Tuesday, May 14, 2013

மலையக மறுமலர்ச்சி தொடர்பில் செய்யக் கூடியவைகள்- செய்ய வேண்டியவைகள் எம். ஜெயகுமார்


மலையக தொழிற்சங்க அரசியல் வரலாற்றுப் பின்னணியினை எடுத்துக் கொண்டால் அதனை ஒரு சமூகவியல் நோக்குடன் மிக ஆழமாக சிந்தித்து அலசி ஆராய வேண்டியது மிக முக்கியமான விடயம் என்பது காலத்தின் தேவை. இதனை ஒரு பண்பாட்டு கலாசார பண்புடன் பின்னிபினைந்து தனக்கே உரித்தான பண்பினை சற்றும் சிதையாது, மாற்றியமைக்காது உள்ளதை உள்ளபடி, உண்மையினை சொல்லகூடிய ஒரு தனித்தகைமை நம்மிடம் வளர வேண்டும்.
அதுமட்டுமல்லாது மலையகத்தின் மறுமலர்ச்சியினை நாம் ஒருபுறம் அலசி ஆராய வேண்டிய தேவைப்பாட்டுடன் இன்று இருக்கின்றோம் என்பதினை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒரு காலகட்டத்தின் அரசியல், சமூக கலாசார, பொருளாதார தகைமையுடன் கல்வி, சுகாதாரம், சிறந்த பொழுதுபோக்கு, உணவு, உடை, உரையுள் போன்ற அத்தியாவசிய தேவைகளில் இருந்து எவ்வாறு மேன்மை கண்டுள்ளோம் என்பதினை மிக நுணுக்கமாக உற்று நோக்குகின்றபொழுது கிடைக்கப்பெறும் நல்ல தீர்ப்பினை மறுமர்ச்சி என்று வியாக்கியானம் பேசுகின்றோம். அவ்வாறே மலையகத்தின் மறுமலர்ச்சியினை எடுத்துக் கொண்டால்; ஆரம்ப காலங்களில் (1960 களில்) தோட்ட சிறுவர்கள் தேயிலை செடிகளை பறித்துவிடுவார்கள் அதனை சேதப்படுத்தி விடுவார்கள். இதனால் தேயிலைதுறைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற எண்ணத்திலேயே தோட்டபுறங்களில் பிள்ளை மடுவங்களையும், ஆரம்ப பாடசாலைகளையும் அமைத்தார்கள். அதாவது ஐந்தாம் வகுப்புவரை மட்டும், இதனை தோட்ட நிருவாகத்திற்கு உட்பட்டவகையில் கொண்டு நடத்தினார்கள்.
அத்தோடு 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுள் 24 பெருந்தோட்ட பாடசாலைகள் ஒரே நேரத்தில் அரசமயப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக சிறுக சிறுக 1977 ஆம் ஆண்டில் இருந்து ஏறத்தாழ 25 ஆண்டுகள் வரை நீடித்தது. அதாவது 1994 ஆம் வரை மட்டும். ஆதேநேரத்தில் மொத்தமாக 800 பாடசாலைகள் அரசமயப்படுத்தப்பட்டது. இது பல்வேறு மலையக தலைவர்களாலும் புத்திஜீவிகளாலும் வலியுத்தப்பட்டநிலையில்தான் நடைபெற்றது.
இதனை திரு தை.தனராஜ் அவர்கள் தனது ‘மலையகக்கல்வி ஓர் எதிர்கால நோக்கு’ என்ற கட்டுரையில் பின்வருமாறு விளக்கியுள்ளார். ‘1943 ல் தேசிய கல்வி முறைமைக்கான ஓர் உறுதியான அடித்தளம் திரு.கண்ணங்கரா அவர்களால் இடப்பட்டபோது தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக மலையகக் கல்வி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இலங்கையின் தேசிய கல்வி முறைமையின் பிதாமகனான திரு.கண்ணங்கரா மலையகக் கல்வியை முற்று முழுதான நிராகரித்ததோடு “மலையகக் கல்வி என்பது இந்திய முகவரின் பொறுப்பு” எனவும் தட்டிக் கழித்தமை மலையக சிறார்களுக்கு அவர் செய்த வரலாற்றுத் துரோகமாகும். மலையகக் கல்வி முறைமையை தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த மாத்தளை பாராளுமன்ற உறுப்பினர் திரு அலுவிகாரைக்கும் அக்கோரிக்கையை நிராகரித்த திரு.கன்னங்கராவிற்கும் இடையில் நடைபெற்ற விவாதம் மலையகக் கல்வி வரலாற்றில் ஒரு கறைபடிந்த சம்பவமாகும்’ என்னும் கூற்று அவதானத்திற்குரியது.
