Saturday, July 9, 2011

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி – சில நினைவுகள் : லெனின் மதிவானம்

இனியொரு
கட்டுரையில் வரும் கருத்துக்கள் லெனின் மதிவாணம் அவர்களின் கருத்துக்களே தவிர இனியொருவின் கருத்துக்கள் அல்ல.
கடந்த புதன் கிழமை (06-07-2011) அன்று பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி(1932-2011) தமது 79 ஆவது வயதில் நம்மை விட்டு நிரந்தரமாக பிரிந்தார். அவர் நம் அனைவரினதும் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் அறிஞர் ஆவார். அவரது இறப்பு நிகழ்ந்த அன்றைய தினம் சுமார் இரவு 8.30 மணியளவில் சக்தி எப்.எம் செய்தி ஆசிரியர் திரு.கே.எம். ரசூல் ‘பேராசிரியர் சிவத்தம்பி இறந்துவிட்டார். அவர் பற்றிய சில தகவல்களை பெறமுடியுமா’ எனக் கேட்டார். ‘ஐயோ’ என அலறியதாக ஞாபகம். அதிர்ச்சியில் எதையுமே பேச முடியாத நிலை.


தொண்டை அடைத்துப் போயி கண்கள் குலமாகிக் கொண்டிருந்தன. நண்பர் என்னை புரிந்துக் கொண்டவராக ‘உங்கள் நிலை எனக்கு புரிகின்றது. உங்களுடன் பின் தொடர்புக் கொண்கின்றேன்’ என தொலைபேசியை வைத்துவிட்டார். பின் பேராசிரியரின் குடும்ப நண்பரான றமணனுடன் தொடர்புக் கொண்டு செய்தியை உறுதப்படுத்திக் கொண்டேன்.

மிக அண்மைக்காலங்களில் எனது மற்றும் ந.இரவீந்திரன் முதலானோரின் நூல்களை, செய்திகளை, இந்தியாவிலிருந்து பெ.சு.மணி, அ.மார்க்ஸ், ஆதவன் தீட்சண்யா முதலானோர் அனுப்பி வைக்கும் கடிதங்கள், ஈமெயில்கள்(பிரதிகள்), சஞ்சிகைகள் என்பனவற்றை பேராசிரியரிடம் கொண்டு சேர்க்கின்ற பணியினையும் அவர் வழங்கும் தகவல்களை, நூல்களை எம்மிடம் சேர்க்கின்ற பணியினையும் நட்புடன் செய்தவர் றமணன்(நானும் அவரும் ஓரே திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள்). எமக்கும் பேராசிரியருக்கும் இடையிலான உறவுப் பாலத்தை பலமுள்ளதாக மாற்றியதில் இவருக்கு முக்கிய இடமுண்டு. இவர் பேராசிரியரின் அரசியல் கலை இலக்கியம் தொடர்பான பார்வைகளில் அல்லது அதன் செயற்பாடுகளில் ஈடுபாடு கொண்டவரல்லர்.

சில சமயங்களில் தொடர்பாடலும் தொழில் நுட்பம் சார்ந்தும் பேராசிரியர் இவருடன் உரையாடுவதுண்டு. இவர் பேராசிரியரை வளர்ப்பு தந்தையாகவே மதித்து எண்ணி அவரூடனான உறவை பேனிவந்தார். பேராசிரியரை நாங்கள் விமர்சித்தால் இயல்hகவே அவருக்கு கோபம் வருவதை அவதானித்திருக்கின்றேன். எனவே பொதுஜன தொடர்பு சாதன நண்பர்கள் பேராசிரியர் பொறுத்த தகவல்களுக்காக என்னை அழைத்த போது அதனை வழங்குவதற்கு பொறுத்தமான நபராக இவரைக் கருதி அவரின் தொலைப்பேசி இலக்கத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

பின்னர் எனது அனுதாப செய்தியை கூறுவதற்காக பேராசிரியரின் இரண்டாவது மகள் திருமதி. தாரணி புவனுடன் தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டேன். அவர் ஓரவிற்கு எனக்கு அறிமுகமாகியிருந்தார். எனது அனுதாப செய்தியை கேட்டவுடன் அழுதுவிட்டார். பேராசிரியரின் வழித்தடத்தை பின்பற்றி அவரூடனான நேசிப்பை வளர்த்துக் கொண்ட எங்களுக்கே தாங்க முடியாத துன்பம் என்றால் அவரது சொந்த பிள்ளைகளுக்கு அது எத்தகைய இழப்பாக இருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பேராசிரியரின் இறுதி கிரிகைகள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 க்கு நடைப்பெறும் என்ற செய்தியையும் கூறினார். இதன் பின்னர் அவரது இறப்புச் செய்தியை நண்பர்களுக்கு தெரிவித்து எமது உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. நீர்வை பொன்னயன், பேராசிரியர் சி;. மௌனகுரு, ஆதவன் தீட்சண்யா, கலாநிதி ந. இரவீந்திரன், தெணியான், ஜோதிகுமார், என பல நண்பர்களுடன் பேசியதாக ஞாபகம். அவ்வாறே சிலர் பேராசிரியரின் இறப்புப் பற்றி என்னுடன் தொiபேசியில் தொடர்புக் கொண்டு தமது துயரங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

