதிப் 'புரட்சியாளர்களே' மிகுந்த ஆபத்துப் பேர்வழிகள். விடுதலை பிளவுபடாததுஎன்கிறவகையில்
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் கோரிக்கையை இணைக்காத 'ஆதிக்கசாதிச் சோசலிசமும்' சாத்தியமற்றதே; எங்கோ தெரிகிற
கானல் நீரை நம்பியிருப்பதைவிட இன்று வெல்லப்பட வேண்டிய கோரிக்கைகளை
முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட மக்கள் போராட முன்வருவதை
எவரும் தடுக்க இயலாது.
அந்தப் போராட்டம் மார்க்சியர்களால் முன்னெடுக்கப்படாத போது
பிறருக்கு காட்டிக்கொடுக்கும் கும்பலால்
ஒடுக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்படும் தலித்தியவாதம்மேலோங்கும்
என்ற வரலாற்று நெருக்கடி ஏற்பட்ட பின்னர் தமிழகத்தில் மார்க்சியர்கள்
விழிப்புற்றனர்; சாதியம் செத்துப் போய்விடவில்லையா
என்ற கள ஆய்வை மேற்கொண்டபோது
மார்க்சிஸ்ட் கட்சியினர் அதிர்ச்சிக்குள்ளாயினர். சாதிய இழிவுபடுத்தலின்
பல்வேறு அடையாளங்களோடு, தமது
வாழ்விடத்தைசுவரெழுப்பி தலித் மக்களின்
காற்றுப்படாமல் காவாந்துபண்ணிய உத்தம்புரம் என்ற ஊர் இருக்க முடிவதைக் கண்டனர்.
ஏற்கனவே, இத் தொடக்க நிலையில்தோழர் சங்கரையா
பேசியிருந்தார், ''ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான
போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி உடனடியாக முன்னெடுத்தாக
வேண்டும்; இதனைஉயர் சாதியினர் விரும்பாமல்
எமக்கு எதிராக போவார்களோ என்ற எந்தத்
தயக்கங்களுக்கும் இடங்கொடுக்காமல் செயற்படுத்தியாக வேண்டும்'' என்பதாக. இன்றுமார்க்சிஸ்ட்
கட்சியின் வழிகாட்டலோடு "தீண்டாமை ஒழிப்பு முன்னணி" தமிழகத்தில் தொடர்ச்சியான
போராட்டங்களை முன்னெடுத்துவரக் காண்கிறோம். உத்தம்புரம்
சுவர் இடிக்கப்பட்டது உட்பட, பல வெற்றிகள் எட்டப்பட்டதென்றால் ஒவ்வொன்றும் பல வடிவப் போராட்டங்கள்
வாயிலாக சாத்தியப்பட்டதேயன்றி எந்த உயர்
சாதிக் காருண்யங்களாலும் வந்தடைந்ததில்லை.
தலித்தியவாத எழுச்சியுடன் தோற்றம் பெற்ற தலித் சாதிக்
கட்சிகள் கொம்யூனிஸ்ட் கட்சியொன்று
முன்னெடுத்த சாதியத்துக்கு எதிரான இந்தப் போராட்டங்களைஆதரித்திருக்கும் என்றே
எவரும் எதிர் பார்ப்பர். உண்மை நிலை அவ்வாறு இருக்கவில்லை. யாவும் நலமாய் இருந்ததாகவும், மார்க்சியர்கள் தேவையில்லாமல்சாதிக்கலவரங்களை மூட்டுவதாயுமே
தலித் கட்சிகள் சொல்லின; சாட்சாத் பிராமணாள் போலவும், கருணாமூர்த்த - ஜெயா சூர திராவிட முன்னேற்றிகளும், ஏன்திராவிடர் கழகமும் பேசும் சாதிபேணும் அதே மொழி!