இதனை இலவசக்கல்வியின் தந்தையாகிய சீ.டபிள்யூ கன்னங்கரா அவர்களின் ஆளுமையின் தவறான கண்ணோட்டத்தினை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது. ஒரு தலைவன் என்னும்போது அவன் தன் தாய்நாட்டின் ஒட்டுமொத்த நலனில் அக்கரைக் கொண்டவனாக இருக்க வேண்டும். மாறாக இவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். மேலும் கூறுவது என்றால் அவர் தனது ஆளுமையினை விரிசலை  சுருக்கிக் கொண்டுள்ளார் என்று கூறலாம். மேலும் திரு ஊறுறு கன்னங்கராவுக்கு அப்பால் நமது மலையக சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு இன்றும்கூட மலையகத்தின் கல்வி முறையினை தேசிய கல்விமுறையில் ஓர் அங்கமாக அரசு ஏற்றுக் கொண்டபோதும் அவர்கள் அதனை தடுத்து நிறுத்தியதாக நமது இன்றைய ஜனாதிபதி ஒரு மின்னல் நிகழ்ச்சியில் பகிரங்கமாக தெரிவித்தார். உதாரணமாக ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி இன்னும்கூட தேசிய கல்லூரியாக தரமுயர்த்தப்ட வில்லை.
1970 க்கு பின் பெருந்தோட்ட பாடசாலைகள் படிப்படியாக அரசமயப்படுத்தப்பட்ட பின்னர், அக்காலத்தில் இருந்து மலையக மக்களில் கணிசமானவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற மனநிலை மாற்றத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து 14 வயதிற்கும் குறைந்த எந்த ஒரு பிள்ளையும் தொழில் செய்வதற்கு அனுமதிக்ககூடாது என்ற சட்டம் உலகலாவிய ரீதியில் ஒரு வலுவான காரணமாக அமைந்தது.
அக்காலக்கட்டத்தில் இருந்தே அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ மலையக மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. பின் ஐந்தாம் ஆறாம் வகுப்புக்கள் கற்றவுடன் தங்களை அறியாமலே பாடசாலை கல்வியினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு அப்பால் 1980 களின் பிற்பட்ட பகுதியிலும் 1990களின் ஆரம்ப பகுதியிலும் கணிசமானவர்கள் கா.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதியவர்களாகவும், சித்தியடைந்தவர்களாகவும் அதனை தொடர்ந்து உயர்தரம் செல்லக்கூயவர்களாகவும் காணப்பட்டநிலையில் மலையகத்தின் ஒரு மாற்று நிலையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அதன்பின் மலையகத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் இல்லாப் பிரச்சினை புறையோடிக்கிடந்தது இதனை மிக சாணக்கியமாக அன்றைய மறைந்த ஜனாதிபதி ஆர்இபிரேமதாஸ அவர்களால் கையாளப்பட்டது. 1990 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் 25000 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் 15000 ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இவற்றில் கணிசமான மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்பினை பெறக்கூடியதாக இருந்தது.
அத்தோடு அன்று நமது நாட்டில் ஏற்பட்டிருந்த இனக்கலவரம் காரணமாக வடகிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு அரச உத்தியோகம் மறுக்கப்பட்டநிலையில், அரச அடக்குமுறையும் உக்கிரம் கண்டிருந்தது. அப்போது அவர்கள் ஆயுத புரட்சிக்கு தயாரான நிலையில், நாட்டில் பொலிஸ் பாதுகாப்புபடைகளில் பற்றாக்குறை நிலை ஏற்பட்டது. இதனை கருத்திற்கொண்டு மலையக இளைஞர்களுக்கு பொலிஸ் உத்தியோகம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றுவரை பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
உதாரணமாக மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் ஆலோசனையின் பேரில் கிராம சேவகர்கள் நியமனம் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு 1999 ஆம் ஆண்டு முதன் முதலில் வழங்கப்பட்டது. மற்றும் 350 தபால் விநியோகத்தர்கள் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். மேலும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அதனைத் தொடர்ந்து பெருந்தோட்டதுரையில் கணக்கப்பிள்ளைமார்கள், எழுதுவினைஞர்கள், மேற்பார்வையாளர்கள், தேயிலை தொழிற்சாலையில் டீமெக்கர்கள் என்ற பல்வேறு தொழில்களில் மலையக இளைஞர் யுவதிகள் இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாது ஆடை தொழில்சாலையில் (புயசஅநவெ கயஉவழசல) தொழில் செய்கின்றார்கள். அவற்றோடு கொழும்பு போன்ற நகரங்களில் வியாபார ஸ்தலங்களில் தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் இவர்களில் பலர் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இருந்தாலும் இவர்களில் அனேகமானவர்கள் தனது சமூகத்தின் மேன்மைக்கு உதவுகின்றவர்களாகவும், மற்றும் சிலர் எதனையும் கண்டு கொள்ளாது தனது நனனை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற பிழையான எண்ணத்தில் தனது அடையாலத்தினையே மாற்றிக் கொண்டு வாழ்கின்றார்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று.