அவர்களில் நந்தினி சேவியர், மல்லியப்பு சந்தி திலகர், ஜெயகுமார், ஜேம்ஸ் விக்டர், ஹலன், இதயராசன் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். அத்துடன் அவரது இறப்பு பற்றியும் மற்றும் தமிழியல் ஆய்வுலகில் அவரது சாதனைகள் பற்றியும் பொதுஜன தொடர்பு சாதனங்கள் ஒளி ஒலிப்பரப்பிக் கொண்டிருந்தன.

மனம் எதிலும் ஒட்டாமல் ஒருவித சோர்வு உணர்வுடன் நான் வழiயாக வாசிக்க எழுத உபயோகின்ற மேசையில் அமர்ந்தேன். என்ன ஆச்சரியம்! நான் சிவத்தம்பியை அறிந்து வாசித்த முதல் நூல் ‘இலக்கியத்தில் முற்போக்குவாதம்’ என்ற அதே நூல் என் புத்தகக் கட்டுகளில் கிடக்கின்றது. துடுப்பு கூட பாரமென்று கரையை தேடும் ஓடங்களாகவே அவை எனக்கு தென்பட்டன. தமிழ் இலக்கியத்தை மார்க்சிய அடிப்படையில் இத்தகைய ஆய்வுகளினூடாகவே புரிந்துக் கொண்டேன். இத்தகைய நிகழ்வுகள்- நினைவுகள் இருபது ஆண்டுகள் பின்னோக்கி சென்று நிலைக்கின்றது.

பேராசிரியரூடனாக அறிமுகம்…!

1990களின் ஆரம்பத்தில் இலங்கை முற்போக்கு எழத்தாளர் சங்கம் இலக்கிய பேரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரங்கிற்கு இந்தியாவிலிருந்து வல்லிக்கண்ணன், பொன்னீலன், தாமரை.சி.மகேந்திரன் முதலானோர் அழைக்கப்படடிருந்தனர். அத்துடன் ஈழத்து அறிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முதலானோர் கலந்துக் கொண்டனர். ஆய்வவரங்கிற்கு தலைமை தாங்கியர் பேராசிரியர். இவ்வாய்வரங்கில் ஈழத்து கவிதை வளர்ச்சி பற்றி கட்டுரை சமர்பித்த எம்.ஏ. நுஃமான் மஹாகவி பற்றி குறிப்பிடுகின்ற போது ‘ ஈழத்து கவிதை வளர்ச்சிப் போக்கில் முக்கியமான கவிஞரான மஹாகவியை கைலாசபதியும் சிவத்தம்பியும் தமது குழு மனப்பாங்கால் மறைத்து விட்டார்கள்’ என் கருத்தை முன்வைத்தார்.

தொடர்ந்து ஈழத்து புனைக்கதை இலக்கியம் பற்றி கட்டுரை சமர்பித்த செ. யோகராசா தமதுரையில் ‘ஈழத்து புனைக்கதை இலக்கியத்தை போன்று, குறிப்பாக நாவல் இலக்கியம் ஈழத்து முத்த விமர்சகர்களின் பார்வை படாமையினாலேயே அது வளர்ச்சியடைந்திருக்கின்றது’ எனக் குறிப்பிட்டார். அன்றைய சூழலில் பேராசிரியர் இ.மு.எ.ச.த்தின் வெளியீடாக வந்த ‘புதுமை இலக்கியம்’ சஞ்சிகையில் ‘எழுத்தாளனும் சித்தாந்ந நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் கட்டுரையொன்றினை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் ‘தமிழில் சிறந்த நாவல்கள் தோன்றவில்லை எனவும் அதற்கு கைலாசபதி போன்றோரின் விமர்சனக் கொடுங்கோண்மையும் காரணம்’ என்ற கருத்தினை முன் வைத்திருந்தார்.