பிராமணியம், திராவிடரியம், தலித்தியம் என்பன வெவ்வேறு தளங்களில் இயங்கிய போதிலும் இவைஒவ்வொன்றும்
ஏதோ ஒரு வடிவில் சாதியத்தைப் பேணவே முயல்வன. விடுதலை நோக்கிய திசையில்
முன்னேறுவதை விடவும் தத்தம் சாதித் தளம் பெறும்மேலாதிக்கம் சார்ந்ததாகவே இவர்களது
அக்கறை!பிராமண ஆதிக்கத்தை தகர்க்கப் போராடிய பெரியார் தலித் அமைப்பொன்றின்
மாநாட்டில், நான் இடைச்சாதியினர் மீட்சிக்கான
போடாட்டத்துக்கு தலைமைஏற்றுள்ளேன், ஒடுக்கப்பட்ட சாதியினரான
நீங்கள் உங்களுக்கான தலைமையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று பேசியிருந்தார்.
திராவிடர் இயக்க ஆட்சி,பெரியார்
கூற்றுக்கு இணங்க பிராமணரல்லாத ஆதிக்க
சாதிகளதும் இடைச்சாதிகளதும் மேலாதிக்கத்தையே சாத்தியப் படுத்தியிருந்தது; மட்டுமன்றிப் பல்வேறுவடிவங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு
எதிராக அடக்குமுறைகளையும் கொலைவெறித்தாண்டவத்தையும்
முன்னெடுத்து வருகின்றன திராவிடக் கட்சிகள்.
இவ்வகையில் திராவிடக் கட்சிகளும் தலித் கட்சிகளும் சாதியத்
தகர்ப்புக்கு கைகொடுப்பதை விடுத்து சாதியப்
பேணுகையை மேற்கொள்கின்றன எனக் காண்பதனாலேயே அவற்றை எதிரிக்
கட்சிகளாகக் காண வேண்டும் என்று பொருள் கிடையாது. நிச்சயமாகப் பல்வேறு போராட்டங்களில்
அவற்றோடு ஐக்கியப்படுவதற்கு அவசியமுண்டு. இந்திய சுதந்திரப் போராட்டம்
பிராமண நலன் பேணுவதில் அக்கறையுடையது எனக்கண்டு துணிச்சலுடன் எதிர்த் தேசிய
அரசியலுக்கானபண்பாட்டு இயக்கத்தை முன்னெடுத்த பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறையவே
எமக்குள்ளன.
பெரியாரின் இயக்கம் உண்மையில் சாதியத்தைத் தகர்க்கப்
போதுமானதல்ல என்ற விமர்சனத்துடனேயே அவரை நாம் உள்வாங்க
வேண்டும். இன்று இதற்கு மாறான ஒரு
ஓட்டம் தலைதெறித்து ஓடக் காண்கிறோம். இந்திய
சுதந்திரப் போராட்டம் பிராமணத் தேசியத்தை ஆட்சி
பீடமேற்றியது எனக்காட்டி, அதற்குஎதிரோடிய
அம்பேத்கரின் தலித் அரசியலும் பெரியாரின்
திராவிடரியமுமே பின்பற்றத் தக்கன என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி ஒரு தசாப்தம் கடந்துகொண்டிருக்கிறது.
இதனால் தமிழியலிலும் சுவாரசியமான கூத்தொன்று அரங்கேறக்
காண்கிறோம். மார்க்சிய நிலையில் முன்னர் பாரதி பார்வைகளின் புரட்சிஅம்சங்களில்
மனதைப் பறிகொடுத்த ஆய்வறிஞர்கள் பலர், அவற்றில் இன்று
திடீரென பிராமண அடயாளங்களைக் கண்டு, பாரதியை ஒதுக்கி வைத்துவிட்டுபெரியாரைத் தலை மேல்வைத்துக்
கொண்டாடத் தொடங்கிவிட்டனர்(மார்க்சிய நிலை நின்று பெரியார் குறித்த காய்தலுவத்தலற்ற
ஆய்வு இன்று உடனடிஅவசியமுள்ளதாயினும், அதனை வேறொரு சந்தர்ப்பத்துக்கு
ஒதுக்கி வைப்போம்).