மேற்கூறிய தகவல்களுக்கு அப்பால் இன்று மலையக இளைஞர் யுவதிகள் வைத்தியத்துறை, சட்டத்துறை, சமூகவியல்துறை, நிருவாகத்துறை, என்று தொழில் புரிகின்றார்கள். இன்று இலங்கையில் கல்மானிகளுக்கு வழங்கக்கூடிய செயலாளர் மதவிகள், ஆணையாளர்கள், நிருவாக அதிகாரிகள், சமூக சயத்தலைவர்கள், இலக்கியவாதிகள், விமர்சகர்கள், அரசியல், தொழிற்சங்கவாதிகள், என்று பல்துறைகளில் உயர்வு கண்டுள்ள நிலையில் ஏனைய சமூகத்தினரோடு போட்டி இட்டுக் கொண்டு வளர்ச்சியினை கண்டுள்ளபோதும், மாறாக இதனையொரு மறுமலர்ச்சியின் அடிதளம் எனலாம். இருப்பினும் இவர்களிடத்தில் அடிப்படையில் ஒரு பாரதூரமான தவறு நிகழ்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இன்று மலையக சமூகத்தில் மிக முக்கியமான ஒருசாராரான ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூகம் சார்ந்த முனைப்பான தொழில்களில் உள்ளவர்கள் பலர் மலையக பெருந்தோட்ட கட்டமைப்பினை சற்றேனும் உணராது அதை அறிந்துக் கொள்ளாததும் ஒரு மத்தித்தரவர்க்கத்தினை நோக்கி கணிசமானவர்கள் நகர்வதினை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தோட்டக்குடியிருப்பில் இருந்து சற்று மாறுதலுக்காக அருகில் உள்ள நகர்புறத்தினை நோக்கி செல்கின்றார்கள், ‘அப்போதாவது மறுமலர்ச்சியினை கண்டு கொள்ளலாம் என்ற  எண்ணம் கூட அவர்களுக்கு இருக்கலாம். ஆக இவர்கள் நகரை நோக்கி சென்றாலும் அங்கு அவர்களுக்கு எந்தவிதமான சமூக அந்தஸ்த்தும் கிடைப்பத்தில்லை. மேலும் இவர்களுக்கு பொருளாதார நெருக்கடி அதிகரிப்பதோடு அந்த சமூகத்தினரிடத்தில் பின்தள்ளப்பட்டவர்களாக ஆகிவிடுகின்றார்கள். இந்நிலையில் மீண்டும் இவர்கள் தோட்டங்களை நாடியே வருவதினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
மாறாக இவர்கள் ஏன் தான் வாழ்ந்த மண்ணைவிட்டு செல்ல வேண்டும்? கல்வி கற்றபின் தொழிலை பெற்றுக்கொண்டோம். தொழிலை பெற்றப்பின், தன் அடையாளத்தையே மாற்றிக்கொண்டோம் என்ற பரிமாண உணர்வு இவர்களிடத்தில், இதனை சற்று ஆழமாக எண்ணும்போது நமது இருப்பு எங்கே இருக்கிறதுஎன்ற கேள்விக்கு விடை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். என்ன செய்வது? ஒரு இருக்கமான தோட்டக்கட்டமைப்புக்குள் பொருளாதார ரீதியாக எந்த ஒரு மறுமலர்ச்சியினையும் காணாத நிலையில் இத்தொழிலாளர்களை நீண்ட காலமாக ஒரு திட்டமிட்ட அடக்குமுறைக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். இதனை கல்வி கற்ற சமூகம் என்ற அடிப்படையில் எதிர்நீச்சல் இட்டு அணுக தவறிவிட்டார்கள்.