இவ்வாய்வுக் கட்டுரைக்கு பின்னர் மதியபோசன இடைவெளி, அதன் பின்னரே சபையோர் கருத்துரை வழங்க வேண்டும் என ஏற்பாட்டுக் குழு அறிவித்தது. இந்த வேளையில் நானும் என்னுடைய நண்பர்களும் பேராசிரியரை கடந்து செல்கின்ற போது ஏதோ ஒரு ஆகர்ஷிப்பில் நான் அவரைப் பார்த்து புன்முறுவல் செய்தேன். மிகவும் அமைதியாக இன்முகத்துடன் புன்னகை செய்து இலக்கிய அரங்கு பயனள்ளதாக உள்ளதா எனக் கேட்டார். இளங்கன்று பயமறியாது என்பது போல- சில நேரங்களில் இவ்வகையான மரபுகளை நான் பெரிதாக அலட்டிக் கொள்வதும் இல்லை.

மஹாக்கவி பொறுத்தும் அவரது கவிதையின் அரசியல் பின்னணிக் குறித்தும் குறிப்பிட்டு அதில் நீங்களும் கைலாசபதியும் சரியான நிலைப்பாட்டினையே சார்ந்துள்ளீர்கள் என்றேன்.அவர் எனது கருத்துக்களை ஆர்வத்துடன் அவதானிப்பதை உணர்ந்து மேலும் நான், அவ்வாறான கருத்துக்கள் நீங்கள் தலைமை வகிக்கின்ற கூட்டத்திலேயே பேசப்படுகின்ற போது மௌனம் சாதிப்பதும் எமது தளத்தினை தகர்த்துவதற்கு சாதமாக அமையும் என்பதுடன் அழகியல் பார்வையில் நின்றுக் கொண்டு சிறந்த நாவல்கள் தோனற்வில்லை எனக் கூறுவதும், மீண்டும் அழகியலுக்கு திரும்ப வேண்டும் என்ற பிற்போக்கான கலை இலக்கிய பார்வையையே வலியுறுத்த முனைவதாக அமையும் என என் கருத்தை வலியுறுத்திய போது ஒரு தாயின் கரிசனையோடு என்னைத் தழுவி அக்கருத்துக்களை கலந்துரையாடலில் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி சபையோருக்காக ஒதுக்கப்பட்ட கலந்தரையாடலில் எனது கருத்துக்களை கூறினேன்.

அன்றைய கூட்டத்தின் நிகழ்வுகள் கருத்துக்கள் ஏனோ ஒருவித வெறுப்பையே ஏற்படுத்தியிருந்தது. வீட்டிற்கு செல்வதற்காக மண்டபத்தின் வாயிலை நோக்கிய வந்த சந்தர்ப்பத்தில் தமது தொகுப்புரையில் எமது கருத்துக்களை ஆதரித்து பேராசிரியர் பேசியை கேட்டு மீண்டும் மண்டபத்திற்குள் நானும் எனது நண்பர்களும் வந்து அமர்ந்தோம். அதன் பின்னர் மலையக தமிழாய்ச்சி மநாட்டில் நான் கட்டுரை சமர்த்த போது அவ்வைபவத்தில் பேராசிரியர் சிறப்பு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். இந்த சந்தர்ப்த்தில் எங்களுடன் மிக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். பல நாட்கள் பழகியது போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டிருந்தது.

அதன் பின் பேராசிரியருடன் ஏற்பட்ட என் உறவு பன்முகமானது. நேரடியாக அவரிடம் கல்வி கற்காத போதும் ஆசானாக, இலக்கிய வழிக்காட்டியாகவெல்லாம் எமது உறவுகள் தொடர்ந்தன. பொதுவாக தமிழ் இலக்கியம், சமூகம், அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பான பேராசிரியருடன் கலந்துiயாடுவதுண்டு. பல தகவல்களை அவரது கலந்துரையாடல்களிலிருந்து பெறக் கூடியதாக இருந்தது. அவ்வேறே மலையக இலக்கியம் தொடர்பில் நூல்களோ அல்லது தகவல்கலோ தேவைப்படின் என்னிடம் அவர் கேட்பார். தொலைப்பேசியில் மிக நீண்ட நேரம் உரையாடுவார். மல்லியப்பு சந்தி திலகரின் ‘மல்லியப்பு சந்தி’ கவிதைத் தொகுப்புக்கான முன்னூரையை எழுதுகின்றபோது மிக நீண்ட நேரம் மலையக இலக்கியம்- குறிப்பாக சி.வி.வேலுப்பிள்ளை பற்றி கலந்துரையாடினார்.