இன்று விமர்சனப் பாங்கற்று பெரியாரைக் கொண்டாடுவதில்
எவ்வளவு தவறுண்டோ, அதேயளவுக்கு முன்னர் பெரியாரை
விடுதலைக்கு எதிராக பிரித்தானியஏகாதிபத்தியக் கைக்கூலி
எனக் கண்டு காட்டியதும் தவறாகும். காந்தி தலைமையில் அரங்கேறியது பிராமணத்தேசியம்; அன்றைய வரலாற்றுச் செல்நெறிக்குஅந்த அதிகாரக் கைமாற்றம்
அவசியம்; அதற்கு எதிரான போக்கை மேற்கொண்டதில்
பெரியார் தவறிளைத்த போதிலும், அவர்
முன்னெடுத்த எதிர்த் தேசியத்துக்கும் மக்கள்
விடுதலை சார்ந்த பக்கங்கள் உண்டு என்பதை ஏற்றாக வேண்டும்; மாறாக, ஒருக்கால்
பிராமணத் தேசியத்தின் பக்கத்தில் நின்று, அதிலுள்ளதவறுகள்
சிலதைக் கண்டதும், ஒரே பாய்ச்சலில் எதிர்த் தேசியத்தின்
பக்கம் பாயும் ஒருமுனைவாதத் தவறுகளுக்கு
ஆட்படலாகாது.
இங்கு கவனிப்புக்குரிய பிரதான அம்சம் மேலே குறித்த
ஒருமுனைவாதத் தவறுகட்கு ஆட்பட்ட 'மார்க்சிய' ஆய்வறிஞர்களை விட பாரதி வளர்ச்சி பெற்ற கருத்தியலைக் கொண்டிருந்தார்.
அவர் பிராமணத் தேசியரல்ல; பிளவற்ற தேசிய
விடுதலைக் கூறுகள் நேரடியாக சோசலிஸம் நோக்கி
முன்னெடுக்கப்படும்வகையில் அவரது கருத்தியல் இருந்தது. அதனாலேயே
வெள்ளைப் பறங்கியைத் துரை என்பது ஒழியும்போது, பார்ப்பானை ஐயரென்ற காலமும் போய்ஒழிந்திருக்கும்
என அவரது எதிர்பார்ப்பு அமைந்தது. அந்தவகையில் பாட்டாளி வர்க்கச்
சிந்தனையில் முன்னெடுக்கப்படும் புதிய பண்பாட்டு இயக்கத்துக்குரியகருத்தியலை
உடையவர் பாரதி. இது முழுமையான மக்கள் விடுதலைக்கான மார்க்கத்துக்குரியது..அந்நிய
ஆதிக்கத்தைத் தகர்க்கும்போதே உள்ளூர் ஆதிக்கபிடிகளையும்
தகர்க்க முனைப்புக் கொண்டது.
இதற்குமாறாக, காந்தி, ராஜாஜி போன்றோர் முன்னெடுத்த அரைப் பிராமணியத் தாராளவாதத் தேசியம்
பண்பாட்டியம் சார்ந்ததாக இருந்தது; இது பிராமணத் தேசியம் அதிகாரம் பெற வகைசெய்தபோது, உள்ளூர் அதிகார சக்தி மக்களை ஒடுக்க இடமளித்து விடுதலை மார்க்கத்தை முட்டுச்சந்துக்கு
இட்டுச்சென்றது.பெரியார், அம்பேத்கர்
போன்றோர் முன்னெடுத்த எதிர்த்
தேசியம் எதிர்ப் பண்பாட்டியத்துக்கு உரியதாயமைந்து உள்ளூர் ஆதிக்க சக்திக்கு
எதிராக அந்நிய ஆக்கிரமிப்பாளருடன்
கைகோர்க்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆட்பட ஆற்றுப்படுத்த
வகை செய்வதாக இருப்பது. ஒரு ஆதிக்க சாதியை எதிர்க்கும்போது தமது சாதிநலனுக்கு
ஏதோ ஒரு வடிவில் இடம் கொடுப்பதாகவே எதிர்ப் பண்பாட்டியம் அமைவது.