கட்டமைப்பின் நிர்வாக முறையை உடைத்து சமூக, பொருளாதார, கல்வி, கலாசாரம், மொழிப்பண்பாட்டு மத ரீதியான மறுமலர்ச்சியினை காண வேண்டும். எவ்வாறென்றால் முதலில் பொருளாதார ரீதியில் ஏனைய சமூகங்களை போல் சரிநிகர் சமனாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறு என்றால் கிராமமயப்படுத்தல் ரீதியாக ஒட்டுமொத்த இலங்கை பெருந்தோட்ட கட்டமைப்பின் ஒரு மாற்று நிலையினை உருவாக்க வேண்டும். அதாவது குடியிருப்புகளை தோட்ட நிருவாகத்திடம் இருந்து வேறுபடுத்தி அதனை நேரடியாக பிரதேச சபை நிருவாக அலகுக்குள் கொண்டு வந்து குடியிப்புகளையும் வீட்டு தோட்டங்களையும் அவரவர்களுக்கு சொந்தமாக்க வேண்டும். (தொழிலாளர் குடும்பங்களுக்கு) சொந்தமாக்கப்பட வேண்டும்) அத்தோடு பெருந்தோட்ட துறையினை கூட்டுறவு முறையின் கீழ் நீண்டகால அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அப்போது தான் ஒரு சமூக மறுமலர்ச்சியினை அடைய முடியும்.
மேலும் இந்த மண் இவர்களால் உருவாக்கப்பட்டது காடு வெட்டி பயணம் செய்து உருவாக்கப்பட்டது” எனவே இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் இவர்களே! என்பது யாராலும் மறுக்க முடியாது. ஆக கூட்டுறவு அமைப்பு முறையில் பகிர்ந்தளிப்பது என்பது சுலபதான விடயமே. அப்போதுதான் இவர்கள் உண்மையான ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை அடைய முடியும்.
மூலம்தான் இவர்களின் ஓர் உண்மையான பொருளாதார மறுமலர்ச்சியினை அடைய முடியும். “இது ஒரு பொது பொருளாதாரம்” இதனை சிதையாது பாதுகாக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரினதும் கடமை. இதனை கல்வி கற்ற சமூகம் என்ற அடிப்படையில் எவ்வாறு அணுகின்றது என்பது அவதானிப்புக்குரியது.
அதுமட்டுமல்லாது மலையக மக்கள் ஒரு “தேசிய இனம்” என்பது உண்மைதான், அதனை ஒரு அங்கீகாரத்திற்கு கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பினை தற்போது சுமந்துக் கொண்டு இருக்கின்றோம். மலையக மக்கள் தற்போது தனது சமூக அடையாளத்தினை பறிகொடுத்து கொண்டு இருக்கின்ற நிலையில் அதனை பாதுகாத்து தனது இனத்தின் அடையாளங்கள் என்றும் அழியாதவகையில் எனது சமூக செயற்பாடுகள் அமைய வேண்டும்.
அதாவது கல்வி துறையில் தனது சமூகம் சார்ந்த கல்வி முறைமையினை சேர்த்துக் கொள்ள வேண்டும (மாகாண முறையில்) அதாவது சமூக விழுமியங்கள் கல்வி, கலாசாரம், பண்பாடு சிதைவு காணாது பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
மேலும் மொழி பழக்கவழக்கங்கள் (கோடி பக்கம், பயிப்புக்கரை, முச்சந்தி, மேட்டு லயம், பெரட்டுகளம்) நாடகம், கூத்துக்கள், நகைசுவை அம்சங்கள் கொண்ட பாடல்கள், நாட்டார் பாடல்கள், விளையாட்டுக்கள் (கிட்டி, கிளித்தட்டு, பிள்ளையார் பந்து போன்றவைகள்) கலாசார, பண்பாட்டுடன் பிண்ணி பிணைந்து காணப்படுகின்றன.
சமய மறுமலர்ச்சி என்னும்போதும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் அதாவது சிந்தாங்கட்டி கோயில், சோனக்கருப்பு கோயில், மருதவீரன் கோயில், மாடசாமி கோயில், வண்ணாத்திக் கோட்டை, முனி என்று பல சிறப்பான  தெய்வ வழிபாட்டு முறைகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம், ஏன் நாம் நமது வயித்தை கட்டி பெரிய ஆலயங்களை அமைத்து மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியில் நின்று அந்நியப்பட வேண்டும்? எனவே நாம் தமது வழிபாட்டு முறைமையினை சமூகம் பக்கம் திருப்ப வேண்டும். அதுமட்டுமல்லாது அரசியலும் தமது சமூகத்தின் நலனை பாதுகாக்கும் கவசமாக இருக்க வேண்டும், மாறாக அது தனது சமூகத்திற்கு துரோகம் விளைவிக்குமானால் அதை இல்லாது அழித்து ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றுதிறள வேண்டும்.
எனவே, மலையகத்தின் மறுமலர்ச்சி என்பது தனி மனிதரில் அல்லாது ஒட்டுமொத்த சமூக செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.


No comments:

Post a Comment