சி.வி யிலும் அவரது கவிதையிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.இதற்காக மல்லியப்பு சந்தி திலகர் பேராசிரியருடன் தொலைப்பேசி அழைப்பை ஏற்படுத்தி தந்தார் எனபதனையும் இவ்விடத்தில் நினைவு கூற விரும்புகின்றேன். இறப்பதற்கு ஒரு மாத்திற்கு முன்னர் ‘பாக்கியா பதிப்பகத்தின்’ வெளியீடாக வருவதற்கு தீர்மாணித்திருந்த எனது ‘முச்சந்தி: பார்வையும் பதிவும்’ என்ற நூலுக்கான முன்னுரையை பேராசிரியரிடம் கோட்டிருந்தேன். அது பற்றி கதைப்தற்காக அவரை சந்தித்த போது அந்நூலில் இடம்பெறுகின்ற ‘சி.வி யின் காலமும் கருத்தும’; என்ற கட்டுரையையும், காலந்தோறும் அவர் பெயர் நிலைத்து நிற்கும்’ என்ற மீனாட்சியம்மாள் பற்றிய கட்டுரையும் கேட்ட போது தானும் சி.வி பற்றி எழுத முயற்சியுடையவராக இருந்தார் எனவும் அதற்கான சந்தர்ப்பம் கைக்கூடவில்லை எனவும் கவலைப்பட்டார்.

இதனால் அவரது ‘ஈழத்தின் தமிழிலக்கியச் சுடர்கள்’ என்ற நூல் நிறைவுப் பெறவில்லை எனவும் குறிபிட்டார். அத்துடன் சி.வி யின் கவிதைகள் பற்றி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவராக இருந்ததை உணர முடிந்தது.

ஆரம்பத்தில் நான் கொழுப்பிற்கு வருகின்ற போது வெள்ளவத்தையில் இருந்த அவரது வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து விட்டு வருவது வழக்கம். நான் கொழும்புக்கு மாற்றலாகி வந்த பின்னர் குறிப்பாக தெஹிவலையில் அவரது இல்லத்திற்கு மிக அருகிலே தங்கியிருந்தமையினால் பேராசிரியர் அவர்களை அடிக்டி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவ்வாறு சந்திக்கின்ற போதெல்லாம் அண்மைக்கால கலை இலக்கியம் தொடர்பான செய்திகளை கேட்டுக் கொள்வார். அவர் நோய்க்கு ஆட்பட்டு வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்ட சந்தர்ப்பங்களியெல்லாம் அவர் தொலைப்பேசியின் மூலமாக நண்பர்களுடன் தொடர்புக் கொண்டு உரையாடுவதை அவதானித்திருக்கின்றேன்.

‘மவன் உடலில் எல்லாப் பாகங்களும் செயலற்றுப் போயிவிட்டது. ஆனால் முளை மட்டும் இயங்குகின்றது. அதுவும் நின்று விட்டால் நல்லதுடா’ என அவர் அடிக்கடிக் கூறுவார். நான் அதிர்ந்துப் போவேன். இவ்விடத்தில் முக்கியமானதொரு அம்சத்தை வலியுறுத்த வேண்டியுள்ளது. அவர் தமது இறுதி மூச்சு வரையில் அவர் இயங்கிக் கொண்டிருந்தார். வாசிப்பு எழுத்து என்பதும் ஒரு அரசியல், சமூகச் செயற்பாடாகும். இந்தப் பின்னணியில் தமிழ் ஆய்விற்காக அவர் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அதனூடாகவே அவருக்கான சமூக அங்கிகாரம் கிடைத்தது. இது பலருக்கு அலர்ஜியாக அல்லது அவர்களின் மூக்கை சினங்க வைப்பதாக இருந்தது. இன்றுவரை எஸ்.பொ முதலானோர் இத்தகைய விமர்சனங்களையே முன் வைத்து வருகின்றனர். பொறாமையும் தனிமனித குரோதங்களும் இவர்களது எழுத்துக்களில் முனைப்புற்றிருப்பதனைக் காணலாம்.இவரது ‘வாரலாற்றில் வாழ்தல்’ என்ற இரண்டு பாகங்களை கொண்ட நூலில்(900 பக்கங்களுக்கு மேற்பட்டது) இந்நப்பணியை மிகச் சிறப்பாகவே செய்துள்ளார்.