பாரதியின் புதிய பண்பாட்டியம் "மனிதர் உணவை மனிதர்
பறிக்கும் வழக்கத்தைத்" தகர்த்து, சுரண்டலும் இழிவுபடுத்தலும் அற்ற -சாதியத் தளைகள்
அறுத்துஎறியப்பட்ட- பொதுவுடைமைப்
புத்துலகம் படைக்கத்தக்கதாக அமைவது. மதுரையில் "தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்
கலைஞர்கள் சங்கம்" ஏற்பாடுசெய்திருந்த பெரியார்-125 வது ஆண்டு நினைவு ஒரு நாள்
கருத்தரங்கில் உரையாற்றிய போது, முன்னர்
போலன்றி பெரியாரை எதிர்ப் பண்பாட்டிய வாத நிலைக்குரியவர் என்கிறவகையில் ஏற்கிற போது, பாரதியின் புதிய பண்பாட்டியத்தையும்
கவனம்கொண்டு, அந்த ஆளுமைகளிடமிருந்து
கற்றுக்கொள்வோம்எனப் பேசியிருந்தேன்.
சென்னை திரும்பிய ஓரிரு நாட்களில், அங்கு ஒரு கருத்தரங்கில் அயனாவரம் ராஜேந்திரம்
சந்தித்த போது கேட்டார், "பெரியாருக்கு
சமனாக பாரதியை நிறுத்திமதுரையில்
பேசியிருந்தீர்களாமே" என்று . "இல்லை, பாரதிக்கு சமனாக நான் பெரியாரைக்
கணிக்கவில்லை; அதேவேளை முன்னர்போல
பெரியாரைக்குறைத்து மதிப்பிட்டு புறக்கணிக்கவும்
இயலாது என்றே பேசியிருந்தேன்" என்றேன். அவர்மீது மதிப்புக் கொண்டிருந்த
நான் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும்நோக்கில் இதைக்கூறவில்லை. பெரியாரை வழிபாட்டுக்குரியவராக்க
வேண்டியதில்லை எனும்போது பாரதியை வழிபாட்டுக்குரிய இடத்தில் வைத்துக்
கொண்டாடுவதும் நிராகரிக்கப்படும்.
கடந்த அரைநூற்றாண்டு முன்னெடுக்கப்பட்ட மக்கள்
போராட்டங்களும் அவற்றின் அனுபவத் திரட்சியான
விவாதங்களும் எமக்கான கோட்பாட்டை முன்னிறுத்திஉள்ளன. பிராமணத் தேசியம், பெரியாரின் பிராமணரல்லாத ஆதிக்க சாதித் தேசியம், அம்பேத்கரின் தலித் தேசியம் என்பன வலுவான
கருத்தியல்களுடன் இயங்கியுள்ளன.
எண்பதாம் ஆண்டிலிருந்து அ.தி.மு.க. தலைமையை ஆட்படுத்திய
தேவர் சாதியும் பா.மா.க.எனும் தமக்கேயான கட்சியை உருவாக்கிக்கொண்டவன்னியர்
சாதியும் தத்தமக்கான தேசிய நலங்களை முன்னணிக்கு கொண்டுவந்ததன்
வாயிலாக இடச்சாதிகளின் தேசியங்களையும் பேசுபொருளாக்கியுள்ளனர்.அதே எண்பதாம்
ஆண்டுகளிலேயே தமிழகத்தின் தலித் கட்சிகளும் எழுச்சி கொண்டன.
ஆக, சாதி வாழ்முறை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடித்த சாதிப் பண்பாட்டுத் தொடர்ச்சியை
கொண்ட சமூக சக்திகளை உடையது என்கிற வகையில்ஒரே தேசமாக கட்டமைக்கப் பட்ட போதே
ஒவ்வொன்றும் தமக்குள் தனித்துவமான தேசிய நலன் களுடன் இயங்கும் அரசியல் வாய்ப்புக்குரியது
என்ற புரிதல்இன்று வரலாற்றால் வற்புறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்
மார்க்சிய வழிகாட்டலை எவ்வகையில் இணைக்கப்போகிறோம்? பார்ப்போம்.
No comments:
Post a Comment