பேராசிரியரின் ஆராய்ச்சி தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம், விஞ்ஞானபூர்வமான இயக்கவியல்வாதத்தைக் கொண்ட அவரது முறையியலே ஆகும். அவருடைய முறையியல் பல்தறைசார்பானது. இந்த முறையிலும் ஆய்வுப் பார்வையும் பேராசிரியரிடம் சிரமபடாமல் எளிதானதொரு இயல்பாக காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற தமிழ் சூழலுக்கு ஏற்றவகையில் பியோகித்து ஆய்வுகளை வெளிக் கொணர்ந்ததார். தமிழ் புத்தி ஜீவிகள் பலர் தமிழ் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோதித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டு சென்றது. தமிழ் சமூகத்தில் சாதி மதம் இனம் மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதை புரிந்துக் கொள்வதன் மூலமே அம்மக்களை அணித்திரட்டுவதற்கான மார்க்சியத்தை கண்டடைய முடியும். பேராசிரியர் இதனைப் புரிந்துக் கொண்டு தமிழியல் ஆய்வினை மேற்கொண்டார். அத்துடன் தமிழர் பண்பாட்டில் கலை இலக்கியம், நாடகம், வரலாறு, சமூகம், கல்வி, தொடர்பாடல் மற்று ஊடக நெறி என பல்துறை சார்ந்த விடயங்களில் தமது பார்வையை செலுத்தி அதன் ஒளியிலேயே தமது ஆய்வுகளை முன்வைத்தார்.

அவரது ஆய்வுகள் இன்றுவரை பல்துறை சார்ந்த ஆய்வுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் வழிக்காட்டியாக அமைந்துள்ளது. அந்த வகையில் கைலாசபதி சிவத்தம்பி என்ற மரபொன்று தமிழியல் சூழலில் உருவாகி வந்திருப்பதையும் காணமுடிகின்றது.

எண்பதுகளுக்கு பின்னர் கேவலாமானதோர் அரசியல் பின்னணியில் மோசமான சமூக நிலைமைகள் தோன்றியது இலங்கைக்கு மாத்திரம் உரித்தானதொன்றல்ல. இந்தச் சூழலில் பேராசிரியரின் பார்வையும் மாற்றமடைந்து. இக்காலக்கட்டத்தில் அவருடன் இணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் அவரது அடிச்சுவட்டை பின்பற்றி வந்தவர்கள் அவருடன் முரண்பட்டனர். புலிகள் இயக்கத்தினால் கொண்டு குவிக்கப்பட்ட நேச சக்திகள் பொதுமக்கள் போக பாஸிசத்தின் புள்ளியை நாம் தரிசிக்க தவறவில்லை. இவ்வியக்கம் தமிழ் மக்களின் போராட்டங்களை கூனி குறுக்கியதுடன் இறுதில் படுத் தோல்வி அடையவும் செய்தது. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை இப்போக்கில் வளர்த்தெடுத்த அமெரிக்கா தமிழ் மக்களை நடுத்தெருவுக்கே கொண்டு வந்தது விட்டது. இக்காலக்கட்டத்தில் பேராசிரியர் இவ்இயக்கத்தின் ஆதரவாளராக மாறினார் என்பது துரதிஸ்ட வசமாகதொரு நிகழ்வாகும். இது குறித்து பல முற்போக்கு மார்க்சிய எழுத்தாளர்கள் அவரை விமர்சனத்திற்குட்படுத்தினர். எனது விமசனமும் முரண்பாடும் கூட இந்த பின்னணியில் எழுந்ததாகும்.

அதேசமயம் இதே காலப்பகுதியிலும் தொடர்ந்து வந்த காலப்பகுதியிலும் தமிழியல் சார்ந்து அவர் செய்த ஆராய்ச்சிகள் முக்கியமானவையாக காணப்படுகின்றன. அவை மக்களை தழுவியதாக அமைந்துள்ளமை அதன் பலமான அம்சமாகும். பேராசிரியரின் இந்த பங்களிப்பை நாம் தொடர்ந்து மதித்து வந்தோம்.

சுpல மாதங்களுக்கு முன் கலாநிதி ந. இரவீந்திரனின் ‘திருக்குறலில் கல்விச் சிந்தனைகள்’ என்ற நூல் பற்றிய விமர்சன நிகழ்வொன்றினை வவுனியா தேசிய கல்வியல் கல்லூரி விரிவரையாளர்களும் மாணவர்களும் ஒழுங்கமைத்திருந்தனர். ஆவ்வரங்கில் பேராசிரியரும் வாழ்த்துரை ஒன்றினை எழுத்து மூலமாக வழங்குவதாக ஒப்புக் கொண்டிருந்தார். அவ்வாழ்துரையினை பெறுவதற்காக நானும் இரவீந்திரனும் வவுனியா செல்வதற்கு முதல் நாள் பேராசிரியரை சந்தித்தோம். அந்நூலை மிக கவனமாக வாசித்து காட்டும் படி கூறிய அவர் அதில் முக்கியமாக இடம் பெறும் கருத்துகளை எங்களிடம் விசாரித்தார். பின்னர் மிக நிதானமாக அவர் தமது கருத்தினை கூற இரவீந்திரன் எழுதினார். மூன்று நான்கு முறைகள் வாசித்து திருத்தம் செய்த பின்னர் தமது கையெழுத்திட்டு தந்தார். அதன்பின் எனது ‘மலையகம் தேசியம் சர்வதேசம்’ என்ற நூலை கையளித்த போது அதிலடங்கிருந்த கட்டுரைகளின் மையக் கருத்தினை கேட்டு வினாவினார். கைலாசபதி பற்றி எழுதியிருந்த கட்டுரையொன்றில் பேராசிரியர் அண்மை காலத்தில் கொண்டிருந்த அழகியல் பார்வைக் குறித்தும் அந்நூலில் விமாசனம் செய்யப்பட்டிருந்தது. பொறுமையாக இவற்றையெல்லாம் கேட்ட பேராசிரியர் மிக அமைதியாக ‘மவன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய யாவற்றையும் ஓரளவு சாதித்து விட்டேன் அதற்கான அங்காரமும் கிடைத்தது. அதே மாதிரி வாங்க வேண்டிய அடிகளையும் தாக்குதலையும் வாங்கிவிட்டேன். என் பிள்ளைகள் நீங்கலெல்லாம் தாக்கும் போது தாங்க முடியல்லையடா’ இந்த வார்த்தைகள் என் நெஞ்சை சுட்டன. உண்மைதான்! நாங்கள் முன் வைத்த விமர்சனங்களை விட அவற்றில் அடங்கியிருந்த வார்த்தைகள் அவரது மனதை வேதனைப்படுத்தியிருக்க வேண்டும். ஒரு காலக்கட்ட ஆர்பரிப்பில் முகில்களை கிழிப்தற்கென்றே கரங்களை உயர்த்திய பேராசான் சிவத்தம்பி போன்றவர்களின் வாரிசுகள் அல்லவா நாங்கள். அந்த பாதையில் வந்த நாங்கள் அவற்றை உருவாக்கியவர்களின் பாதை மாறி போகின்ற பொழுது அவர்களால் உருவாக்கப்பட்ட பார்வையே அவர்களை தாக்கும் என்ற சமூக நியதியை இந்த வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக எனக்கு அறிய முடிந்நது.

இவ்விடத்தில் பிறிதொரு விடத்தினையும் பதிவாக்க விரும்புகின்றேன். எனது விமர்சனங்கள் ஆய்வுகள் சில சமயங்களில் பேராசிரியரின் கருத்துக்களுடன் முரண்பட்டிருக்கும். அதற்காக பேராசிரியர் என்னுடன் தனிப்பட்டவகையில் கோபம் கொண்டவராக இருந்ததாக நான் அறியவில்லை. அவர் பல சந்தர்ப்பங்களில் அவரது கட்டுரைகளில் எனது எழுத்துக்கள் பற்றி சிறப்பாகவே குறிபிட்டிருக்கின்றார். நீண்ட இடைவெளிக்கு; பின் கண்டி திருத்துவ கல்லூரி ஆசிரியர் இரா.சிவலிங்கம் (எனது ஆசிரியர்களில் முக்கியமானவர்) எனது அலுவலகத்தில் சந்தித்தார். அவர் பேராசிரியருடன் மிக நெருக்கமான உறவு வைத்திருப்பவர். ‘சில வருடங்களுக்கு முன் உங்களின் கட்டுரைகளை வாசித்த பேராசிரியர் சிவத்தம்பி உங்கள மீது மரியாதை வைத்திருக்கின்றார் எனவும் உங்களை ஒரு மறை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார். நான் உங்களை சந்திக்க முடியாது போனமையினால் இச்செய்தியை அப்போது கூற முடியாத போயிவிட்டது. இப்போது உங்களுக்கு பேராசிரியருடன் நிறை தொடர்பிருக்கும்’எனக் குறிப்பிட்டார். நம்மில் சில தலைக்கொழுத்த மேதாவிகளும் இலக்கிய புடுங்கிகளும் தமது குழு சார்ந்த இழிபறி நிலையின் காரணமாக வேண்டாதவர்கள் கையில் கஞ்சா பொட்டலத்தை திணித்து சிறையிலிடும் உயர்ந்த பாராம்பரியத்தை காவல் துறையினரிடமிருந்து கற்ற இக்கனவான்கள் எழுத்தாளனை தனிமைப்படுத்துவதற்கும் தாக்ககுவதற்கும் இக்கைங்காரியத்தை செய்து வருகின்றனர். தமது அணியை சாராதவர்களையெல்லாம் பிழையாக காட்ட முனைகின்றர்.

ஒரு படைப்பையோ ஆய்வையோ நிராகரிக்க முடியாக சந்தாப்பத்தில் ஆசிரியர் மீதான அவதூரையோ அல்லது தனிமனித தாக்குதல்களையோ மேற்கொள்கின்றர். புனைப்பெயர்கள் இவருகளுக்கு காதமாகிவிடுகின்றது. இந்தப் பின்னில் ஒரு ஆய்வை மேலோட்டமாக படித்துவிட்டு எழுதுகின்ற குறிப்புகள், நண்பர்களுக்கு எந்தினோ அல்லது ஆராய்ச்சிமணியோ என்ற பெயர்களில் எழுதுகின்ற காதல் கடிதங்கள், வாய்மொழி கதைகள் எல்லாம் இவர்களது நேர்மையீனத்தைக் (தாய்கள் மாட்டிக் கொள்ளாத வகையில்) காட்டுகின்றது. இந்த பண்பை நான் பேராசிரியரிடம் ஒருபோதும் கண்டதில்லை.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் சாருமதியின் ‘அறியப்படாத மூங்கில் சோலை’ தொகுப்பு வெளிவந்த போது அதுப் பற்றி நீண்ட கட்டுரையொன்றினை பேராசிரியர் தினக்குரல் வாரவெளியீட்டில் எழுதியிருந்தார். அக்கட்டுரையில் இதுவரை யாரும் சாருமதி பற்றிய தகவல்களை வெளிக் கொணரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் செ.யொகராசா கூட இதுப்பற்றி அக்கரை செலுத்த வில்லை என்ற ஆதங்கத்தையும் தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு பின்னர் பேராசிரியரின் தொலைப்பேசி அழைப்பு வந்தது. ‘அடே தம்பி இப்பதான் அந்தனி ஜீவா டெலிபோனில் கதைத்தார். உமது நூலில் சாருமதி பற்றி எழுதியிருக்கிறதாவும், பல தொலைகாட்சி நிகழ்வுகளிலும், இலக்கிய கூட்டங்களிலும் பேசிவருவதாகவும் அறிந்தேன். சாருமதி பொறுத்த என்னிடம் கூறியவர்கள் இதுவரை இது தொடர்பான பதிவுகள் எதும் வரவில்லை என்ற தகவலையே தந்திருந்தனர். நான் தவறு செய்திட்டன் அப்பு’ என மனவருத்தப்பட்டார். பின்னர் சாருமதி பொறுத்து எங்களது உரையாடல்கள் தொடர்ந்தன. சாருமதியின் கவிதை ஆளுமைகள் மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அதேசமயம் அதன் பலவீனமான பக்கங்கள் குறித்தும் நீங்கள் எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். குறிப்பாக நக்ஷல்பாரி இயக்கம்- அழித்தொழிப்பு நடவடிக்கைகள் – அதன் தலைவர் சாருமஜிம்தார் குறித்தெல்லாம் கருத்து மயக்கங்கள் சாருமதியில் இருந்ததை அவரது கவிதைகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன.

அதனை நீங்கள் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் பலவீனங்களில் ஒன்றாக காண்பதில் நாங்கள் முரண்படுகின்றோம் என்பதையும் அவரிடம் கூறினேன். புலவிடங்களில் என்கருத்துடக்களுடன் உடன்பட்ட அவர் சீனசார்பு பற்றிக் குறிப்பிடுகின்றபோது மொஸ்கோ சார்பே சரியான நிலைப்பாட்டினை கொண்டிருந்தது எனவும் அது தொடர்பில் ஆழமாக கற்கும்படியும் வலியுறுத்தினார்.

பேராசிரியருக்கு தமிழக அறிஞர்களிடையே பெரும் மதிப்பிருந்தது என்பதை யாவரும் அறிவோம். இ. மு.எ.ச. ஒழுங்கமைத்திருந்த பேரங்கிற்கு வருகை தந்திருந்த தமிழக எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், பொன்னீலன், தாமரை சி. மகேந்திரன் முதலானோர் மிக உயர்ந்த மரியாதையை பேராசிரியர் மீது வைத்திருந்தனர் என்பதை அவர்கள் மலையகத்திற்கு வந்த போது அவர்களை சந்தித்து கதைத்ததில் அறியமுடிந்து. அப்போது தமிழகத்தில் தாமரை மகேந்திரனை ஆசிரியராக கொண்டு வெளிவந்த தாமரை இதழில் ‘பேராசிரியர் கைலாசபதி பற்றிய ஆய்வுகளும் வக்கிரங்களும்’ என்ற தலைப்பிலான கட்டுரையொன்றினை எழுதியிருந்தேன். அக்கட்டுரையில் பேராசிரியர், கைலாசபதியின் நாவலிலக்கிய விமர்சனம் தொடர்பிலும் ஜெயமோகன் பற்றி விமசர்சனம் தொடர்பிலும் முன்வைத்திருந்த முரண்பாடான கருத்துக்களை மறுத்திருந்தேன். கட்டுரையை பிரசுரித்த இதழ் குழுவினர் அந்த பகுதியை மட்டும் நீக்கியிருந்தனர். அந்தளவிற்கு அவர்கள் பேராசிரியர் மீதான மரியாதை மட்டுமன்று அவருக்கு வழிப்பாடு செய்கின்றவர்களாகவும் இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. மிக அண்மையில் இலங்கைக்கு வந்திருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ் என்னுடன் தங்கியிருந்த போதும் மற்றும் நண்பர் கண்டிபன் வீட்டில் தங்கிய நாளிலும் எமது உரையாடல்கள் இலக்கியம் குறித்து பல கோணங்களிலான உரையாடலாக தொடர்ந்தது. இவ்வுரையாடல்களின் போது பேராசிரியர் பொறுத்த விமர்கனங்களும் எழுந்தன. அ.மார்க்ஸ் பேராசிரியரை தங்களுடைய பேராசானாகவே மதித்த அவர் தமிழகத்தில் புதிய தலைமுறையினருக்கு வழிக்காட்டியாக பேராசிரியர் வழங்கிய பங்களிப்பினை நன்றியுணர்வுடன் நினைவுக் கூர்ந்தார். அத்துடன் பேராசிரியர் செம்மொழி மாநாட்டில் கலந்துக் கொள்வது தொடர்பாக தமது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார். அந்தவகையில் பேராசிரியர் ஈழத்து எழுத்தாளுர்களுக்கு மட்டுமன்று தமிழக எழுத்தாளர்களுக்கும் வழிகாட்டியாக அமைந்திருந்தமை அவரது ஆளுமைக்கு மேலும் வலிமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மனிதர்களிடையிலான காதலே உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கு சாட்சியாய் அமைந்தவர் பேராசிரியர். யாழ்.கரவெட்டியை பிறப்பிடமாக கொண்ட அவர் தமது அறிவு-அற்றல்-செயற்பாட்டால் உலக தமிழறிஞராக உயர்ந்துள்ளார். எனது ‘முச்சந்தி: பார்வையும் பதிவும்’ நூலுக்கான முன்னுரையை அவரிடம் கேட்டிருந்தேன். உடல் நிலை மிக மோசமாக பாதிப்படைந்து வந்தனால் உடன் எழுதிதர முடியவில்லையே என்ற மனவருத்தப்பட்டார் என்பதை நண்பர்கள் றமணன், மல்லியப்பு சந்தி திலகர் என்னிடம் கூறினார்கள். இது தொடர்பில் என்னிடமும் ஓரிரு தடவை தொலைப்பேசியில் கதைத்திருந்தார். அந்த வரப்பிசாதம் கிடைகாமலே போயிவிட்டது. அந்தவகையில் நான் பெரும் துரதிஸ்டசாலியே.

இரவுபகல் ஓய்வு ஒழிச்சலின்றி தமிழியல் ஆய்வுக்காக தன்னை அர்பணித்த பேராசிரியர் தான் உறங்குவதற்கு போதுமான நேரத்தை பெறுவதற்காக தான் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்.

பேராசிரியர் நடந்து வந்த பாதை இன்று வெறிச்சோடி கிடக்கின்றது..! அது யாராலும் நிரப்ப முடியாத ஈடு இணையற்ற பணியாகும். அவரது இழப்பு அவரது குடும்பத்துடன் மட்டும் அடங்குவதன்று. அவரது இழப்பால் துயறுரும் சகலருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

வேதனைகளை சுமந்துக் கொண்டு…!No comments:

Post a Comment